கேரளா உருவிய தமிழனின் கோவணமும்! முல்லைபெரியாறு அணையில் தமிழனின் தார்மீக உரிமையும்!

செப்ரெம்பர் 24, 2009 § 3 பின்னூட்டங்கள்

கேரளா உருவிய தமிழனின் கோவணமும்! முல்லைபெரியாறு அணையில் தமிழனின்  தார்மீக உரிமையும்!
vivasaayi

முல்லைபெரியாறு  அணைக்கு மாற்றுஆணைகட்ட ஆய்வினை மேற்கொள்ளுமாறு மன்மோகன்சிங் என்னும் தமிழன் நலம்காக்கும் பாரதபிரதமரின் தலைமையிலான மத்தியரசு கேரளாவிற்கு பச்சைகொடி காட்டி இருக்கிறது. சேட்டன்களும் அணைகட்டுவதற்கு இடத்தினை முடிவுசெய்ததோடு அடுத்தகட்ட பணிகளுக்கு தயாராகிவிட்டதாகதெரிகிறது. ஏற்கனவே மழை பெய்தால்மட்டுமே தண்ணீர் என்றநிலையில் காவேரியும், அணைக்குமேல் அணை என்றுகட்டியதால் பாலாறு வெறும் கனவாகி போய்விட்டது. முல்லைபெரியாரில் கொஞ்சம்போல் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது அதற்கும் ஆப்பு தயாராகிவிட்டது. வழமைபோலவே தமிழினதலமை உலகத்தமிழர் மாநாட்டிற்கு தோரணம் தொங்கவிடுவதில் கவனமாகஇருக்கிறது.  எதிர்கட்சி என்று ஒன்று இருக்கிறது என்றுகாட்ட அவ்வப்பொழுது அறிக்கைவழியே “சிறுபான்மை அரசு” என்று திட்டிவிட்டு ஓய்வெடுக்க போய்விடுகிறது. முல்லை பெரியாரில் தமிழர்களுக்கு உரிமை இல்லை! என்று உரக்க முழக்கமிடுகிறது கேரளா.
Mullai periyaru 2

முல்லை பெரியார் அணையை பென்னிகுக் என்னும் ஆங்கிலேயே கர்னல் கட்டினார். தனது சொத்துக்களை விற்று கட்டினார் என்பதால் கம்பம் பள்ளத்தாக்கு மக்களுக்கு ஒரு ஆங்கிலேயன் குலதெய்வமாக இருக்கிறார். அணையை கட்டிய ஆங்கில அரசு சென்னைமாகாணத்திற்கும் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை 999 ஆண்டுகள் செல்லுபடியாகும்படி இயற்றி இருக்கிறது. அணையை பயன்படுத்துவது மற்றும் பழுதுசெய்வது என்று எல்லாஉரிமைகளும் தமிழர்கள்வசம் என்கிறது அந்த ஒப்பந்தம். அணையை மீளக்கட்டுவது என்று ஒருபேச்சுக்கு வைத்து கொண்டால்கூட அதனை தமிழர்வசமே ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர்போட்ட ஒப்பந்தம் இப்பொழுது செல்லாது என்று கேரளாவும் மத்தியஅரசும் ஒருமித்த கருத்துடன் செயல்படுகின்றன. இவர்கள் உலகளவில் இருக்கும் நடப்புகளை அறிவார்களா? என்றே தெரியவில்லை.  போதை பொருள் விற்பவர்களிடம் ஒரு நாடு இருந்தும் ஒப்பந்தம் காரணமாக சமீபத்தில் விடுவிக்கப்பட்டதும்(ஹாங்காங் 2000 ஆண்டுவரை அங்கிலேயர் வசமிருந்து பின்னர் சீனாவின் அங்கமான வரலாறு), கியுபாவில் ஒப்பந்தம் காரணமாக ஒருசிறைச்சாலை அமெரிக்காவசம் இருப்பதும் இவர்கள் அறிவார்களா? என்று தெரியவில்லை.  உலகளவில் ஒப்பந்தம் என்பது அவ்வளவு எளிதாக மீறமுடியாது என்பதும் 999 ஆண்டுகள் கழித்தே அந்த அணையின் மீது அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதையும் எடுத்து சொல்ல தமிழகத்தில் ஒரு தலைவன் இல்லை என்பது வேதனையிலும் வேதனை.

அணைபலவீனமாக இருக்கிறது என்பது உண்மைக்கு புறம்பானது என்று நிபுணர் குழுக்கள் கூறியுள்ளது. அணையை வேறு இடத்திற்கு மாறும்பொழுது அணைமீதான தமிழனின் தார்மீக உரிமைகள் மறுக்கப்படும். அணை முழுக்கமுழுக்க கேரளாவிற்கு என்றாகிவிடும் அவர்கள் மனதுவைத்தால் மட்டுமே தமிழனுக்கு தண்ணீர். எவ்வளவு தண்ணீர்தேக்குவது எப்பொழுது தண்ணீர் திறப்பது என்று கேரளாவே முடிவுசெய்யும்.புதிய அணைகட்டவேண்டும் என்றாலும் அதனை தமிழன்தான் தீர்மானிக்க வேண்டும். அணைபலவீனமானது என்று நிருபிக்கபடாதவேளையில் மத்தியஅரசு எப்படி புதிய அணைக்கு பரிந்துரைக்கலாம்? என்று கொதித்து எழவேண்டிய தமிழக தலமைகள் படுத்த இடத்தில் இருந்து எந்திரிக்க முடியாதபடி கோமாவில் கிடக்கின்றன. இந்த லட்சணத்தில் உலகத்தமிழர் மாநாடு வேறு. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டபொழுது எவ்வித நீர் ஆதாரமும் இன்றி, முல்லை பெரியாரில் உரிமை என்ற ஓட்டு கோவணத்தோடு தமிழன் இருந்தான் இன்று அந்த கோவணமும் களவாடப்பட்டுவிட்டது.  மத்தியரசிற்கு செல்லநாய்குட்டியாக ஆளும்கட்சியும் மக்கள் பிரச்சனைகளை அறிக்கைகள் மூலம்மட்டுமே எதிர்கொள்ளும் எதிர்கட்சியும் இருக்கும் தமிழ்நாட்டில் தமிழன் கோவணம் தொடந்து உருவப்படுகிறது.

