தமிழர்களுக்கு எதிரானவை மாத்திரமே புரட்சி! புரட்சிகரநாட்டாமை வினவின் புதியதீர்ப்பு.

பிப்ரவரி 16, 2010 § 17 பின்னூட்டங்கள்

தமிழர்களுக்கு எதிரானவை மாத்திரமே புரட்சி! புரட்சிகரநாட்டாமை வினவின் புதியதீர்ப்பு.


மகஇக  என்னும் புரட்சிகர அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைப்பூவான வினவு  வலையுலகில் ஒட்டுமொத்த புரட்சியையும் மொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டது போல செயல்பட்டு வருகிறது.  சகபதிவர்கள் மொக்கைவாக எழுதுவபவர்களாக , திரைவிமர்சனம் எழுதி காலத்தை ஓட்டுபவர்களாக , வடிவேல் ஸ்லாங்கில் எழுதி காலம்கழிப்பவர்களாக இருக்கிறார்களே  என்ற ஆதங்கத்தோடு அவ்வப்போது புரட்சிகரமான கட்டுரைகளை எழுதி வலையுலகை காப்பவர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா பற்றி ‘கழிசடை’ என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ஏதாவது புதியதிரைப்படம் வந்துவிட்டால்  முண்டியடித்து  டிக்கெட் வாங்கி முதல் ஆளாக அந்த திரைப்படம் குறித்த புரட்சிகரமான தங்கள் கருத்துகளை எழுதி தங்கள் புரட்சிபயணத்தை . உன்னை போல் ஒருவனோ அல்லது ஆயிரத்தில் ஒருவனோ முதல் விமர்சனம் நாட்டாமை வினவுடையதாக இருக்க வேண்டும். படத்தை விளாவரியாக விமர்சித்துவிட்டு கடைசியில் அத்திரைப்படம் ஒரு கழிசடை என்று தீர்ப்பு கூறுவார் வினவு. புரட்சி வரும்வரை திரைப்படம் பார்ப்பதில் தப்பில்லை போலும்.

ஜெயராம் என்ற நடிகர்  மலையாள தொலைக்காட்சி நிகழ்வில் தன்னுடையவீட்டு வேலைக்காரப்பெண்ணை கறுத்ததமிழச்சி தடித்த எருமை போன்று இருப்பாள் என்று கூறியதாக குமுதத்தில் செய்தி வெளியானது. செய்தி வெளியிடுவதற்கு முன்னர் குமுதம் நிருபர் பேசியபொழுது அது நகைச்சுவைக்காக சொன்னது என்று திரும்பதிரும்ப சொன்னார்  என்று குமுதம் செய்தி வெளியிட்டது.

செய்தியை படித்தபொழுது அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உங்கவீட்டு வேலைக்காரியை ‘சைட்’ அடிப்பீங்களா என்ற எழுப்பப்பட்ட கேள்வி வன்மம் நிறைந்தது என்று தோன்றியது. வீட்டில் வேலைசெய்தாலே அவரை சைட் அடிக்கும் உரிமை வீட்டுமுதலாளிக்கு இருக்கிறது என்ற   மனநிலை கேள்வி கேட்டவரிடம் இருக்கிறது. சரி கேள்விதான் மோசம் என்றால் பதில் சொன்ன ஜெயராம் என் வீட்டு வேலைக்காரப்பெண் எனக்கு சகோதரி மாதிரி என்று சினிமாத்தனமாக சொல்லி சமாளித்திருக்கலாம் ஆனால் நகைச்சுவைக்காக என் வீட்டு  வேலைக்காரி கறுப்பான தமிழச்சி எருமை போல இருப்பாள் அவளை எப்படி சைட் அடிக்க முடியும் என்று சொல்லி பிரச்னைக்கு துவக்கபுள்ளி வைத்தார். செய்தியை குமுதம் வெளியிட்டதும் சென்னையில் இருக்கும் ஜெயராம் வீட்டில் கல்லெறியப்பட்டது . உடனே ஜெயராம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். உடனே தமிழினத்தலைவரும் தான் மன்னித்ததோடு  மறக்காமல் நாம்தமிழர் இயக்கத்தினரை  கைது செய்து மீண்டும் தான் யார் என்று நிருபித்து இருக்கிறார்.

