சூரியனுக்கே டார்ச் அடிப்போம் என்கிறது தமிழ் இந்து!

திசெம்பர் 21, 2009 § 6 பின்னூட்டங்கள்

பெரியாருக்கு எதிராக புழுதிவீசும் தமிழ் இந்து -2

சூரியனுக்கே டார்ச் அடிப்போம் என்கிறது   தமிழ்இந்து!


இதுவரை நான் சந்தித்திராத அளவு அதிகமான பின்னூட்டங்களும் வசைமொழிகளும் தமிழ் இந்து விமர்சன பதிவிற்கு வந்திருக்கிறது. இதன்மூலம் தமிழ் இந்து எவ்வளவு தொண்டர்களை தம்வசம் வைத்துள்ளது என்பது புரிகிறது. தமிழ் இந்துவிற்கு ஆதரவாக எழுதுபவர்கள் பொதுவாக சிறுபான்மை மக்கள் மீது தங்கள் கசப்பு உணர்வை வெளிப்படுத்துபவர்களாகவும் இப்பெல்லாம் யாருங்க சாதி பார்கிறா? என்று அப்பாவி(?) தனத்துடன் கேள்வி கேட்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

தமிழ் இந்துவில் பெரியாருக்கு எதிராக  ஒரு தொடரே எழுதி கொண்டிருக்கிறார்கள். விட்டால் பெரியார்தான் தமிழகத்தில் சாதியத்தை கொண்டுவந்தார் என்று வரலாறு எழுதினாலும் எழுதிவிடுவார்களோ என்ற ஐயம் எழாமல் இல்லை. எல்லோரும் வேதநூல் படிக்கலாம் என்றும் ஒரு தொடர் போனசாக போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் மனுதர்மம் வேறுமாதிரியாக சொல்லுகிறது.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:
“வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்”.

இவர்கள் புதிதாக வேதம் எல்லோருக்கு பொது என்று  கதைவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
மூட நம்பிக்கையில் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தம்மை தமிழ் இந்து நம்பிக்கொண்டு இருக்கிறது போலும். சுயமரியாதை இயக்கத்தினரின் எழுதிய புத்தகங்களை பெருச்சாளி போல குடைந்து குடைந்து எங்காவது இவர்களுக்கு சாதகமாக ஏதாவது எழுதிவிடமாட்டர்களா? என்று ஏங்கிய ஏக்கம் நமக்கு புரிகிறது.

“சகோதரர்களே! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்ராயங்கள்தாம் என்று சொல்வதோடு நான் ஒரு சாதரண மனிதன்தான். எவ்விதத் தன்மையும் பொருந்திய தீர்க்கதரிசியல்லன். ஆகையால் தனிமனிதன் என்கிற முறையில்தான் என்னுடைய அபிப்ராயங்களையும் – நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தாம் – எதிலும் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் உரைக்கிறேன். ‘ஒரு பெரியார் உரைத்துவிட்டார்’ என நீங்கள் கருதி அப்படியே கேட்டு நம்பிவிடுவீர்களானால் அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!… யார் உரைப்பதையும் நாம் கேட்டு ‘வேத வாக்கு’ என்று நம்பி நடப்பதால் தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவை உண்மையென்று தோன்றினால் அவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்”
– பெரியார்

இன்னும் சந்திரகிரகணகாலங்களில் பாம்பு நிலவை விழுங்கிவிடுகிறது என்று நம்பிக்கொண்டு அலையும் இந்த மூடநம்பிக்கை கூட்டம் சுயமரியாதை இயக்கத்திற்கே பகுத்தறிவை போதிக்கிறது.  உதாரணமாக சம்பூகனை ராமன் கொலைசெய்ததற்கு காரணம் வர்ணாசிரம கொள்கைகள்தானே? என்று சுயமரியாதை இயக்கத்தினர் கேட்டால் இவர்கள் பொங்கி விடுகிறார்கள்.
உங்களுக்குத்தான் ராமாயணத்தின் மீது நம்பிக்கை இல்லையே ராமன் மீது நம்பிக்கையில்லையே அப்புறம் எதுக்கு ராமாயணம் பத்தி எல்லாம் கேள்வி கேட்குறீங்க? என்று சுயமரியாதைக்காரர்கள் பகுத்தறிவுவாதிகளுக்கு பகுத்தறிவை போதிக்கிறார்கள்.  இவர்களிடம் கொஞ்சமாவது பகுத்தறிவு இருந்தால் இவர்கள் இப்படி எழுதுவதை நாம் கருத்தில் கொள்ளலாம் ஆனால் இவர்கள் மூடநம்பிக்கைகளின் காவலர்களாக இருந்துகொண்டு நமக்கே பகுத்தறிவினை போதிப்பது கிராமத்தில் நடைமுறையில் இருக்கும் ஒரு பழமொழிதான்   நியாபகத்திற்கு வருகிறது.
இவர்களின் தயாரிப்புகள்தான்  தேவநாதன் கருவறைக்குள் செய்தது குறித்து பகுத்தறிவாளர்கள் எழுதினால் “உங்களுத்தான் கோவில் பிடிக்காதே அப்புறம் எதற்கு கோவில் குறித்து கவலை படுகிறீர்கள் என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறார்கள் போலும்.
எதனால் வேதத்தை எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை நாம் சொல்ல கூடாதாம். உங்களுக்கு நம்பிக்கை இல்லையே பிறகு எதற்கு அதை பற்றி பேசுகிறீர்கள் என்கிறார்கள்.