முல்லை பெரியாறு அணையின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையாக தமிழர்களே! தமிழர்களின் வரிப்பணம் கொண்டே அணைகட்டப்பட்டது. அணை கட்டும்பொழுது பலபேர் இன்னுயிர் நீத்துள்ளனர். பென்னிகுக் என்ற ஆங்கிலேயன் ராமராதபுரத்தின் வறட்சி கண்டு இந்த திட்டத்தினை நிறைவேற்றினான். அடிமைபட்டு கிடந்த காலத்தில் நமக்கு குடிக்க தண்ணீர் குடுத்தான் ஆங்கில கர்னல். இன்று சுதந்திர இந்தியாவில் கேரளாக்காரன் தமிழனுக்கு தண்ணீர் இல்லை என்கிறான் தண்ணீரை உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்பளித்தால் கேரளா சட்டமன்றம் தன்னிச்சையாக அதற்கு தடை விதிக்கிறது.  தமிழர்கள் சரியான தலைமையை தேர்ந்தெடுக்க தவறியதால் தொடர்ந்து தனது உரிமைகளை இழந்து வருகிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து தேசிய இனங்களும் தமது வாழ்வியல் உரிமைகளை கட்டமைப்பதில் கவனமாக இருக்கும் வேளையில் நாம் மட்டும் தனிநபர்களின் சுயலாபங்களுக்கு ஒரு இனத்தின் வருங்காலத்தை அடகுவைப்பவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் இருக்கும்பொழுது மத்தியில் ஆள்பவர்கள்  தமிழனுக்கு எதிராக எதைவேண்டுமென்றாலும்  செய்யலாம். நீராதரமின்றி தமிழன் பொருளாதாரஅகதிகளாக  மாறும்நாள் வெகுவிரைவில் இல்லை.

mullaiperiyar

முல்லை பெரியாறு சுருக்கமான வரலாறு !

கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கடலில் கலந்த பெரியாறு, முல்லை நதிகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874-ல் தொடங்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் பென்னிக்குயிக்.அரசு நிதி உதவியுடன், அடர்ந்த வனப்பகுதியில் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மேற்கொள்ளபட்ட இந்த அணை கட்டும் பணி ஆரம்பக்கட்டத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அரசு தனது நிதி உதவியை நிறுத்திவிட்டது. எனினும், பென்னிக்குயிக் தனது சொத்துக்களை விற்று, அணை கட்டும் பணியைத் தொடர்ந்தார்.

1886-ல் அன்றைய திருவாங்கூர் மகாராஜாவுக்கும், அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பெரியாறு அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1895-ல் திட்டம் முடிக்கப்பட்டது.

1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் நாள் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது திருவாங்கூர் மன்னருக்கும் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே பெரியாற்றில் ஓர் அணை கட்டவும், அதில் தேங்கும் நீரினை ஒரு குகை மூலமாகத் திருப்பி, சென்னை மாகாணத்தில் இருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் வறண்ட நிலங்களில் பாசனம் செய்யவும் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது.

அதன்படி 1895-ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அறுபது ஆண்டுகள் எவ்வித சிக்கலும் இன்றி பாசனம் நடந்து வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அங்கே கேரள அரசு உதயமானது. இங்கே தமிழ்நாடு அரசு ஏற்பட்டது.

1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது.

அதற்காக ஒரு புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று முடிவாகி 1970-ம் ஆண்டு மே மாதம் 29-ம் நாள் கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே, பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. முதல் ஒப்பந்தத்தில் அணை கட்டுவதால் நீரில் முழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கு வாடகையாக ஆண்டுதோறும் ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாய் பிரிட்டிஷ் நாணயமாக சென்னை அரசாங்கம் திருவாங்கூர் மன்னருக்குத் தர வேண்டும் என்று இருந்தது (திருவாங்கூர் சமஸ்தானத்தில் அப்போது சக்கரம் என்ற பெயரில் வேறு நாணயம் புழங்கி வந்ததால் பிரிட்டிஷ் நாணயம் என்று குறிக்கப்பட்டது).

மின் உற்பத்திக்காக போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், மூழ்கடிக்கப்பட்ட நிலம் 8000 ஏக்கருக்கு வாடகை 30 ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாய் ஆண்டுதோறும் கேரள அரசுக்குத் தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.

கடந்த 27 ஆண்டுகளாக பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டு விட்டதால், நீரில் மூழ்கும் நிலம் 8000 ஏக்கராக இல்லாமல் 4677 ஏக்கராகக் குறைந்துவிட்டது. இவ்வாறு வெளிப்பட்ட நிலங்களில் கேரள அரசு பலவிதமான சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு 8000 ஏக்கருக்கான வாடகைப் பணத்தினை தவறாமல் செலுத்தி வருகிறது.


Advertisements

தமிழக மீனவர்களும் திராவிடமுன்னேற்றகழக நாடககுழுவும்!

செப்ரெம்பர் 18, 2009 § 4 பின்னூட்டங்கள்

தமிழக மீனவர்களும் திராவிடமுன்னேற்றகழக நாடககுழுவும்!

 fisherman

நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் நேரத்தில் கூட தமிழகமீனவன் ஒருவன் இலங்கை கடல்படையினால் தாக்கப்பட்டு கொண்டு இருக்கலாம், அனுராதாபுரத்தின் சிறைக்கூடத்தில் ஒவ்வொரு வினாடியையும் நரகமாக எண்ணி கண்ணீர்விட்டு கொண்டு இருக்கலாம். சிங்களனால் சுடப்பட்ட தமிழகமீனவனின் சடலத்தை சுத்தி நின்று அவனது உறவுகள் அழுது கொண்டு இருக்கலாம்.  மத்திய அரசுதலைவிட வலியுறுத்தி தனது பத்தாயிரத்தொன்றவது கடிதத்தை திமுக நாடகக்குழுவின் தலைவர் எழுதி கொண்டு இருக்கலாம். கன்னித்தீவு கூட ஒருநாள் முடிந்து போகலாம் முடியாமல் தொடரும் தமிழக மீனவனின் கண்ணீரும் திமுக தலைமையின் நாடகமும்.

உடல்மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகிற்கு! என்று நாடக வசனங்களை எழுதியும் உச்சரித்தும் ஆட்சியை பிடித்தவர்கள் தமிழனுக்கும் தமிழுக்கும் ஏதாவது செய்தார்களா? இருப்பது ஒரு உயிர் அதுபோவது தமிழுக்கென்றால் அதைவிட பெருமை உண்டா? என்றெல்லாம் உணர்ச்சிகரமான நாடகபாணி வசனங்களை பேசி கழகம் வளர்த்தவர்கள் தமிழனுக்கு இன்னல் நேர்ந்தால் அதே நாடகத்தை தங்கள் ஊடகங்கள் வாயிலாக நடத்திகாட்டுகிறார்கள்.

adadey-kalainjar-karunanidhi-murasoli-letters-govt-dmk

தமிழ் தமிழன் என்று பேசினால் நம்மை பிரிவினைவாதி என்று முத்திரை குத்துபவர்கள் செத்து விழுந்த தமிழகமீனவர்களுக்காக ஏதேனும் செய்தார்களா? எல்லை கடக்காதே!என்று எச்சரிக்கை செய்கிறார்கள் கடலில் எல்லை தெரியாமல் தமிழன் இலங்கை எல்லைக்குள் காலடி வைக்கிறான் என்றே வைத்து கொண்டாலும் சுட்டு வீழ்த்தும் சிங்களனை தட்டி கேட்க்க தைரியமில்லாத இந்தியா வளரும் வல்லரசு என்றால் நகைப்பிற்கு உரியது அல்லவா?

