குண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா (18-04-2012)

ஏப்ரல் 18, 2012 § 4 பின்னூட்டங்கள்

குண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா 

எனது பக்கங்கள் என்ற ஒன்றை தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று வலைப்பூ துவங்கிய நாட்களிலேயே திட்டமிட்டது. ஆனால் என்ன மாயமோ தெரியல அப்படி ஒரேயொரு பதிவு கூட என்னால் எழுத முடியல. இனிமேல் எனது எண்ணங்களை தொகுத்து எழுதலாம் என்று இதை துவக்கி இருக்கிறேன்.

 

வழக்கமா இப்படியான  பதிவுகளுக்கு  உணவுப்பொருட்களின் பெயர்களை தருவது பதிவுலக வாடிக்கை. எனது பள்ளிக்காலங்களில் தமிழ்மணி சோடா கம்பனியில் பணிபுரிந்த மலரும் நினைவுகளில் இந்த பெயர். தனியார் மயமாக்களில் காணமல் போன பல சிறுதொழில்களில் மிக முக்கியமானது இந்த குண்டு சோடா தொழில்தான்.

*****************************************

தண்ணீர் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மன்மோகன் சிங்கும் மான்டேக் சிங் அலுவாலியாவும் சேர்ந்து தண்ணீரை தனியார் உரிமையாக்குவதற்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள் . உற்பத்தி செலவை விட குறைந்த விலையில் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படுவதால் மக்கள் நீரை வீணடிக்கிறார்களாம் அதனால் தனியாரிடம் விடுவதே சாலச்சிறந்தது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். நாம் குடிக்கும் நீருக்கு உற்பத்தி செலவு எங்கிருந்து வருகிறது?  யானைக்கு அல்வா வாங்கிய கணக்கு காட்டுகிறார் பொருளாதார மேதை. பதவி காலத்தில் ஓசியில் விமானத்தில் பறந்து விமான சேவையில் கோடிக்கணக்கில் நட்டம் ஏற்படுத்திய அரசியல்வாதிகள் மக்களைப்பார்த்து குடிநீரை வீணடிக்கிறீர்கள் எனும் கொடுமை இந்தியாவில்தான் பார்க்க முடியும்.

*****************************************

ஈழத்தமிழர்களுக்கு இந்திய நடுவண் அரசு இதுவரை செய்த துரோகங்கள் போதாதென்று இப்போது எதிர்கட்சி எம்பிக்களை இலங்கை அனுப்பி ராசபக்சேவிற்கு நாங்கள் எப்போதும் அன்பான அடிமைகள் என்பதை மெய்பித்திருக்கிறது.   இந்த பயணத்தால் எந்தவொரு நன்மையையும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க போவதில்லை. முதலில் இவர்கள் இலங்கை இனவெறியர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் வீடுகளுக்கு செல்லட்டும் மீனவர்கள் அனுபவித்த வெளியில் சொல்லப்படாத பல்வேறு கதைகள்  நம்மிடம் உண்டு. ஐநூத்தி சொச்சம் மீனவர்களை இந்த இனவெறியர்களிடம் பலி கொடுத்திருக்கிறோம். இருந்தும் இவங்களுக்கு இலங்கை அரசின் இனவெறிமுகம் தெரியவில்லை என்றால் யார் பொறுப்பு.

நிருபமா ராவ் இலங்கை சென்றபொழுது நான் எழுதிய ஒரு டுவிட்தான் நியாபத்திற்கு வருகிறது.அதையே சுஷ்மாவிற்கும் சொல்லிவைப்போம்.

பார்த்து செல்லுங்கள் நிருபமா நீங்கள் செல்வது பிணத்தையும் புணர்ந்தவர்களின் தேசம். #tnfisherman

*****************************************

பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வாடகைவீடுகளில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது கழிவறைகளின் அளவு. உலகின் மிகச்சிறிய கழிவறைகள் பெங்களூரில் வாடகை வீடுகளில் காணலாம். மிகச்சரியாக ஒரு மனிதனை நிற்கவைத்து மூன்று பக்கம் சுவர் எழுப்பி ஒரு பக்கம் வாசல் வைத்தது போன்று கழிவறைகள் கட்டி வைத்திருப்பார்கள். புதிதாக வீடு தேடுபவர்கள் முதலில் சரி பார்க்க வேண்டியது  கழிவறையகாத்தான் இருக்கும். பல புதிய வீடுகளின் கழிவறைகள் நாம் வசிக்கும் வீட்டின் கழிவறையை விட மிகச்சிறியதாக இருந்து தொலைக்கும்.ஆனாலும் அந்த சின்னஞ்சிறிய வீட்டிற்கு வீட்டுக்காரர் கேட்கும் வாடகை கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் நாராயணசாமியின் அணு உலை குறித்த அறிக்கைகள் போல இருக்கும். இது போன்ற வீடுகளில்  மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்ற அறிக்கையை அலுவலியாக்கள் வெளியிடும்வரை காத்திருப்போம்.