மணியம்மை மனசோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் பெரியார் கூறிய வாசகங்கள் என் மனதில் தோன்றி என் சோர்வை நீக்கி விடுகிறது என்று எழுதியதை ஏதோ புராணக்கதைகளில் வானத்தில் இருந்து ஒலிக்கும் அசரிரீயோடு  ஒப்பிட்டு மணியம்மை அவர்களை மூடநம்பிக்கைவாதி என்று முத்திரை குத்த முயல்கிறார்கள்.

பெரியார் தனது மனைவி நாகம்மையார் இறந்தபொழுது  அங்கே வந்த பெண்களை அழவிடாமல் செய்தார் அதே பெரியார் ராஜாஜி இறந்தபொழுது கண்ணீர்விட்டு அழுதார் பார்த்தீர்களா ஊருக்கு ஒரு நியாயம் பெரியாருக்கு ஒரு நியாயம் என்று தப்பாக அர்த்தம் கற்பிக்கிறது தமிழ் இந்து.

பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் “ஒப்பாரி” என்ற பெயரில் இறந்தவரின் உடலைசுற்றி அமர்ந்து கொண்டு பெண்கள் ஒப்புக்காக அழுவார்கள். அது உண்மையில் அழுவதில்லை வெறும் ஒப்புக்கு அழுவதால்தான் அதன் பெயர் ஒப்பாரி அதனை தடை செய்யவேண்டும் என்று பெரியார் விரும்பினார் நடத்தி காட்டினார். ஒருவரின் பிரிவால் வருந்துவது வேறு பாசங்கிற்காக அழுவது வேறு. இறந்தவீட்டின் இறுக்கமான சூழலை மேலும் இறுக்கமாக்கும் ஒப்பாரியை தடை செய்தததை ஏதோ பெரியார் உறவினர் யார் இறந்தாலும் அழக்கூடாது என்று சொன்னது போல திரித்து எழுதி தனது வன்மத்தை தீர்த்து கொள்கிறது.

இறந்தவர்களின் உடலை சுற்றி மத சடங்குகள் என்ற பெயரில் நடக்கும் அவலங்களைத்தான் பெரியார் கண்டித்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருவரின் பிரிவினால் கண்ணீர் அரும்புவது இயற்கையான ஒன்று அதனை சுயமரியாதை என்றும் தவறு என்று சொல்லவில்லை.

அதாவது பெரியாரின் பிரிவால் மணியம்மை கண்ணீர் சிந்தினாலும் ராஜாஜி இறந்ததும் பெரியார் கண்ணீர் சிந்தினாலும் அது தவறு என்கிறது தமிழ் இந்து. சுயமரியாதைக்காரனுக்கு கண்ணீர் விடுவது கூட மூடநம்பிக்கை என்று புதிதாக நமக்கு பகுத்தறிவு போதிக்கிறது இந்த மூடநம்பிக்கை குழு.

பெரியார் நிகழ்விற்கு மொமரியல் ஹாலில் அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக பெரியார்திடல் நிறுவப்பட்டது அந்த நிகழ்வில் பெரியார் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளித்து இந்த அரங்கை யார் வேண்டுமானாலும் மாற்று கருத்து இருப்பினும் அவர்கள் நிகழ்வை நிகழ்த்த அனுமதிக்கும் படி இந்த திடல் திகழட்டும் என்று பேசினார்.

தமிழ் இந்துவிலிருந்து

ஈ. வே. ராமசாமி நாயக்கர் எவ்வளவு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறார் என்பது புலனாகும். மற்றொன்றையும் யோசிக்கும்போது ஈ. வே. ராமசாமி நாயக்கரே, மூடநம்பிக்கை வளர ஏற்படுத்தித்தந்த இடம்தான் பெரியார் திடல் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய இந்த வழி எப்படி தவறானது என்பதை இப்போது பார்க்கலாம்.

