தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு இவிகேஎஸ் இளங்கோவன் !

நவம்பர் 30, 2009 § 5 பின்னூட்டங்கள்

தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு இவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரசை தமிழகமண்ணைவிட்டு ஒழிப்போம்! என்று முழங்கியர் பெரியார். அவரின் வம்சவழியில் வந்ததாககூறி நான்கு இனிசியலோடு நடமாடும் இளங்கோவன் தமிழனின் (எருமைமாடு போன்ற)பொறுமைக்கு ஒரு சான்றாக இருக்கிறார்.  பெரியாரின் வீட்டுபிள்ளை என்று காட்ட இவர் பெயருக்கு முன்னர்வரும் “இவிகேஎஸ்” இல்லையென்றால் இளங்கோவனுக்கு அரசியலில் முகவரியே கிடையாது.  ஆனால் பெரியாரின் கருத்துக்கு சிறிதும் ஒவ்வாத காங்கிரசில் இருந்துகொண்டு பதவிசுகத்திற்க்காக தமிழினத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார் இளங்கோவன். கடந்த தேர்தலில் இவரின் தமிழினவிரோதபோக்கினால் ஈரோட்டு மக்களால் சவுக்கடி(செருப்படி என்ற வார்த்தை சபை நாகரீகம் கருதி தவிர்க்கப்பட்டு இருக்கிறது) கொடுக்கப்பட்டு மூலையில் உற்காரவைக்கப்பட்டு இருக்கிறார் இளங்கோவன்.

தனது அரசியல் இருப்பை நிலைநாட்ட தொடர்ந்து தனது தமிழினவெறுப்பை அரங்கேற்றிவருகிறார் பெரியாரின் இனிசியல் கொள்ளுபேரன். நாமும் வழமைபோல பொறுமைகாத்து வந்தோம். உலகெங்கும் மாவீரர்நாள் நவம்பர் 27 இல் கண்ணீர் மழ்க நினைவுபடுத்தப்பட்டு “தமிழனுக்கு நாடு வேண்டும்!” என்று தங்கள் கடைசி மூச்சை நிறுத்தி கொண்ட அந்த மாவீரர்கள் நினைவில் நிறுத்தும் நாளில்.  மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு தமிழீழ உணர்வாளர்கள் ஈரோட்டில் வைத்திருந்த பதாகைகளை தனது கைத்தடிகள் துணையுடன் கிழித்து எறிந்திருக்கிறது இந்த கருங்காலி. அரசியல் செய்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கிறது அப்படி இருக்க மாவீரர்கள் பதாகைகளை கிழித்துத்தான் தனது அரசியல் நடத்தவேண்டும் என்று எண்ணும் இந்த இழிபிறவியை கண்டு இரத்தம் கொதித்து போயிருக்கிறோம்.

உங்களுக்கு மாவீரர்தினத்தில் உடன்பாடு இல்லையென்றால் ஒதுங்கி போங்கள் எதற்க்காக மாவீரர்கள் நினைவுபதாகைகளை கிழிக்க வேண்டும்?.  முறையாக அனுமதிபெற்று ஈழ ஆதரவாளர்கள் வைத்த பதாகைகளை நான் சோனியா விசுவாசி என்று காட்ட கிழித்துபோட்டு இருக்கிறார் இந்த காங்கிரசுக்காரர். கேட்டால் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் அவர்களுக்கு நினைவு பதாகையா? என்று பதிலளிப்பார்கள். அப்படி பார்த்தால் அமைதிப்படை என்ற பெயரில் அக்கிரமபடையை அனுப்பி பல்லாயிரம் தமிழர்களை கொன்றழித்த ராஜீவ்காந்தியின் நினைவுநாளில் நீங்கள் வைக்கும் பதாகைகளை நாங்கள் கிழித்து போடுவதா?

இளங்கோவன் அவர்களே வந்தாரை வாழவைத்து வாழவழியில்லாமல் அலையும் தமிழர்கள் என்று எங்களை சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள் போல. எங்கள் தொப்புள்கொடி உறவுகள் ஈழத்தில் அகதிமுகாம்களில் வாட கர்நாடகாவிலிருந்து பொருளாதார ஏதிலிகளாக வந்த நீங்கள் தமிழகத்தில் அனுபவிக்கும் வசதிகளை எண்ணிப்பாருங்கள்.  எவன் உண்மையான தமிழன் எவன் உண்மையான தமிழன் இல்லை என்று தமிழன் சிந்திக்க ஆரம்பித்தால் நீங்கள் காணமல் போய்விடுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.கடந்த தேர்தலில் உங்கள் சொந்ததொகுதிவரை வந்து உங்களை விரட்டி அடித்த உணர்வாளர்களுக்கு உங்களை தமிழகத்தை விட்டே அடித்து விரட்ட நாளாகிவிடாது.கறைபடிந்த உங்கள் கரங்கள் எங்கள் மாவீரர்கள் படங்களை தீண்டியது கண்டு கொதித்துபோயி இருக்கிறோம்.  உங்கள் எஜமானியம்மா உங்களுக்கு எழும்பு துண்டுகளாக பதிவிகளை எடுத்து வீசலாம் தமிழன் விழித்து எழுந்தால் நீங்களோ உங்கள் காங்கிரசுகட்சியோ   தமிழ்நாட்டில் இருக்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தால் தமிழ்நாட்டில் எங்காவது ஒரு மூலையில் வார்டு கவுன்சிலாராக வென்றுவிட்டு வாருங்கள்.