Advertisements

நீ இன்னும் வளரும் வல்லரசுதாண்டா சொல்றத கேளு

செப்ரெம்பர் 16, 2011 § 1 பின்னூட்டம்

டுவிட்டரில் கூடங்குளம்

இந்திய அணு உலைகள் பாதுகாப்பானது என்கிறார் மன்மோகன். அவர் எப்பவும் இப்படித்தான் ஆரம்பிப்பார். #koodankulam

உங்கள் கழிவுகளை எல்லாம் கொட்டுவதற்கு
கடல் ஒன்றும் குப்பை தொட்டில் அல்ல மீனவனுக்கு அதுதான் வாழ்வாதாரம் #koodankulam

அணு கழிவுகளை உங்கள் வாழ்விடத்தில் கொண்டுவந்து கொட்டினாலும் அணு உலையை ஆதரிக்கும் நல்லவர்களா நீங்கள் #koodankulam

நாளை டுவிட்ட மின்சாரம் தேவையே என்று பல டுவிட்டர்கள் தயங்குகிறார்கள் # உங்க நேர்மை பிடிச்சிருக்கு டுவிட்டர்களே #koodankulam

நாளைக்கு அணு உலை வெடிச்சா நாலு மாவட்டம் காணாம போயிடும் .நமக்கு ஒவ்வொரு தமிழனும் தேவை மச்சி #koodankulam

கூடங்குளம் போராட்டம் இன்று நேற்று முளைத்த போராட்டம் அல்ல. நீண்ட நெடிய போராட்டத்தின் தொடர்ச்சியே நாம் காண்பது. #koodankulam

அமெரிக்க உலை என்றால் எதிர்ப்பதும் ரசியா என்றால் அமைதி காப்பது கம்யுனிஸ்ட்களின் பணி.செவப்புசட்ட போட்டவன் பொய்சொல்ல மாட்டானாம் #koodankulam

கச்சதீவாகட்டும் கூடங்குளமாகட்டும் மக்களிடம் கருத்து கேட்டா எதையும் முடிவு பண்ணுறானுங்க.பலியாட்டை கேட்டா பலி கொடுக்குரானுங்க #koodankulam

காங்கிரஸ் கழுகு தமிழகத்தை தொடர்ந்துசுற்றுகிறது
எங்காவது தமிழனின் பிணம் கிடைக்குமா? என்று #koodankulam

எவன கேட்டுடா ஒப்பந்தம் போட்டீங்க? தமிழன் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா? #koodangkulam

விவாசாயிகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டுத்தான் உங்கள் வசதிவாய்ப்பை பெருக்கிகொள்ள வேண்டுமா? #koodangkulam

உள்துறை எச்சரிக்க தவறிவிட்டது என்று மன்மோகன் மீண்டும் வாசிப்பார் அதைகேட்க தமிழன் எவனும் உயிரோடு இருப்பானா என்பதுதான் கேள்வி #koodangkulam

தீ சுடும் என்று ஜப்பானியர்கள் ஏற்கனவே சொல்லிவிட்டார்களே தமிழர்களை தீயில் இறக்கிவிட்டுத்தான் இந்தியா தெரிந்து கொள்ள வேண்டுமா? #koodangkulam

தயவு செய்து எங்கள் பிணங்களுக்கு கற்று கொடுங்கள் நீங்கள் வழங்கும் இழப்பீடுகளை பெற்று கொள்வது எப்படி என்று. #koodangkulam

எங்கள் வாழ்வாதரங்களை பழி கொடுத்துவிட்டு நீங்கள் தரும் இழப்பீடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? #koodangkulam

ரசிய தொழில் நுட்பமோ அமெரிக்க தொழில் நுட்பமோ போகப்போவது தமிழன் உயிர் என்பதால் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவோம் #koodangkulam

ஆமா எங்கள் மீனவர் போராட்டம் எதனால் கண்டுகொள்ளப்படவில்லை அவர்கள் காந்தி குல்லா அணியாததாலா? இல்லை IIT யில் படிக்கததாலா? #koodankulam

இங்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்க இத்தாலிக்கு போயிடலாம் எங்கள் வாழ்வும் சாவும் இங்குதான் என்பதால் எதிர்க்கிறோம் #koodankulam

இத்தாலியில் இருந்து தலைவியை இறக்குமதி செய்தது போல வெளிநாட்டிலிருந்து மின்சாரம் கொண்டு வா காங்கிரஸ்காரனே! #koodankulam

தெரியாமத்தான் கேட்கிறேன் இந்தியா என்ன ஜப்பானை விட அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? # கடைய மூடுடா #koodankulam

அன்று தனுஷ்கோடியை கடல் தின்றது எஞ்சி நிற்கும் தமிழகத்தை அணு தின்ன அனுமதியோம் #koodankulam

பரமக்குடியில் ஏழு தமிழர்கள் பிணத்திற்கு அழுது கொண்டிருக்கிறோம் ஏழுகோடி தமிழருக்கும் சமாதி ரெடியாகிறது அணு உலை என்ற பெயரில் #koodankulam

அணு உலை வெடித்தாலும் எனக்கு தெரியாது என்று எளிதாக சொல்லக்கூடிய மண்மோகன் ஆட்சியில் எதுவும் நடக்கலாம் விழித்திடு தமிழகமே #koodankulam

அணு உலை பாதுகாப்பானது என்றால் ஒவ்வொரு அமைச்சர் வீட்டருகிலும் அணு உலை அமை. #koodankulam