மெமோரியல் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்? இடம் கொடுக்காதவர்களுக்குத்தானே நஷ்டம்! அந்த இடம் இல்லையென்றால் வேறு இடத்தில் நடத்தலாம் அல்லவா? அதைவிட்டுவிட்டு அவர் இடம் தரவில்லை. அதனால் பொது மன்றம் ஒன்றை ஆரம்பித்தேன் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் சொன்னது பகுத்தறிவின் செயலா? அதுவும் கொண்ட கொள்கைக்கு ஆபத்து ஏற்படுவதென்றால் அது வீண்வேலை தானே!

உதாரணமாக ஒன்றை நினைத்துப்பாருங்கள்.

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பேட்டியை ஒரு பத்திரிகை அவர்களின் கொள்கைக்கு முரணாக இருப்பதால் வெளியிடவில்லை என்பதற்காக எல்லோருடைய கொள்கைகளையும் சொல்லும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறேன் என்று  ஈ. வே. ராமசாமி சொல்வாரா?

###################################################

பெரியார் கருத்துகளை பார்பன ஊடகங்கள் இதுவரை வெளியிட்டத்தில்லை அவரது சிந்தனைகளை குடியரசு மூலம்தான் மக்களை அடைந்தது இவர்களுக்கு தெரியாது போலும். எங்களோடு மாற்று கருத்து இருந்தாலும் தைரியமாக எங்கள் திடலை தருகிறோம் நிகழ்வு நடத்தி கொள்ளுங்கள் என்ற தைரியம் பெரியார் தவிர்த்து வேறு யாரிடமும் இருந்ததாக தெரியவில்லை. பார்பன ஏடுகள் முதல் அரங்கங்கள் வரை அவர்கள கொள்கைகைகளோடு ஒத்து போகாதவர்களை புறக்கணிக்கும் சூழலில் மாற்று கருத்தை மதிக்கும் பெரியாரின் உயர்ந்த உள்ளம் இது போன்று பார்பனிய கும்பலிடம் நாம் எதிர்பார்க்க முடியாதுதான்.

பிறமாநிலங்களில் இன்னும் சாதிய பெயர்களை தாங்கிக்கொண்டு நாயர், நாயுடு, கவுடா என்று அலையும் வேளையில் பெயரில் இருக்கும் சாதிய பெயரை விட்டொழித்துள்ளது தமிழ்நாடு அதற்கு முழு காரணம் பெரியாரும் அவரது இயக்கமும். சாதி வெறிபிடித்த பார்பனிய கும்பல் இன்னும் பெரியாரை நாயக்கர் என்று அழைத்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்.

தான் இறக்கும் பொழுது இந்துவாக இருக்கமாட்டேன் என்றும் இந்துமதத்தின் புராண குப்பைகளை அதன் வேத நூல்களின் வாயிலாகவே அம்பலப்படுத்திய அண்ணல் அம்பேத்காரை துணைக்கு அழைக்கிறார்கள் பெரியாரை எதிர்க்க. பெரியாரை எதிர்க்க இவர்கள் அண்ணலை நாடுகிறார்கள் என்றாலே அது பெரியாரை கண்டு இவர்கள் எவ்வளவு நடுங்கி போயிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

சில அறிவிலிகள் பெரியார் எங்களுக்காக உழைக்கவில்லை அவர்களுக்காக உழைக்கவில்லை என்று உளறி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிலை அடுத்த கட்டுரையில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். தமிழ் இந்துவின் முகத்திரை தொடர்ந்து கிழிப்போம்.

Advertisements

மாறன்சகோதரர்களுக்கு சிங்களவர்கள்தான் சோறுபோடுகிறார்களா?

திசெம்பர் 12, 2009 § 2 பின்னூட்டங்கள்

மாறன் சகோதரர்களுக்கு சிங்களவர்கள்தான் சோறுபோடுகிறார்களா?  அல்லது சன் குழுமத்தின் சிங்கள பாசத்தின் காரணம் என்ன?


எல்லாம் என்னுடைய தவறுதான் அதில் துளியும் சந்தேகமில்லை. தமிழ்தொலைக்காட்சிகளின் செய்திகளின் நம்பகத்தன்மை பொய்த்து போய் பலநாட்கள் ஆகிவிட்டது. மக்கள்தொலைக்காட்சியை நாம் நம்பிக்கொண்டு இருந்தாலும் அவர்கள் கூட்டணிதாவும்  மனநிலையில் இருப்பதால் திடீரென்று செம்மொழிமாநாட்டில் கலந்துகொள்வது என்று ராமதாசு அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து யாரைத்தான் நம்புவதோ? என்று தமிழ்தொலைக்காட்சிகளின் செய்திகளை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஆங்கிலதொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருவது வழக்கம்( அங்கென்ன வாழ்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது). தமிழகம் குறித்த செய்திகளை தமிழர்கள் திரித்து சொல்வதைகாட்டிலும் வேறு யாராவது திரித்து சொல்வது அவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுப்பதில்லை என்பதும் காரணம். சன், ஜெயா செய்திகளையெல்லாம் பார்த்து பழகிய நமக்கு வடக்கர்களின் திரிப்பு எல்லாம் பெரியவிடயமா என்ன?