உடனே நம்ம வினவு சும்மா இருப்பாரா? பஞ்சாயத்து செய்ய கிளம்பிவிட்டார். இது சமூகத்தின் குறைபாடு ஜெயராமை எப்படி குறை சொல்லமுடியும் என்ற வியாக்கினத்தொடு தொடர்ந்து தனது விமர்சன அரிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதே வேலைக்காரப்பெண் தமிழச்சி என்று சொல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் எதிர்ப்பார்களா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார். கல்வியறிவில் நூறு விழுக்காடு தன்னிறைவு பெற்ற கேரளத்து சேட்டன்களும் சேச்சிகளும் எப்படி ஒரு பெண்ணை இழிவு படுத்தலாம் என்று ஏன் கேள்வி கேட்கவில்லை என்ற கேள்வி கேட்க வினவுக்கு தோணவில்லை போலும்.  அதுசரி ஊருக்கு இழைத்தவன் தமிழ்நாட்டு தமிழன்தானே என்று எடுத்து கொள்ளவேண்டியதுதான்.

வினவு அத்தோடு விட்டாரா? விவேக் பத்தாண்டுகளுக்கு முன்பாக வந்த திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை காட்சியில் சேச்சிகளை இழிவு செய்துவிட்டாரே? என்று இன்று புதிதாக விழித்துக்கொண்டிருக்கிறார். புரட்சிகள் முடிந்தபின்னால் பார்த்துகொள்ளலாம் என்று இத்தனை ஆண்டுகள் பொறுமைகாத்தார்களோ என்னவோ ? மும்தாஜ் என்ற மார்பு பெருத்த பெண்ணை கேரளாக்காரப்பெண்ணாக( சேச்சியாக)  நடிக்கவைத்து சேச்சிகளை தமிழர்கள் இழிவு செய்துவிட்டார்களே என்று புதிய கண்டுபிடிப்பு வேறு.

புரட்சிகர இயக்கத்தை சேர்ந்தவர்கள் சமீபத்தில் இப்படி ஏதாவது கருத்துகணிப்பு நடித்தினார்களா? என்று சந்தேகப்படும் அளவிற்கு வினவுதளத்தில் கருத்துக்கணிப்புகளை காணமுடிகிறது.

“மலையாளப் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிது, காம உணர்ச்சி அதிகம், கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சுலபமாக சேச்சிகளை வளைக்கலாம், அல்லது சேச்சிகள் இன்பத்திற்காக அலைவார்கள், அங்கே கள்ள உறவு அதிகம்” இப்படித்தான் தமிழக இளைஞர்களிடம் மலையாளச் சேச்சிகளைப் பற்றி பொதுக்கருத்து நிலவுகின்றது”

இதுதான் வினவின் சமீபத்திய கண்டுபிடிப்பு. சேச்சி என்பதன் அர்த்தம் அக்கா என்பது வினவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  தமிழர்கள் மலையாளிகளை காலம்காலமாக சேச்சி, சேட்டன் என்று  அக்கா, அண்ணாஎன்று விளித்து கொண்டிருக்கிற எதோ இவர்கள் தமிழக வாலீப வயோதிக அன்பர்கள் சேச்சிகள் மீது அதாவது தமிழர்க் தங்களது மூத்த சகோதரிகள் என்று அழைப்பவர்கள் மீது காமத்தோடு அலைகிறார்கள் என்னும் கருத்து தமிழர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்ல கேரளப்பெண்கள் மீதான புரட்சிகர இயக்கத்தினரின் வக்கிர பார்வையை  அம்பலப்படுத்துகிறது. தாராளமா மனசிருந்தா கேரளா என்று புரிஞ்சுக்கோ என்று கும்பகோணத்து பார்பான இளைஞன் பாடியதும் பார்பன தலைமையின் கீழ் இயங்கும் மக இகவின் வ(க்கிர)ர்கப்பார்வையும் ஒத்து போவதாக கொள்ளலாமா?

ஜெயராம் என்ற அந்த நடிகன் வாய்கொழுப்பெடுத்து பேசியதற்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்து கொண்டு தமிழினத்தின் மீது காரித்துப்புகிறது வினவு.  தேநீருக்கு நன்றி சொல்ல வேண்டுமாம். உலக அரசியல் எல்லாம் பேசும் வினவு எதோ தேயிலை என்பது கேரளாவிலிருந்து  வரும் மலையாளிகள் கையேடு பறித்துவந்து அப்படியே தேநிராக வடித்து தருவது போன்று தனது கற்பனையை தட்டிவிட்டிருக்கிறார். தேயிலைக்கு பின்னாலே ஒளிந்திருக்கும் உலகமயமாக்கல் வினவிற்கு தெரியாமல் போனது ஆச்சரியமே. தேயிலை கொடுத்த மலையாளிக்கு நன்றி சொல் என்று சொல்லும் வினவிற்கு சோறுபோட்ட தமிழன் மறந்து போய்விட்டான் போல.  விட்டால் தமிழன் எவனுக்கும் தேநீர் போடவே தெரியாது என்று புரட்சிகர இயக்கம் அறைக்கூவல் விடுத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

