சிவகங்கை தந்த பாடம் சிதம்பரத்திற்கு மறந்து விட்டதா?

நவம்பர் 16, 2009 § 4 பின்னூட்டங்கள்


சிதம்பரத்திற்கு தேர்தல் வந்தால் மட்டுமே தமிழர்கள் நியாபகம் வரும்!

chidambaram_karaikudi_130409_01

‘சிதம்பரம்’ என்ற பெயரை பார்த்ததும் முன்னாள் காங்கிரசுக்காரர் செக்கிழுத்தசெம்மல் கப்போலோட்டியதமிழனை நினைத்துவிடாதீர்கள். இது இந்நாள் காங்கிரசுக்காரர் சீக்கியர்களிடம் செருப்படிபெற்ற பொருளாதாரமேதை சிதம்பரம் பற்றியது.  அத்திபூத்தாற்போல் அய்யா சிதம்பரத்திற்கு எப்பொழுதாவது தமிழர்களின் நியாபகம் வரும் அப்படி நியாபகம் வந்து நல்லது ஏதும் செய்துவிடுவார் என்று எண்ணிவிடவேண்டாம் நம்மவர் ரூட்டே தனி. பிரபாகரன் வருவார் என்று இங்கே சிலர் ஊரை ஏமாற்றுகிறார்கள் என்று சமீபத்தில் ரெம்பவே ஆவேசப்பட்டு இருக்கிறார். இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழககுழு பாஸ்மார்க் வாங்கிவிட்டது என்றும். இலங்கையில் அரசியல் தீர்வு காங்கிரசு முயற்சியால் வந்துவிட்டது அதை பொறுக்கமுடியாமல் இங்கே சிலர் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள் என்று ரெம்பவே ஆதங்கப்பட்டு இருக்கிறார்.அதற்கு பதில் கூறும் முகமாகத்தான் இந்த பதிவு.

வேலுநாச்சியார்,மருதுபாண்டியர்கள்  என்றுவீரத்தின் விளைநிலமான சிவகங்கைசீமையின் தவப்புதல்வர்தான் இந்த சிதம்பரம். தயவுசெய்து முன்னவர்களின் இனமானத்தை இவரோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். சிவகங்கையில் தொடர்ந்து பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிமாலை சூடியவர்.  ஆனால் கடந்ததேர்தலில் இவர் எப்படி வென்றார் என்று விவாதித்தால் ஒட்டுமொத்த இந்தியாவே சிரிக்கும். எத்தனையோ அரசியல் எதிரிகளை தன்பொதுவாழ்வில் சந்தித்து இருந்தாலும் கடந்ததேர்தலில் இவர் சந்தித்த எதிரிகள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.  எண்ணிக்கையில் மிகச்சிறிய தமிழ் உணர்வாளர் பட்டாளம் இவருக்கு எதிராக நெஞ்சுரம் காட்டியது.  ஈழத்தில் தமிழ்மக்கள் மீது கொலைவெறியை ஏவிவிட்ட சிங்களவனுக்கு நட்புக்கரம் நீட்டி  காங்கிரசு தலைமையின் தமிழினழிப்புக்களுக்கு சேவகனாக இருந்ததே அதற்கு காரணம். ஈழத்தில் அழிவது தன்னுடைய இனம் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் தமிழனஅழிப்பினை உடன்நின்று நடத்திவிட்டு தமிழ்நாட்டின் “காங்கிரசு முகவரி நாங்கள்தான்” என்று கொக்கரித்தார் சிதம்பரம். போர் உச்சகட்டத்தில் இருந்தபொழுது 500 கோடி 1000 கோடி என்று இலங்கை பேரினவாதத்திற்கு வட்டியில்லாத கடனாவாக வழங்கியது சிதம்பரம்தான்.