அது என்ன இந்திய இறையாண்மை?

நீங்கள் தற்போது சீமான் போன்ற தமிழ் இன உணவாளர்களுக்கு எதிராக கையில் எடுத்திருக்கும் துருப்பிடித்த ஆயுதம் இந்திய இறையாண்மை. அது என்னங்க இந்திய இறையாண்மை? எங்களை பொறுத்த வரை இறை என்பது பொய்.ஈழத்தில் அழிக்கப்பட்ட எம் தமிழினத்தை எந்த இறைவனும் வந்து காக்காதபொழுது இறை பொய்யென்பது உறுதியானது. நீங்கள் இந்தியாவிற்கு இருப்பதாக சொல்லும் ஆண்மையும் எங்கள் மீனவர்கள் சிங்களவனால் சுட்டு வீழ்த்தப்படும் கோரத்தை தட்டி கேட்க முடியாத பொழுதே பொய் என்று ஆகிவிட்டது.  இப்படி இல்லாத ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் தோழர்களை நசுக்க முனைவது நியாயமா?

காவேரில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்ல ஒரு எஸ்எம் கிருஷ்ணாவால் முடிகிறது. தலைமையால் அவர்களுக்கு உத்தரவிட முடியவில்லை. ஆனால் நீங்கள் எப்போது தமிழக நலனுக்காக சிறிதேனும் குரலை உங்கள் தலைவியிடம் உயர்த்தியது உண்டா? அப்போது இந்திய இறையாண்மை எங்கே போனது? தண்ணீர் பிரச்சனையில் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாதா? ஒகேனக்கல் நீர் தமிழத்தின் உரிமை என்று உங்களால் உரக்க சொல்ல முடியுமா? முல்லை பெரியாரில் புதிய அணைகட்ட ஆய்வினை மேற்கொள்ள உங்கள் காங்கிரசுகட்சி  அனுமதிகொடுத்ததை பத்தி உங்கள் தலைமையிடம் கிசுகிசுக்கவாவது முடியுமா?

அது என்னங்க இந்திய இறையாண்மை தமிழனுக்கு மட்டும் தொடர்ந்து போதிக்கப்படுகிறது? இந்தியாவில் பிறவாத ஒருவரை இந்திய பிரதமராக்க நீங்கள் முயலும் பொழுது வெளிநாடுகளில் வாழும் எம்தமிழர்களுக்காக குரல்கொடுத்தால் அது குற்றமா?

Advertisements

ஈழம் மவுனவலியும் கருணாநிதியின் முதுகுவலியும்!

நவம்பர் 19, 2009 § 4 பின்னூட்டங்கள்

ஈழம் மவுனவலியும் கருணாநிதியின் முதுகுவலியும்!

‘நாம்’ மற்றும்  ‘போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு’ என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும் கஸ்பார் என்னும் பாதிரியாரும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. இதுகிட்டத்தட்ட கருணாநிதி ஆதரவாளர்களால் கருணாநிதிக்காக நடந்த்தப்பட்ட நிகழ்வாகவே தெரிகிறது.  ‘நக்கீரன்’கோபால் புத்தகவெளியீட்டில் கருணாநிதிக்கு வாழ்த்துப்பா இயற்றியதாக தெரிகிறது.

முன்னர் “சகோதரயுத்தம்” என்று சுருங்கசொல்லி விளங்கவைத்ததை இப்பொழுது விளாவரியாக எழுதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழினதலைவர் கருணாநிதி.  விடுதலைபுலிகளின் தவறான முடிவுகளே ஈழத்தமிழர்களின் துயரிற்கு காரணம்! என்றும் ஈழத்தமிழர் நிலை குறித்து தான் மவுனமாக அழுவதாகவும் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் அரைப்பக்கத்தை அந்த அறிக்கைக்கு ஒதுக்கி இருக்கின்றன.  ஈழத்திற்கு தனது கட்சியும் தானும் செய்த உதவிகளை வழமைபோலவே பட்டியலிட்டிருக்கிறார்.எல்லாம் குறைந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பானவை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அப்படியே சகோதரயுத்தம் பற்றி நீட்டி முழங்குகிறார். போராளி இயக்கத்தில் “முதல் துரோகி” என்று அடையாளம் கானப்பட்டவரும் பிரபாகரனை சுட்டார் என்று ‘இந்து’ பத்திரிக்கையால் புகழாரம் சூட்டப்பட்ட மாத்தையாவை மாவீரன் “மாத்தையா” என்று பட்டம் கொடுத்திருக்கிறார். கருணாவோடு புலிகள் சண்டைபோட்டதை வருத்தத்துடன் கூறும் கருணாநிதி. அப்படியே ரணில் போல வருமா? என்கிறார் கருணாவோடான சகோதரயுத்தத்தின் சூத்திரதாரி ரணில் என்று தலைவருக்கு தெரியாது போல!.