இப்படியே தனது கற்பனைகளை கட்டுரை முழுக்க அள்ளித்தெரித்து இருக்கிறது புரட்சிகர அமைப்பு. ஜெயராம் வீட்டில் கல்லெறிந்தது ஏதோ மலையாளிகள் மீது தமிழகத்தில் வன்மம் தலைவிரித்து ஆடுவதை வெளிப்படுத்துவதாக சித்தரிக்கிறார்கள். இதே தமிழகத்தில் சீமானின் வாகனம், தா.பாண்டியன் வாகனம் எரிக்கப்பட்டபொழுது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. பாரதிராசா அலுவலகம் தாக்கப்பட்ட பொழுது வினவின் வாய்திறக்கவே இல்லை. ஒருவேளை தமிழன் எவனுக்காவது ஆதரவாக பேசினால் அது புரட்சிக்கு கேடு என்று நினைத்துவிட்டார்களா?வினவில் சில கட்டுரைகள் எழுதிய வில்லவன் ஜெயராம் பேசியதை கண்டித்து தமிழின உணர்வோடு எழுதிய கட்டுரையை வினவில் காணமுடியவில்லை. மகஇகவை பொறுத்தவரை தமிழர்களுக்கு எதிரானவை மாத்திரமே புரட்சி போலிருக்கிறது.

முல்லை பெரியார் பிரச்சனைஎல்லாம் ஒரு பிரச்சனையா? என்று கேள்விகேட்காத குறை. அங்கே ஆக்கிரமிப்பு செய்திருக்கும்  மலையாளிகளின் ஆயிரம் ஓட்டுகளுக்காக அணைந்து அரசியல் கட்சிகளும் முல்லை பெரியாரில் தமிழகத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்களாம். அது என்னப்பா அந்த ஆயிரம் ஓட்டுக்கு அம்புட்டு மரியாதை?.   இதுதான் புரட்சிகள புண்ணாக்குகளின் முல்லைபெரியாறு  குறித்த பார்வை அங்கே மாற்று அணைக்கு அத்தனை முன்னேற்பாடு வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது இவர்கள் என்னவென்றால் ஆயிரம் ஓட்டுக்காக அரசியவாதிகள் நாடகமாடுகிறார்களாம்  என்ன ஒரு ஆராய்ச்சி. குமுளி நகராட்சியின் சாக்கடை நீர் தமிழனின் குடிநீர் ஆதனமான முல்லை பெரியாறோடு கலக்கும் கயமையை வினவிற்கு யார் சொல்வது?. கேட்டால் இதெல்லாம் பூர்விக சொந்தம் சேட்டன்களின் மூத்திரம் குடித்தால்தான் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

நாங்கள் இருக்கிறோம் வீதியின் ஓரத்தில்……

பிப்ரவரி 9, 2010 § 2 பின்னூட்டங்கள்

நாங்கள் இருக்கிறோம் வீதியின் ஓரத்தில்………….



நம்மூரு ஜனங்க எல்லோருக்கும் வணக்கமுங்க…..  சம்சாரியா பிறந்து இப்போ பரதேசியா அலையும் மதுரைவீரனோட பேச்சை கேட்டுட்டு போங்கப்பா…..!


ஒரு காலத்துல நெல்லும் எள்ளும் விளைந்த இடமெல்லாம் புல்லுகூட விளையாத பொட்டல்காடா ஆகிப்போச்சுங்க. பசுமைபுரட்சி பசுமைபுரட்சின்னு சொல்லி விளங்காத ரசாயன உரத்தைபோட்டு மண்ணை மலடாக்கிபுட்டீங்க. பேச்சு நடத்துறோம் வழக்குநடத்துரோம்னு சொல்லி ஆத்துல வெள்ளாமைக்கு தண்ணி இல்லாம பண்ணிபுட்டீக.

வானம்பாத்தபூமி எல்லாம் மழை இல்லாம வாடிபோச்சு.   கடன்கொடுக்குறோம்  விவாசாயம் பண்ணுன்னு.. சொல்லிட்டு வெளிநாட்டுக்காரன் தந்த விதையை போடச்சொல்லி விளைச்சலே இல்லாம கடனாளி ஆக்கிப்புட்டீங்க.  சரி நமக்குத்தான் பொழைக்கவழி இல்லாம போச்சேன்னு கிடைக்கிறகாசுக்கு விளைகிறநிலம் அம்புட்டையும் பணக்கார பயளுவகிட்ட வித்துபுட்டு பட்டணத்துவீதிகளில் ஒண்டிபிழைக்கிறோம் . பணக்காரபயலுவளும் காக்கா குருவிகூட அண்டாத அந்த இடத்துல எதோ ‘பொறியல் கல்லூரின்னு’ கட்டி லட்சலட்சமா சம்பாரிக்கிறானுங்க. குடிக்க சொட்டு தண்ணீகூட இல்லாத அந்த பூமியில நம்மபுள்ளைக அம்புட்டும் வெந்து நொந்து எதையாவது படிச்சுட்டு எப்படியாவது வந்துசேருதுக. படிச்சபடிப்புக்கு கிடைச்ச வேலையசெய்து பாட்டில் தண்ணியை விலைக்குவாங்கி பகுமானமா குடிச்சுகிட்டு அலையுதுக.