வீட்டுல எப்பபார்த்தாலும் சன் தொலைக்காட்சி இடைவிடாமல் ஓடி கொண்டிருப்பதால் எதிர்பாராத விபத்தாக சன் செய்திகள் பார்க்க நேர்ந்ததை என்ன சொல்லுவது?. சரி நான் பார்த்த ‘அந்த’ செய்தி பத்தி கொஞ்சம் பார்ப்போம்.

இலங்கை வேண்டுகோள்! என்ற தலைப்பில் ஐரோப்பிய யூனியனின் இலங்கைக்கான  வரி சலுகையை விலக்குவதை தவிர்க்குமாறு  சிங்கள அமைச்சர் வேண்டுகோள் விடுத்ததை ஒளிபரப்பியது. இலங்கையில் மனித உரிமைகள் மேம்படுத்தப்படும்(?) என்று இலங்கை உறுதி அளித்துள்ளது என்று திரும்ப திரும்ப செய்தி வாசித்தனர். செய்தியின் போது ஓடும் எழுத்துக்களிலும் இது வந்து கொண்டே இருந்தது. இதை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக எதற்க்காக ஒளிபரப்புகிறார்கள் என்ற சந்தேகத்தை ஒத்தி வைத்துவிட்டு இவனுக என்னதான் சொல்லவரானுங்க என்று தொடர்ந்து செய்திகளை பார்த்து தொலைத்தேன்.

அடுத்ததாக வந்த செய்திகள் இசுரேலில் இருந்து ஆறு  அதிநவீன படகுகள் இலங்கை வாங்கியுள்ளதாகவும் வரும் ஜனவரியில் அவர்களின் எல்லையோர பாதுகாப்புபடையில் சேர்க்க இருப்பதாகவும், இதன் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கபோவதாகவும் அத்தோடு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இதன் மூலம் சிங்களவர்கள் தடுத்து நிறுத்த போவதாகவும் தொடர்ந்து வாசித்து கொண்டு போனார்கள்.

எனக்கு உண்மையிலேயே சந்தேகமாகிப்போனது நான் தமிழ் தொலைக்காட்சிதான் பார்த்து கொண்டு இருக்கிறேனா? சன் தொலைக்காட்சி தமிழகத்தில்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறதா? மாறன் சகோதரர்கள் சிங்களத்தில் ஏதும் தொலைக்காட்சிகள் நடத்துகிறார்களா அப்படி அங்கே போகவேண்டிய செய்தி அறிக்கை தவறாக தமிழ்செய்திகளுக்கு வந்துவிட்டதா? என்றெல்லாம் யோசிச்சுயோசிச்சு தூக்கம் போனதுதான் மிச்சம்.

சிங்களதொலைக்காட்சிகள் கூட இந்தளவிற்கு விசுவாசத்தோடு இருப்பார்களா? என்ற ஐயத்தை நம்மால் தவிர்க்க முடியவில்லை. சன் குழும தொலைக்காட்சிகள் அது செயல்படும் மாநிலத்தை பொறுத்து செய்திகளை திரித்து வெளியிடும் என்ற குற்றச்சாட்டு பலநாட்களாக இருந்து வருகிறது. சிங்களனுக்கு ஆதரவாக தமிழகத்தில் செய்திவாசிக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழகமீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க சிங்களன் அதிநவீன படகு வாங்குகிறான் என்று தமிழகத்தின் தலைநகரில் உற்காந்து கொண்டு செய்தி வாசிக்கும் தைரியம் மாறன் சகோதரகளுக்கு வந்திருக்கிறது.  சிங்களவன் சுட்டு வீழ்த்திய 600  மீனவர்களுக்கு நாம் நியாயம் கேட்கும் வேளையில்  தமிழகத்திலிருந்தே தமிழர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று செய்திகள் வாசிக்கிறார்கள்.

தமிழக எல்லைகளில் திருட்டுத்தனமாக கேரளாவினர் கழிவுகளை கொட்டுவதை தடுக்க தமிழகம் நடவடிக்கை எடுத்தால்( நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும், நமக்கு ஏது அம்புட்டு தைரியம்)  அப்படியே கேராவில் இருக்கும் சன்குழும செய்திகளில் சொல்லிப்பார்க்கட்டும். அதுக்கு அப்புறம் எப்படி சேரநாட்டில் மாறன் பிரதர்ஸ் தொழில் பண்ணுரானுகன்னு பார்ப்போம்.