இப்படியே பக்கத்துக்கு பக்கம் நாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கலாம். அதனால் பலன் ஒன்றும் இல்லை. இவருக்கு எப்பெல்லாம் மவுனவலி வரும் எப்பெல்லாம் முதுகுவலி வரும் என்று தமிழனுக்கு தெரியாதா என்ன? இவ்வளவு நீண்ட கடிதத்தில் சிங்களவனின் இனப்படுகொலை பத்தி ஒருவரிகூட தேடினாலும் கிடைக்காது.  ராஜீவ் ஈழத்தமிழர்கள்  பிரச்சனை என்ன என்று எனக்கு விசாரித்து சொல்லுங்கள் நான் “தீர்த்து வைக்கிறேன்” என்று சொன்னாராம் அதுவும் ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்திற்கு பிறகு.  ராஜீவ் அதற்கு முன்னரே “பிரபாகரனை போட்டுதள்ளு!” என்று உத்தரவிட்டது தலைவருக்கு தெரியாது போலும்.

மவுனமாக அழுவதாக சொல்லுகிறார் ஈழத்தை நினைத்தா? அல்லது எப்படியும் காங்கிரசு நம்மளை கலட்டி விட்டுருவானுங்க போல தெரியுதேன்னா? யாமறியோம். சத்தமாக அழுதால் முதாலளியம்மா கோவிச்சுவாங்க போல. இந்தியரசிற்கும் ஈழத்தமிழர் துயரிற்கும் எவ்விததொடர்பும் இல்லை எல்லாம் புலிகள் எடுத்த முடிவுகளே காரணம் என்றும் கதைவிட்டுட்டு இருக்கார். அப்படியே இனவெறியன் ராசபக்சேவிற்கும் அவனது தளபதிக்கும் பிரச்சனை என்றால் பிராணாப் உடனே ஓடோடி சென்று பஞ்சாயத்து பண்ணுகிறாரே அது ஏனென்று நம்ம தமிழினதலைவர் விளக்கினால் நல்லது. “கலைஞர் சொன்னதில் என்ன பிழை இங்கே இருக்கிற உணர்வாளர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்….” என்று சுபவீக்கள் நமக்கு பாடம் எடுப்பார்கள்.

முழுக்கமுழுக்க திராவிடகொள்கைகள் நீர்த்துபோன, தமிழ் இனமே அழிந்தாலும் தன் குடும்பமே  தனக்கு முக்கியம் என்று சுருங்கிப்போன கருணாநிதியுடன் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். ஈழத்தில் சுமூகநிலை, அகதிமுகாம்கள் அருமை என்றெல்லாம் முன்னர் சத்தமாகச்சிரித்தவர் “எல்லா பிரச்சனைக்கும் புலிகளே காரணம்!” என்று இன்று மவுனமாக அழுதிருக்கிறார். இவர் என்ன சொன்னாலும் வக்காலத்து வாங்க சில போலிதமிழ் உணர்வாளர்கள் உள்ளனர் அவர்களிடம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வேறுமாதிரியான வரலாற்றை நமக்கு சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.  நான் யாரையும் குற்றம் சொல்லும் நோக்கில் சொல்லவில்லை என்று முழுக்கமுழுக்க புலிகளையும் புலித்தலமையையும் விமர்சித்து இருக்கிறார். சிங்களர்வெற்றியை நோட்டு அடித்து கொண்டாடும்வேளையில் வேதனைமேல்வேதனையாக தமிழினதலைவர் பிரபாகரனை நோக்கி ஆட்காட்டிவிரல் நீட்டி “பிரபாகரனே இந்த இனவழிப்பிற்கு முழு பொறுப்பு!” என்று குற்றம் சுமத்துகிறார். ஈழம் மவுனவலி என்ற புத்தகத்தில் தமிழினதலைவரின்  இலக்கியவரிசு கனிமொழி மகாபாரதக்கதை பேசி ரெளத்திரம் பழகாதது தனது பிழை என்று நீலிகண்ணீர் வடிக்கிறார். துரோகிகளை அடையாளம் கண்டுகொள்வதொடு துரோகிகளின் கூட்டாளிகளையும் அடையாளம் காணவேண்டியது தமிழர்களின் கடமை.

சிவகங்கை தந்த பாடம் சிதம்பரத்திற்கு மறந்து விட்டதா?

நவம்பர் 16, 2009 § 4 பின்னூட்டங்கள்

சிதம்பரத்திற்கு தேர்தல் வந்தால் மட்டுமே தமிழர்கள் நியாபகம் வரும்!

chidambaram_karaikudi_130409_01

‘சிதம்பரம்’ என்ற பெயரை பார்த்ததும் முன்னாள் காங்கிரசுக்காரர் செக்கிழுத்தசெம்மல் கப்போலோட்டியதமிழனை நினைத்துவிடாதீர்கள். இது இந்நாள் காங்கிரசுக்காரர் சீக்கியர்களிடம் செருப்படிபெற்ற பொருளாதாரமேதை சிதம்பரம் பற்றியது.  அத்திபூத்தாற்போல் அய்யா சிதம்பரத்திற்கு எப்பொழுதாவது தமிழர்களின் நியாபகம் வரும் அப்படி நியாபகம் வந்து நல்லது ஏதும் செய்துவிடுவார் என்று எண்ணிவிடவேண்டாம் நம்மவர் ரூட்டே தனி. பிரபாகரன் வருவார் என்று இங்கே சிலர் ஊரை ஏமாற்றுகிறார்கள் என்று சமீபத்தில் ரெம்பவே ஆவேசப்பட்டு இருக்கிறார். இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழககுழு பாஸ்மார்க் வாங்கிவிட்டது என்றும். இலங்கையில் அரசியல் தீர்வு காங்கிரசு முயற்சியால் வந்துவிட்டது அதை பொறுக்கமுடியாமல் இங்கே சிலர் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள் என்று ரெம்பவே ஆதங்கப்பட்டு இருக்கிறார்.அதற்கு பதில் கூறும் முகமாகத்தான் இந்த பதிவு.