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் மன்மோகன்சிங் மீனவர் பிரச்சனை குறித்து இலங்கையோடு பேசமாட்டோம் என்று அறிக்கையோ வாசிக்கிறார். பிரனாப்முகர்சி மீனவர்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று சொல்லுகிறார். எண்ணி பாருங்கள் தமிழன் தவிர வேறு எந்த மாநிலத்தவனையும் நோக்கி இவ்வாறு ஆளும்வர்க்கம் அறிக்கை வாசிக்க முடியுமா? உலகெங்கிலும் இப்படித்தான் மீனவர்கள் கேள்வி இன்றி சுடப்படுகிரார்களா? கடிதம் எழுதுவதோடு முதல்வரின் கடமை முடிந்து விடுகிறதா?

முதல்வர் ஆவேசம் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மத்தியில் மீனவர் குறித்து பேசினார் என்று செய்தி வருகிறது. உங்கள் நடிப்பிற்கு அளவில்லையா?  தமிழக மீனவர்களின் உடைமைகள் சிங்களவனால் சூறையாடப்பட்டு கைது செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டு, அனுராதாபுரத்தில் அவமானத்திற்கு ஆளாகும் மீனவனுக்கு திராவிட கட்சிகள் என்ன செய்தன? கடிதம் எழுதியே காலம் காலத்தை கடத்தியதை தவிர.நீங்கள் உணர்ச்சிகரமாக கடிதங்கள் எழுதி கொண்டிருந்த நாட்களில் ஐநூறு மீனவர்கள் செத்து விழுந்து இருக்கிறார்கள். உங்கள் நாடகமும் நாளுக்கு நாள் அதிக பார்வையாளர்களுடன் அமோகமாக ஓடுகிறது. கச்சத்தீவை தாரைவார்த்த பொழுதும் இப்படித்தான் எங்களுக்கு மத்தியில் நடித்து கொண்டு இருந்தீர்கள். நாடகம் பார்த்தே நாசமாய்போன தமிழக தமிழனும் கொல்லப்படுவது தனது சகோதரன் என்று உணராமல் உங்கள் நாடகத்தில் தன்னை மறந்து இருந்தான்.

ஈழத்தமிழனுக்காக போர்நிறுத்தம் கேட்க்கிறோம் என்று நீங்கள் நடத்திய நாடகங்கள் ஒன்றா ரெண்டா? உங்கள் கல்லா நெம்பியத்தை தவிர வேறதுவும் நடக்கவில்லை. இப்பொழுது ஈழத்தமிழர்களின் அகதிமுகாம் பத்தி தயாநிதிமாறன் பிரதமருடன் பேசுகிறாராம் கூடவே எம் கே நாரயனமேணனை அழைத்து செல்கிறார். இன்னுமா உங்கள் நாடகம் ஈழத்தமிழர்களின் இந்த நிலையிலும் உங்கள் இதயம் இறங்கவில்லையா? பாவம் ஈழத்தமிழர்களுக்கு உங்களால் அடுத்து என்ன துன்பம் வரப்போகிறதோ என்று இதயம் பதறுகிறது. எப்படியும் இந்த நாடகக்குழு ஆட்சியின் போதே ஈழத்தமிழன் என்ற இனத்தை அழித்து முடித்துவிடுவது என்று சிங்களன் முடிவு எடுத்துவிட்டான் போல.ஈழத்தில் தமிழர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்த பின்னர் தமிழக கடல்கறைபக்கம் கவனம் செலுத்துகிறான் சிங்களன் என்று எடுத்துக்கொள்ளலாம். மீனவர்கள் எத்தனை பேர் செத்துவிழுந்தாலும் சங்கத்தமிழில் இவர்கள் நடத்தும் நாடகங்கள் நிற்காது.

இலக்கிய உலக சகுனி அல்லது ஞானி!

செப்ரெம்பர் 17, 2009 § 4 பின்னூட்டங்கள்

இலக்கிய உலக சகுனி அல்லது ஞானி!

gnani-sankaran

தமிழ்நாட்டில் சமூக அக்கறையுடனும் முற்போக்கு கருத்துக்களை திறம்பட எழுதுபவர் பலர் இருப்பினும். தமிழ்நாட்டிற்கு வந்த சோதனையாக முற்போக்கு எழுத்தாளர் என்ற போலியான முன்னுரைகளுடன் தமிழக ஊடகங்கள் கொண்டாடிய எழுத்தாளர் ஞானி.  தன் எழுத்துக்கள் அதிகமான பின்விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற  விளம்பரநோக்குடனே அவரது எழுத்துக்கள் இருப்பதை தொடர்ந்து வாசிப்பவர்கள் உணரலாம். தன் எழுத்துக்களும் எண்ணங்களும் பன்முகதன்மைகொண்டன என்ற நம்பிக்கையுடன் எழுதி தள்ளுபவர் ஞானி.

ஞானியின் எழுத்துக்களில் அதிகமாக விளம்பரத்திற்க்காளன ‘ஒ’ பக்கங்களில் இவர் தன்னை அரசியல், சினிமா, இசை, நூல் விமர்சகராகவும் ஓரின சேர்க்கை, லிவிங் டுகெதர்,  ஆதரவாளராகவும் பெரியார்வாதியாகவும் முன்னிறுத்த விரும்புகிறார். தொட்டுக்கொள்ள ஊறுகாய் போன்று அவ்வப்போது ‘ஈழம்’ பத்தியும் எழுதி கொண்டிருக்கிறார். இவரது எழுத்துக்களை முதன் முதலில் படிப்பவர்கள் கொஞ்சம் குழம்பி போவார்கள். என்னய்யா நம்மாளு சொல்லவராருன்னு. தொடர்ந்து படித்த பின்னாலதான் உணர்வாளர்கள் ஞானி எழுத்துலக சகுனி என்று.

அரசியல் விமர்சகராக ஞானியை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரது அரசியல் ஆராய்சிகள் பெரும்பாலும் தனது முன்னாள் முதலாளி கருணாநிதியை சாடுவதாகவே இருக்கும்.  ஜெயலலிதா பத்தி எப்போதும் மேம்போக்காவே விமர்சனம் செய்வார். ஒருதலைபட்சமானது இவரது அரசியல் பார்வை என்று அனைவரும் அறிவார்கள். சினிமா விமர்சனம் செய்யும் அளவிற்கு தனக்கு சினிமா தெரியுமா என்று அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். திரையுலகில் ஐம்பதாண்டுகாலம் நிறைவுசெய்த கமலைவிட விக்ரம் சிறந்த நடிகர் என்று சிண்டு முடிந்திருக்கிறார்.  ‘மொழி’ படத்தை குறைகள் இல்லாத படைப்பு என்றும் பருத்திவீரன் ‘கழிசடை ‘என்றும் கூறியிருக்கிறார். தனக்கு வேண்டியவர் என்றால் ஒருமாதிரியாகவும் தனக்கு வேண்டாதவர் என்றால் வேறுமாதிரியாகவும் மாதிரியும் விமர்சிப்பார் என்று இவரது முன்னாள் சகபத்திரிக்கையாளர் சுசிகனேசு அம்பலப்படுத்தி இருக்கிறார்.

