தமிழின தலைவர் தங்கபாலுக்கு சில கேள்விகள்
ஏப்ரல் 8, 2009 § பின்னூட்டமொன்றை இடுக
(சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை மீண்டும் பதிகிறேன்!)
தமிழின தலைவர் தங்கபாலுக்கு சில கேள்விகள்
காங்கிரஸ் என்னும் தமிழனின் நலம் காக்கும்? இயக்கத்தின் தற்போதைய தலைவர் ‘தங்கபாலு’ அவர்களுக்கு வணக்கமுங்கோ. இதுவரை உங்களை ஒரு பொருட்டாக மதிச்சு தமிழகத்தில் யாரும் பேசியதில்லை.அவ்வளவு ‘அமுக்கமான’ தலைவர் நீங்க. நீங்க ஈழப்போராட்டம் குறித்து பேசினதை கேட்டதும் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்னு தோணிச்சுங்க. வழக்கம் போல காமராஜர் ஆட்சி அமைப்போம்னு சொல்லிட்டு வீட்டில தூங்கிடும் உங்க ஆளுங்க ஆட்சியை கலை அவனை கைது பண்ணுன்னு கோசம் எழுப்பி உங்க தலைமையின் மனதை குளிர்விக்கும் செயல்களை பார்க்கும் போது உங்கள் தமிழ் இன உணர்வு புல்லரிக்க வைக்குதுங்க.
இந்த மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைப்பதையே விரும்பாமல் தமிழ் மாநில காங்கிரசு என்று சுவரொட்டி போடும் நீங்கள் தமிழனுக்கு என்று ஒரு நாடு உருவாவதை ஏற்க்க மாட்டிங்க என்று எங்களுக்கு நல்லாவே தெரியும் தலைவரே. ஈழத்தமிழன் வீட்டில் இன்னைக்கு இழவு விழுந்துகிட்டு இருக்கும்போது அங்கு வந்தும் அரசியல் லாபம் தேடுரிங்களே இது நியாயமா அய்யா. அங்கே தமிழன் கஞ்சிக்கு வழியில்லாமல் காணிவிட்டு குழந்தைகளையும் பெண்களையும் காப்பதற்கு ஓடிகிட்டு இருக்கானே பச்சிளம் குழந்தைகள் செல்லடிக்கு செத்து மடியும் வேளையில் எப்போதோ இறந்து போன ராஜீவுக்கு துக்கம் கொண்டாடுரிங்களே நீங்கள் உண்மைலேயே தமிழ் தாய்க்கு பிறந்தவர்தானா என்ற எண்ணம் தோன்றுவதை எங்களால் தவிர்க்க முடியவில்லை அய்யா!
ஈழத்தில் செத்து மடியும் எங்கள் உறவுகள் எழுப்பும் குரல்கள் எங்கள் தூக்கங்களை கலைத்து விட்டது. அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை போராளிகள் என்ற நிலை இருக்கும் போது. போராளிகளை திவிரவாதிகள் என்று சொல்லி அவர்களுக்கு குரல்கொடுத்தால் கடுமையான சட்டங்கள் பாயும் என்கிறீர்கள். இருக்கட்டும் அய்யா புலிகளை நாம் புறக்கணித்து விடுவோம். ஈழத்தில் செத்து விழும் தமிழனை காத்து நிப்பது யார் ?உங்களால் முடியுமா? சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் பெண்களையும் குழந்தைகளையும் காக்க கடல் கடக்க சம்மதமா? இல்லை இதுக்கும் உங்கள் அன்னையிடம் டெல்லி சென்று அனுமதி பெற வேண்டுமா?