நிலத்தடி நீரை உறிஞ்சி விவாசாயிக்கு ஆப்பு. அணு கழிவுகளை கடலில் கொட்டி மீனவனுக்கும் ஆப்பு. சிந்திப்போம் தமிழர்களே #koodankulam

வல்லரசுகளே அணு உலைகளால் அல்லாடுகின்றன நீ இன்னும் வளரும் வல்லரசுதாண்டா சொல்றத கேளு #Koodankulam

இழவு வீடுகளில் சங்கு ஊதுவார்கள் கூடங்குளம் அணு உலையில் சங்கு ஊதத்துவங்கினால் தமிழகமே இழவு வீடாகும். #Koodankulam

இவனுக தரப்போகும் 500 டாலர் இழப்பீடு எப்படி திருப்பதரும் அவர்களின் வாழ்வையும் வாழ்வாதரத்தையும் #Koodankulam

தமிழகத்தின் தலைமாட்டில் உக்கார்ந்து சங்கூத காத்திருக்கும் அணு அரக்கனை துரத்தி அடிப்போம் #Koodankulam

இன்று மீனவன்தானே பாதிக்கப்படுகிறான் என்று அமைதியாக இருந்தால் நாளை அது நமது தலைமுறையையும் பாதிக்கும் ஆகவே குரல்கொடுப்போம் #koodankulam

போபாலில் நடந்தது தமிழ்நாட்டிலும் நடந்திடாமல் தடுக்க குரல் கொடுப்பீர் அணு உலைக்கு எதிராக #koodankulam

சிரிப்பொலி தொடந்து பார்க்காதீங்க ஸ்டாலின்!

ஓகஸ்ட் 1, 2011 § 9 பின்னூட்டங்கள்

சிரிப்பொலி தொடந்து பார்க்காதீங்க ஸ்டாலின்!

கடந்த வாரம் ரெக்கை கட்டி பறந்த முக்கிய செய்தி ஸ்டாலின் கைதும் அதனை தொடந்து கலைஞர் தொலைக்காட்சி ஊதிப்பெருக்கிய செய்திகளும்தான்.

கடந்த சனிக்கிழமை(30-07-2011) கலைஞர் தொலைக்காட்சியில் ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஸ்டாலின் கைது என்று செய்தி வந்துகொண்டு இருந்தது. கைது செய்யப்பட்ட ஸ்டாலின் இதோ பேசிகிறார் என்றார்கள்.

அலைபேசியில் ஸ்டாலின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த உறையை ஆற்றினார் ” நாங்க திருவாரூர் போயிட்டு வந்திட்டு இருந்தோம் இடையில் இருநூறு போலிஸ் இருப்பாங்க அப்படியே வண்டிய மறிச்சு கலைவாணனை கைது செய்யனும்னு சொன்னாங்க என்ன அடிப்படையில் என்று கேட்டேன். அதற்கு என்னையும் ஜீப்பில ஏத்திட்டாங்க. எங்க கொண்டுட்டு போறாங்கன்னு தெரியல. நான் மறியல் பண்ணுனதா சொல்லுறாங்க ஆனா மறியல் பண்ணியது காவல்துறைதான்”   என்று முடித்துக்கொண்டார்.


ஆனால் அரசு தரப்பில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும் தானாகவே ஜீப்பில் ஏறிக்கொண்டார் ஸ்டாலின் திருவாரூர் வந்ததும் கலைவாணன் தவிர அனைவரையும் விட்டுவிட்டோம் என்றளவில் செய்திவந்தது. என்னடா இது தளபதி தலைநகரம் வடிவேல் அளவில் காமெடி செய்திட்டு இருக்காரே? என்று பார்த்தால் அன்று மாலை வக்கீல் வண்டு முருகன் ஸ்டைலில் பொதுக்கூட்ட பேச்சு.

“எங்கள் கட்சி  தொண்டர்களின் உடலில் குண்டு மணி அளவில் இரத்தம் வந்தால் கூட எதிர்கட்சிகாரர்களின் தலைகள் தோரணம் கட்டி தொங்கவிடப்படும்” என்பதை மாற்றி ஒரு “திமுக தொண்டனை கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்” என்று சொல்லி இருக்கிறார்.

பாவம்யா வடிவேலு தமிழ்நாட்டு மக்களை கவலை மறந்து சிரிக்கவைத்துகொண்டிருந்தார் . அவரு பொழைப்புல மண்ணைப்போட்டு கடந்ததேர்தல் பிரச்சாரத்துல இறக்கிவிட்டு  ஒருவழியா காலிபண்ணியது போதாதென்று இப்போ ஸ்டாலினே நேரடியாக களத்துல இறங்கி வடிவோலோட புகழ்பெற்ற காமெடிகளை நடைமுறைப்படுத்திட்டு இருக்கார்.

சேலம் வீரபாண்டி ஆறுமுகம்  போன்ற வாழும் மகாத்மாக்கள் மீது அவதூறு புகார்களாம். அதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டாங்களாம். அண்ணே இன்னும்மான்னே ஊரு உங்கள நம்புது. “நான் செயிலுக்கு போறேன் செயிலுக்கு போறேன்” காமெடி உங்களுக்கு வேணும்னா புதுசா இருக்கலாம் மக்களுக்கு பழசுன்னே!