தேர்ந்த இசைவிமர்ச்சகர் போன்று அஸ்கர் வென்ற ‘ரகுமானை’ வாழ்த்துகிறேன் என்று அவரது மூத்த தலைமுறையினர்களான இளையராசா விசுவநாதனுக்கு ரகுமானிடமிருந்து கற்று கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி கடுமையான கண்டனத்திற்கு ஆளானார். இவரது ஓரினசேர்க்கை ஆதரவு மணமாகாமல் சேர்ந்து வாழ்தல் பற்றி பெரிதாக எதிர்ப்போ ஆதரவோ இல்லாததால் இவரது ஈழம் பற்றிய படைப்புகள் பத்தி பார்ப்போம்.

ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் குண்டுவிழுந்து செத்து கொண்டிருந்த பொழுது கொதிக்காத ஞானி சிங்கள இயக்குனர் சென்னையில் தாக்கப்பட்ட பொழுது பொங்கி எழுந்தார். சுபவி, திருமா, சீமான்  போன்றோர்களுக்கு அறத்தை போதிக்கும் செயலை செவ்வனே செய்தார். திடீரென ஈழ ஆதவாளர்களோடு சொற்போரை துவங்கி பிரபாகரன் பத்தி உளறிவைத்தார்.  காவேரி பத்தி கவலைபட்டாரா? கூவம் பத்தி கவலைபட்டாரா? வன்னி மக்களை பத்திமட்டுமே கவலைபடுகிறார் பிரபாகரன் என்று தனது பேரறிவை உலகிற்கு உணர்த்தினார். தொடர்ந்து ஈழ உணர்வாளர்களுடன் வார்த்தை யுத்தத்தை துவங்கி பெரியார் திராவிடகழக  கொளத்தூர்மணி அவர்களை காட்டிகொடுக்கும் ‘எட்டப்பன்’ வேலைகளை செய்பவராகவும் அடுத்த பரிமாணத்தை அடைந்தார்.

ஈழ ஆதரவாளர்களை விட்டேனா பார் என்று தன்னுடைய தன்தோன்றித்தனமான விமர்சனங்களை அள்ளிவிட்டு ஈழத்திற்காக வேலைநிறுத்தம் செய்துவந்த வழக்கறிஞர்களை   கிண்டலும் கேலியும் செய்து எழுதிவந்தார்.  ஈழ ஆதரவாளர்களையும் ஈழப்போராளிகளையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார் ஞானி. எப்போதும் கருணாநிதிக்கு  ‘கொட்டு’ வைக்கும் ஞானி இலங்கையில் சிங்களர்கள் கோவப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி முத்துக்களை உதிர்த்தும் உடனே பூங்கொத்துக்களை நீட்டுகிறார். விமர்சிப்பது தமிழர்களை மட்டுமே மறந்தும் சிங்களவர்களையோ ராசபக்சேவையோ விமர்சித்து விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

lawyers

கருணைகொலைகள் பத்தி இந்தவாரம் எழுதியுள்ள ஞானி சேனல் 4 வெளியிட்ட கண்கட்டி நிர்வாணநிலையில் நடந்த படுகொலைகள் பற்றி ஒருவரியும் எழுதவில்லை. அல்ஜசீரா வெளியிட்ட அகதிமுகாம் பத்திய செய்திகளையும் தனது எழுத்துக்களில் பதிவு செய்யவில்லை இந்த முற்போக்குவாதி. வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தின் பொழுது நகல்களை எரித்தார்கள் ஒரிஜினலை எரிக்கவில்லையே? என்று காட்டி கொடுக்கவும் நம்மாளு தயங்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்  மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நிகழ்த்தியபொழுது வழக்கறிஞர்கள்  இப்படி சீரழிந்து போனார்களே? என்று ஒருதலைபட்சமாக வருந்திய ஞானி பெண்வழக்கறிஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்று ஆறுதல் தேடிக்கொண்டார்.

hindu_ram

இவ்வளவு தெள்ளத்தெளிவாக விமர்சனம் செய்யும் ஞானி இலங்கையில் சிங்களவன் அமைத்த   அகதிமுகாம்கள் பத்தி மாபெரும் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட சிங்கள ரத்னா  இந்து ‘ராம்’ பத்தி வாய்திறக்கவில்லை. சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு கையகப்படுத்தும் வழக்கில் தன்னை இணைத்து கொள்ளவேண்டும் என்று நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தில் பின்னாளில் நடைபெற்ற காவல்துறையின் அத்துமீறலுக்கு வித்திட்ட  சுப்பிரமணியசாமி பத்தியும் அவர் அடிக்கடி அவிழ்த்துவிடும் கட்டுகதைகள் பத்தியும் நம்மாளு எழுதியதில்லை.  இதற்க்கு காரணம் தொழில் தர்மமா? அல்லது பார்ப்பன தர்மமா? என்று ஞானிதான் விளக்க வேண்டும். சுப்பிரமணியசாமி வழக்கறிஞர்களால்  தாக்கப்பட்டதும் ஞானிக்கு தானாடாவிட்டாலும் தன்தசை ஆடிவிட்டது போலும்.

குமுதம் இணையதளத்தில் நம்மாளு நடத்திய “ஞானி பேசுகிறேன்” அரங்கம் முழுக்கமுழுக்க பார்பனர்களால் நிரம்பி வழிந்தது அவ்வப்பொழுது சீமான், அமீர் போன்றவர்களுக்கு நேரம் ஒதுக்கினார்.  அந்த அரங்கில் எஸ்.வி சேகர் பார்பனர்களுக்கு இங்கேதான்(தமிழ் நாட்டில் ) பிரச்சனை மும்பையில் நல்ல மரியாதை இருக்கிறது என்றும்.  தான் பார்ப்பானாக பிறக்க போனஜென்மத்தில் புண்ணியம் செய்த புண்ணிய  ஆத்மா! என்றும் ஊரையே சுத்தும் செய்பவன் தன் வீட்டையும் சுத்தமாக வைத்துகொள்வான் அல்லவா? ஆகவே பிறப்பின் மூலம்தான் எல்லாம் என்றவர். பிறமதங்கள் தங்கள் அடையாளத்தை சினிமாவில் காட்டலாம் இந்து பூணுலை வெளியே தெரியும்படி நடித்தால் பிரச்சனை என்று ரெம்பவே வருத்தப்பட. எஸ்வி நிறைய ரத்ததானம் செய்யும் புண்ணிய ஆத்மா என்று சர்டிபிகேட் கொடுத்து அனுப்பினார். சீமானை அவரது கொள்கை சார்ந்து பேசவிடாமல் “எப்போ கல்யாணம்?” வாழ்த்துக்கள் ஏன் தோற்றது? அடுத்தபடம் என்ன? உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கொடுக்குறீங்களா? என்று மொக்கை போட்டு அனுப்பி வைத்தார்.