கிராமத்துல்ல நடக்குற பாதையில மாடு சாணியபோட்டுட்டுபோயிட்டா அதை அப்படியே அள்ளி பக்கத்துவயலுல வீசிட்டு போவானுங்க நம்ம சம்சாரிக அந்தசாணியும் அந்த வயலுக்கு உரமாகிப்போகும். எதை செஞ்சாலும் அடுத்தவனுக்கு நல்லதாசெய்யணும்  சாணிகூட உரமாகிப்போகனும்னு நினைக்கிற பயலுக கிராமத்துபயலுவ..

ஆனா படுச்சபயலுவ விதைக்குகூட உரிமை கொண்டாடுறான்.  வெளிநாட்டுக்காரன்கிட்ட காசை வாங்கிக்கிட்டு மண்ணை மலடாக்கி விவசாயத்தைநாசமாக்கும் விதைகளை விவசாயிதலையில் கட்டப்பாக்குறானுங்கஇந்த பட்டணத்துல இவனுங்க குடிச்சுட்டுபோடுற தண்ணிபாட்டில மொத்தமா சேத்தா ஒரு சென்னை இல்லைங்க நாலைஞ்சு சென்னைகூடபத்தாது. இம்புட்டுகுப்பையும் எங்கன போகும்? அட எங்கள மாதிரி சம்சாரிக்கு வெள்ளாமைக்கு தண்ணி வேணாம்ங்க. நம்ம பிள்ளைக குடிக்க தண்ணி வேணாமா….?



இருக்கிற மரம்மட்டை ஒன்னுவிடாம வெட்டி மழைதண்ணி இல்லாம பண்ணிபுட்டிங்க… குடிக்கிறதண்ணிக்கு எம்புட்டு நாள்தான் தரையை நோண்டிகிட்டு கிடப்பிங்க…? நிலத்துக்கு அடில இருக்கிற தண்ணியும் தீர்ந்து போனா..? குடிக்கிற தண்ணிக்கு எங்க தான்யா போவிங்க? பட்டிலுக்கு தண்ணி எங்கிட்டு இருந்து வரும்…? தின்கிறது சாப்பாடு எங்கிட்டு இருந்துவரும். ரியல் எஸ்டேட்ன்னு சொல்லி இருக்கிறகாடுகளை எல்லாம் கான்கிரிட் காடுகளாக மாத்திகிட்டே போன காக்காகுருவிகூட வாழமுடியாத பூமில நாம எப்படிய்யா? பொழைக்கிறது.

மக்கா நீங்க இராத்திரிபகலா கண்முழிச்சு என்னென்னவோ கம்பூட்டரில் பண்ணலாம்யா ஒரு நெல்லுமணியை உங்களால உருவாக்க முடியுமான்னு சொல்லுங்க…  இன்னமும் எதோ நம்பிக்கைல நம்மாளுங்க ஊருல நடத்துற வெள்ளாமையால்தான் இப்பவும் நாமெல்லாம் சோறு துண்ணுகிட்டு இருக்கோம்.உங்கள எல்லாம் வேலையைவிட்டுட்டு வெள்ளமையபார்க்க சொல்லலப்பா. உங்க படிப்பை கொஞ்சம் எங்களுக்காக பயன்படுத்துங்கன்னு சொல்லுறேன்.


எதோ பேரு தெரியாத வெள்ளைக்காரதுறைமாருகளுக்கு வேலைபார்த்து வீடுவாசல்னு வாங்கிற மக்கா. நம்ம பொழைக்கிற ஊரு எப்படி இருக்குன்னு பாருங்கப்பா. உங்க பட்டினத்துவீதிகள்ள எங்க கிராமத்து ஆளுங்க ஒண்ட இடமில்லாம இருக்கிறத பாருங்க… இந்த நிலைமை நாளைக்கு உங்களுக்கு வேணாமப்பா. உங்க அறிவை எங்களுக்காக பயன்படுத்துகப்பு. விவசாயத்தை எளிதாக்குங்க. இனி எவனும் விவசாய நிலத்துல கான்கிரிட் போடக்கூடாதுன்னு சொல்லுங்க. பக்கத்துமாநிலக்காரன்கிட்ட பேசி  தண்ணியை கொஞ்சம் திறந்து விடுங்க… விதையில வெளிநாட்டுக்காரன் கைவைக்காம பார்த்துக்கங்க.  வீடுமேல வீடுகட்டிங்கப்பா… காடுகளை காலிபன்னாதிக. அய்யா சம்சாரிக நாங்க இருந்தாத்தான்யா நீங்க சாப்பிடவும் குடிக்கவும் ஏதாவது இருக்கும். எல்லாத்தையும் இறக்குமதி பண்ணலாம்னு நினைக்காதிங்கப்பா…. குடிக்கிற தண்ணிக்கு காசுகொடுக்கனும்னா ஒண்ணுக்கும் இல்லாம போயிடுவிங்கப்பா நீங்க எல்லாம்.