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எதுவரை செல்லும்?

ஜூலை 27, 2011 § 1 பின்னூட்டம்

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எதுவரை செல்லும்?

 

கடந்த வாரம் அலுவலக வாகனத்தில் வந்து கொண்டிருந்தபொழுது அருகே அமர்ந்திருந்த வடக்கத்தி ஆள் ஆரம்பித்தான் ” நீங்க தமிழ்நாடா?” என்று  “ஆமா” என்றேன். எடுத்த எடுப்பிலேயே ஸ்பெக்ட்ரம் குறித்து ஆரம்பித்தான். உங்க ஆட்கள் திருடர்கள்  என்ற ரீதியில். விவாதிக்கும் மனநிலையில் நான்  இல்லையென்றால் “Your people” என்று வார்த்தை கொஞ்சம் கோபத்தை கிளறியது. கலைஞர் மாதிரி நீங்க ஆரியர்கள் அப்படித்தாண்டா பேசுவீங்கன்னு சொல்ல முடியாதே. அதனால் எல்லா மாநிலமும் அப்படித்தானே என்ற அளவில் பதில் சொன்னேன். வாகனத்தில் இருந்த அடுத்தவன் ஆரம்பித்து வைத்தான் தமிழ்நாடு அரசியல்வாதிகள் அதிகமான ஊழல்வாதிகள் என்று. ங்கொய்யால இன்னைக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கானுங்க  என்னத்தான்யா சொல்லவரிங்க என்று கொஞ்சம் கவனிச்சா பேசிட்டே போறானுங்க. ஏதோ தமிழ்நாட்டுல இருக்குற அம்புட்டு பேரும் ஸ்பெக்ட்ரம் பணத்தை ஆட்டையை போட்டுட்டு இவனுங்களுக்கு சுண்னாம்ப தடவின மாதிரியும் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்துலயும் இதுவரை எவனும் எந்த ஊழலும் செய்யாதது மாதிரியும்.அதுல திரும்ப திரும்ப Your People வேறு. கொஞ்சம் கடுப்போட சொன்னேன் “ஏதோ தமிழ்நாட்டில நாங்க எல்லாம் அப்படித்தான் ராசா ஊழல் செய்வார் அதை யாரும் கண்டுக்க கூடாதுன்னு சொன்ன மாதிரில்லையா பேசிட்டு இருக்கீங்க?” என்றேன் “இருந்தாலும் Your People தான ஓட்டு போட்டது” ங்கிறான். இதெல்லாம் வட இந்திய ஊடகங்கள் தொடந்து பார்ப்பதால் அவர்களுக்கு இருக்கும் ‘தெளிவு’ . காங்கிரசிற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருக்கும் தொடர்பு குறித்து  கேட்டால். மவுன சிங் அப்பழுக்கற்றவர் என்கிறார்கள். “அப்பழுக்கற்றவர் என்றால் ஊழல் நடக்கும் பொழுது என்னய்யா பண்ணிட்டு இருந்தாரு?” என்று கேட்டால். அவர் சொன்னதை Your People கேட்கலையே? என்கிறார்கள். அமாண்டா நாங்கதாண்ட திருடினோம் என்று சொல்வதற்குள் அலுவலகம் வந்துவிட்டதால் விவாதம் அத்தோடு முடிந்தது. ராசாவை உத்தமன் என்று நாம் ஒருவார்த்தை கூட இதுவரை சொன்னதில்லை. இவ்வளவிற்கும் ராசா கனிமொழி கைதை மகிழ்ச்சியோடு பார்த்திருக்கிறோம். தயாநிதி கைது எப்பொழுது என்று ஆவலோடு காத்திருக்கும் ஆட்கள் நாம். ஆனால் நான் சொல்லும் இவர்கள் மாத்திரம் அல்ல வடக்கிந்திய ஊடகங்கள் முதற்கொண்டு ஏதோ நாமதான் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்தோம் என்பது போல. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தமிழர்கள் மீது இருக்கும் வெறுப்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

நேற்றுதான் ராசா தனது வாயைத்திறந்து சிதம்பரம் முதல் பிரதமர் வரை இழுத்து இருக்கிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்னும் பல தலைகளை இழுத்துவரக்கூடும் என்று பரவலாக செய்திகள் வருகின்றன. தயாநிதி சிதம்பரம் என்று அடுத்தும் தமிழர்களே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவ்வழக்கு துவங்கிய நாள்முதலே ராசா இதைத்தான் சொல்லிட்டு இருக்கிறார். நடந்தது எல்லாம் மன்மோகனுக்கு தெரியும் என்று. இப்பொழுது வெளிப்படையாக நீதிமன்றத்திலேயே கூறியிருக்கிறார். இதுவரை குறிப்பிட்டு சொல்லும்படியாக மன்மோகன் இந்த விடயத்தில் எதுவும் பேசியதில்லை. வழக்கின் துவக்கம் முதலே காங்கிரசிற்கு இதில் இருக்கும் பங்கு அமுக்கமாக பேசப்பட்டு வந்தாலும் வெளிப்படையாக இதுபோல எதுவும் வெளிவந்ததில்லை. வடக்கிந்திய ஊடகங்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க துவங்கி இருக்கின்றன அ.ராசா கூறியதில் சிதம்பரம் தயாநிதி குறித்து மாத்திரம் பூதக்கண்ணாடி கொண்டு பெரிதுபடித்தி கொண்டிருக்கிறார்கள். மன்மோகன் சம்மதத்தோட எல்லாவற்றையும் செய்தேன் என்று அராசா கூறியதற்கு. சேனல் -4 இனப்படுகொலை ஆவணத்திற்கு அமைதி காத்தது போல காக்க முடியாது என்பதை மன்மோகன் நன்கு அறிவார்.