தன்னை பெரியார்வாதி என்று காட்டி கொண்டு இவர் செய்யும்வேலைகள் எல்லாம் பெரியார் தொண்டர்களை காட்டி கொடுப்பதுதான். பெரியார் குடும்பத்தில் புகுந்த உளவாளி என்று அறிவுமதி அண்ணன் ஏற்கனவே ஞானி பத்தி எழுதி இருக்கிறார். தனது பார்ப்பனமுகம் தெரியாமலிருக்க அவ்வப்பொழுது பெரியார் முகமூடி மாட்டிக்கொண்டு திரிபவர்தான் இந்த ஞானி. ஜான்மகேந்திரன் இயக்கிய ஈழம்பத்திய  திரைப்படம் (“ஆணிவேர் “) குறுந்தகடு தன்னிடம் கொடுக்கப்பட்டது ஆனால் அதை பார்க்க நேரமில்லை என்று ‘ஒ’  பக்கங்களில் எழுதி தனது திரைப்படம் சார்ந்த அறிவையும் ஈழம் பத்திய எரிச்சலையும் ஒருங்கே காட்டி இருக்கிறார். இன்னும் ‘ஆணிவேர்’ பார்க்க ஞானிக்கு நேரம் கிட்டவில்லை போலும்.

ஈழத்திற்காக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றபொழுது மட்டுமே ஞானிக்கு  தமிழக பிரச்சனைகள் ஞாபகத்திற்கு வரும். ஈழத்திற்காக போராடிய வழக்கறிஞர்களை அவதூறு செய்வதும் ஈழ ஆதரவு இயக்கங்களை கிண்டலும் கேலியும் செய்வதும். ஈழப்போராட்டத்தை மழுங்கடிக்க ஆளும் வர்க்கம் செய்யும் அடக்குமுறைகளுக்கு தோள்கொடுப்பதுமே ஞானியின் முழுநேர எழுத்து பணியாக இருந்து இருக்கிறது. எப்படியாவது தனக்கு விளம்பரம் வேண்டும் என்றும் தனது பார்ப்பன முகம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்றும் பல்துறைகள் சார்ந்து இவர் எழுதும் ‘ஒ’ பக்கங்கள் எதனையும் முழுமையாக சொல்லாமல் பிச்சைக்காரன் எடுத்த வாந்திபோல செரிமானமாகாத இவரது அபத்த கருத்துக்களின் நாற்றத்தோடு இருக்கிறது.

அரசியல் விமர்சகர், சினிமா விமர்சகர், இசை விமர்சகர், முற்போக்குவாதி என்று எடுத்த அவரது அவதாரங்களும் தோல்வியில்தான் முடிந்து இருக்கின்றன. உள்ளே ஒன்றை வைத்து விசமத்தனத்துடன் வேறொன்றை வெளியில் எழுதுபவர்தான் ஞானி. பார்பனர்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை தோன்றுகிறதோ அங்கெல்லாம் பெரியார்வாதியாக  அவதாரம் எடுப்பார் பெரியாரின் உண்மை தொண்டர்களை காட்டிகொடுக்கும் வேலையும் செய்வார்.

கடைசியாக ஞானி அவர்களிடம் ஒரு கேள்வி அம்சாவிடமிருந்து ‘கவர்’ மாதாமாதம் சரியாக வந்து சேர்ந்து விடுகிறதா? இந்து ‘ராம்’  சுப்பிரமணியசாமியிடமிருந்து பங்கு சரியாக கிடைக்கிறதா?

(புலிகளிடமிருந்து தமிழக ஈழ ஆதரவாளர்கள் பணம் பெறுகிறார்கள் என்று பரப்புரை செய்யும்  தமிழக ஊடகங்கள் சிங்கள தூதுவர் அம்சாவிடம் கவர் பெற்ற ஊடகவியலாளர்கள் பத்திய செய்தியை அமுக்க பார்ப்பது  அழகோ அழகு ! இதுதான் தொழில் தர்மம் போலும் )

தமிழச்சியின் கண்ணீர் அல்லது தாமரையின் கருஞ்சாபம்!

செப்ரெம்பர் 11, 2009 § 10 பின்னூட்டங்கள்

தமிழச்சியின் கண்ணீர் அல்லது தாமரையின் கருஞ்சாபம்!

thamarai1

நமக்கு பொதுவா இந்த ‘கவிதை’களையே பிடிப்பதில்லை. தூய தமிழிலி ஒரு வரிக்கு மூன்று அல்லது நான்கு வார்த்தைகளை வைத்து எதையாவது எழுதினால் அது கவிதை என்னும் நம்பிக்கையில் நம்மவர்கள் இருக்கிறார்கள். காதல் கவிதைகள் எழுத முன்னெல்லாம் தெருவுக்கு ஒருத்தர் இருப்பார் இப்பொழுது வீட்டுக்கு ஒருத்தர் இருப்பார் போல. புதுகவிதைன்னு நம்மாளுக எழுதுவதில் பெரும்பாலும் ஒருதலை காதலில் காதலன் காதலியை அபத்தமாக புகழ்வதாகவே இருக்கும். இதில் திரை கவிஞர்கள் பத்தி சொல்லவேண்டியதே இல்லை. வைரமுத்து திரைபாடல்கள் பற்றி சொல்வார் “கவிதை மொழிக்கு ஆடை கட்டி விடுகிறது இசை சிறகுகள் கட்டி விடுகிறது” (திருத்தி எழுதிய தீர்ப்புகள் ) என்று . ஆனால் இன்றைய சூழலில் திரைப்பாடல்கள் மொழியை ஆடைகள் அவிழ்த்து அம்மணம் ஆக்குகிறது. மெட்டுக்கு பாட்டு என்றநிலை மாறி துட்டுக்கு பாட்டு என்று கண்டதை எழுதி தள்ளுகிறார்கள் . திரைப்பட பாடலாசிரியர்களில் தாமரை கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் தரும் படைப்பாளி. நல்ல தமிழ் சொற்களோடு அவர் எழுதும் பாடல்களை இசைதின்றுவிடுகிறது என்பது வருத்தத்திற்குரியது.

வெறும் திரைப்பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் சமூக அக்கறை உள்ள படைப்பாளியாக இருக்கிறார் தாமரை. ஈழத்தில் போரை நிறுத்தகோரி பாரதிராசா தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தாமரை எரிமலையாக வெடித்தார். நேரடியாக “கலைஞர் அவர்களே ஜெயலலிதா அமாவாசை என்றால் நீங்கள் அதுக்கு அடுத்த நாள்!”] என்று துணிச்சலாக யாருக்கும் அஞ்சாமல் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் துரோகத்தை தோலுரித்தார்.

தமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்கு தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாக சொல்பவர் தாமரை. ஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார். சமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

என்ற வரிகள் வாசிக்கும் பொழுது சகோதரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மேலும் வாசிக்க முடியாமல் அழுத தாமரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டு மீண்டும் வாசித்தார். குழந்தையை பறிகொடுத்த தாயின் துயரம் இன்னொரு தாயுக்குத்தானே தெரியும். நேர்காணலின் இறுதியில் “நான் இந்தியன் என்பதைவிட தமிழச்சி என்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

மார்க்சின் இலக்கிய தாதா கும்பலை சேர்ந்த சுகன் இந்தியாவில் இருந்து கொண்டு தாமரை எப்படி இந்தியாவை எதிர்த்து கவி படலாம்? என்று வியக்கனம் செய்துள்ளார்கள். கலைக்காக மக்களே மக்களுக்காக கலை இல்லை என்று கருதும் இலக்கியபோலிகள் மத்தியில். தாமரையின் “கருஞ்சாபம்” கடுப்பை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளிலேயே மிக அருமையான கவிதையாக இதனை கருதுகிறேன். இன்றைய தமிழ் திரையுலகம் ஆசியாவின் பணக்கார குடும்பத்தினரால் சூழப்பட்டு இருக்கிறது. இனி திரையில் தாமரை பாடல் வராமல் தடுக்க முயற்சிகள் நடக்கலாம். இங்கு எத்தனையோ கவிஞர்கள் இருந்தாலும் “தமிழச்சி” தாமரையின் கவிதைக்கு முன்னால் மண்டியிட்டு தங்களது கையாகாததனத்தை நொந்து கொள்வார்கள்.

thamarai
கவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக!

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்

செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
……….

பின்குறிப்பு:


உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

(இந்த கவிதையை வாசிக்கும் பொழுது உங்கள் கண்ணில் கண்ணீர் துளிர்த்தால் நீங்கள்  உணர்வுள்ள தமிழரே!)

தமிழ்நாட்டு ஊடகங்கள் யாருக்காக இயங்குகின்றன?

செப்ரெம்பர் 9, 2009 § 10 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டு ஊடகங்கள் யாருக்காக இயங்குகின்றன?

aljazeera
அல்ஜசீரா தொலைக்காட்சியானது இலங்கையின் தடுப்புமுகாம்களின் கோரத்தை உலகிற்கு சொல்லி இருக்கிறது. சிலநாட்களுக்கு முன்னர் “சேனல்-4” என்ற தொலைக்காட்சி இலங்கையில் அப்பாவி பொதுமக்களை கண்ணை கட்டி சுட்டு வீழ்த்தும் கொலைகாட்சியை வெளியிட்டது. இந்த இரண்டு செய்தியும் இலங்கையில் நடக்கும் மனிதபேரவலத்தை உலகிற்கு காட்ட அந்தந்த ஊடகங்கள் ஆற்றிய ஊடகவியல் கடமையை நமக்கு காட்டுகிறது. வடஇந்திய ஊடகங்கள் வழமைபோலவே இந்த செய்திகளை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டன.தமிழகத்தில் செய்திதாள்கள்,தொலைக்காட்சி என்று எத்தனையோ ஊடகங்கள் உண்டு. உலக நடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிக்கைகளில் முற்போக்கு எழுத்தாளர்கள் அறிவுஜீவிகள் என்று பலபேர் பக்கங்களை நிரப்பி கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சி ஊடகங்களில் “சமூக அவலங்களை தோலுரிக்க” கருத்து மோதல் நிகழ்ச்சிகளும் புலனாய்வு என்ற பெயரில் தங்கள் சாகசத்தால் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்லி வருகின்றன. இப்படி பொறுப்புள்ளதாக காட்டி கொள்ளும் தமிழ்நாட்டு ஊடகங்கள்  “மக்கள் தொலைக்காட்சி” தவிர மேற்கூறிய இருநிகழ்சிகள் பற்றி பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை சில இருட்டடிப்பு செய்து பிற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

பொதுவாகவே ‘தினமலர்’ பத்திரிகை சிங்களவனின் ஊதுகுழலாகவே எப்போது இருந்து வந்திருக்கிறது என்பது நாமறிந்த உண்மை. யுத்த காலத்தில் கூட தமிழர்களை கொல்வது புலிகளே என்று தொடர்ந்து எழுதி வந்தது.கே.பி கைதை கொண்டாடிய தினமலர் ஆதாரத்தோடு வெளியிடப்பட்ட இந்த செய்திகளை தினமலரின் “ஊடக தர்மத்தின்படி” கண்டும்காணாமல் விட்டிருக்கிறது.

gnani-sankaran
தமிழகத்தின் “இதயத்துடிப்பு” என்று மார்தட்டும் பத்திரிகையில், தன்னைவிட்டால் தமிழ்நாட்டில் எழுதிதள்ள யாருமில்லை என்று “சமூக” அக்கறையோடு “ஒ” போடும் முற்போக்கு ஞானியோ அப்பாவி தமிழர்களை நிர்வாணமாக்கி கண்ணைகட்டி சுட்டுதள்ளிய கொடுஞ்செயல் நடந்தவேளையிலே “நொந்தசாமியான கந்தசாமி “ திரைப்பட குழுவிற்கு ஆலோசனை வழங்கி கொண்டிருக்கிறார். திருமதி Vrs சிறுபான்மைஅரசு “குடுமிபிடி” சண்டை பத்தி விலாவரியாக அலசி ஆராய்ந்த விகடனாரோ சேனல் 4 செய்திகளை ‘துண்டு செய்தி’களாக பிரசரித்துள்ளது. பிராபாகரன் எப்படி பிடிபட்டார், எப்படி கொல்லப்பட்டார் என்று புலனாய்வு கதைகளை அவிழ்த்துவிட்ட விகடன் குழுமமோ துண்டு செய்தியோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைத்து கொண்டது போலும்.
suntv-mar-14-2008

உடனே நம்மாளுக “அவைகள் எல்லாம் பார்ப்பன ஊடகங்கள் தோழர்! தமிழனுக்கென்று ஒரு ஊடகம் இல்லையே?” என்று வருந்திகொள்வார்கள். அப்படியே “தமிழர்கள்” நடத்தும் ஊடகங்களை பார்த்தோமானால் அதுக்கு பார்ப்பானே பரவாயில்லை என்று தோணும். இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறவேயில்லை என்று சூடம் அடித்து சத்தியம் பண்ணியானாலும் பண்ணுவார்கள கருணாநிதி குடும்ப ஊடகங்களை சேர்ந்தவர்கள். சூரிய மற்றும் கலைஞர் தொலைக்காட்சி ஊடகங்களை பொறுத்தவரை கருணாநிதி “சும்மாச்சுக்கும்” உண்ணாவிரதம் இருந்தநாளோடு ஈழத்தின் போர் நின்று சூமுகநிலை வந்துவிட்டது. ஜெயாதொலைக்காட்சி செய்திநேரங்களில் வளர்மதி போன்ற அம்மாவிசுவாசிகள் கருணாநிதியின் குடும்பத்தாரை சந்திக்கு இழுக்கும் சொல்லாடல்களை மட்டுமே ஒளிபரப்புகிறது. இதுல காங்கிரசும் தன் பங்கிற்கு இரண்டு தொலைகாட்சி ஊடகங்களை வைச்சி இருட்டடிப்பு செய்து கொண்டிருக்கிறது