காங்கிரஸ் காத்த தமிழின உரிமைகள்
நீங்கள் முன்னெடுத்து செல்லும் காங்கிரஸ் என்னும் பேரியக்கம் தமிழனுக்கு பெற்று தந்த உரிமைகளை கொஞ்சம் பட்டியல் இட முடியுமா தலைவரே? காவேரியில் தண்ணி வேண்டும் என்று நீங்கள் நடுவண் அரசை நிர்பந்தித்தது உண்டா இல்லை முல்லை பெரியார் பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?. நமது அண்டை மாநில காங்கிரஸ் எல்லாம் அந்தந்த மாநில உரிமைகள் பேசும்போது தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும் நடுவண் அரசுக்கு செல்ல நாய்குட்டிகளாக இருப்பது ஏன் தலைவரே?
ஈழத்தில் சிங்களன் சுட்டு வீழ்த்தும் தமிழனுக்கு குரல் எழுப்பத்தான் உங்களால் முடியவில்லை சிங்களன் சுட்டு வீழ்த்தும் இந்திய மன்னிக்கவும் தமிழக மீனவனுக்காக எப்போதாவது குரல் கொடுத்து இருக்கிறீர்களா இல்லை நடுவண் அரசிடம் மனுவாவது கொடுத்து இருக்கிறீர்களா?
காவேரி, பாலாறு, முல்லை பெரியார் மீனவர் பிரச்சனை என்று எங்கே தமிழன் நலம் கேட்டாலும் ஓடி ஒழிந்து கொள்ளும் நீங்கள் ஈழம் என்றாலே ராஜீவ் கொலை என்று கொதித்து எழும் மர்மம் என்ன தலைவரே? ராஜீவ் மரணம் என்ற கோமாவில் இருந்து நீங்கள் இன்னும் எழவேயில்லையா?

நீங்கள் தற்போது சீமான் போன்ற தமிழ் இன உணவாளர்களுக்கு எதிராக கையில் எடுத்திருக்கும் துருப்பிடித்த ஆயுதம் இந்திய இறையாண்மை. அது என்னங்க இந்திய இறையாண்மை? எங்களை பொறுத்த வரை இறை என்பது பொய். நீங்கள் இந்தியாவிற்கு இருப்பதாக சொல்லும் ஆண்மையும் எங்கள் மீனவர்கள் சிங்களனால் சுட்டு வீழ்த்தப்படும் கோரத்தை தட்டி கேட்க்க முடியாத பொழுதே பொய் என்று ஆகிவிட்டது. இப்படி இல்லாத ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் தோழர்களை நசுக்க முனைவது நியாயமா?
காவேரில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்ல ஒரு எஸ்எம் கிருஷ்ணாவால் முடிகிறது. தலைமையால் அவர்களுக்கு உத்தரவிட முடியவில்லை. ஆனால் நீங்கள் எப்போது தமிழக நலனுக்காக சிறிதேனும் குரலை உங்கள் தலைவியிடம் உயர்த்தியது உண்டா? அப்போது இந்திய இறையாண்மை எங்கே போனது? தண்ணீர் பிரச்சனையில் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாதா? ஒகேனக்கல் நீர் தமிழத்தின் உரிமை என்று உங்களால் உரக்க சொல்ல முடியுமா?
அது என்னங்க இந்திய இறையாண்மை தமிழனுக்கு மட்டும் தொடர்ந்து போதிக்கப்படுகிறது? இந்தியாவில் பிறவாத ஒருவரை இந்திய பிரதமராக்க நீங்கள் முயலும் பொழுது வெளிநாடுகளில் வாழும் நம் தமிழர்களுக்காக குரல்கொடுத்தால் அது குற்றமா?
சீக்கிய படுகொலைக்கு ஒற்றை வார்த்தையில் பிரயச்சித்தம் தேடிக்கொண்ட நீங்கள் ஒற்றை மனிதன் மரணத்தை வைத்து எத்தனை நாள் அரசியல் செய்யபோகிறீர்கள்? ராஜீவ் மரணத்திற்கு உரிய தண்டனை வேண்டும் எனும் நீங்கள் அமைதிப்படையின் கொடுஞ்செயல்களுக்கு நீதி விசாரணை வைக்க தயாரா?
மறுமொழியொன்றை இடுங்கள்