உண்மையிலேயே நீதிமன்றத்திற்கு இந்த ஊழலை விசாரிக்க வேண்டும் என்று அக்கறை இருந்தால் மன்மோகனையும் அவரது ரிமோட் கண்ட்ரோலையும் விசாரணை வாளையத்திற்குள் கொண்டு வரட்டும். எத்தனை நாளைக்குத்தான் I don’t know என்று  “Your People”  சொல்லிக்கொண்டு இருப்பீர்கள் என்று பார்ப்போம். மன்மோகன் கூறியதை கேட்கவில்லை என்றால் ஸ்பெக்ட்ரம் விறபனையை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டியதுதானே அப்படி தடுத்து நிறுத்தாமல் சிங்கை தடுத்து நிறுத்தியது யார்? அவர்களையும் நீதிமன்றம் வரவழைக்க வேண்டும்.ஒரு தமிழனாக ராசா கனிமொழி குற்றமற்றவர்கள் என்று சொல்லுவதல்ல நமது பணி இதில் தொடர்புடைய காங்கிரசு  பெருந்தலைகளையும்  இழுத்து வருவதே.

முள்ளிவாய்காளில் ஈழத்தில் தமிழர்கள் கொத்துகுண்டுகளில் செத்து கொண்டிருந்தபொழுது கூட்டணி பேரம் நிகழ்த்தி திமுக வாங்கிவந்த மூன்று காபினட் அமைச்சர்களில் இரண்டை காலி செய்துவிட்டார்கள். ராசா உள்ளேயும் தயாநிதி உள்ளேயா அல்லது வெளியேயா என்று தெரியாமலும் இருக்கிறார்கள். அடுத்ததாக ஜெயலலிதா அழகிரிக்காக ஆப்பு தயாரித்து கொண்டிருக்கிறார்.  கேவலம் இந்த பதவிகளுக்காகத்தான் கருணாநிதி ஈழத்தமிழர்களை கைகழுவினார். இன்று காங்கிரசு திமுகவை கை கழுவ முயல்கிறது. அனைத்து ஊழல் அவதூறுகளையும் திமுக பக்கமாக திருப்பிவிட்டு தான் தப்பித்துகொள்ள முயல்கிறது. ஈழத்தமிழ் மக்களை கைவிட்டது போல தனது மக்களை கருணாநிதி கைவிட மாட்டார் என்று நம்புவோமாக. இப்பொழுதாவது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்கள் கூட்டாளியை காட்டிகொடுத்து அப்பழுக்கற்றவர்களாக நடித்து கொண்டிருப்பவர்களை அம்பலப்படுத்துவர்களா? அல்லது தானும் அவமானப்பட்டு நமக்கு அந்த அவமானத்தை தேடித்தருவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். எவனெவனோ ஊழல் செய்ததற்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன வாழ்கைடா இது?

 

காங்கிரசின் அடுத்த காமெடி இப்போ யுவராசு !

ஜூலை 25, 2011 § 5 பின்னூட்டங்கள்

காங்கிரசின் அடுத்த காமெடி இப்போ யுவராசு !

இன்று காலையில் எல்லா செய்திகளிலும் கையில் ஏதோ பேப்பர் சகிதமாக நாலு பேரு புகார் கொடுக்க வந்திருந்ததை காட்டினார்கள். தமிழக இளைஞர் காங்கிரசில் 35 லட்சம் இளைஞர்களை சேர்த்ததாக புருடா விட்ட யுவராசால் நாலு பேருக்கு மேல ஆளு சேர்க்க முடியவில்லை.. பாவம். சரிய்யா யாரு மேல புகாரு எதுக்கு புகாரு? அப்படின்னு செய்தியை பார்த்தா அதே பழைய பல்லவி சீமான் மீது நடவடிக்கை எடுக்கணும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசிட்டார் அப்படின்னு. அடப்பாவிகளா நாட்டுல என்ன நடந்திட்டு இருக்கு சமச்சீர் கல்வி வருமா வரதா?ன்னு ஒவ்வொரு பெற்றோர்களும் ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள். விலையேற்றம் மின் தட்டுப்பாடு, சாயக்கழிவுநீர்  எத்தனை எத்தனை மக்கள் பிரச்சனை இதுல இப்போ சீமான் மேல நடவடிக்கை எடுப்பதுதான் இவர்களுக்கு முக்கியமாப்போச்சாம். சீமான் ஆரம்பத்துல இருந்து இதைத்தானய்யா பேசிட்டு இருக்காரு. பலமுறை இதையே சொல்லி சிறைக்கு அனுப்பியும் நீதிமன்றம் தானய்யா அவர வெளிய அனுப்பி
இருக்கு. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லை என்று நீதிமன்றம் வைகோவின் ‘பொடா’ கைதின் பொழுதே சொல்லிடுச்சே யுவராசு. இது தெரியாம ஏதோ கோமாவில இருந்து எந்திருச்ச மாதிரி கெளம்பி புகார் கொடுக்கிறேன் பேர்வழி என்று பப்ளிசிட்டி வேறு.

