மதிமாறனின் தமிழ்தேசியஎதிர்ப்பு சரிதானா?

ஓகஸ்ட் 28, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

மதிமாறனின் தமிழ்தேசியஎதிர்ப்பு சரிதானா?

mathimaran_360
பெரியாரிய கருத்துக்களை தொடர்ந்து விதைத்து வருபவரும் தமிழகத்தின் ‘ஆதிக்க சாதிவெறி’க்கு எதிராக கடுமையாக எழுதிவரும் ‘அம்பேத்காரின் மாணவர்’ மதிமாறன் சமீபத்திய நாட்களில் ‘தமிழ்தேசியம்’ மீது தனது காட்டத்தை தொடர்ந்து காட்டி வருகிறார். தமிழ்தேசியம் என்றவார்த்தையை கேட்டாலே கடைசிபெஞ்சு மாணவன் காணக்குவாத்தியாரை கண்டவுடன் ஏற்படும் ‘கடுப்பு’ மதிமாறன் அவர்களுக்கு ஏற்படுவதை அவரது சமீபத்திய படைப்புகள் காட்டுகின்றன. மதிமாறன் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவன் என்றாலும் அவரது தமிழ்தேசிய எதிர்ப்பு சிலகேள்விகளை மனதில் எழுப்பி செல்வதை தவிர்க்க முடியாத காரணத்தினாலே இந்தபதிவினை இடுகிறேன்.

தமிழ்தேசியவாதிகள் என்று மதிமாறன் யாரை குறிப்பிடுகிறார்? ‘நெடுமாறன்’, ‘மணியரசன்’ போன்று தமிழகத்தின் அரசியல் முகவரி இல்லாத முகவர்களையா? தற்போதைய தமிழ்தேசியம் பேசும் இவர்கள் சொந்தமாக மேடைகள் போட்டு கருத்துமுழக்கம் செய்யும் வலிமை கூட இல்லாதவர்கள். அடுத்தவர்கள் போடும் மேடைகளில் ‘சிறப்பு விருந்தினராக’ சென்று வரக்கூடியவர்களாகவே தமிழ்தேசியவாதிகள் இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் சிறிதும் செல்வாக்கு இல்லாதவர்களே நீங்கள் ‘கட்டம்’ கட்டும் தமிழ் தேசியவாதிகள். இவர்களை பத்தி நீங்கள்போட்ட பதிப்புக்கள் எத்தனை எத்தனை?

DMK chief

தமிழ் தேசியத்தின் மீது காட்டமாக விமர்சனங்களை வைக்கும் மதிமாறன் அவர்கள் ‘திராவிட தேசியக்கட்சிகளை’ கண்டும்காணாமலும் விடும் காரணம் என்ன? பெரியாரின் நேரடிவாரிசுகள் என்று சொல்லிக்கொள்ளும் திராவிடகட்சிகள் தமிழகத்தின் கடந்த நாற்பதாண்டுகளில் ஆதிக்கசாதிகளை தடவிகொடுத்து அழகுபார்த்தது கொஞ்சமா என்ன?பெரியாரால் பெரிதும் நேசிக்கப்பட்ட காமராசர் இன்று சாதியதலைவராக்கப்பட்டு இருந்தாலும் உண்மையில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரே!. முத்துராமலிங்கம் பலமுறை காமராசரை சாதியதாக்குதல் புரிந்து இருக்கிறார். காமராசர் எனது கண்களுக்கு சாதிய ஆடையாளமாக தெரியவில்லை.

அண்ணா ‘நல்லதம்பி’ என்றழைத்த கருணாநிதி சட்டசபையில் முத்துராமலிங்கம் கூறிய பிற்போக்குத்தனமான “மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்! கங்கை சூதகமானால்?” என்ற அரைவேக்காட்டுகருத்தை மேற்கோளாக குறிப்பிட்டு இருக்கிறார். முத்துராமலிங்கத்தின் நுற்றாண்டுவிழா அதுதாங்க ‘குருபூஜைக்கு’ சிறப்பு விருந்தினராக சென்று வந்திருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டியில் சிறுத்தைகள் இந்த மண்ணில் நடமாடலாம் சிங்கங்கள் நடமாடக்கூடதா? என்றார் சிறுத்தை யார்? சிங்கம் யார்? என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். முத்துராமலிங்கத்தின் மரணத்தின் போது திமுக இரங்கல் வாசித்தா இல்லையா? முத்துராமலிங்கத்தின் குருபூஜைக்கு சென்றுவரும் கருணாநிதி இமானுவேல்சேகரன் குருபூஜைக்கு என்றாவது சென்றதுண்டா?
ambedkar
அதிமுக பத்தி சொல்லவேண்டியதே இல்லை அந்த கட்சியின் மறுபெயர் ‘தேவர்கட்சி’. வைகோ முத்துராமலிங்கத்தின் குருபூஜையை ஒருவருடம் கூட தவறவிடுவதில்லை. விஜயகாந்தும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை. விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிற்கும் ‘அம்பேத்கார்’ என்று ஒரு தலைவர் இருந்தார் என்பதாவது தெரியுமா? என்றே தெரியவில்லை. இன்னும் காமராசருக்கு மணிமண்டபம் கட்டுவது யார்? என்றே முடிவெடுக்கவில்லை. மண்டபபொறுப்பு சரத்குமார் கையில் இருக்கிறதாம்.

‘தென்னகத்துகாந்தி’ என்று கொண்டாடும் திராவிடகட்சிகள் ‘தென்னகத்து அம்பேத்கார்’ என்ற வார்த்தையை எப்பொழுதாவது சொன்னதுண்டா? திமுக மற்றும் அதிமுகவின் தென்மாவட்ட முகவரிகளாக இருப்பவர்களை கொஞ்சம் உற்றுநோக்குங்கள் யாரென்று புரியும்.

தமிழ்தேசியவாதிகள் என்றால் யாரென்றே தெளிவாகாதநிலையில் மீண்டும் மீண்டும் அவர்களையே கட்டம்கட்டும் மதிமாறன் திராவிடவாதிகளை அம்பலப்படுத்த தயங்குவது ஏன்? மொன்னையாக அங்கொன்றும் இங்கொன்றும் விமர்சனம் செய்துவிட்டு தமிழ்தேசியவாதிகளை ‘விட்டேனா பார்‘ என்று எழுதி கொண்டிருக்கிறீர்கள். பெரியாரின் திராவிட கழகத்தின் இன்றைய நிலை பத்தி சொல்வதென்றால் இந்த இழை பத்தாது.