marks
தாங்கள் எழுதுவதெல்லாம் “இலக்கியம்” இதில் பின்நவினத்துவம் முன்நவினத்துவம் முக்கால் நவினத்துவம் என்று எழுதித்தள்ளும் ஒரு அறிவுஜீவி கும்பலும் இவர்களுள் அடக்கம். இதில் முக்கியமானது மார்க்சு குழுவினர். சோபாசக்தி, சுகன் போன்ற இலக்கியபோலிகளின் உதவிகளோடு தொடர்ந்து சிங்களநாதம் இசைத்து கொண்டிருக்கின்றார் மார்க்சு . சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தாவை கொலை செய்தது ஏன் புலிகளாக இருக்க கூடாது? என்று கேட்கும் அளவிற்கு சுகன் சிங்களஅடிவருடியாக இருக்கிறார். சிங்கள இனவாதபோரே வெள்ளாளர்க்கும் சிங்களவருக்கும் இடையிலானது என்று கும்மி அடிப்பதே இவர்களின் முழுநேர வேலையாக இருக்கிறது. புலிகளை விமர்சிக்கிறோம் என்ற பேரில் இவர்கள் ராசபக்சேவின் ஏவலர்களாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்களே தவிர கம்பி வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் அப்பாவி மக்களை பற்றி அக்கறை கொண்டவர்களாக இல்லவேஇல்லை. “பேசாப்பொருளை பேசும்” மார்க்சுக்கும் சிங்கள இனவாதம் என்று வரும் பொழுது ஒரு பக்கமாக  கைகால்கள் இழுத்து கொள்கிறது போலும்.இணையத்தில் தங்கள் எண்ணங்களை பதியும் இணைய பதிவர்களில் கூட பெரும்பாலோனோர் “மொக்கையாக” ஒரு திரைப்படம் வந்தால் அதை விமர்சிக்க காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேனும் ஈழத்தில் நடக்கும் மனிதபேரவலம் குறித்து எழுதுவதில் காட்டமறுக்கின்றனர். இணையத்தில் எழுதுபவர்கள் கூட “அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி” என்று சிங்களன் பத்தி அபத்தமாக கவலை கொள்பவர்களாகவே இருக்கிறார்கள்.

090706aljazeera_3jpg

தமிழகத்தில் பல ஊடகங்கள் உண்டு அதில் தமிழர்கள் நடத்தும் ஊடகங்களும் உண்டு. இவையாவும் ஈழத்தில் துன்பமுறும் தமிழனின் நிலையை ‘தாண்டி’ செல்லவே விரும்புகின்றன அன்றி அது பத்தி ஆராய்ந்து எழுதிட ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். கள்ளதொடர்புகளையும் போலிசாமியார்களையும் காமம் சொட்ட சொட்ட அலசி ஆராய்ந்து எழுதும் இவர்களது நெஞ்சம் ஈழத்தை ‘அலச’ மறுக்கிறது. ஈழத்தமிழன் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணநிலையில் சுடப்பட்ட பொழுதும் அகதியான மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி விலங்கினும் கீழாக நடத்தப்பட்டபொழுதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஊடகங்கள் அதனை அம்பலப்படுத்தியபொழுதில் இவர்கள் அமைதிகாத்தார்கள். அவர்கள் அம்பலபடுத்திய செய்தியையாவது தமிழகமக்களுக்கு சொல்லவேண்டிய தார்மீக கடமையை ஆற்றாத தமிழ்நாட்டு ஊடகங்கள் யார் பக்கம் நிற்கின்றன? என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.

அம்பேத்காரே மன்னிக்க மாட்டார்! நீதியரசர்களே இது நியாயம் தானா?

செப்ரெம்பர் 4, 2009 § 4 பின்னூட்டங்கள்

judge

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட்டுக்கு இந்தியஅணியை அனுப்ப கூடாதென்று மதுரை உயர்நீதிமன்றகிளையில் பல்வேறு வழக்கறிஞர்கள் இணைந்து வழக்கு தொடுத்தனர். யுத்தம் முடிந்து மூன்று மாதமாகியும் சர்வதேசஊடகங்கள் மற்றும் தொண்டுநிறுவனங்களை அனுமதிக்காத இலங்கையில் இந்தியகிரிக்கெட்டுஅணி விளையாடுவது சரியல்ல என்பது வழகறிஞர்கள்வாதம். வழக்குதொடுத்ததோடு வழக்குவிபரத்தை தொலைநகல்(பேக்ஸ்) மூலம் கிரிக்கெட்டுவாரியம் மற்றும் நடுவண்அரசிற்கும் அனுப்பி வைத்துள்ளனர் .

வழக்கு விபரத்தை தொலைநகலில் அனுப்பியதை ஏற்க சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதிகள் 6 வாரத்திற்கு வழக்கை தள்ளிவைத்துள்ளனர். ‘சிவில்’ வழக்குகளில் தொலைநகல் அனுப்பவது நடைமுறையில் உள்ளது என்ற வாதம் ஏற்றுகொள்ளப்படவில்லை. வழக்கை ஆறுமாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள்.

வரும் எட்டாம்(செப் 8)தேதியில் போட்டிகள் துவங்குகின்றன. அடுத்த ஆறுவாரத்திற்கு அப்புறம் வழக்கை விசாரித்து என்ன செய்வது? நமக்கு ‘சட்டநுனுக்கம்’ எல்லாம் தெரியாதுங்க. ‘தொலைநகல்’ என்பது  சட்டம் இயற்றிய நாட்களில் இல்லை அதனால் அதுபத்தி சட்டபுத்தகத்தில் எழுதாமல் இருக்கலாம். அன்று தபால்மூலம் அனுப்புவது நடைமுறையில் இருந்ததால் இன்னும் அப்படியே கடைபிடிக்கவேண்டுமா என்ன?