சரி, நாமளும் ஏதோ சின்னப்பய ஏதோ தெரியாம கிளம்பி வந்துட்டான் வீட்டுல இருந்து ஏதாவது பெரியவங்கள கூட்டிட்டு வாப்பான்னு சொல்லலாம்னு பார்த்தா. இவிங்க கோஸ்டில பெருசுங்க இவனைவிட  காமெடி பீசுங்க. கடந்த வார ஆனந்த விகடன்ல  தங்கபாலு கொடுத்த பேட்டியை பார்த்துட்டு அழுவதா சிரிப்பதான்னு நானே குழம்பிபோயிகிடக்கேன். இந்த வயசுலும் மனுசனுக்கு என்னவொரு
நகைச்சுவை உணர்வு. ஈழத்துக்காக தமிழ்நாட்டில் அதிகம் போராடியது ரெண்டு பேரு ஒருத்தர்  நெடுமாறன் இன்னொருத்தர் தங்கபாலுன்னு வேற சொல்லுறார் இதை படிச்சுட்டு எத்தனை பேருக்கு கிறுக்கு புடிச்சுச்சோ? எத்தனை பேருக்கு பேதியாச்சோ?. எப்படியா இப்படியெல்லாம் பேசிட்டு திரியுறீங்க எங்கள பார்த்தா அம்புட்டு மக்கு மாதிரியா தெரியுது.

தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை என்னவென்றே தெரியவில்லை. சரி நம் தொப்புள்கொடி உறவுகள் மீது சிங்கள ராணுவம் புரிந்த இனப்படுகொலை குறித்தும் அக்கறையில்லை. மக்கள் என்றாலே அது நேருவின் மக்கள் என்று அன்றிலிருந்து புரிந்து  வைத்திருக்கிறீர்கள்.  தமிழர்களை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் என்று பிரிக்கும் புத்திசாலிகள் இத்தாலியில் பிறந்தவரை அன்னை   என்கிறீர்களே? என்றால்  நம்மை தேசத்துரோகிகள் என்று சொல்லுவார்கள்.  நாளை ஸ்பெயினில் இருந்து அண்ணியை இறக்குமதி செய்ய காத்திருக்கிறார்கள். இவர்களின் ஈழத்தமிழர்கள் துயரம் பத்தி பேசினால் என்ன புரியப்போகிறது?.தமிழர் பிரச்சனையில் இவர்களிடம் நாம் பேசியதெல்லாம்  எருமைமாட்டில் பெய்த மழையாக போய்விட்டது. இனியும் இவர்களோடு சீரியஸாக பேசி நமது ஆற்றலை வீணடிப்பதை விட்டுட்டு மக்களோடு மக்களாக இந்த காமெடி பீசுகளின் காமெடிக்கு சிரித்து வைத்துவிட்டு போவோம்.

பின்குறிப்பு: மணிசெந்தில் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து

தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஆதரித்து பேசும் சீமானை கைது செய்ய வேண்டும் -இளைஞர் காங்கிரஸ் யுவராஜ் #

உண்மையில் தடை செய்யப்பட வேண்டிய இயக்கத்தில் இருக்கும் யுவராஜினை கைது செய்ய வேண்டும் – நாம் தமிழர்.

சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு!

ஜூன் 30, 2011 § 1 பின்னூட்டம்

சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு!

பெங்களூரில் ஜூலை 2 இல் சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலை குறித்த செய்திகளை விளக்கும் பொருட்டு மனித உரிமை அமைப்புகள் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பினால் நிகழ்வு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. சேனல்-4 வெளியிட்ட இனப்படுகொலை குறித்த ஆவணங்களை திரையிடல் மூலம் மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கி திருப்புவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

Save-tamils தோழர்களின் பல்வேறு முயற்சிகளின் பலனாக இலங்கை அரசின் இனபடுகொலைகளுக்கு எதிரான அமைப்பொன்றை இந்தியாவில் வசிக்கும் பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்போடு உருவாக்கி இருக்கிறார்கள். தமிழர்களிடையே மாத்திரம் விவாதிக்கப்பட்டு வந்த இலங்கை அரசின் இனவெறி இந்தியாவில் வசிக்கும் பிற  தேசிய இனங்களின் செவிகளில் ஒலிக்க இந்நிகழ்வு ஒரு துவக்க புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன். பெங்களூர் வாழ் தோழர்கள் இந்த செய்தியை பரவலாக்குவதோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக்கிட வேண்டிக்கொள்கிறேன், அது நமது கடமையும் கூட! .

ஆரியர் திராவிடர் போரில் அதிகம் அடிவாங்கியது தமிழர்கள்தானே!