பெரியார் அம்பேத்காரை கொண்டாடியதுபோலே பெரியாரியின் கொள்கைவழிவாரிசுகள் கொண்டாடது ஏன்? இன்று ஆட்சியில் இருக்கும் கருணாநிதி செய்யும் தவறுகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இவர்களை சொல்லாமல் தமிழக அரசியலில் சிறியதாக்கம் இல்லாத தமிழ்தேசியவாதிகளை பேசிப்பேசி என்ன செய்ய?
thevar
திராவிடத்தை தங்கள் கட்சியின் பெயரில் வைத்து இருக்கும் இவர்கள் தென்மாவட்டங்களுக்கு போனால் முதலில் செய்யும்காரியம் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போடுவதுதான். தென்மாவட்டங்களில் அம்பேத்காரின் சிலைவைப்பது புறக்கணிக்கப்படுகிறது அல்லது சிலைகளுக்கு மாலையிடுவது தவிர்க்கப்படுகிறது.

திராவிட கட்சிகளின் யோக்யதை பத்தி சொன்னால் நம்வீடு தேடி ஆட்டோ வரலாம். கருநாடகத்தில் வள்ளுவர் சிலையை வைத்த கருணாநிதியால் பாப்பாபட்டி கீரிபட்டியில் அம்பேத்கார் சிலை வைக்க முடியாதா என்ன?ஊருக்கு ரெண்டு பேர் கூட இல்லாத தமிழ்தேசியவாதிகளை மலையளவு விமர்சித்து உண்மையான குற்றவாளிகளான “திராவிட தேசியவாதிகளை” தப்ப விடலாமா? வெறும் கொள்கையளவில் இருக்கும் தமிழ்தேசியம்தானா தமிழகத்தின் தலைவிரித்தாடும் சாதியவெறிக்கு காரணம்?  மதிமாறன் திராவிட கட்சிகளின் மீதான தனது காதலை விடுத்து நேர்மையாக திராவிட கட்சிகளை விமர்சிக்க முன்வரவேண்டும்.

Advertisements

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!

ஓகஸ்ட் 26, 2009 § 1 பின்னூட்டம்

genocide3

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!

இன்று காலையில் இணையத்தை பயன்படுத்தும் தமிழர்கள் அனைவருக்கும் அந்த காணொளியை காணும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைத்து இருக்கும். நிர்வாணமானநிலையில் கரங்கள் கட்டப்பட்டு கும்பல் கும்பலாக தமிழர்களை சிங்கள சிப்பாய்கள் சுட்டு வீழ்த்தி பிணக்காடாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை சேனல் 4 என்னும் இங்கிலாந்து ஊடகம் அம்பலத்தி இருப்பதை. உண்மையிலேயே தமிழ் தாய்க்கு பிறந்த எவனுக்கும் கண்களில் கண்ணீர் துளிர்த்து இருக்கும், எனக்கும் அப்படித்தான்.( வேறு நம்மால் என்ன செய்ய முடியும்?.)

தமிழன் என்றாலே ஆடைகளை அவிழ்த்து பார்ப்பது சிங்களன் வழக்கம் போல. சில மாதங்களுக்கு முன்னே போரில் செத்துவிழுந்த தமிழ்போராளிபெண்ணை நிர்வாணப்படுத்தி இணையதளங்களில் உலவவிட்டான் சிங்களகாடையன் என்ன செய்ய முடிந்தது நம்மால்?  முத்துகுமார் போன்ற உணர்வாளர்கள் தீக்குளித்து உயிர்விட்டதுதான் மிச்சம். அடைக்கலம் கேட்ட தமிழ்மக்களை நிர்வாணப்படுத்தி நடக்கவைத்தான் சிங்களன் என்றபொழுதும் நம்மால் வாய்திறக்க முடியவில்லையே?. கொத்து கொத்தாக தமிழர்கள் மீது குண்டுவிழுந்த பொழுது நம்மில்பலர் “யுத்தத்தை நிறுத்துங்கள் என்று இலங்கையை நிர்பந்தியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தோம். “இறையாண்மை மிகுந்த இலங்கையில் இந்தியா தலையிடாது” என்று பதில் வந்ததே தவிர தமிழனுக்காக இந்திய அரசாங்கம் குரல் எதுவும் கொடுத்ததா?

genocide

தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை அழுத்தம்குடுங்கள் என்றால் கடிதம் எழுதியே காலம் கடத்தினார்கள் காலம் கடந்தபின் உண்ணாவிரத நாடகமும் நடத்தினார்கள். போர் முடிந்துவிட்டது என்றார்கள் செத்ததமிழர்களின் எண்ணிக்கையை காட்டிய பொழுது மழைக்கு பின்னே துவானம் என்று சாவுவீட்டில் சங்கத்தமிழில் விளையாட்டு காட்டினார்கள். போரில் சிங்களன் செய்த மனித உரிமைமீறல்களை விவாதத்திற்கு எடுத்து கொள்ளவேண்டும் என்று ஐநாவில் வாக்கெடுப்பு வந்தபொழுது உலகத்தமிழன் அனைத்து நாடுகளிடமும் மண்டியிட்டான் சில நாடுகள் செவிசாய்த்து. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவோ தமிழனின் கண்ணீரில் நியாமில்லை! உலக அரங்கில் உரக்க சொன்னது. தமிழக முதல்வர் வழக்கம் போலவே இறையாண்மை மிக்க இலங்கைக்கு எதிராக வாக்களிங்களேன்! என்று கடிதம் எழுதிவிட்டு கலட்டி கொண்டார். ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா, சீன பாகிசுதான் துணைகொண்டு மீண்டும் ஒருமுறை தமிழனை வீழ்த்தி காட்டினான் சிங்களன்.

genocide1

காந்தி தேசம் கொடுக்குதே புத்ததேசம் கொல்லுதே! என்று தொண்டைதண்ணி வத்த நாமும் எவ்வளவோ குரல்கொடுத்தோம். நம்மில் சிலர் தங்கள் உயிரினையே கொடுத்தார்கள் ஒன்றும் நடக்கவில்லை. இலங்கையில் தமிழன் செத்தொழியவேண்டும் என்ற ஆசை இந்திய அரசிற்கும் உண்டு என்று நமக்கு தாமதமாகதெரிய வந்தது.