ஒருகாலத்துல ஆத்துதண்ணிய அப்படியே குடிச்சுட்டு வேலைய பார்ப்போம் இப்ப எந்த தண்ணியயாவது குடிக்க முடியுதா?. கொசுவர்த்தி இல்லாம தூங்கமுடியுதா?. எல்லா இடமும் கெட்டுபோச்சுப்பா. உங்கள நம்பித்தான் நாங்க இருக்கோம். படிச்ச புள்ளைக ஏதாவது பண்ணி எங்களையும் எங்க விவசாயத்தையும் காப்பாத்துங்கப்பா. வெள்ளைக்காரன் வந்து நம்ம விதைகளையும் விவசாயத்தையும் காலிபண்ணும் முன்னால் ஏதாவது பண்ணுங்கய்யா உங்களுக்கு புண்ணியமா போகும்.

சிங்களபேரினவாதிகளுக்கும் திராவிடதேசியவாதிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

பிப்ரவரி 5, 2010 § 2 பின்னூட்டங்கள்

சிங்களபேரினவாதிகளுக்கும்  திராவிடதேசியவாதிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.


முல்லிவாய்காளில் சிந்திய இரத்தத்துளிகளின் தொடர்ச்சி செங்கல்பட்டுவரை நீட்சி பெற்றிருக்கிறது. முல்லிவாய்காளில் சிங்களவன் தாகம்தீர்த்த தமிழினத்தின் குருதி மீண்டும் செங்கல்பட்டில் திராவிட ‘தேசியவாதிகளால்’ ருசிபார்க்கப்பட்டிருக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ்  இளைஞன்  சிங்கள காடையர்களால் அடித்தே கொல்லப்பட்டான், தமிழில் பேசியதற்காக மாணவன் தாக்கப்பட்டான், தமிழ் இளைஞனின் உடல் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது  என்று தொடர்ச்சியாக தமிழர்களின் செங்குருதியில் நினைந்து வழிகிறது ஈழத்தில் செய்திதாள்கள். ஒருவேளை சிங்களவர்களும் செம்மொழி மாநாட்டிற்கு தாயாராகிவிட்டார்களோ என்னவோ?

அடிமை நாய்களுக்கு சுதந்திரம் வேண்டுமா? என்று ஒரு  தமிழனை பார்த்து ஒரு தமிழனே பார்த்து கேட்கும் அளவிற்கு  இன உணர்வு தமிழகத்தில் வளர்ந்து நிற்பதை அறியமுடிகிறது. இந்தியாவில் அகதியாக இருக்கும் திபெத்தியர்கள் நிலையையும் ஈழத்தமிழர்களின் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால் தாயகதமிழர்கள் எவ்வளவு பெருந்தன்மையானவர்கள் என்று புரிந்துவிடும். கடந்த நாற்பதாண்டுகளாக திராவிடத்தை பெயரில் தாங்கி இந்திய இறையாண்மை காத்திடவே ஆட்சி நடத்திய  திராவிடகட்சியில் ஊட்டிய இன உணர்ச்சியின் வெளிப்பாடுகளை நாம் இன்று பார்த்து கொண்டிருக்கிறோம்.

பெரியார் பேசிய திராவிடம் என்பது இந்தியதேசியத்திற்கு எதிரானது.  பொதுவாகவே பெரியார் தேசியவாதங்களுக்கு எதிரானவர். தான் வாழும் காலம் முழுவதும் இந்திய தேசியம் என்பது ஆரியதேசியமே என்று முழங்கிவந்தார். தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று முழக்கங்கள் இட்டவர் பெரியார். ஆரியத்திடம் திராவிடம் அடிமையாகிவிடக்கூடாது என்று தொடர்ந்து போராடிய தலைவனின் பெயரை சொல்லி அரசியல் நடத்திய திராவிடவாதிகள். திராவிடம் என்பதை ஆரியத்தின் துணைதேசியமாக மாற்றி இருக்கிறார்கள். இந்தியாவின் வேறு எந்தமாநிலத்திலும் இல்லாதளவில் இறையாண்மையின் பூசாரிகளாக திராவிட கட்சிகள் இருந்துவருகிறார்கள்.

திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் திராவிட இயக்கம் கட்டியகாலங்களில் பெரியார் ‘பச்சை தமிழர்’ என்று யாரை அழைத்தாரோ அதே காமராசரை ‘கையாலாகதவர்’ என்றும் டெல்லி தலைமையை எதிர்த்து எதுவும் செய்ய இயலாதவராகவும் இருக்கிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தனர் திராவிடமுன்னேற்ற கழகத்தினர்.  இன்று வரலாறு மீண்டும் திரும்புகிறது படிக்காத மேதை  ஏழைமக்களின் கல்விக்கண் திறந்த காமராசரை என்னவெல்லாம் சொல்லி இவர்கள் விமர்சனம் செய்தார்களோ அதனினும் கீழான நிலையில் இருக்கிறது இவர்களின் ஆட்சி. பதவி சுகத்திற்க்காக எதையும் செய்யும் நிலையில் இருக்கிறார்கள் திராவிடதேசியவாதிகள்.

திராவிட அரசியல் கட்சிகள்தான் இப்படி என்றால் பெரியாரின் கொள்கை வாரிசாக நாம் கருதிய வீரமணி இவர்களைவிட மோசமான சந்தர்ப்பவாதியாக இருக்கிறார். பிழைப்புவாதத்தின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார். பெரியாரின் அசையும்சொத்து அசையாதசொத்துக்களோடு அறிவுசார் சொத்துக்களும் தனக்கே சொந்தம் என்று வாழ்ந்து வருகிறார். ஈழத்தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்த பொழுது வீரமணி அறிவாலயத்தில் பதுங்கி கொண்டதோடு தனக்கு தானே பெரியார் விருது வாங்குவதற்கான தேதி குறித்து கொண்டிருந்தார். ஈழத்தில் அத்தனை மக்கள் செத்துவிழுந்த பொழுதும் வாய்திறவாத வீரமணி கருணாநிதியின் இரண்டுமணிநேர உண்ணாவிரத நாடகத்தின் பொழுது “தலைவனுக்கு ஏதாவது ஆனால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!” என்று ‘பஞ்ச்’ விட்டுக்கொண்டிருக்கிறார்.  உண்மையான பெரியார் தொண்டர்களுக்கு ஆறுதல்தரும் ஒரேஒரு தலைவராக கொளத்தூர் மணி அண்ணன் மாத்திரமே இருக்கிறார்.

தாயக தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் எதுவும் பெரியளவில் நடந்தவிடாமல் தடுத்து நிறுத்தியது தேசியவாதம் பேசத்துவங்கிய திராவிடமுன்னேற்ற கழகம்.  பிரபாகரனை சர்வாதிகாரி என்று கூறிய கருணாநிதி ஈழத்திற்காக போராடிய வழக்கறிங்கர்களை எந்தமுறையில் ஒடுக்கினார் என்று அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். நீதிமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினால் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியசாமி மீது வீசிய முட்டைகளுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டுமா? என்று தனக்குத்தானே பதில் சொல்லி கொள்கிறார். சுப்பிரமணிசாமியை பார்த்தால் பம்மும் தமிழககாவல்துறை  ஈழப்போராளிகளை கண்டால் எகிறி அடிக்கிறது.  ஈழத்தமிழ் மக்களை அடித்தால் எவன் கேட்பான் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது என்று எடுத்து கொள்ளவேண்டியிருக்கிறது.

திராவிட தேசியவாதிகளை நாம் திட்டினால் உடனே பெரியார் முன்வைத்த திராவிடத்தை எதிர்பதாக கூறி அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியை ரட்சிக்க திராவிடத்தின் பெயரால் பல பூசாரிகள் இன்று இருக்கிறார்கள்.

தமிழன் என்ற  இனமோ, அவனுக்கென்று அடையாளமோ எதுவுமே இருக்கக்கூடாது என்று பிஞ்சுகள் என்று கூட பாராமல் குண்டு போட்டு கொன்று முடித்த சிங்கள பேரினவாதிகளுக்கும். பெயரளவில் தமிழ்நாடு என்று வைத்துவிட்டு தமிழையும் தமிழினத்தையும் அழிக்கும் அனைத்து செயல்களுக்கும் துணை போயி ஈழத்தமிழ் மக்களை வதைப்பதன் மூலம் காங்கிரசு கூட்டணியில் இடம்பெறலாம் என்று காய்நகர்த்தும் திராவிடதேசியவாதிகளுக்கும் பெரிதாய் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தனக்கு தானே தமிழதலைவன் என்று பட்டம் கொடுத்து கொள்ளும் கருணாநிதிக்கு இன்னும் புகழுக்காக அலையும் மனம் மாறவில்லை.  செம்மொழி மாநாடு என்ற பெயரில் தனது புகழ் பாடும் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். வீரமணி சுபவீ என்று கருணாநிதிக்கு வால்பிடித்து பிழைப்புவாதத்தின் தொடர்ச்சியாக சில கருஞ்சட்டை பூசாரிகள் மாநாட்டிற்கு ஆள்பிடிக்க அலைகிறார்கள்.