பிப்ரவரி 20, 2011 § பின்னூட்டமொன்றை இடுக

ஆரியர் திராவிடர் போரில் அதிகம் அடிவாங்கியது தமிழர்கள்தானே!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு பிறகு தமிழக மேடைகள் தோறும் ஆரியர் திராவிடர் போர் என்ற அக்கப்போர் அறிக்கை போர் நடந்து கொண்டிருக்கிறது.  இனமான தலைவர்கள் “ஐயோ இது ஆரியர்கள் நமக்கு எதிராக தொடுத்த யுத்தம் அல்லவா? திராவிடா நீ உறக்கம் கொள்ளலாமா எழுந்திடு போராடு சீராடு ” என்று எங்கிருந்தோ வந்த நிதியில் எங்கெங்கும் கூவி கொண்டிருக்கின்றனர். இந்த ஆரிய திராவிட போர் நீண்ட நெடிய வரலாறு உடையது. போரின் துவக்கம் முதல் இன்றுவரை திராவிடர்களின் பிரதிநிதி ‘ஒன் அண்டு ஒன்லி’ தமிழர்களே.

திராவிடர் என்ற வார்த்தை தந்தை பெரியாரால் பார்ப்பனரல்லாதோர் சமூக மற்றும் அரசியல் நலன்களை  குறிக்க பயன்பட்டு இன்று  தமிழ்நாட்டின் தமிழரல்லாதோர் அரசியல் நலன்களை பாதுகாப்பது என்ற அளவில் குறுகி இருக்கிறது. பெரியார் வகுத்த சுயமரியாதை , பெண்விடுதலை சமூகநீதி , மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற பகுத்தறிவு கருத்துகளின் தொகுப்பாகவே திராவிடம் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தினோம். ஆனால் திராவிடம் என்றால்  தமிழரல்லாத திராவிடனே ஒன்று சேர் என்றளவில் இன்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. திராவிட அரசியல் என்பது  தமிழரல்லாதோர் தலைமை ஏற்கவும் தமிழன் மாத்திரம் தொண்டனாக கொடி பிடிக்கவும் உண்டாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. திராவிட கட்சிகளின் தலைமை தமிழரல்லாதோர் என்று நீங்கள் சுட்டி காட்டினால் நீங்கள் சாதி வெறியர் என்று குற்றம் சாட்டப்படுவீர். தமிழகத்தில் சாதியை கட்டிக்காப்பதும் ஒருவகையில் தாழ்த்தப்பட்டோர் ஓரணியில் திரண்டுவிடாமல் காப்பதுமே திராவிட கட்சிகளின் முக்கிய கடமையாக இருக்கிறது. உங்களுக்கு இதில் சந்தேகமிருந்தால் திராவிட கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை சாதிவாரியாக கணக்கெடுத்து பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக தென்மாவட்டங்களில் திராவிட கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் யாரென்று பார்த்தாலே உங்களுக்கு உண்மை விளங்கும்.

திருச்சியில் ரெட்டியார் சங்கம் கூட்டிய கூட்டம் ஒன்றில் பேசுகையில் திமுக அமைச்சர் கே.என் நேரு இப்படி கூறுகிறார் ” தமிழ்நாட்டில் இருக்கும் ரெட்டி வகுப்பை சேர்ந்தவர்கள் பிற சாதிக்காரர்களுக்கு வாக்களிக்க கூடாது. தமிழ் நாட்டின் முக்குலத்தோர் போன்று பிரச்சனைகள் என்று வரும்பொழுது தெலுங்கு பேசும் ரெட்டிகள் நாயுடுகள் இணைந்து செயல்பட வேண்டும் (அருந்ததியர்கள் அமைச்சரின் தெலுங்கு பேசும் பட்டியலில் இல்லை) .  சாதி சங்க கூட்டத்தில் பங்கேற்பதே தவறு என்ற (பெரியாரின்) திராவிட கொள்கைகள் இன்று தெலுங்கு பேசும் மக்கள் தெலுங்கு பேசும் அரசியல்வாதிக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சரே கூறும் அளவிற்கு வந்திருகிறது. ஒருவேளை ரெட்டி நாயுடு எல்லாம் திராவிடர்கள்தானே என்றால் அருந்ததியர்கள் தவிர்க்கப்பட்டது ஏன்?  சரி நாம் ஆரியர் திராவிடர் போர் குறித்து பார்ப்போம். …

ஆரியர்களின் பிரதிநிதியாக பார்பனர்களை (பிராமணர்களை) இங்கே நாம் அடையாளம் காணுகிறோம். ஆரியர் திராவிடர்  போரில் ஆரியர்களின் முக்கிய தளபதிகளாக இந்து ராம் சுப்பிரமணிய சுவாமி சோ போன்றவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். இவர்களின் தாக்குதல்களால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது ஈழப்போராட்டமும் ஈழத்தமிழர்களும் என்று உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். இம்மும்மூர்த்திகள்  இன்றுவரை ராசபக்சேவின் ஊதுகுழலாக இருந்துவருவதை அவர்களின் செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.  முள்வேலி முகாம்கள் அருமை என்றும் சிங்கள அரசு தமிழர்களுக்கு உரிய நிவாரணங்களை அருமையாக செய்துவருகிறது என்றும் மூவருமே தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் முழங்கி வருகிறார்கள். மேலும் இம்மூவருமே அதிமுக தலைவிக்கு பெரியளவில் எதிரிகள் இல்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்.