ஆறரைகோடி தமிழன் இருக்கிறான் என்று சொல்லும் இந்தியா சிங்களஇனவெறியனை நட்புகரம் கூப்பி அழைக்கிறது. “காங்கிரசிற்கு வாக்களிக்காதே!” என்று தமிழர்களிடம் நாம் வைத்த கோரிக்கைகள் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் ஆனது. இப்பொழுது ஈழம் என்ற சொல்லே உச்சரிக்க கூடாது என்று இந்திய-தமிழக கூட்டு அறிக்கை சொல்லுகிறது. இலங்கையில் அகதிமுகாமில் தமிழன் மழையால் அல்லல்படும் பொழுது சுமுகமானநிலை வந்ததே பாருங்கள்! என்கிறார் தமிழர்களின் முதல்வர்.

முதல்வரின் உண்ணாவிரத நாடகத்தை இடைவெளி இல்லாமல் ஒளிபரப்பிய தமிழினதலைவரின் குடும்ப ஊடகங்கள் இந்த ஆதாரங்களை வெளியிடுமா? என்றால் வெளியிடாது. வடக்கிந்திய ஊடகங்கள் பத்தி நாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தமிழின உணர்வாளர்கள் ஏதேனும் போராட்டங்கள் செய்தால் “கலகக்காரர்கள்” என்றும் “பிரிவினைவாதிகள்” என்று ஏசுவதற்கு தமிழக ஊடகங்கள் தாயாராக உள்ளன.

இந்தியா இலங்கைக்கு எப்படி எல்லாம் உதவியது என்று ஆதாரப்பூர்வமான செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆம் கொடுத்தோம் அவர்கள் பாதுகாப்பிற்காக! என்று பாதுகாப்புஅமைச்சகம் பெருமிதத்தோடு சொல்கிறது. இந்தியா சிங்களன் உதவியுடன் செய்த தமிழினபடுகொலைகள் பத்தி நாம் வாய்திறக்ககூடாதாம். இந்திய இறையாண்மையின் பெயரினால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறோம்.

தமிழகதமிழர்கள் அனைவருமே மந்திரி பதவியின் பொருட்டு ஏற்கனவே அடகு வைக்கப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சன உண்மை. நாம் ஏதேனும் பேசினால் “சிங்களன் கோவித்து கொள்வான் “என்கிறார் முத்தமிழ் அறிஞர். தமிழனை காப்பதைவிட தலையாய கடமை ஒன்று இருக்கிறது அதுதான் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது.தாயகதமிழனும் இந்தியாவின் செயல்களை அமைதியாக வேடிக்கை பார்பதன் மூலம் தமிழன படுகொலைகளில் தனக்கான பங்கினை ஆற்றிக்கொண்டு ‘இந்தியன்’ என்ற பெருமிதத்தோடு இருக்கிறான்(இருக்கிறோம்).

இந்தியர் என்பதில் பெருமிதம் கொல்வோம்
இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!

தமிழர்களின் சாதிய அபிமானம்! அல்லது என்று தணியும் இந்த சாதிய மோகம்?

ஓகஸ்ட் 24, 2009 § 12 பின்னூட்டங்கள்

என்று தணியும் இந்த சாதிய மோகம்!

vijay

நேற்று இரவு விஜய் தொலைக்காட்சியில்(23/8/2009) நீயா? நானா? நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது உறங்குவதற்கு முன் கொஞ்சம் பொழுது போக்கலாமேன்னு விஜய் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கினால் காரசாரமான விவாதம் ஓடிக்கொண்டு இருந்தது. தலைப்பு தென்மாவட்டங்களில் காதல் திருமணங்கள் தடைசெய்யப்படுவது சரியா?. நாமளும் தென்மாவட்ட ஆள்தான் என்பதால் அப்படி என்னதான் பேசுறானுங்க என்று பார்த்தால்…….

தென்மாவட்டத்தை சேர்ந்த ஒவ்வொருவனும் பேச ஆரம்பிச்சாய்ங்க! ஒருந்தன் சொன்னான் எங்க சாதிக்குத்தான் முதல் மரியாதை, அடுத்தவன் சொன்னான் நாங்கெல்லாம் ‘ராசராசன்’ பரம்பரைன்னு. அடுத்தவன் நாட்டாமையாம் அதுக்கு அடுத்தவன் சொன்னாத்தான் சாமியே கோவிலவிட்டு கிளம்புமாம். இப்படியே அவனவன் அவனோட சாதியபத்தி பெருமை அடிச்சாய்ங்க இவங்க சொன்னதில இருந்து பார்த்தா எல்லா பயலுவளும் ‘என்னசாதி’ன்னு தெளிவா தெரிஞ்சுச்சு. தென்மாவட்டம்னாலே ‘அருவா’தான் போல. தங்கச்சங்கலியும் முறுக்கு மீசையும் ‘அவுக’ பெருமைன்னு சொல்லிக்கிட்டாக. தாழ்த்தப்பட்ட ஒருவர் கூட அங்க இல்லைன்னு தெளிவா தெரிஞ்சுச்சு.

ஏன் காதலை தடை விதிக்கிறோம்? என்று ஊரு நாட்டாமையும் அதோட அல்லகையும் பேச ஆரம்பிச்சிச்சு.முதல்ல அல்லக்கை ஆரம்பிச்சுச்சு “வெளியூர் பயலுகள ஊருக்குள்ள விடமாட்டோம் எங்க ஊரு பிள்ளைகள வெளியில படிக்கவோ வேறு எதுக்குமோ அனுப்ப மாட்டோம். வெளியூருல இருந்து வந்தாலும் எங்க சாதி பயலுகள மட்டும்தான் அனுமதிப்போம். அப்படியே காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா அடிச்சு ஊரைவிட்டு விரட்டுவோம். காதலர்களோட அப்பா அம்மாவை ஊரைவிட்டு தள்ளி வைப்போம் எல்லாரு காலுளையும் விழவைப்போம் அப்படின்னு சிரிச்சுக்கிட்டே ஏதோ இவரு எவரெஸ்டுல எப்படி ஏறுவதுன்னு விளக்குவது போல விளக்கிகிட்டு இருந்தாப்ள.