தாமதமாக வழக்கப்படும் நீதி கூட அநீதிதான் என்று படித்து இருக்கிறோம்.நீதிமன்றம் என்றாலே வழக்கை இழுத்து இழுத்து வழக்கு தொடுத்தவர்களை அலைக்கழிக்கும் ஒன்று என்பது பரவலான ஒரு கருத்து. இன்னும் நான்கு வாரத்திற்குள் இவர்கள் சுட்டி காட்டிய முத்தரப்பு கிரிக்கெட்டு முடிந்துவிடும். அதற்க்கு பின்னர் வழக்கை விசாரிப்பது கேலிகூத்தாக இருக்கும் அல்லவா? ஒருவேளை இந்தியஅணி இலங்கை செல்லக்கூடாது என்று நீங்கள் தீர்ப்பு அளித்தால் அந்த தீர்ப்பினால் யாருக்கு என்ன பயன்?. அதற்க்கு நீங்கள் வழக்கை தள்ளுபடிசெய்து இருந்தால்கூட மரியாதையாக இருந்து இருக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய சட்டமேதை அம்பேத்கார் இன்று இருந்தால் இன்றைய நீதிபடும்பாட்டை பார்த்து கண்டிப்பாக கண்ணீர் வடித்து இருப்பார்.
cry
இந்திய கிரிக்கெட்டு அணியை தடுத்து நிறுத்தவேண்டும் என்று நான் சொல்லவில்லை. உணர்வுள்ள தமிழனாக இந்த போட்டிகளை பார்ப்பதை கைவிட்டு வெகுநாட்கள் ஆகிறது.உண்மையில் உணர்வுள்ள தமிழர்கள் இலங்கையோடு விளையாடும் அணிகளை புறக்கணிக்கட்டும் என்பதே எனது கருத்து. வழக்கறிஞர்கள் முயற்சி என்பது வெறும் கிரிக்கெட்டு அணியை தடுப்பது அன்று இலங்கையின் இனவெறியை இதன்மூலம் விவாதிக்க வழிகிடைக்கும் என்பதாலே இந்த வழக்கு.

வழக்கம் போலவே தமிழர்களுக்காக தொடுத்த வழக்கில் ‘ஓட்டை’ கண்டுபிடித்து நம்மை ஓரங்கட்டிவிட்டார்கள். உங்கள் தீர்ப்பை விமர்சனம் செய்பவனாக அல்ல அண்ணல் அம்பேத்கார் எழுதிய சட்டத்தின்பால் நம்பிக்கை உள்ளவனாக சொல்லுகிறேன் கொஞ்சம் மாந்தநேயத்துடனும் திறந்த உள்ளத்துடனும் சிந்தியுங்கள் நீதி அரசர்களே! நீங்கள் செய்வது சரிதானா?

தமிழ்நாடு மட்டுமே திராவிடநாடு!அல்லது இதுதாண்டா திராவிட நாடு !

செப்ரெம்பர் 3, 2009 § 19 பின்னூட்டங்கள்

தமிழ்நாடு மட்டுமே திராவிடநாடு!அல்லது இதுதாண்டா திராவிட நாடு !

Onam

நேற்று ஓனம் பண்டிகையை தொடர்ந்து செய்திகளில் முதல்வரும் முன்னாள்முதல்வரும் கொடுத்த வாழ்த்துசெய்திகள் வந்தன.ஓனம்  என்பது விஷ்ணுவின் அவதாரமான “உலகை மூன்று அடிகளில் அளந்த நிகழ்வை” குறிக்கும் பண்டிகை.பகுத்தறிவாளர் வாழ்த்துசொன்னதோடு மலையாளிகள் கணிசமாகவசிக்கும் தமிழகபகுதிகளுக்கு விடுமுறை அறிவித்து இருக்கிறார்.
sarvagyar04

கன்னடகவிஞர் சர்வக்ஞர் சிலை சென்னையில் நிறுவப்பட்டிருக்கிறது. தேவகவுடாவின்மகன் குமாரசாமி முதல்வராக இருந்த பொழுது காவேரிதீர்ப்பு வந்ததால் பிரச்சனைவந்தது. குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறினார் தீர்ப்பை உடனே நடைமுறைப்படுத்த வேண்டாம் பேச்சுவார்த்தைகள் பண்ணலாம் என்று கருணாநிதி கடிதம்அனுப்பி இருப்பதாக. “எனது ஆருயிர் நண்பர் தேவகவுடாவிற்கு சங்கராந்தி வாழ்த்து சொன்னேன் வேறதுவும் இல்லை” என்றார் முதல்வர். இந்த நேரத்திலேயா வாழ்த்துசெய்தி? என்று விமர்சனங்கள் வந்தது. கர்நாடகதேர்தலை காரணம்காட்டி ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை பரணில் போட்டது கொசுறுசெய்தி.
Y._S._Rajasekhara_Reddy_300

ஆந்திரமுதல்வர் ராஜசேகரரெட்டி பயணம்செய்த விமானம் மாயமாக மறைந்ததாக நேற்று செய்திவந்தது. இன்று விமானத்தில்  பயணம்செய்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று அதிர்ச்சிகரமான செய்திவந்துள்ளது.  உண்மையாகவே எல்லோரும் அனுதாபப்படவேண்டிய நிகழ்வுதான்.என்னதான் பாலாற்றின் குறுக்கே அணைமேல் ஆணைகட்டினாலும் ராசசேகரரெட்டியின் மரணத்திற்கு இரங்கல் அறிவிப்பு செய்யவேண்டியது முதல்வரின் கடமைதான்.

ஆனால் முதல்வர் ஒருபடி மேலேசென்று ஒருநாள் அரசுவிடுமுறை அறிவித்து இருக்கிறார். தமிழகமக்களில் பலருக்கு “ரெட்டி” யாரென்றே தெரியாது. எதற்கு இந்த விடுமுறை?. அவரே கேள்விகேட்டு அவரே பதில்சொல்வார் நாங்கள் மட்டுமே திராவிட நாடு என்று. திராவிடர்களான தெலுங்கர்களின் முதல்வர் இறந்ததற்காக விடுமுறை என்பார்.அப்படி என்றால் இலங்கை தமிழனும் திராவிடன் தானே? கடைசிநாளில் ஆயிரக்கணக்கில் செத்தானே அப்பொழுது ஏன் அரசுவிடுமுறை விடவில்லை? ஒருவேளை நீங்கள் இந்தியதிராவிடர்களுக்கு மட்டும்தான் இறங்குவீர்களா?

இலங்கை தமிழனுக்காக விடுமுறைவிட்டால் நடந்தது இனப்படுகொலை என்பதை உலகிற்கு உணர்த்தியதாகும்.இலங்கையோடு கூட்டுசேர்ந்து இனப்படுகொலை செய்த காங்கிரசு சும்மா இருக்குமா? அப்புறம் காங்கிரஸ் கட்சியோடு கூட்டுசேர்ந்து கொள்ளை அடிக்க முடியாது. ராஜசேகரரெட்டிக்காக விடுமுறைவிட்டால் காங்கிரசின் விசுவாசியாக காட்டி கொள்ளலாம்.

முல்லை பெரியாறு, பாலாறு,காவேரி என்று பக்கத்து மாநிலங்கள் முறைத்து கொண்டு நிற்க. திராவிடன் என்ற வார்த்தையை உச்சரிக்கவும் (இந்திய) திராவிடனுக்கு வாழ்த்து சொல்லவும் விடுமுறை அறிவிக்கவும் உள்ள ஒரேநாடு(மாநிலம்) தமிழகம்தான். கலைஞருக்கு இருப்பது திராவிட பாசமா? அல்லது காங்கிரஸ் விசுவாசமா? என்று நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

Where Am I?

You are currently viewing the archives for செப்ரெம்பர், 2009 at தமிழன்பன் பக்கம்.