வேலுநாச்சியார்,மருதுபாண்டியர்கள்  என்றுவீரத்தின் விளைநிலமான சிவகங்கைசீமையின் தவப்புதல்வர்தான் இந்த சிதம்பரம். தயவுசெய்து முன்னவர்களின் இனமானத்தை இவரோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். சிவகங்கையில் தொடர்ந்து பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிமாலை சூடியவர்.  ஆனால் கடந்ததேர்தலில் இவர் எப்படி வென்றார் என்று விவாதித்தால் ஒட்டுமொத்த இந்தியாவே சிரிக்கும். எத்தனையோ அரசியல் எதிரிகளை தன்பொதுவாழ்வில் சந்தித்து இருந்தாலும் கடந்ததேர்தலில் இவர் சந்தித்த எதிரிகள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.  எண்ணிக்கையில் மிகச்சிறிய தமிழ் உணர்வாளர் பட்டாளம் இவருக்கு எதிராக நெஞ்சுரம் காட்டியது.  ஈழத்தில் தமிழ்மக்கள் மீது கொலைவெறியை ஏவிவிட்ட சிங்களவனுக்கு நட்புக்கரம் நீட்டி  காங்கிரசு தலைமையின் தமிழினழிப்புக்களுக்கு சேவகனாக இருந்ததே அதற்கு காரணம். ஈழத்தில் அழிவது தன்னுடைய இனம் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் தமிழனஅழிப்பினை உடன்நின்று நடத்திவிட்டு தமிழ்நாட்டின் “காங்கிரசு முகவரி நாங்கள்தான்” என்று கொக்கரித்தார் சிதம்பரம். போர் உச்சகட்டத்தில் இருந்தபொழுது 500 கோடி 1000 கோடி என்று இலங்கை பேரினவாதத்திற்கு வட்டியில்லாத கடனாவாக வழங்கியது சிதம்பரம்தான்.

image003

காங்கிரசு என்னும் தமிழினவிரோதகட்சியின் தமிழகமுகவரிகளாக விளங்கும் ப.சிதம்பரம் தங்கபாலு இளங்கோவன் மணிசங்கரஅய்யர் ஆகிய காங்கிரசு தலைவர்களை பாராளுமன்றத்தேர்தலில் தோற்கடிப்பது என்ற தீர்மானத்துடன் தமிழகத்தின் ஈழ ஆதரவுசக்திகள் ஒருங்கிணைந்து பரப்புரைசெய்ய ஆரம்பித்தனர். “முத்துகுமரன் நண்பர்கள் இயக்கம்” சிதம்பரத்தை தோற்கடிக்க ராஜீவ்காந்தி என்ற சட்டகல்லூரி மாணவரை தேர்தல்களத்தில் இறக்கியது. ராஜீவ்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்குவது அவர்கள் நோக்கம் அல்ல மாறாக சிதம்பரத்தை தோற்கடியுங்கள் என்ற கோசத்தை முன்னெடுப்பதே அவர்களின் நோக்கம். துவக்கத்தில் “முடிந்தால் நான்கு வாக்குகள் வாங்கி காண்பியுங்கள்” என்று கார்த்திக்சிதம்பரம் வாய்சவுடால் விட்டார். மாணவர்கள் களத்தில் இறங்கியபிறகுதான் தெரிந்தது அவர்கள் நோக்கம் வாக்குசேகரிப்பது அல்ல சிதம்பரத்தின் வாக்குக்களை சரிப்பது என்று.  சிவகங்கையில் இன்னொரு அழகிரியாக அவதாரம் எடுக்க விரும்பும் கார்த்திக்சிதம்பரம் அடியாட்கள் பலம்கொண்டும் காவல்துறை துணைகொண்டும் ஈழ ஆதரவாளர்களை நசுக்க முயன்றுபார்த்தார். முதலில் ராஜீவ்காந்தியோடு களத்தில் இறங்கிய தோழர்களை கலகம் செய்தார்கள் என்று வழக்குபோட்டு சிறைக்குள்தள்ளினார்கள். உடன்வந்த பதிமூன்றுபேர் சிறைசெல்ல தனிநபராகிவிடுவார் வேட்பாளர் என்று கணக்குபோட்டார்கள். இந்த அடக்குமுறை எண்ணற்ற உணர்வாளர்களை சிவகங்கைநோக்கி நடைபோடவைத்தது.

சிதம்பரத்திற்கு சிவகங்கையில் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. பலகிராமங்கள் உள்ளே வரக்கூடாது என்று தடைவிதித்தது. இலங்கைக்கு பலகோடி நிதியுதவி செய்த சிதம்பரம் தன்சொந்த தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதே அதற்க்கு காரணம். தமிழ்ஈழ அதாரவாளர்கள் ஒருபக்கம் வீடுவீடாக சென்று பரப்புரை மேற்கொண்டார்கள். தேர்தலுக்கு இரண்டுநாட்களுக்கு முன்பு நானும் என்னுடைய நண்பன் நற்றமிழனும் சிவகங்கையில் ஈழஆதரவாளர்களோடு சேர்ந்து பரப்புரை செய்தோம். ஈழ ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து பலவழிகளில் காங்கிரசுகட்சியினால் நெருக்குதல் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது. காங்கிரசுகாரர்களின் ஒரே நம்பிக்கை விஜயகாந்தின்கட்சி பிரிக்கும் வாக்குகள் தங்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்பதே.