vijay1

அப்படியே அல்லக்கை சொல்லுச்சு மேலும் விவரங்களுக்கு நாட்டாமையை அணுகுங்கள் அப்படின்னு பக்கத்திலேயே தாடியும் மீசையுமா ‘நம்மநாட்டாமை’ காதலிச்சா சாமி கோவிச்சுக்கும் நாங்க தெய்வத்தை நம்புற ஆளுங்க, ஆதனால்தான் எங்க ஊரு ஆளுகள படிக்க கூட வெளில அனுப்புறது இல்ல. காதலிச்சா சமூதாயம் அழிஞ்சுபோகும். வேறசாதி பையனை காதலிக்கிறது மாகாபாவம். காதலிச்சா சொல்லிபார்ப்போம் இல்லைன்னா ஆளையே காலி பண்ணிடுவோம். எங்களுக்கு சாதிதான் முக்கியம் “ அப்படின்னு பேசின பிறகுதான் தோணிச்சு இதுக்கு இவன் அல்லக்கையே தேவல போலிருக்கேன்னு. இவனெல்லாம் ஒரு நாட்டாமை இவனை நம்பியும் ஒரு ஊரு . திண்டுக்கல் பக்கத்துலதான் இவரது கிராமமாம் போயி பார்க்கலாம்னு தோணினாலும் நம்மள மாதிரி வேற “சமூக ஆளுங்கள” உள்ள விடமாட்டானுங்கன்னு திட்டத்தை கைவிட்டுட்டேன்.

ராசராசன் பரம்பரை அதுக்கு மேல! நாங்கெல்லாம் பயங்கரமான ஆளுங்க, உங்களுக்கு எல்லாம் வளர்ப்பு சரியில்ல அப்படின்னு சொல்லிட்டு எதிர்தரப்புல இருந்த பெண்மணி ஒருத்தரை பார்த்து சொன்னாரு “ஆச்சாரமான குடும்பத்துல இருந்து வந்த நீங்க இப்படி பேசலாமான்னு” ராசராசனைவிட ‘அவா’தான் உயர்த்தசாதின்னு அவரே ஒத்துக்கிறார்(இவரு உண்மைலேயே ராசராசன் பரம்பரைதான் போலிருக்கு!). நல்லவேளையாக அந்த பெண்மணியின் சொற்களில் பார்ப்பனியம் இருந்தாலும் எண்ணத்தில்  பார்ப்பனியம் இல்லை.(நிகழ்ச்சியில் ஒரே ஆறுதல் இவர்தான்!) சாதிவெறி தவறு என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

இந்த நீயா? நானா? சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்று உங்களைப்போலே எனக்கும் தெரியும்தான். இப்படி வெகுஜன ஊடகம் என்ற எண்ணம்(வெட்கமும்) கொஞ்சமும் இல்லாமல் எப்படி இந்த சாதிய வெறியர்களால் கொக்கரிக்க முடிகிறது என்பதே எண் கேள்வி. இதுல படித்த ஆண்கள், பெண்கள் வேறு. “எங்கசாதிதான் உயர்த்து” “காதலிச்சா சும்மா விடமாட்டோம் “என்றும் சலம்பல்கள் . ஏதோ இவர்களது கிராமம்தான் உலகம் என்பதைப்போலே காதலிப்பவர்களை இன்னும் ஊரைவிட்டு தள்ளி வைத்து கொண்டிருக்கிறார்கள். காதலித்தவர்களின் பெற்றோர்களை ஊரைவிட்டு நான்குமாதம் தள்ளிவைத்து ஊர்மக்கள் காலில் விழவைத்து தோப்புக்கரணம் போட வைத்து காதலித்த பிள்ளைகளோட எந்த தொடர்பும் வைத்து கொள்ளகூடாது என்று நிர்பந்திப்போம் என்று கூறிய ‘தற்குறி’ நிகழ்வு முடியும்வரை தனது சாதனைகளை எண்ணி எண்ணி சிரித்து கொண்டே இருந்தது.

kaathalar

வெகுஜன ஊடகங்களிலேயே இப்படி கொக்கரிக்கிற இந்த ஆதிக்க வெறியர்கள் தங்கள் சாதி பெருமையை நிலைநாட்ட கிராமங்களில் என்னவெல்லாம் செய்வார்கள்? என்று எண்ணிப்பாருங்கள். இன்னும் எத்தனை எத்தனை பெற்றோர்கள் ஊரின் மத்தியில் தோப்புக்கரணம் போட்டு அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்களோ? மாற்றம் என்ற ஒன்றினை ஏற்க மறுத்து கிராமங்களில் சாதிய திமிரோடு இன்னும் இவர்கள் நடைப்போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ‘படித்த’ இவர்களது வாரிசுகள் இவர்களைவிட சாதி வெறியர்களாக இருப்பது மிகப்பெரிய வேதனை.

நகரங்களில் உங்களுக்கு நெருக்கமான நண்பனுக்கு கிராமத்தில் அவனுக்கு வேறுமுகம் இருக்கிறது என்பது மறக்க முடியாத உண்மை.கிராமங்கள் சாதியத்தின் பிறப்பிடமாகவும் அதனை ஊக்குவிக்கும் இடமாகவும் இருக்கிறது. கிராமங்கள் அழியவேண்டும் என்று பெரியார் சொன்னதன் அர்த்தம் இப்பொழுதுதான் விளங்குகிறது.

இந்த நூற்றாண்டிலும் சாதிய வெறியர்கள் தங்கள் ஆதிக்கவெறி தவறென்று உணராமல் இருப்பதை நாம் உணரவேண்டும். இவ்வளவு கட்டுக்காவலையும் காதல் காலங்கலாமாக உடைத்து கொண்டிருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை. இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா? என்று பிற்போக்குத்தனமாக சாதிய பூசணிக்காயை மறைக்கும் போக்கினை விடுத்து சாதிவெறி அகற்ற அணிசேர்வோம் தோழர்களே! முதலில் நம் நண்பர்களிடம் விவாதிப்போம் சாதிய எண்ணங்கள் எவ்வளவு கொடியது என்று புரியும்படி செய்வோம். சுயசாதி அபிமானம் உடையவர்களை அதிலிருந்து மீட்டெடுப்போம். சமூகம் என்பதை சாதியின் அடிப்படையில் பார்ப்பவர்கள் இருப்பதால்தான் தமிழ்சமூகத்திற்கு என்ன நேர்ந்தாலும் தமிழன் கைக்கோர்க்க மறுக்கிறான். சாதியம் அழிந்தால்தான் தமிழ்சமூகம் பிறக்கும். சாதியம் நிறைந்த தமிழ்சமூகத்தால் யாருக்கு என்ன பயன்?