இந்த இனத்திற்கு தலைவன் ஒருவன் தேவையில்லை. நம்மை நாமே காத்தால் மட்டுமே நமது மொழியையும் நம் இனத்தையும் இனிவரும் காலங்களில் காத்திடமுடியும் என்பதை மனதில் வைத்து உலகத்தமிழர்கள் ஒருங்கிணையவேண்டும். இந்திய தேசியத்திற்கும் இத்தாலி தேசியத்திற்கும் விலைபோய்விட்ட திராவிட தேசியத்தை நம்பி தமிழினத்தை நட்டாற்றில் விட்டது போதும். நமக்கு இப்போதைய தேவை தேசியமல்ல தமிழர் என்ற உணர்வு.  திராவிட தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களை கருவறுக்கும் போலி திராவிடவாதிகளை அம்பலப்படுத்துவோம். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைவோம்.

மதுரைக்கு போயிருந்தேன்!

பிப்ரவரி 2, 2010 § பின்னூட்டமொன்றை இடுக

மதுரைக்கு போயிருந்தேன்!



சென்றாண்டு இதேநேரத்தில் வெளிவந்த மதுரைவீரனின் கண்ணீர்குரல் இந்த நேரத்திலும் மிகச்சரியாக பொருந்தும் என்றே நம்புகிறேன்

ரெம்ப நாளைக்கு அப்புறம் நான் பொறந்த மதுரை பக்கம் போயிருந்தேன் அய்யாக்களா! பஞ்சம் பொழைக்க சென்னை வந்த நாமெல்லாம் இப்படி எப்பவாது ஊருக்கு போறதுதானே வழக்கம். ஊரு நல்லாவே மாறிப்போச்சுடா அய்யா. ஆனா இந்த வெயிலுதான் மாறவே இல்ல. உச்சி வெயிலு மண்டைய பொளக்குது. ஊர சுத்தி இருந்த வயலு வரப்பு, ஏரி கம்மா எல்லாம் கிரிக்கெட்டு ஆடும் இடமாகிப்போச்சு. விவசாயம் பார்த்த ஆளுங்க எல்லாம் கையில தூக்குசட்டிய தூக்கிகிட்டு கட்டிட வேலைக்கு அலையுதுக. பழைய மரங்களெல்லாம் மறையுதுங்க புதுசுபுதுசா கட்டிடங்கள் மொளைக்குதுங்க.என்ன பண்ண இதை சொன்னா பெருசு அதெல்லாம் உங்க காலம்னு கிண்டல் பண்ணுவானுங்க இளந்தாரிக. சரி விடுங்கப்பா ஊரு மக்களும் ஏதோ உள்ளூருலேயே பொழைக்க கத்துகிட்டானுங்கன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

சின்ன புள்ளைக எல்லாம் இங்கிலீசுல படிக்குது. கொளுத்தும் வெயிலிலே பூட்சு காலுமா, கழுத்துல கச்சையுமா அலையுதுக . இதுக படிச்சு பெரியதுரை ஆகுமுன்னு நினைப்பில பெத்ததுகளும் இருக்குதுக . ஏதோதோ சொல்லித்தருகிற இந்த பள்ளிக்கூடங்கள் சொந்த பந்தங்கள் கிட்ட எப்படி பழகுறது பேசுறதுன்னு சொல்லித்தர கூடாதா? விருதாளிகளை கண்டதும் வேற பக்கம் ஓடுதுக. டிவியை பார்த்துகிட்டு தாத்தான்னு கூப்பிடவே யோசிக்குதுங்க.