தேர்தல் முடிவில் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்தங்கிய சிதம்பரம் ஒரு கட்டத்தில் தோற்றுவிட்டார் என்று செய்திவந்தது. திடீரென்று செய்திகள் நிறுத்தப்பட்டு இரவு  சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று விட்டார் என்று அறிவிக்கப்பட்டார். அதுவரை மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கிய சிதம்பரம் எப்படி திடீரென்று இரண்டாயிரம் வாக்குகள் முன்னேறினார்? என்றால் ஒரு பகுதி வாக்குகள் எண்ணப்படவில்லை அதை எண்ணியபொழுது அதில்மட்டுமே ஐந்தாயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார் அதனால் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார் என்று தில்லாலங்கடி அறிவிப்பு விட்டார்கள். அதாவது அவர் வெற்றிபெரும் வித்தியாசம் வரும்வரை திரும்பதிரும்ப எண்ணிய வாக்குப்பெட்டிகளை மத்திமாத்தி எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இவரும் தோற்றுபோயிருந்தால் மத்தியில் காங்கிரசோடு பேரம் நடத்தமுடியாதென்று இவரை எப்படியோ வெல்ல வைத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. வென்றதும் முதல்வேலையாக கோபாலபுரத்தில் சரணடைந்தார்.  கடைசிவரை ராஜீவ்காந்தியின் சின்னம் என்னவென்று மக்களுக்கு சொல்லப்படவேயில்லை ஆனால் அந்த ராஜீவ்காந்திக்கும் 3000 வாக்குகள் விழுந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல். ஆகமொத்தம் மோசடியாக வென்று இருக்கிறார் சிதம்பரம் என்பதுதான் நாங்கள் கூறுவது. நேற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கடந்த சட்டமன்றத்தேர்தலில் 17000 வாக்குகள் அதிகம்பெற்று இருக்கிறார் ஆனால் தமிழகஅரசியலில் பழம்தின்று கொட்டைபோட்ட சிதம்பரம் பாராளுமன்றத்தேர்தலில்  வெறும் 2000 வாக்குகள்தான் அதிகம் பெற்று இருக்கிறார்.

இப்படி இவர் பலவழிகளில்  “நேர்மையாக” அமைச்சராகிவிட்டு இப்பொழுது தமிழின உணர்வாளர்கள் ஊரை ஏமாற்றுகிறார்கள் என்று ஆவேசப்படுகிறார். போனமுறை நிதியமைச்சராக இருந்தார் சிங்களனுக்கு வேண்டிய நிதியை கொடுத்தார் ஆனால் இந்தமுறை உள்துறை அமைச்சராக இருந்தாலும் இந்தியபாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை சுற்றுபயணத்தை தொடர்ந்து இலங்கைகேட்டால் மேலும் 500 கோடி கொடுக்கத்தயார்! என்று அறிக்கை விடுகிறார். இன்னும் இவர்தான் இலங்கைக்கு நிதியமைச்சர் போலும். தமிழகமீனவர்கள்  சிங்களவனால் சுடப்படும்பொழுது  சிதம்பரம் எங்கே பதுங்குவார் என்று தெரியாது. முல்லைபெரியாரில் கேரளா அணைகட்ட நடுவண்அரசு ஆணையிட்டாலும் காணமல் போய்விடுவார். ஆனால் ஈழத்தில் சிங்களவனுக்கு பிரச்சனை என்றால் உடனே கிளம்பிவிடுவார் . வெறும் ஆயிரத்திற்கு நெருக்கமான தமிழினஉணர்வாளர்கள் அணிவகுத்ததற்க்கே வெற்றி வித்தியாசம் 200000 இலிருந்து 2000 க்கு வந்துவிட்டது. தொடர்ந்து தமிழின அழிப்பிற்கு ஆதவாக முழங்கி தமிழகஅரசியலிருந்து காணாமல் போகும்நிலை வந்துவிடாமல் பார்த்துகொள்ளவும். சிவகங்கை என்னும் மண்ணில் வரலாற்றுபெருமைவாய்ந்த மண்ணின் நிகழ்கால அவமானமாக இருக்காமல். “செக்கிழுத்த சிதம்பரம்” என்ற செம்மலை போற்றிய தமிழகத்தில் செருப்படிபட்ட சிதம்பரத்தை தூற்றும் நிலை ஏற்பட்டுவிடும் நிலைக்கு எம்மை தள்ளாமல் இருக்கும்படி இக்கட்டுரையின் வாயிலாக கேட்டுகொள்கிறோம்.

தமிழீழ அகதிகளை உலகநாடுகள் கைவிட்டுவிட்டதா?