நம் வீட்டில் யாரேனும் சாதிவிட்டுசாதி காதலித்தால் முதலில் நம் ஆதரவை கொடுப்போம். அந்த காதல் வெற்றி பெறச்செய்வோம். சாதியத்தின் கரங்களில் இருந்து காதலர்களை காப்போம். காதல்திருமணம் சாதியை மட்டுமல்ல வரதட்சனை, மூடநம்பிக்கைகளை கொண்ட சடங்குகளையும்தான் அழிக்கிறது.காதலுக்கு தோள் கொடுப்போம். சாதியவெறியை வேரறுப்போம்.

ராஜபக்சேகூட தமிழக தேர்தல்களில் வெல்லலாம்!

ஓகஸ்ட் 21, 2009 § 3 பின்னூட்டங்கள்

ராஜபக்சேகூட தமிழக தேர்தல்களில் வெல்லலாம்!

laugh


தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலுக்கு பின்னாலே தலைவர்களின் அறிக்கைகளோ விமர்சகர்களின் பார்வைகளோ பொதுவாக ‘இதனால்தான் இந்த வெற்றி’ என்று மக்களின் உள்ள கிடக்கை தெரிவிப்பார்கள்.

வெற்றி பெற்ற தலைவர்களை கேட்டால் ” இது எங்கள் கட்சியின் சாதனைக்கு கிடைத்த வெற்றி” என்றும் “எதிர்கட்சிகளை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்” என்றும் கதைவிடுவார்கள். விமர்சகர்களோ அந்த தொகுதியில ‘இந்த சாதி’ அல்லது ‘இந்த மத’ வாக்காளர்கள் அதிகம் அதனால் இந்த வேட்பாளருக்கு வெற்றி என்றும் எதிர்கட்சிகளின் பிரச்சார உக்தி வேறுமாதிரி இருந்து இருக்கலாம் என்று தமக்கு தோன்றியதை எழுதுவார்கள்.

உண்மை இதுதானா? மக்கள் ‘ஒருமுடிவு’ எடுத்து விட்டுத்தான் வாக்களிக்கிறார்களா? . அட போங்கப்பா நீங்கவேற, காசு எவன் அதிகமா கொடுக்குரானோ அவனுக்குத்தான் ஓட்டு.  அழகிரியை  மதுரையிலும் ஜே.கே.ரித்தீசை ராமநாதபுரத்திலும் மக்கள்  அத்தனை ஓட்டு வித்தியாசத்துல வெல்லவைத்தது எதனால? வைகோ, தா.பாண்டியன் எல்லாம் தோற்றது  எதனால? உடனே ஈழப்பிரச்சனை தமிழக மக்களிடம் எடுபடவில்லை அப்படின்னு நினைச்சுகாதீங்கப்பா.

ஜெயலலிதாவை ஆண்டிபட்டியில் தோற்கடிப்பேன்” “விஜயகாந்தை மதுரையில் தோற்கடிப்பேன்”  அப்பிடின்னு நம்ம அஞ்சாநெஞ்சன் வீராவேசம் காட்டுறாரே எந்த நம்பிக்கையில்?. எல்லாம் ‘ப’ படுத்தும் பாடு. வேண்டுமானால் “ராசபக்சே”வை வேட்பாளராக்கி அஞ்சாநெஞ்சனை  பொருப்பாளராக்கி மதுரையில் நிறுத்தி பாருங்கள் கண்டிப்பாக எதிர்த்து நிற்ப்பவர் ‘டெபாசீட்’ இழப்பார். வரலாறு காணாத வெற்றியை “ராஜேபக்சே” பெற்று தமிழகமீனவர்களுக்கு அமைச்சராக்கூட முடியும்.

காசேதான் கடவுளுப்பா !

நம்ம வாக்காளர்களுக்கு

நல்லா தெரியுமப்பா!

யாகவராயினும் ‘நா’காக்க! அல்லது தமிழக அரசியலில் குழாயடிசண்டை!

ஓகஸ்ட் 20, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

யாகவராயினும் நாகாக்க! அல்லது தமிழகஅரசியலில் குழாயடி சண்டை!

kalaingar2
jeyalalitha-003
தமிழக அரசியலில் ‘நாகரீகம்’ எனபது சிறிது அளவுகூட இல்லாமல் குழாயடிசண்டை அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும் திமுக அரசை ‘மைனாரிட்டி அரசு’ என்று விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் ஜெயலலிதா. அதிமுக வெளியிடும் அறிக்கையில் அரசு என்று எங்கெல்லாம் வருகிறதோ அதற்கு முன்பு ‘மைனாரிட்டி’ என்று இணைத்துதான் வெளியிடுவார்கள்.இதனை மக்களும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை திமுக அரசு பொறுப்பேற்றநாள் முதலே இந்த வேலை துவங்கி விட்டது.

இவ்வளவளவு நாள் கழித்து திடீர்னு தமிழகமுதல்வர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘திருமதி’ ஜெயலலிதா என்று குறிப்பிட்டு உள்ளார். தனது அரசை ‘மைனாரிட்டி’ என்று சொல்வதை நிறுத்தாதவரை தானும் ‘திருமதி’ என்று சொல்வதை நிறுத்தி கொள்ளப்போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

இதுவரைக்கும் சும்மா தூங்கிட்டு இருந்த இரத்தத்தின் இரத்தங்கள் கொதித்து எழுந்து போராட ஆரம்பித்து விட்டன. அதிமுக மகளிரணி பயன்படுத்தும் வார்த்தைகள் ‘பகீர்’ரகம். “கருணாநிதியே மன்னிப்புக்கேள்!” கேடுகெட்ட, கேவலமான என்பதை இணைத்து தொடர்முழக்கங்கள் வேறு. ‘ராசாத்தியம்மாள் என்மனைவி அல்ல கனிமொழி என்மகள்‘ என்று பேசிய கருணாநிதி உலகில் உள்ள பெண்களின் உரிமை குரலாக இருக்கும்(?) ‘அம்மா’ பத்தி பேசலாமா?” என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியதை தொடர்ந்துஜெயா தொலைக்காட்சி ஒலி(ஒளி)பரப்பி வருகிறது.