அப்படியே அழகர் கோவிலுக்கும் மீனாட்சி கோவிலுக்கும் போயிட்டு வரலாமேன்னு மெதுவா கிழம்பினேன் அய்யா. எங்கே பாத்தாலும் பெரிய பெரிய தட்டிகள் முன்னெல்லாம் வாத்தியார் நடித்த சினிமா தட்டிகளா இருக்கும். ஆனா இப்ப இருக்கிற தட்டிகல உத்துப்பார்த்தா பொறந்த நாலு வாழ்த்து சொல்லுற தட்டிகளா இருக்கு.காளவாசல் பக்கத்துல ஒரு ஆளு மீசையோடு விவேகானந்தர் உடுப்புபோட்டு இருக்கிற மாதிரி தட்டி, ஆரப்பாளையத்துல பார்த்தா அந்த ஆளே திருவள்ளுவரு மாதிரி இருக்கிற மாதிரி தட்டி. அப்படியே சிம்மகல்லு பக்கம் பார்த்தா அதே ஆளு காந்தி மாதிரி உக்காந்து இருக்காப்ல. தல்லாகுளம் பக்கம் பார்த்தா அவரு நம்ம வாத்தியாரு எம்ஜிஆரு மாதிரி இருக்காப்ல. இன்னொரு பக்கம் நேதாஜி அய்யா மாதிரி போஸ் கொடுக்குராப்ள.













எனக்கு தலையே சுத்தி போச்சுடா மக்கா! யாருடா இந்த பய ஏதும் சினிமா நடிகனா? முஞ்சப்பார்த்தாலும் அம்புட்டு அழகா இல்லியே? யாருடா அய்யா இந்தப்பய அப்படின்னு கொஞ்சம் குழம்பி போனேண்டா மக்கா. பக்கத்துல ‘ஜிகர்தண்டா’ போடுற ஒரு ஆளுகிட்ட போயி கேட்டேன் ‘ஏலே அய்யா யாருடா இந்த பயன்னு’ .கொஞ்சம் மேலையும் கீழயும் பார்த்த அந்தப்பய ‘எ பெருசு நீ என்ன ஊருக்கு புதுசா? இவருதான்யா அழகிரி அண்ணன் ‘ அப்படின்னான். ஏலே அய்யா நாங்க தலைமுறை தலைமுறையா மதுரைல பிறந்துவளர்ந்தவனுங்கதாண்டா அய்யா அது யாருடா அழகிரின்னு கேட்டேன்.அப்புறம் முழு விசயத்தையும் அந்த பய சொன்னான்.



ஏண்டா அய்யாக்கா ஈழத்துல நம்ம சொந்த பந்தங்க சோத்துக்கு வழியில்லாமல் அன்றாடம் செத்துகிட்டு இருக்கு அதை காப்பாத்த சொல்லி அம்புட்டு ஜனமும் போராடிகிட்டு கெடக்குது. நான் பெறந்த மதுரை மண்ணுல இப்படி தன்இனத்துக்காக குரல்கொடுக்காமல் எவனோ ஒரு பயலை சந்தோசப்படுத்த அவனே இவனேன்னு தட்டி போட்டுகிட்டு அலையுரானுவளே இன்ன அநியாயம் மக்கா இது?ஏலே மதுரைக்கார பயலுவளா நம்ம மண்ணோட பெருமையை இப்படி அடகு வைச்சுபுட்டு இப்படி அலையுரங்கலேடா. அந்த அழகிரி பய யார வேணுன்னாலும் இருந்துட்டு போறான். இந்த நேரத்துல இந்த பொறந்தநாளு தேவையாட மக்கா? அதுவும் ரெண்டு மாசமாகியும் தட்டி கழட்டாம அப்படியே கிடக்கடா மக்கா. அங்கே அம்புட்டு பேரு செத்துக்கிட்டு   இருக்கான் இங்கே வைகையில தண்ணி இல்லாம வெள்ளாமை இல்லாம எம்புட்டு பேரு செத்துக்கிட்டு   இருக்கான் இப்படி காசு கொடுக்கிறான்னு காலை நக்கிகிட்டு கெடக்கைங்கலேடா மக்கா?

செயிலுக்குள்ளே இருக்க வேண்டிய பயலுவ எல்லாம் தட்டியில கழுத்து நிறைய செயினை போட்டுகிட்டு மினிக்கிட்டு இருக்கானுங்க. அந்த அழகிரி பயலும் ஏதோ பாரி பரம்பரை மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கான். ஏலே மக்கா காசுக்காக இப்படி நக்கி பிழைக்கும் இனமா ஆகிப்போனது ஏண்டா?. கொஞ்சமாவது வீரம் ரோசம் சூடு சொரணை நம்ம பயலுவளுக்கு இருக்கும்னு நினைச்சா இப்படி வந்தவனுக்கு எல்லாம் கால் அமுக்கிவிடும் இனமா ஆகிட்டானுகளேன்னு வருந்திகிட்டே ஊரு வந்து சேர்ந்த்திட்டேன்யா. இனியொரு தடவை மதுரை செல்லும் தைரியம் எனக்கு இல்ல அய்யாக்களா!

Where Am I?

You are currently viewing the archives for பிப்ரவரி, 2010 at தமிழன்பன் பக்கம்.