நவம்பர் 9, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

தமிழீழ ஏதிலிகளை உலகநாடுகள் கைவிட்டுவிட்டதா?

sri_lankan_m1731201


ஈழத்தில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபொழுது நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் நம்மிடம் சொன்னதெல்லாம் இதுதான் “போருக்கு பின்னால் இலங்கை அரசு உரிமைகளுடன் அமைதியாக தமிழர்கள் வாழவழிசெய்யும்” என்று. இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கு புலிகள்தான் காரணம் என்று சிலர் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்று யுத்தம் முடிந்து இவ்வளவு நாளாகியும் உரிமைகளை கொடுத்தார்களா? என்ற கேள்வியை புறந்தள்ளி அம்மக்கள் ஈழத்தில் வாழவழியுள்ளதா என்று சிந்திக்கும் அளவில் முகாமில் முடக்கப்பட்டு இருக்கிறார்கள்.

யுத்தத்தின் கோரப்பிடி தாளாமல் உயிர்வாழ  தமிழ்மக்கள் அகதிகளாக புலம்பெயர முயற்சிகளை மேற்கொண்டனர். வழமையாக தங்களின் தொப்புள்கொடி உறவுகளாக எண்ணும் தமிழ்நாட்டை நாடிவருவார்கள் ஈழத்தமிழர்கள். இந்தமுறை அப்படி பெரியளவில் ஈழத்தமிழர்கள் வரவில்லை தமிழ்நாட்டின் மீதான அவர்களின் நம்பிக்கை பொய்த்துபோனது மட்டுமல்ல தமிழகத்தை தொடமுடியாமல் இந்தியகப்பல்கள் அணிவகுத்து நின்றதும் ஒரு காரணம். தமிழ்நாட்டை அடையும் முன்னர் சிலர் கடலில் விழுந்தும் பசியிலும் இறந்து போனது நம்மால் மறக்க முடியாத சோகம்.

அவுஸ்திரேலியா,இந்தோனிசியா, கனடா என்று நம்மக்கள் அகதிகளாக புலம்பெயர்ந்த இடங்களில் எல்லாம் அவர்களுக்கு ஏமாற்றங்களே மிஞ்சி நிற்கிறது. தம் தாய்நாட்டைவிட்டு மக்கள் அகதிகளாக புலம்பெயர்வதே மிகப்பெரியசோகம்.  ஆண்டாண்டுகாலமாக வாழ்ந்த நிலத்தில் வாழமுடியாமல் தமது அடையாளம் இழந்து வேறொரு நாட்டில் உயிர்பிச்சை கேட்டு நிற்கும் அகதிநிலை எவ்வளவு மோசமானது என்று எண்ணிப்பாருங்கள்.தங்கள் நினைவுகளை  வாழ்ந்த மண்ணில் விட்டுவிட்டு என்றாவது ஒருநாள் தங்கள் தாயகம் திரும்பி தங்கள் தாய்மண்ணை முத்தமிட மாட்டோமோ என்று அம்மக்கள் தங்கள் ஏக்கங்களை சுமந்து நடைபிணமாக வாழ மனுசெய்கிறார்கள். இந்த உலகின் ஏதோவொரு மூலையில் தங்களுக்காக இறக்கப்படும் நாடும், மக்களும் இருக்கிறார்களா? என்று தேடி அலைகிறார்கள் ஈழத்தின் குடிமக்கள். ஆனால் அப்படி ஒரு நாடும் மக்களும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை.

கனடா தம்மிடம் தஞ்சம் புகுந்தவர்களை போராளிகளாக இருப்பார்களோ? என்று கவலை தெரிவிக்கிறது. அவர்களிடம் விசாரணை நடத்தி போராளிகள் என்பது உறுதியானால் இலங்கையிடம் ஒப்படைப்போம் என்கிறது. அவுஸ்திரேலியா அகதிகளை தனது மண்ணில் அனுமதிக்காமல் கடலிலேயே நிறுத்தி வைத்திருக்கிறது. அதில் பரிதாபத்திற்குரிய அம்மக்களில் சிலர் கடலில்மூழ்கி இறந்தும் இறக்கம் வரவில்லை. அத்தோடு நில்லாமல் அந்நாட்டின் அமைச்சர் இலங்கை பயணம்செய்து. அகதிகளாக மக்கள் வெளியேறுவதை தடுத்து நிறுத்துவதற்கு ஆலோசனை சொல்லபோகிறார்களாம்.

சிங்கள பேரினவாதத்தைவிட இவர்கள் மோசமானவர்களாக இருக்கிறார்கள். இம்மக்கள் தமிழர்களாக பிறந்ததைதவிர பிழை ஏதும் செய்யாதவர்கள். பிறந்தநாட்டிலே சிங்கள பேரினவாதம் இவர்களை நசுக்கி  அழிக்கிறது தப்பித்து வேறுநாடுகளுக்கு ஓடினால் அவர்களும் சிங்களபேரினவாதத்தின் சேவகர்களாக இருக்கிறார்கள்.  இவர்களுக்கு பிறமாந்தசமூகங்களை போல வாழ்ந்திட வாய்க்கவே வாய்க்காது போலும்.

