தமிழர்களின் அடையாளம் ஆகும் குத்து நடனம்!

ஜூலை 28, 2009 § 2 பின்னூட்டங்கள்

தமிழர்களின் அடையாளம் ஆகும் குத்து நடனம்!

jodi_no1

manada1

‘குத்து நடனம்’ என்பது தமிழனின் அடையாளமாக சமீப நாட்களில் மாறி வருகிறதோ என்ற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆபாசமான அங்க அசைவுகளை குறிப்பிடும் விதமாக தமிழ் திரை உலகின் ஈடு இணையற்ற நடிகனான எம்.ஆர்.ராதா அவர்கள் இரத்த கண்ணீர் திரைப்படத்தில் “நான் மேலை நாடுகளில் கலை பிம்பத்தோடு ஆடிய நடனங்கள் ஆபாசமானது என்றாயே பாலு ,அஜாந்தா எல்லோராக்களில் நம் முன்னோர்கள் செய்து வைத்திருக்கும் கலை வடிவத்தை பார், கலை மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தம்” என்பார்

பதிலுக்கு லட்சிய நடிகர் என்றழைக்கப்படும் எஸ்எஸ்ஆர் ” உன் காம வேட்கைக்கு கலை போர்வை பொத்தாதே!” என்பார். ஆபாச அங்க அசைவுகள் கூடிய நடனங்கள் குறித்த முகத்தில் அடித்தது போன்ற கருத்துக்கள் அன்றே வந்து விட்டது. ஆனால் இன்றைய நிலை என்ன?

அந்த வகை நடனங்களுக்கு ‘குத்து நடனம்’ என்று பெயரிட்டு கலை போர்வையுடன் காம வேட்கை தமிழகம் முழுவதும் பரப்பபட்டு இருக்கிறது. கதை இல்லாமல் கூட படங்கள் வரும் ‘குத்து நடனம்’ இல்லாமல் படங்கள் வராது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. தொலைகாட்சிகளிலும் குத்து நடனத்தின் ஏக போக சந்தாதாரராகி இருக்கிறது. சமூகத்தில் இருக்கும் அவலங்களை துகிலுரிக்க வேண்டிய திரைத்துறையும் தொலைகாட்சிதுறையும் பெண்களை துகிலுரிக்கும் போக்கினை துகிலுரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

தொலைகாட்சி என்னும் மாபெரும் ஊடகம் ஆபாசங்களை காசாக்கும் வித்தையில் இறங்கி இருப்பது வேதனைக்குரியது. தொலைக்காட்சிகளில் வைக்கப்படும் நடன போட்டிகளில் வரும் அங்க அசைவுகள் குறித்து தமிழக அரசியல் தலைவர்களே விமர்சிக்கும் அளவு குத்து நடனங்களின் வளர்ச்சி அபாரம்.

திரைத்துறையை ‘குப்பை’ என்று விமர்சனம் செய்த அய்யா பெரியாரின் பெயரில் வந்த திரைப்படத்தில் கூட ‘ரகசியா’ பங்கேற்கும் ‘குத்து பாடல்’ இடம் பெரும் அளவிற்கு தமிழர்கள் மனதில் நீங்காத இடத்தை குத்து பாடல்கள் பிடித்து இருக்கிறது. மஞ்சள் புத்தம் அளவிற்கு ஆபாச கவிதைகள் எழுதும் காசுக்கு மாறடிக்கும் கவிஞர்களில் தாக்கத்தால் ‘பட்டுகோட்டை’ போன்ற கவிஞர்கள் இருந்த இடத்தில் ஆபாசம் எல்லை மீறி பாய்கிறது.

மக்கள் ஆதரவில்லாமல் இந்த ஆபாச விதைகள் தமிழக மண்ணில் நடப்பட்டு இருக்குமா ? என்பதுதான் எங்கள் கேள்வி. கலையின் வடிவம் காமத்தை விதைப்பதை நாம் அமைதியாக ஏற்று கொள்வது குத்து பாட்டிற்கு நாம் மறைமுகமாக கொடுக்கும் ஆதரவுதான்.நகைச்சுவை காட்சிகளில் வரும் ஆபாசமும் அளவிற்கு அதிகமாக இருக்கிறது. சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் கூட ‘சொம்பு ரெம்ப அடிவாங்கி இருக்கும் போல‘ என்று ஆபாச முத்துக்களை உதிர்ப்பதை நாம் அமைதியாக ரசித்து கொண்டுதான் இருக்கிறோம் .

தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வரும் போட்டிகளில் வரும் நடனங்களில் வரும் அங்க அசைவும் ஆடும் ஜோடிகளில் பரிசு வெல்ல காட்ட வேண்டிய நெருக்கமும் கண்கூச வைக்கும் ஒன்றாக இருக்கிறது. அது போன்ற நடன நிகழ்வுகளில் ஆடும் போட்டியாளர்களை விமர்சிக்கும் நடுவர்கள் பேசும் மொழியில் ஆபாச வழிசல்கள்.ஆடும் பெண்ணை பார்த்து ஒரு தத்து பித்து சொல்லுறார் “செம்ம சூடா (Hot) இருக்கேம்மா “ அப்புறம் ஒருத்தர் சொல்லுறார் ” கிளாமரா இருக்கே” “செம குத்து குத்தின” இதெல்லாம் வெகுஜன ஊடகங்களில் நடுவர்கள் உதிர்க்கும் முத்துக்கள். இதை கேட்டதும் அந்த பெண்கள் அப்படியே மார்பில் கை வைத்து மேடையில் கையை வைத்து அவர்கள் காட்டும் உணர்ச்சி எவரெஸ்டில் ஏறியவர்கள் காட்டும் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டினை காட்டிலும் அதிகமானது.

தெரியாமல் கேட்கிறேன் ஒரு பெண்ணை பார்த்து நீ காம உணர்வை தூண்டும்படி இருக்கேன்னு சொல்லுவது ஒரு பெண்ணிற்கு பெருமை செய்யும் விடயமா? அதில் அந்த பெண் மகிழும்படி என்ன இருக்கிறது? சட்டசபையிலே இது குறித்து கவனம் ஈர்க்கும் படி குத்து நடனம் குத்தாட்டம் போடுவதை தட்டி கேட்க்கும் வேலையை உடகங்கள் செய்வதிற்கு தயங்குவதின் காரணம் என்ன?

Advertisements

பண்டமாற்று முறையில் தமிழனின் உரிமை!

ஜூலை 24, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

karuna

பண்டமாற்று முறையில் தமிழனின் உரிமை!

நீண்டநாட்களாக நீடிக்கும் தமிழர் பிரச்சனைகளில் நிரந்தர தமிழினத்தலைவர் சாணக்கியத்தனமான சில முடிவுகளின் மூலமாக தீர்வு கண்டு இருக்கிறார் என்பதை சமீப செய்திதாள்கள் நமக்கு சொல்லுகின்றன.

தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுதர தமிழ் அறிஞர்கள் பலஆண்டுகளாக போராடிவந்தாலும் கடந்த நடுவண் அரசு அந்த தகுதி தமிழுக்கு இருப்பதாக அறிவித்தது இதற்கு பின்னால் முத்தமிழ் வித்தகர் கலைஞர் இருக்கிறார் என்று ஆர்பரித்தோம். ஆனால் அடுத்தஆண்டிலே கன்னடம் மற்றும் தெலுங்கிற்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதாக அறிவிப்பு கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டோம்.

உலகபொதுமறை தந்த வள்ளுவர் சிலையை பெங்களூரில் திறப்பதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வள்ளுவர் சிலை திறக்கப்படாமலே பல ஆண்டுகளாக கோணிக்குள் அடைப்பட்டு கிடந்தது. வள்ளுவருக்கு வானுயரசிலையை தமிழகத்தில் வைத்தால் மட்டும் போதுமா? பக்கத்து மாநிலத்தில் சிறு சிலையையேனும் திறந்திட வேண்டாமா? என்று தமிழ் ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலாக இதோ விரைவில் வள்ளுவர் சிலை பெங்களூரில் என்று செய்திகள் சொல்கின்றன. அதே நேரத்தில் சென்னையில் சர்வக்ஞர் என்னும் கன்னட கவிஞர் சிலையை வைக்க போவதாக செய்திகளும் வருகின்றன.

இந்த இரு நிகழ்வுகள் மூலம் முத்தமிழ் அறிஞர் பண்டமாற்று முறையிலே தமிழனின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற முத்தாய்ப்பான தத்துவத்தை சொல்லுகிறார் போலும். சரி செம்மொழியாகட்டும் வள்ளுவர் சிலையாகட்டும் நீங்கள் செய்த ‘Given Take Policy’ வென்றதாகவே வைத்து கொள்வோம். காவேரியில் நீரும் முல்லைபெரியாரில் நீரும் எதனை கொடுத்து வாங்கி தருவீர்கள்? சிலையும் செம்மொழி பட்டமும் பண்டமாற்று முறையில் பெற்றுதந்த தலைவர் தமிழனுக்கு நீர் பெற்று தருவதற்கு எதனை பண்டமாற்று செய்வார்?

இங்கே ‘ஈழத்தமிழனின் உயிரும் மத்திய அமைச்சர் பதவியும் எப்படி பண்டமாற்று முறையில் பரிமாறப்பட்டது’ என்று சொல்லவில்லை. அப்புறம் இங்கே இருக்கிறவன பத்தி முதல்ல சிந்தி அப்புறம் ஈழத்தை பேசலாம்னு சில அறிவுஜீவிகள் கிழம்பி வந்திடும்.

Where Am I?

You are currently viewing the archives for ஜூலை, 2009 at தமிழன்பன் பக்கம்.