இன்னும் என்னென்ன அநாகரீக சொற்கள் வருமோ என்று பயமா இருக்கு. இவங்க எவ்லோ வேணும்னாலும் தரம்தாழ்ந்து போவார்கள் என்று தெரிகிறது.திருமணமாகாத ஒரு பெண் தலைவரை ‘திருமதி’ என்று அழைக்கலாமா? போதுவாழ்க்கைக்கு வந்த பெண்ணை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவது வள்ளுவரின் குரல் படித்த முதல்வருக்கு அழகா? ஜெயலலிதா பற்றி விமர்சிக்க எத்தனையோ இருக்க ‘திருமதி’ என்பது தேவைதானா?

நடைபெறும் இடைத்தேர்தல்களின் விறுவிறுப்பை பார்த்தால் விரைவிலே மைனாரிட்டி அரசு  ‘மெஜாரிட்டியாகி’ விடும் என்பது தனிக்கதை. போகிறபோக்கில் அதிமுக மைனாரிட்டி எதிர்கட்சியாகிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. மைனாரிட்டி திமுக அரசு என்பதை மக்கள்மட்டுமல்ல அதிமுக கட்சி நிர்வாகிகள்கூட பெரிதாக ரசிக்கவில்லை. மைனாரிட்டியோ மேஜாரிட்டியோ எப்படியோ தமிழக முதல்வர் கலைஞர்தான். இப்படி சூழலில் எதிர்கட்சிதலைவரை வசைபாடி தனது தரத்தை தமிழக முதல்வர் குறைத்து கொள்ளலாமா?

யாகவராயினும் நா காக்க காவாக்கால்
சோக்காப்பர் சொல்லிழுக்குப் பட்டு

நீண்டு கொண்டே செல்லும் தமிழனின் துயரம்!

ஓகஸ்ட் 18, 2009 § 2 பின்னூட்டங்கள்

நீண்டு கொண்டே செல்லும் தமிழனின் துயரம்!

APTOPIX Sri Lanka Civil War

இலங்கையில் தமிழனாக பிறந்தது இவ்வளவு பெரிய குற்றமா? (ஈழம் என்றசொல் தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறதாம்!) இலங்கை சுதந்திரம் பெற்றநாள் முதாலாக அழுது புலம்புகிறான் தமிழன் அங்கே!

தந்தை செல்வாவின் அறப்போராட்டமாகட்டும் (‘தம்பி’ என்ற சொல்லும் தடை செய்யப்பட்டிருக்கிறதாம்!) பிரபாகரனின் ஆயுதப்போராட்டமாகட்டும் தமிழனுக்கான அடிப்படை மனிதஉரிமைகள் கொஞ்சமும் பெற்றுதந்திடவில்லை என்பதே உண்மை. “போர் வேண்டாம்” என்று அசோகரிடம் வேண்டுகோள் வைத்த ‘புத்தபிட்சுகள்’ போர்தான் ஒரே தீர்வு என்று இலங்கையில் முடிவு செய்துள்ளார்கள்.

தமிழர்களை நிர்மூலமாக்கு, அவர்கள் வீட்டு பிஞ்சுகளை தரையில் போட்டு நசுக்கு, பெண்களை கற்பழி, முதியவர்களை முடமாக்கு, இளைஞர்களை காணமல் போகச்செய் என்று அறுபதாண்டுகளாக கொக்கரித்து வருகிறது சிங்கள பேரினவாதம். தமிழர்களை பாதுகாக்க ஆயுதம் ஏந்திய புலிகளை உலக நாடுகள் ஒருங்கிணைந்து தோற்கடித்து இருக்கிறார்கள். புலிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று சொல்லும் அறிவாளிகளுக்கு சிங்களனின் இனவெறியை விமர்சிக்க ஏதோ ‘ஒரு தடை’ காலம்காலமாக இருந்துவருகிறது.

srilankan2

‘உலகமகா பயங்கரவாதிகளான’ விடுதலைபுலிகளின் கட்டுபாட்டில் நிம்மதியாக வாழ்ந்துவந்த மக்கள் தற்பொழுது திறந்தவெளி சிறைச்சாலையில் சிக்குண்டு இருக்கிறார்கள். சுமார் மூன்று இலட்சம்மக்கள் இந்த வதைமுகாம்களில் எப்பொழுதாவது வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். நாளுக்கு நாள் இந்த நம்பிக்கை பொய்த்து வருகிறது. யுத்தம் முடிந்து மூன்று மாதமாகியும் தமிழ்மக்கள் விடுவிக்கபடாமல் இருப்பதும் எப்போது விடுதலை என்று கூறப்படமால் இருப்பது உலக தமிழர்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

ஆடுமாடுகளைக்கூட அடைத்துவைக்க உலகளவில் விதிகள் இருக்கின்றன. ஆனால் அத்தகையவிதிகள் கூட இலங்கையில் தமிழனுக்கு இல்லை. 800 பேருக்கு ஒரு கழிவறை, வரிசையில் நின்று குடி தண்ணீர், மின்சார வசதி இல்லை, வெறும் மண்தரையில் இருப்பதை விரித்து படுக்க வேண்டுமாம். உணவுப்பற்றாக்குறை வேறு பல்லிளிக்கிறது. அதற்கும் அதிலும் மண் விழுந்தது போலே ‘கடும் மழை’ இப்போது இலைங்கையில். என்ன செய்வான் தமிழன் யோசித்து பாருங்கள். எப்போது விடுதலை என்று இப்போது கூறமுடியாது அதைபேசித்தான் முடிவு செய்வார்களாம். உரிமைகள் பத்தி கேட்டாலும் அதே பதில்தான் வருகிறது. யாருடன் பேசுவார்கள்? அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
tamil-boy-inside-a-tamil-refugee-camp
மனித பேரவலம் நடந்து இருக்கிறது என்பதோடு முடித்து கொண்டது ஐநா. ஏழுகோடி தமிழர்கள் வாழும் இந்தியாவின் செயல்பாடுகள் எல்லாம் ‘சிங்களன் எனது நண்பன்‘ என்றே இருக்கிறது. “அழுத்தம் கொடுங்கள்” என்று கடிதம் எழுதியதுடன் தன்னுடைய கடமை முடிந்து விட்டது என்று முடித்து கொண்டார் தமிழர்களின் முதல்வர். இவரது கடிதங்கள் வெறும் கணக்கு காட்டும் வித்தை மாத்திரமே என்பதை உலகதமிழன் நன்கு அறிவான். எதிர்கட்சிகள் சம்பிரதாயத்திற்கு ஒரு போராட்டத்தை நடத்தி விட்டு போகும். தமிழக எழுத்தாளர்கள், விமர்சகர்கள் இன்னும் புலிகளின் தவறுகளை ஆராய்வதில் இருந்து வெளிவரவில்லை.
உலகளவில் எட்டுகோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் சிங்களன் எந்த தைரியத்தில் தமிழர்கள் மீது இன வெறியை ஏவி விடுகிறான்?. நூறு கோடிமக்களை குடிமக்களாக கொண்ட இந்தியாவின் (தமிழக) அரசியல்வாதிகளை ‘கோமாளிகள்‘ என்று கூறும் துணிவு சிங்களனுக்கு எப்படி வந்தது?. இவ்வளவு நடந்தும் “நான் இந்தியாவின் ஆதரவாளன்” என்று ராஜபக்சே பேட்டி கொடுப்பதும் “இலங்கையில் அகதிமுகாம்கள் வேறு எந்த நாட்டினைவிடவும் மிக அருமையாக இருக்கிறது” என்று ‘இந்து’ ராம் எழுதி கொண்டிருக்கிறார். தமிழனின் ஒற்றுமையின்மை தமிழின அழிப்பின் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதுதானே உண்மை.