image003

காங்கிரசு என்னும் தமிழினவிரோதகட்சியின் தமிழகமுகவரிகளாக விளங்கும் ப.சிதம்பரம் தங்கபாலு இளங்கோவன் மணிசங்கரஅய்யர் ஆகிய காங்கிரசு தலைவர்களை பாராளுமன்றத்தேர்தலில் தோற்கடிப்பது என்ற தீர்மானத்துடன் தமிழகத்தின் ஈழ ஆதரவுசக்திகள் ஒருங்கிணைந்து பரப்புரைசெய்ய ஆரம்பித்தனர். “முத்துகுமரன் நண்பர்கள் இயக்கம்” சிதம்பரத்தை தோற்கடிக்க ராஜீவ்காந்தி என்ற சட்டகல்லூரி மாணவரை தேர்தல்களத்தில் இறக்கியது. ராஜீவ்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்குவது அவர்கள் நோக்கம் அல்ல மாறாக சிதம்பரத்தை தோற்கடியுங்கள் என்ற கோசத்தை முன்னெடுப்பதே அவர்களின் நோக்கம். துவக்கத்தில் “முடிந்தால் நான்கு வாக்குகள் வாங்கி காண்பியுங்கள்” என்று கார்த்திக்சிதம்பரம் வாய்சவுடால் விட்டார். மாணவர்கள் களத்தில் இறங்கியபிறகுதான் தெரிந்தது அவர்கள் நோக்கம் வாக்குசேகரிப்பது அல்ல சிதம்பரத்தின் வாக்குக்களை சரிப்பது என்று.  சிவகங்கையில் இன்னொரு அழகிரியாக அவதாரம் எடுக்க விரும்பும் கார்த்திக்சிதம்பரம் அடியாட்கள் பலம்கொண்டும் காவல்துறை துணைகொண்டும் ஈழ ஆதரவாளர்களை நசுக்க முயன்றுபார்த்தார். முதலில் ராஜீவ்காந்தியோடு களத்தில் இறங்கிய தோழர்களை கலகம் செய்தார்கள் என்று வழக்குபோட்டு சிறைக்குள்தள்ளினார்கள். உடன்வந்த பதிமூன்றுபேர் சிறைசெல்ல தனிநபராகிவிடுவார் வேட்பாளர் என்று கணக்குபோட்டார்கள். இந்த அடக்குமுறை எண்ணற்ற உணர்வாளர்களை சிவகங்கைநோக்கி நடைபோடவைத்தது.

சிதம்பரத்திற்கு சிவகங்கையில் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. பலகிராமங்கள் உள்ளே வரக்கூடாது என்று தடைவிதித்தது. இலங்கைக்கு பலகோடி நிதியுதவி செய்த சிதம்பரம் தன்சொந்த தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதே அதற்க்கு காரணம். தமிழ்ஈழ அதாரவாளர்கள் ஒருபக்கம் வீடுவீடாக சென்று பரப்புரை மேற்கொண்டார்கள். தேர்தலுக்கு இரண்டுநாட்களுக்கு முன்பு நானும் என்னுடைய நண்பன் நற்றமிழனும் சிவகங்கையில் ஈழஆதரவாளர்களோடு சேர்ந்து பரப்புரை செய்தோம். ஈழ ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து பலவழிகளில் காங்கிரசுகட்சியினால் நெருக்குதல் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது. காங்கிரசுகாரர்களின் ஒரே நம்பிக்கை விஜயகாந்தின்கட்சி பிரிக்கும் வாக்குகள் தங்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்பதே.