தமிழ மீனவர்கள் தொடர்ச்சியாக சிங்கள இனவெறி படையால் சுடப்பட்டு ஐநூத்தி சொச்சம் தமிழக மீனவர்கள் உயிரிழந்திருந்தாலும் மீனவர் படுகொலை பெரியளவில் வெளியே தெரியாத வண்ணம் ஊடக கடமையை ஆற்றி கொண்டிருப்பவர் சிங்கள ரத்னாவான இந்து ராம் அவர்களே.  இது போன்ற பிரச்சனைகளை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வதென்று ராசபக்செவிற்கு பாடம் எடுத்து கொண்டிருப்பவரும் சாட்சாத் இந்து ராம் அவர்கள்தான்.

தமிழர்கள் கண்ணில் மண்ணைப்போடுவது என்றால்  ஆரியர் திராவிடர் கூட்டு அரங்கேற்றப்படும். அதற்கு பல்வேறு உதாரணங்களும்  உண்டு.  முல்லிவாய்கால் சோகத்தின் போது இத்தாலி தாயின் பெரு விருப்பிற்கு பங்கம் வந்துவிடாதபடி திராவிடர்களின் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி ஆற்றிய சேவையை உலகத்தமிழர்கள் ஒருங்கிணைந்த குரலில் கண்டித்த பொழுது செம்மொழி  மாநாடு என்ற நாடகம் மிகப்பெரிய பொருட்செலவில் நடந்தேறியது. இந்த நாடகத்தினை சிறப்பாக  நடத்தி முடித்திட கருணாநிதி நாடியது இந்து ராம் போன்ற ஆரிய அம்பிகளைத்தான்.

இன்றைய தேதியில் திராவிடர்களின் முக்கிய எதிரியாக கருத்தப்படுவது சுப்பிரமணியசுவாமிதான். ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்கு பிறகு சுப்புரமணிசாமி மீது கடுமையான கோபத்தில் திராவிடப்படைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இதே சுப்பிரமணிய சுவாமி மீது அழுகிய முட்டைகளை வீசிய உயர்நீதி மன்ற வழக்குரைஞர்களை   நையப்புடைந்தது காவல்துறை. நீதி மன்ற வளாகத்துக்குள்ளேயே சென்று சுப்பிரமணியசுவாமி மீது வீசப்பட்ட முட்டைகளுக்கு நியாயம் கேட்டு தடியடி நடத்தியது திராவிடர்களின் ‘ஒன் அன்டு ஒன்லி’ தலைவர் கருணாநிதியின் காவல்துறை.  நீதிமன்ற புறக்கணிப்பில் இருந்த வழக்குரைஞர்கள் ஈழத்தில் சிங்களர்கள் இந்தியாவின் துணையுடன் நிகழ்த்திய கொடும்போரை நிறுத்திட கோரி நிகழ்த்திய போராட்டாங்களை நீர்த்து போக செய்வதற்கு சுப்புரமணிய சுவாமி அப்பொழுது கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தார். வழக்கறிஞர்களின் போராட்டமும் திட்டமிட்டு நசுக்கப்பட்டது.

ஈழத்தமிழர்கள் அங்கே அடிவாங்குகிறார்கள் என்று யாராவது போராடினால் போராடியவர்கள் இங்கும் அடிவாங்குவார்கள்.சில தலைவர்களின் நலன்களை பாதுகாக்க மாத்திரமே திராவிடம் என்ற வார்த்தை இன்றைய தேதியில் பயன்படுகிறது. திராவிடர் கழகம் இந்த தேர்தலில் திமுக தலைமை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. காங்கிரசை எதிர்ப்பதைகூட வீரமணியின் திராவிடர் கழகம் கசப்போடுதான் பார்த்துகொண்டிருக்கும். திராவிடர் கழகத்தின் ஒரே தலையாய பணி மீண்டும் கருணாநிதியை ஆட்சிக்கட்டில் அமர்த்துவது அதன்மூலம் சில பலன்களை அடைவது.

ஆரியர் திராவிடர் போரில் எப்பொழுது ஒருவர் சமூகநீதி காத்த வீராங்கனை ஆவார் எப்பொழுது ஆரிய மாயையாவார் என்பதெல்லாம்  வீரமணி போன்ற பெருந்தலைகளுக்கு மாத்திரமே வெளிச்சம். இந்த தேர்தலில் ஆரியமாயை செயித்தாலும் பழைய சமூக நீதிகாத்த வீராங்கனை என்ற பல்லவியை பாடுவது எப்படி என்பதில் வீரமணி தெளிவாக இருப்பார்.

ஆகவே தமிழர்களே இவர்கள் ஆரிய திராவிட போர் என்று அழைக்கிறார்கள் என்று வழக்கம் போல நம்பிவிடாதீர்கள் இவர்கள் தேவைக்கு தமிழர்கள் வேண்டும். இவர்கள் மோதி கொண்டாலும் நெருங்கி நின்றாலும் பாதிக்கப்படப்போவது தமிழர்கள் மட்டும்தான்.