முரசொலிமாறன்  என்னும் திராவிடபோராளி பெற்றெடுத்த பிள்ளைகள் ராமாயண, மகாபாரத தொடர்களை ஒளிபரப்பி திராவிட சேவைசெய்தது போதாதென்று இன்று சிங்களனுக்காக செய்தி வாசித்து தமிழ்-சேவையை ஆரம்பித்து விட்டார்கள் போலும்.  சன்-குழுமம் இன்று பலதிசைகளில் வேர் பரப்பி இருந்தாலும் முதலில் தமிழ் நாட்டில் “சன் டிவியின் தமிழ் மாலை” என்று மாலை நேரங்களில் மட்டும் ஒளிபரப்பை ஆரம்பித்து தமிழர்களின் ஆதரவால் முழுநேரம் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சிகளை நடத்தி கொண்டிருக்கின்றனர். முழுநேரமாக ஒளிப்பரப்பினாலும் பழைய நியாபகத்தில் “சன் டிவியின் தமிழ் மாலை” என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தங்களை வளர்த்து விட்டதற்கு விசுவாசம் காட்ட தமிழர்களின் மார்பில் பாய்ந்து இருக்கிறார்கள் போலும்.இவர்களின் குடும்பத்திற்கு இடையிலான அதிகாரபோட்டியில்  தினகரன் ஊழியர்கள் மூன்றுபேர் இறந்ததையே தங்கள் ஆதாயத்திற்காக பயபடுத்திகொண்டவர்கள் இவர்களிடம் தமிழகமீனவர்களை பற்றி  நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதும் நாம் அறிந்ததே. இப்படியே போனால் தமிழ்நாட்டில் மேலும் ஒரு சிங்கள ரத்னா கிடைத்து விடுவார் என்பதில் ஐயமில்லை. செம்மொழி மாநாட்டிலேயே அந்த விருதினை தமிழினதலைவர் கையினால் மாறன்களுக்கு கையளிக்கப்பட்டாலும் நாம் ஆச்சரியப்பட போவதில்லை.

பெரியாருக்கு எதிராக புழுதி வீசும் தமிழ் இந்து!

திசெம்பர் 11, 2009 § 27 பின்னூட்டங்கள்

பெரியாருக்கு எதிராக புழுதி வீசும் தமிழ் இந்து!

தமிழ் இந்து “தமிழர்களின்  தாய் மதம்” என்ற அடைமொழியுடன் பெரியாரை நோக்கி அவதூறு கிளப்பபுறப்பட்டு இருக்கிறது பார்ப்பன கும்பல் ஒன்று.  வழமையாக இவர்கள் பெரியாரை நோக்கி அவதூறு கிளப்புபவர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்தமுறை பெரியாரின் நூல்களில் இருந்து பல செய்திகளை எடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளை வெட்டி பெரியாரின் வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்க புறப்பட்டு இருக்கிறார்கள். பெரியாருக்கு எதிரான இந்துமத பூசாரிகளுக்கும், வலதுசாரி தமிழ்தேசியம் பேசும் சில போலிதமிழ்தேசியவாதிகளுக்கும் இவர்கள் பெரியார்வாதிகளுக்கு எதிராக ஆயுதம் தயாரித்துதரும் வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் பெரியார் குறித்து வைக்கும் குற்றசாட்டுகளுக்கு பெரியார்வாதிகள் யாரேனும் கண்டிப்பாக பதில் கூறுவார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை காத்திருந்தேன். தமிழ் ஓவியா போன்ற பெரியார்வாதிகள் எதிர்வினை ஆற்றி வருவது ஆறுதல் அளிக்கிறது. மதிமாறன் இதுபற்றி எழுதினால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்தாக இருந்து வந்தது. சமீப காலமாக மதிமாறன் வேறுதிசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் என்று தோன்றுகிறது. தமிழ் இந்துவில் ஆயுள்கால சந்தாதாரராக செயல்படும் திருச்சிக்காரன் மதிமாறன் வலைப்பூவை குத்தகைக்கு எடுத்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.பெரியாரும் அண்ணாவும் இணைந்து கொள்ளை அடித்துவிட்டு அதனை பகிர்ந்து கொள்ள சினிமா பாணியில் சண்டை பிடித்தனர் என்று கருத்து தெரிவித்த திரிச்சிகாரர்  இப்பொழுதுதான் மதிமாறன் சரியான திசையில் பயணிப்பதாக பாராட்டு பத்திரம் வாசிக்கிறார். மதிமாறன் அளவிற்கு நான் ஒன்று பெரிய ஆய்வாளன் அல்ல நேற்று எழுத துவங்கிய சின்னப்பயலாக நான் இருந்தபொழுதும் பெரியாரை நேசிப்பவன் என்ற முறையில் தமிழ் இந்துவிற்கு பதில் சொல்லும் கடமை எனக்கும் உள்ளது  என்பதால் எனது எதிர்வினையை பதிவு செய்கிறேன்.

தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

என்ற தலைப்பில் பெரியாரை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானவர் என்று நிறுவ முயன்று இருக்கிறார்கள்.  காந்தி சூத்திரர்கள் போலவே பஞ்சமர்களும் கோவிலுக்குள் செல்லும் உரிமை உள்ளது என்று கூறியபொழுது பெரியார் இவ்வாறு கூறினார் “நடுநிலைசாதியான சூத்திரர்கள் கிழே இறங்கி கடைநிலைசாதியான பஞ்சமர்களோடு சேரலாம் என்று காந்தியாரின் கூற்று இருக்கிறது . சூத்திரர்கள் ஏற்கனவே இருந்தநிலையில் இருந்து ஒருபடி கிழே இறங்கலாம் ஆனால் பார்பனர்கள் அப்படியே இருக்க வேண்டும். இது பார்ப்பனர்களின் மனுதர்மத்தை காப்பதாக இருக்கிறது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டும். காந்தியாரின் பேச்சு வர்க்க வேறுபாடுகளை களைவதாக இல்லாமல். வர்க்க வேறுபாடுகளை காப்பதாகவே இருக்கிறது. “

காந்தியின் அறிவித்த கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களும் செல்லலாம் என்ற அறிவிப்பு பார்ப்பனர்களின் நிலையை காப்பதோடு வர்ணாசிரம சித்தாந்தங்களை காப்பதுமாக இருக்கிறது என்பதே பெரியாரின் கருத்து.

இதனை இவர்கள் இவ்வாறு திரித்து எழுதி இருக்கிறார்கள்.

தமிழ் இந்துவிலிருந்து:

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று

/////////////////

இங்கே பார்பனர்கள் அப்படியே இருப்பார்கள் என்று பெரியார் கூறியதை வெட்டி வீசிவிட்டு பெரியார் சாதிய அபிமானி என்று போலி ஆவணம் தயாரித்து இருப்பது அம்பலமாகிறது.

பெரியார் தாழ்த்தப்பட்டோர் படித்து வருவதால்தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது என்று சொன்னதாகவும் தாழப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால் பருத்தி பஞ்சம் ஏற்படுவதுவாக கூறினார் என்று கற்பனைக்கு எட்டாத புனைவுகளை எடுத்து வைக்கிறார்கள்.
தமிழ் இந்துவிலிருந்து:


அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை

//////////////////////////////

திராவிடர் கழகம் தெளிவு படுத்தாவிட்டால் என்ன? இவர்களின் கற்பனைத்திறன் நமக்கு தெளிவாகிவிடுகிறது. வர்ணாசிரம கொள்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார் பெரியார் என்பது சிறுவர்களுக்கும் தெரியும் அப்படி இருக்க இந்த அறிவாளிகளுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான்

மனுதர்மத்தினை போதித்த பகவான் ஹரியையே செருப்பால் அடித்த பெரியார். அந்த மனுதர்மவாதிகளின் கூற்றை நம்பி தாழ்த்தப்பட்டவர் பத்தி அவதூறு செய்தார் என்பவர்களை செருப்பால் அடிப்பது போன்று பெரியார் பேசியதை கவனிக்கவும்.

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

———- தந்தைபெரியார்- நூல்: “சிந்தனையும் பகுத்தறிவும்”————-

அப்படியே போகும்போக்கில் பெரியார் பார்பனர்களை மட்டுமே எதிர்த்தார் ஆதிக்கசாதியினரை எதிர்த்தாரா? முதுகுளத்தூர் கலவரம் பத்தி பேசினாரா என்று சில போலி தலித்போராளிகளின் குரலை கடனுக்கு வாங்கி இந்த பார்ப்பன பகதர்கள் நமக்கு எதிராக கேள்வியினை முன்வைக்கிறார்கள்.

முதுகுளத்தூர் கலவரம் குறித்து பேசிய ஒரே தலைவன் பெரியார் என்பது அந்த அறிவாளிகளுக்கு தெரியாமல் போய்விட்டது போலும். . முதுகுளத்தூர் கலவரம் அடங்க ஒரேவழி முத்துராமலிங்கத்தை கைது செய்வதுதான் என்றும். பக்வத்சலத்தின் அறிக்கை மிகத்தெளிவாக இருக்கிறது அதன்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறிய தலைவன் பெரியார் என்பது பெரியவாள் பக்தர்களுக்கு தெரியவில்லை என்பது நம்பும்படியாக இல்லையே.