Sri-Lanka-Refugee-Camps

நம் தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் நிலைமை படுமோசம். அகதிமுகாம்களில் ஒருநாள் வாழ்ந்தால் உண்மையில் தமிழ்நாடு ஈழமக்களின் தொப்புள்கொடி உறவை எப்படி மதிக்கிறது என்று தெரியும். தமிழக அகதிமுகாம் குறித்து திடீரென்று அக்கறை கொண்ட தமிழக அரசு 12 கோடி நிதி ஒதுக்கி நாடகம் ஆடுகின்றது. குறைந்தபட்சம் முகாமில் ஒருலட்சம் அகதிகள் இருக்கிறார்கள் என்று வைத்து கொண்டாலும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய்வீதம் அறிவித்து அதனை மிகப்பெரிய மாந்தநேயப்பணி போல விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சிங்களனுக்கு 500 கோடி ஒதுக்கிவிட்டு அது நலம்புரி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு என்று கதையளக்கிறார்கள். அப்படியே மூன்றுலட்சம் தமிழர்களுக்கு 500 கோடி என்றால் ஒருலட்சம் தமிழர்களுக்கு குறைந்தபட்சம் 100 கோடி ஒதுக்கலாமே?  தமிழனுக்கு கொடுக்கப்பட்ட தொகையையும் சிங்களனுக்கு கொடுக்கப்பட்ட தொகையையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை விளங்கும்.  இரண்டு மேம்பாலங்கள் கட்டுவதற்கே இதைவிட அதிகம் நிதி ஒதுக்கும் தமிழக அரசு 12 கோடி ரூபாய் பணம் ஒதுக்கி ஈழத்தமிழ்மக்களை கொச்சைபடுத்துகிறது.

உண்மையிலேயே இந்த உலகில் மனிதநேயம் கொஞ்சமாவது உயிருடன் இருக்கிறதா? என்று கேள்விகேட்கும் அளவில் தமிழ்மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.  போரின் விதிமுறைகள் மீறப்பட்டு பாதுகாப்புவளையத்தில் குண்டுவீசியபொழுதும் நச்சுகுண்டுகளால் தமிழ் மழலைகளை கருக்கியபொழுதும் சிங்களனை கண்டிக்காத உலகநாடுகள் இன்று முகாமில் வாடும் மக்களுக்காகவோ, அகதிகளாக யாசகம் கேட்டுவரும் நம் உறவுகளுக்கோ சிறிதும் இறங்காதவர்களாக  இருக்கின்றனர்.  முகாமில் இருக்கும் மக்களைமீட்க எந்தநாடும் முனைப்பு காட்டுவதாக தெரியவில்லை அவ்வப்பொழுது எழும் ஆதரவுகுரல்கள் அப்படியே அமுங்கி போகின்றன. உலகிலே ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்ட ஒரு இனமாக தமிழ் இனம் மாறிப்போயிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழினமே விரக்தியின் விளிம்பில் இருக்கிறது.  இந்தியாவாக இருக்கட்டும் பிறநாடுகளாக இருக்கட்டும் தமிழர்கள் முக்கியமான  அரசியல்சக்தியாக உருவெடுக்காததே ஒட்டுமொத்த தமிழினழிப்பு மற்றும் இத்தகைய புறக்கணிப்புக்களுக்கு காரணம்.

முல்லைபெரியாரில் உரிமை மீட்கிறாராம் திருமா!

நவம்பர் 5, 2009 § 2 பின்னூட்டங்கள்

முல்லை பெரியாரில் உரிமை மீட்கிறாராம் திருமா!

thiruma

ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் தண்ணீர் தாகம் தீர்க்க ஆங்கிலேயே கர்னல் பென்னிகுக் என்ற புண்ணியவானின் தயவால் உருவாக்கப்பட்ட முல்லைபெரியார் ஆணையில் தமிழனின் தார்மீக உரிமை நாம் அனைவரும் அறிந்ததே. ஆங்கிலேயர் காலத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஒழுங்காக நீர் சென்று வந்தது. அணை பலவீனமாக இருக்கு என்று பொய்யான காரணத்தை சொல்லி தண்ணீரின் அளவை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்துவிட்டது கேரளா. இதனால் முல்லை பெரியாரின் நீர் தேனி மதுரை சிவகங்கை மாவட்டத்திற்கு மட்டுமே போதுமானதாகவும் ராமநாதபுரம் நீரின்றி பாலைவனமாகவும் திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுபாடும் ஏற்பட்டு இருக்கிறது. 16 அடி நீரை குறைத்ததின் காரணாமாகவே சிவகங்கை ராமநாதபுரம் திண்டுக்கல் என்று மூன்று மாநிலங்களும் விவசாயத்திற்கான நீரின் அளவு குறைந்து விவசாயமே கேள்வி குறியாகி நிற்கிறது. இதில் புதிய அணை கட்டுவதுதான் பிரச்சனைக்கு தீர்வு என்று கேரளா முரண்டு பிடிக்கிறது. புதிய அணை எப்பொழுது கட்டுவது? அதில் எவ்வளவு நீர் தேக்குவது?என்று எதுவும் தெளிவாக இல்லை.

இதில் நடுவண் அரசு  நதிநீர் இணைப்பு சுற்றுசூழலை மாசுபடுத்தும் என்கிறது. நிலநடுக்கத்தை முல்லை பெரியாறு அணை தாங்காது என்கிறது கேரளா. புதிய அணை கட்டுவதற்கு நடுவண் அரசு ஆய்வு நடத்த அனுமதி அளித்திருக்கிறது ஆய்வுக்கு பின்னால் அணை கட்ட காங்கிரசு தலைமையிலான நடுவண் அரசு கண்டிப்பாக தடை விதிக்காது என்று நம்பலாம். நடுவண் அரசின் முக்கிய பங்காளியான திமுக ஈழப்பிரச்சனையில்  கையாண்ட அதே ‘அந்தர்பல்டி’ அரசியலை கையாண்டு வருகிறது. ஒரு மத்திய அமைச்சரை எதிர்த்து பேரணி என்று மார்தட்டியவர்கள் காங்கிரசின் எதிர்நடவடிக்கை கண்டதும் வெண்கொடி வேந்தர்களாகி போனார்கள். முல்லைபெரியார் குறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறதே! என்று காரணம்காட்டிவிட்டு ஒதுங்கி கொண்டது திமுக.