அகதி முகாம்களை பார்வையிட சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதியில்லை. அரசு விருந்தினராக செல்லும் இந்து ‘ராம்’ போன்றவர்கள் சிங்களனுக்கு ‘மாமா’ வேலை பார்க்கிறார்களே அன்றி உண்மை நிலையை சொல்லுவதில்லை. இவர்கள் ஒரு நாளேனும் அந்த முகாம்களில் தங்கி பார்க்க வேண்டும். மழை காலத்தில் மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படுமோ என்று அச்சம் ஏற்படுகிறது. அப்படி ஏற்பட்டாலும் தமிழனுக்காக குரல்கொடுக்க நாதியில்லை. சர்வேதேசமும் சிங்களனுக்காகவே வாதாடும். நம் துயரத்தை சொல்ல பிற ஊடகங்கள் கூட அல்ல தமிழக ஊடகங்கள் கூட முன்வராது.

srilanka
மீதமுள்ள தமிழ்மக்கள் முழுமையாக அழிக்கப்பட்டாலோ அல்லது கலப்பினமாக்கப்பட்டாலோ அன்றி சிங்களனின் வெறி அடங்காது என்பது தெரிகிறது. ஆறரை கோடி தமிழ் மக்களின் முன்பாகவே தம் சகோதரர்களின் தாயகநிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. குரல் கொடுக்க தமிழ்நாட்டில் எவனும் இல்லை.’ஈழம்’ என்ற வார்த்தையை உச்சரிக்க தமிழகத்தில் தடை. “திராவிடதேசம்” கேட்ட ‘அண்ணா’ அவர்களின் புகைப்படத்துடன் இந்திய வல்லாதிக்கம் எச்சரிக்கைவிட்டிருக்கிறது ஈழம் பத்தி பேசினால் கடும்நடவடிக்கை என்று.

மொத்தத்தில் தமிழன் உலகஅரங்கில் சர்வதேசஅநாதை’ என்பது மாத்திரம் உண்மை என்று புரிகிறது!.

இடைதேர்தல்வந்திடுச்சு!(கூவிகூவி விற்கப்படும் சனநாயகம்!)

ஓகஸ்ட் 14, 2009 § 1 பின்னூட்டம்

இடைதேர்தல் வந்திடுச்சு!

கூவிகூவி விற்கப்படும் சனநாயகம்!cumbumrama

இப்போது தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் வந்திருக்கிறது. நான் பெறந்த ‘கம்பம்’கூட இடைத்தேர்தலால் களைகட்டி இருக்குதாம். வழக்கம்போல நானும் ‘ஜனநாயககடமை’ ஆற்ற வேண்டியது மட்டும்தான் பாக்கி.எல்லோரையும் போல வரிசையில நின்னு கையில மையவைச்சு ஓட்டுபோட்டு ‘ஜனநாயக கடமை’ ஆற்றுவதற்கு முன்னால் கொஞ்சம் யோசித்து பார்த்தேன். ஆமா எதுக்குய்யா? திடீர்னு இந்த இடைத்தேர்தல் நம்ம தொகுதியில வந்துச்சுன்னு விசாரிச்சுபார்த்தா சொல்லுறாங்க எங்கஊரு முன்னாள் ச.ம.உ(சட்ட மன்ற உறுப்பினர்). பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம். எனக்கு ஆச்சரியமாகிடுச்சு இந்த காலத்துலயும் பதவி ஆசை இல்லாத மனுசனா? என்று. அப்புறம் செய்திகளில் பார்த்தா அவரு கட்சிமாறிட்டாருன்னு சொன்னாங்க அது அவரோட சொந்தவிசயம் அவரு கட்சிமாறின நமக்கு என்னன்னு விட்டுட்டேன். அப்புறமா இடைதேர்தல் தேதி அறிவிச்சப்பிறகு பார்த்தா நம்ம முன்னாள் ச.ம.உ மறுபடியும் போட்டிஇடுறாராம் அதுவும் ஆளும்கட்சியின் சார்பில். வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது அவரை எதிர்த்து போட்டிபோட்ட திமுகவேட்பாளரும் அவரோடசேர்ந்து பல்லு இளிச்சுகிட்டு நிற்கிறார்.


என்னதான்யா நடக்குது இங்க?  இளையான்குடி மற்றும் தொண்டாமுத்தூரில் இடைத்தேர்தல் நடப்பதற்கும் காரணம் முன்னாள் சமஉ க்களின் கட்சித்தாவல்தான் . இந்த இடைத்தேர்தலை முக்கிய எதிர்கட்சிகளான அதிமுக ,மதிமுக, பாமக புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதற்க்கு முன்னர் நடந்த இடைத்தேர்தல்களில் கிடைத்த ‘அனுபவம்’தான்  முக்கியகாரணம். திருமங்கலம் ஏற்படுத்திய திகிலில் இருந்து எதிர்கட்சிகள் மட்டுமல்ல இன்னும் தமிழகமே மீளவில்லை. அதுக்குள்ளே அடுத்த இடைத்தேர்தல்களா? என்று எதிர்கட்சிகள் அலறிஅடித்து ஓடியதாகவே தெரிகிறது. வழக்கம்போல இடைத்தேர்தல் நாயகர் ‘கிளப்பி’ விடப்பட்டு இருக்கிறார்.