அப்படியே இந்த மனுதர்மவாதிகள் அம்பேத்காரை பெரியார் அவதூறு செய்தார் என்று அள்ளிவீசுகிறார்கள். இந்துமதத்தை அதன் வேதநூல்களின் வாயிலாகவே அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கார் என்பதை இவர்கள் வசதிக்காம மறைக்க முயல்கிறார்கள். இந்துவாதிகளின் திடீர் அம்பேத்கார்பாசம் நமக்கு விந்தையாக இருக்கிறது. எனது தலைவர் என்று அம்பேத்காரை பெரியார் கொண்டாடியதை இவர்கள் எவ்வளவு முயன்றாலும் மறைக்க முடியுமா என்ன? அம்பேத்காரை இவர்கள் பெரியார் எதிர்ப்பிற்கு கருவியாக நிறுவமுயல்வது இங்கே அம்பலப்பட்டு போய்விடுகிறது.

தமிழ் இந்துவின் பொய்பிரச்சாரத்தை முறியடிக்க தொடர்ந்து எழுதுவோம்………

தமிழன் நாதியற்ற இனமா?

திசெம்பர் 3, 2009 § 7 பின்னூட்டங்கள்

“முல்லைபெரியாரில் அணைகட்ட ஆய்வினை மேற்கொள்ள காங்கிரசு அரசு அனுமதி வழங்கியதால் குடிமூழ்கி போய்விடவில்லை!” என்று அறிக்கை வாசிக்கிறார் தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு தலைவர்.  தமிழகமீனவர்களை சிங்களவன் சுடவில்லை மீனவர்கள் பிரச்சனை குறித்து தொடர்ந்து பேசுகிறோம் என்கிறார் தமிழகத்தில் பிறந்த காங்கிரசு மத்தியமைச்சர்.  தமிழகத்தின் எல்லைபகுதியில் துவங்கப்பட்ட குடிநீர் திட்டத்தை கர்நாடகாவின் தேர்தல் முடியும்வரை ஒத்திவையுங்கள் என்று தமிழக முதல்வருக்கு உத்தரவிடுகிறார் காங்கிரசு தலைவி. இதுவரை ஒகேனக்கல் குடிநீர் திட்டம் என்னவானது என்று தெரியவில்லை.

மேலே கூறிய அனைத்து விடயமும் காங்கிரசு கட்சி சமீபத்தில் தமிழகத்தில் நடத்திகாட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு பாதகமான நிகழ்வுகள். இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழகத்தில் எல்லையில்  இருந்த கச்சத்தீவை  தமிழனின் இனப்பகைவனான சிங்களவனிடம் காங்கிரசு தாரை வார்த்தது பழைய வரலாறு. அந்த வரலாறில் முல்லைபெரியாரும் ஒகேனக்கலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் இப்பொழுது உருவாகி இருக்கிறது.தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழர்களின் ஓட்டுகளை பெற்றுகொண்டு தமிழர்களுக்கே எதிராக காங்கிரசு கட்சி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. காங்கிரசு காலால் இட்டதை தலையால் முடிக்கும் தலைமையிலான அரசு தமிழகத்தில் வாய்க்கப்பட்டிருக்கிறது. தமிழனும் சுய உணர்வற்று அந்த காங்கிரசு கட்சிக்கு காலம்காலமாக வாக்களித்துவிட்டு தனது உரிமைகளை இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறான். தமிழகதமிழன்  நிலை இதுவென்றால்  ஈழத்தமிழன் நிலை என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழன் இன்று அகதி முகாம்களில் கண்ணீரோடு உலகநாடுகளுக்கு கருணை மனு நீட்டுகிறான். ஈழத்தமிழன் அழிவிற்கும் இன்று அனுபவிக்கும்  துயரத்திற்கும்  முழுப்பொறுப்பு காங்கிரசு கட்சியே.

நமது அண்டை மாநிலங்களில் வேறெங்கும் இல்லாதா அளவிற்கு தமிழகத்தில் தமிழன் என்று உணர்வு சிறிதும் இல்லாதவர்களாக காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்கள். அந்த காங்கிரசின் ஆதரவோடு கொள்ளை அடித்து அதிகாரத்தை அனுபவிக்க துடிப்பவர்களாகவே திராவிடத்தை தங்கள் கட்சியின் பெயரில் தாங்கியவர்கள் இருக்கிறார்கள.