தேர்தல் முடிவில் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்தங்கிய சிதம்பரம் ஒரு கட்டத்தில் தோற்றுவிட்டார் என்று செய்திவந்தது. திடீரென்று செய்திகள் நிறுத்தப்பட்டு இரவு  சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று விட்டார் என்று அறிவிக்கப்பட்டார். அதுவரை மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கிய சிதம்பரம் எப்படி திடீரென்று இரண்டாயிரம் வாக்குகள் முன்னேறினார்? என்றால் ஒரு பகுதி வாக்குகள் எண்ணப்படவில்லை அதை எண்ணியபொழுது அதில்மட்டுமே ஐந்தாயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார் அதனால் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார் என்று தில்லாலங்கடி அறிவிப்பு விட்டார்கள். அதாவது அவர் வெற்றிபெரும் வித்தியாசம் வரும்வரை திரும்பதிரும்ப எண்ணிய வாக்குப்பெட்டிகளை மத்திமாத்தி எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இவரும் தோற்றுபோயிருந்தால் மத்தியில் காங்கிரசோடு பேரம் நடத்தமுடியாதென்று இவரை எப்படியோ வெல்ல வைத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. வென்றதும் முதல்வேலையாக கோபாலபுரத்தில் சரணடைந்தார்.  கடைசிவரை ராஜீவ்காந்தியின் சின்னம் என்னவென்று மக்களுக்கு சொல்லப்படவேயில்லை ஆனால் அந்த ராஜீவ்காந்திக்கும் 3000 வாக்குகள் விழுந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல். ஆகமொத்தம் மோசடியாக வென்று இருக்கிறார் சிதம்பரம் என்பதுதான் நாங்கள் கூறுவது. நேற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கடந்த சட்டமன்றத்தேர்தலில் 17000 வாக்குகள் அதிகம்பெற்று இருக்கிறார் ஆனால் தமிழகஅரசியலில் பழம்தின்று கொட்டைபோட்ட சிதம்பரம் பாராளுமன்றத்தேர்தலில்  வெறும் 2000 வாக்குகள்தான் அதிகம் பெற்று இருக்கிறார்.

இப்படி இவர் பலவழிகளில்  “நேர்மையாக” அமைச்சராகிவிட்டு இப்பொழுது தமிழின உணர்வாளர்கள் ஊரை ஏமாற்றுகிறார்கள் என்று ஆவேசப்படுகிறார். போனமுறை நிதியமைச்சராக இருந்தார் சிங்களனுக்கு வேண்டிய நிதியை கொடுத்தார் ஆனால் இந்தமுறை உள்துறை அமைச்சராக இருந்தாலும் இந்தியபாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை சுற்றுபயணத்தை தொடர்ந்து இலங்கைகேட்டால் மேலும் 500 கோடி கொடுக்கத்தயார்! என்று அறிக்கை விடுகிறார். இன்னும் இவர்தான் இலங்கைக்கு நிதியமைச்சர் போலும். தமிழகமீனவர்கள்  சிங்களவனால் சுடப்படும்பொழுது  சிதம்பரம் எங்கே பதுங்குவார் என்று தெரியாது. முல்லைபெரியாரில் கேரளா அணைகட்ட நடுவண்அரசு ஆணையிட்டாலும் காணமல் போய்விடுவார். ஆனால் ஈழத்தில் சிங்களவனுக்கு பிரச்சனை என்றால் உடனே கிளம்பிவிடுவார் . வெறும் ஆயிரத்திற்கு நெருக்கமான தமிழினஉணர்வாளர்கள் அணிவகுத்ததற்க்கே வெற்றி வித்தியாசம் 200000 இலிருந்து 2000 க்கு வந்துவிட்டது. தொடர்ந்து தமிழின அழிப்பிற்கு ஆதவாக முழங்கி தமிழகஅரசியலிருந்து காணாமல் போகும்நிலை வந்துவிடாமல் பார்த்துகொள்ளவும். சிவகங்கை என்னும் மண்ணில் வரலாற்றுபெருமைவாய்ந்த மண்ணின் நிகழ்கால அவமானமாக இருக்காமல். “செக்கிழுத்த சிதம்பரம்” என்ற செம்மலை போற்றிய தமிழகத்தில் செருப்படிபட்ட சிதம்பரத்தை தூற்றும் நிலை ஏற்பட்டுவிடும் நிலைக்கு எம்மை தள்ளாமல் இருக்கும்படி இக்கட்டுரையின் வாயிலாக கேட்டுகொள்கிறோம்.

Tagged:

§ 4 Responses to சிவகங்கை தந்த பாடம் சிதம்பரத்திற்கு மறந்து விட்டதா?

murali -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

What’s this?

You are currently reading சிவகங்கை தந்த பாடம் சிதம்பரத்திற்கு மறந்து விட்டதா? at தமிழன்பன் பக்கம்.

meta