Azhagiri_Bday


இடைதேர்தலில் வன்முறையை ஏவிவிடுவது பத்தி அதிமுகவிற்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை. அந்த கலாச்சாரத்தை துவக்கிவிட்டவர்களே அவர்கள்தான் அதைபத்தி எழுத இந்தகட்டுரை போதாது. இடைதேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெல்லும், வெல்லவேண்டும் என்றநிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் தேவைஇல்லாமல் நேரத்தை செலவழிக்க வேண்டாம் என்று அதிமுக ஒதுங்கி கொண்டது. வழக்கமாக அதிமுகவின் வாக்குகளை பிரிக்கிறார் என்று கூறப்படும் விஜயகாந்த் இந்தமுறை அதிமுக களத்தில் இல்லாதபொழுது ‘யாரு’ வாக்குக்களை பிரிப்பது என்றுதெரியாமல் தனியேநிற்கிறார். மேலும் கம்யுனிஸ்டுகள் வேட்பாளர்களை அறிவித்து வெல்லமுடியாது என்று தெரிந்தபொழுதும் தனியாக ‘காமெடிஷோ’ நடத்தி கொண்டுஇருக்கிறார்கள். கொங்குவேளாளர் பேரவையும் பாமக போலேவரவேண்டும் என்ற ஆசையில் போட்டிஇடுகிறது.

இந்த இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சியான அதிமுக களத்தில் இல்லாததால் மக்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள். திருமங்கலம் போல தமக்கும் ‘சரியான’ கவனிப்பு கிடைக்கும் என்று காத்திருந்த மக்களின் நம்பிக்கையில் மண்ணையள்ளி போட்ட கட்சிகள் மீது மக்கள் கடுப்பில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்னும்இல்லை. ‘ஏதாவது குடுங்கப்பா’ என்று மக்கள் ஏக்கத்துடன் இருப்பது தெரிகிறது.


azhagiri1 இந்த இடைத்தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஐந்திலும் ஆளும் கூட்டணி வெல்லும் அதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வர் “அரசின் சாதனைக்கு மக்கள் கொடுத்த அங்கிகாரம்,
மின்வெட்டு,விலையேற்றம் எதையும் மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை” என்பார் அப்படியே விஜயகாந்த் இரண்டாம் இடம் பிடித்தது பற்றி நம்ம நிருபருங்க கேட்பாங்க! (போட்டி போட்டதே இரண்டு பேர்தான் கம்யுனிஸ்டுகள் பாஜக, எல்லாம் சும்மா நாங்களும் இருக்கோம்ல என்று காட்டுறதுக்கு நிக்குதுங்க) ” வெல்ல முடியாதுன்னு தெரிந்தும் போட்டி போட்ட அவரோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்பார்.

M_Id_68336_dmdk_vijayakanth

கடந்த தேர்தலில் மதிமுக சார்பில் நின்று வென்ற இரண்டு ‘சமஉ’ க்கள் எதிர்கட்சி வரிசையில் இருந்தால் தாம் நினைத்ததுநடக்காது என்று தெரிந்து பதவிதுறந்தனர். திமுக சார்பில் போட்டியிட்ட ‘சமஉ’ தான் ஆளும்கட்சியில் இருந்தாலும் நினைத்தது கிடைக்காததால் எதிர்கட்சியில் சங்கமித்தது. இவர்கள் எல்லாம் ‘ஏதோ’ எதிர்பார்த்து கட்சி தாவி இருக்கிறார்கள். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர பகைவர்களும் இல்லை என்பதை தெளிவாக்க இவர்கள் நடத்தும் ‘செயல்முறை விளக்கம்’ மக்கள்வரிபணத்தை எப்படி விரயமாக்கிறது என்று சிந்தித்துபாருங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவக்கூடதுன்னு கட்சித்தாவல் தடைசட்டம் போட்டால் இப்படி பதவிதுறந்து மீண்டும் போட்டிபோட்டு ஆளும்கட்சியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள் ( என்ன ஒரு புத்திசாலித்தனம்?). ஆனால் தேர்தலுக்காகும் செலவு மக்கள் தலையில்.

anithaஅடுத்ததாக தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் பதிவி துறந்திருக்கிறார் ஆளும்கட்சியில் சங்கமித்திருக்கிறார் மீண்டும் இடை தேர்தல் வரும் அவரே மீண்டும் வேட்பாளராக வரலாம். எதிர்கட்சிகள் புறக்கணிச்சிட்டு ஓய்வெடுக்க போய்விடும். விஜயகாந்தும் தனது அடுத்த படமான ‘விருதகிரி’ படப்பிடிப்பை இடைவேளை விட்டுட்டு வேட்பாளரை அறிவிப்பார். வழக்கம் போல ஆளும் கட்சிகளின் சாதனைகள் வெல்லும் வெல்லும்.


இப்படி பதவி மோகத்தால் அணிமாறும் அரசியல்வாதிகளால் இடைத்தேர்தல்களை நடத்தி கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? கட்சித்தாவல் தடைசட்டத்தில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு வழிமுறையை இவர்கள் கண்டறிந்து தொடர்ந்து இப்படியே செய்து கொண்டு இருந்தால் நாமும் மக்கள் பணத்தை இப்படி விரயமாக்கவேண்டுமா?

கட்சி மாறுவது அந்த மனிதனின் ஜனநாயக உரிமையாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவு? இடைத்தேர்தல் செலவை பதவி துறக்கும் ‘ச.ம.உ.’ பின்னர் இணையும் கட்சியே ஏற்க வேண்டும் என்று கொண்டு வந்தால் என்ன? (அதுக்கு எப்புறம் எவனையாவது கட்சி மாறச்சொல்லுங்க பார்ப்போம்)

இதுக்கு அப்புறமும் நான் கம்பத்துல போயி வரிசையிலநின்னு ஓட்டு
போட்டா என்னை அப்புறம் ரெம்பநல்லவன்னு சொல்லிடுவீங்க. அதனால நான் ஓட்டு போடுவதில்லைன்னு முடிவுபண்ணிட்டேன். நான் ஓட்டுபோடலைன்னாலும் அவனுங்களே போட்டுக்குவானுங்க என்பது தனிக்கதை..

வாழ்க ஜனநாயம்!


Where Am I?

You are currently viewing the archives for ஓகஸ்ட், 2009 at தமிழன்பன் பக்கம்.