இந்தவேளையில் “எழுச்சி தமிழர்” என்ற அடைமொழியோடு முல்லைபெரியாரின் உரிமைமீட்க  புறப்பட்டு  இருக்கிறார் திருமாவளவன். மதுரையில் இருந்து ஊர்தி பயணம் கிளம்பி இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. சென்றவாரம் திருமாவின் வருகை குறித்த சுவரொட்டிகள் கண்டேன். “ஈழ பயணமே”, “எழும் தமிழ் ஈழமே”, “ஈழக்காவலனே”, “தமிழகத்து பிரபாகரனே!” என்றெல்லாம் நம்மாளுங்க எழுதி வைத்து இருந்தார்கள். சீருடை அணிந்து கையில் துப்பாக்கியோடு காட்சி கொடுக்கிறார் திருமா.ஆங்காங்கே மீசையை முறுக்கிகொண்டு “மீட்பேன் முல்லை பெரியாறை” என்று முழங்குகிறார் திருமா.

thiruma2

ஏற்கனவே ஈழப்போரை நிறுத்தகோரி சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்து பின்னாளில் போரை முன்னின்று நடத்திய காங்கிரசு கூட்டணியில் இணைந்து. சோனியா கலந்துகொண்ட நிகழ்வில் “சோனியா வாழ்க!” என்று முழங்கி. நான் காங்கிரசை ஒரு போதும் எதிர்த்தது இல்லை என்று தன்னிலை விளக்கம் கொடுத்து காங்கிரசிற்காக வாக்கு சேகரித்து. ஈழப்போரை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத கருணாநிதிக்கு துணை நின்று.  இறுதியாக ஈழப்பயனத்தில் ராசபக்சேவிற்கு பொன்னாடை போர்த்தி டக்லஸ் என்னும் துரோகியோடு உறையாடி இலங்கை பேரினவாதத்தின் கையில் பரிசுபொருட்கள் வாங்கி கொண்டு தமிழகம் வந்து சேர்ந்து. ஈழ ஆதரவளார்கள் நெஞ்சில் மாறாத வடுவை ஏற்படுத்தியது திருமாவின் நடவடிக்கை.

இப்போது முல்லை பெரியாரில் தமிழன் உரிமை என்று புறப்பட்டு இருக்கிறார்.திமுக அணியில் யாரும் முல்லை பெரியாருக்காக குரல் கொடுக்கவில்லை என்ற பழிச்சொல்லில் இருந்து தற்காத்துக்கொள்ள திருமா களம் இறக்கப்பட்டு இருக்கிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. காங்கிரசு கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணி கட்சியை தட்டி கேட்க துணிவில்லாமல், மத்தியரசின் நிலைப்பாட்டை விமர்சிக்காமல். வெறுமனே உரிமை மீட்கிறேன் என்று கிளம்பி கூட்டம் சேர்த்து என்ன செய்யப்போகிறார் திருமா? துரோகம் செய்வதே திருமாவின் கூட்டாளிகள்தானே?

நாளை  தமிழகத்தை சேர்ந்த காங்கிரசு, திமுக, விசி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முல்லை பெரியாரை ஆய்வு செய்கிறோம் என்று பிரதமரின் சிறப்பு அனுமதியின் பெயரில் முல்லை பெரியாறு அணைக்கு பயணம் செய்யலாம். அங்கே சென்று குரூப்போட்டா எடுத்துக்கொண்டு அச்சுதானந்தத்திற்கு சால்வை போத்திவிட்டு அவரிடமிருந்து நேந்தரம் சிப்சு பரிசா வாங்கிகிட்டு ஊரு வந்துசேரலாம். தமிழகமுதல்வர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கே வந்து வரவேற்பு கொடுப்பார். அணை பலவீனமாக இருக்கிறது புதிய அணையை பலம்வாய்ந்ததாக கட்ட கேரளா முடிவு செய்துள்ளது அப்படின்னு அறிக்கை கொடுக்கலாம். “அணை பலவீனமாக இருந்தாலும் கேராளாவோடு எங்கள் உறவு பலமாக இருக்கிறது” அப்படின்னு நம்ம முதல்வர் கவிதை வாசித்தாலும் வாசிப்பார்.

முல்லை பெரியார் பார்வையிட சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து “புதிய அணையை உடனே கட்டுங்கள்!” என்று அறிக்கை கொடுக்கலாம் அவர்கள் அங்கே அந்த அறிக்கையை அங்கே கொடுக்கின்ற நேரத்தில் நம்ம திருமா வாரம் இரண்டுமுறை வெளியாகும் ஏதேனும் ‘பரபரப்பு’ அரசியல் இதழில்  “முல்லை வலி” என்ற  தலைப்பில் முல்லைபெரியார் அணையை பார்வையிட்ட அனுபவத்தை தொடர்கட்டுரையாக  எழுதி கொண்டிருப்பார்.

Where Am I?

You are currently viewing the archives for நவம்பர், 2009 at தமிழன்பன் பக்கம்.