உலகில் வேறு எந்த மூலையிலும் இல்லாத அளவிற்கு மீனவர்கள் அண்டை நாட்டு கப்பல்படையால் சுடப்படுவது அதிகமாக இந்தியாவில் நமது  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆடைகளை அவிழ்த்தார்கள், அடித்து உதைத்தார்கள், வலையை அறுத்தார்கள், படகை சேதப்படுத்தினார்கள் என்று மீனவர்கள் கூறும் குற்றச்சாட்டு அதிகமாக இருந்தாலும் அவனுக்காக குரல்கொடுக்க எவனுமில்லை என்பதால் மீனவர்கள் சோகம் தொடர்கதையாகிகொண்டே போகிறது. தமிழகமீனவர்கள் 600 பேர் படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதுவரை ஒரு வழக்கை கூட சிங்களவன் சுட்டு தமிழக மீனவன் செத்தான் என்று பதிவு செய்யாத காவல்துறையாக தமிழககாவல்துறை இருக்கிறது. 600 மீனவர்களும் விபத்தில் இறந்துவிட்டார்கள் என்று பொய்வழக்கு போட்டு சட்டம் தன்கடமையை செய்துள்ளது.

காங்கிரசுகட்சி தமிழின அழிப்பில் மிக உறுதியாக இருப்பது தெளிவாகிறது. திராவிடகட்சிகள் காங்கிரசுக்கு காவடி தூக்குவதை நிறுத்துவதாக தெரியவில்லை. “தமிழ அரசியல்வாதிகளை கோமாளிகள்” என்று வர்ணித்த பொன்சேகாவின் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் உண்மையை நாம் இன்னும் விளங்கி கொள்ளவில்லை.

ஈழத்தில் செத்துவிழுந்த ஆயிமாயிரம் தமிழர்களின் புகைப்படங்களை தமிழகவீதிகளில் வைத்து பாருங்கள்அதில் உறுப்புகளை இழந்து செத்து விழுந்த சிறுவர் சிறுமிகளை பற்றியோ உயிரிழந்த தமிழர்கள் பற்றியோ சிறிதும் கவலை இல்லாது.
அதில் எங்காவது பிரபாகரன் படம் தெரிகிறதா? புலி கொடி தெரிகிறதா என்று உத்துபார்த்து உடனே அதனை அகற்று என்று ஆரம்பித்து விடுகிறார்கள் காங்கிரசு புண்ணியவான்கள்.

ராணுவவாகனங்கள் தாக்குதல், இலங்கை தூதரகத்தாக்குதல், இளங்கோவன் வீடு தாக்குதல் என்று தொடர்ச்சியாக தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடி விளையாடும் காவல்துறை. தா.பாண்டியன் மற்றும்  சீமான் காரை எரித்தவர்கள் பாரதிராசா அலுவலகத்தை தாக்கியவர்கள் என்று எவரையும் கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் தமிழனுக்கத்தான் பாதுகாப்பில்லை .தாயகதமிழன் மெளனசாட்சியாக   கொன்றழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் நிலை தாயகதமிழனுக்கும் வரும்நிலை வெகுதொலைவில் இல்லை. காங்கிரசு பேரியக்கம் தமிழக மண்ணில் துடைத்து எறியப்படும் வரையில் தமிழனின் கண்ணீரை துடைக்கும் வழி பிறக்க போவதில்லை. நீர்த்து போன திராவிட இயக்கங்களை தமிழன் வீழ்த்தும் நாளே தமிழனின் விடியலுக்கான துவக்கம்.

லண்டனில் செத்த தமிழன் உடலை மீட்க இந்தியா உதவவில்லை என்று அனைவரும் அலறி கொண்டிருக்கிறோம். இதில் நாம் அதிர்ச்சி அடைய ஏதும் இருப்பதாக தெரியவில்லை. தமிழன் எங்கே செத்து விழுந்தாலும் அங்கே முதலில் மகிழ்ச்சி அடையவது இந்தியாவின் அதிகார மையம்தான்.   இந்தியகடல்  எல்லையில் செத்துவிழும் தமிழனாக இருக்கட்டும் அல்லது எங்கோ உலகின் ஒரு மூலையில் தமிழன் செத்து விழுந்திருந்தாலும் அதில் சிறிதும் கவலை கொள்ளாத திராவிடகட்சிகளும்  காங்கிரசு கட்சியும் தமிழனின் முதல் எதிரி என்பதை இன்னும் உணராத இனமாக தம்ழினம் இருக்கும்வரை நாதியற்ற இனம்தான் தமிழினம்.

ராஜ்தாக்கரேக்கள் உணர்த்தும் உண்மை!

திசெம்பர் 1, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

ராஜ் தாக்கரேக்கள் உணர்த்தும் உண்மை!


பீகார் மாணவர்கள் தேர்வு எழுத மும்பை சென்றபொழுது மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா தாக்குதல் நிகழ்த்திய பொழுது உலகத்தமிழ்மக்கள் அரங்கத்தில் எழுதியது. இன்னும் இந்த சூழல் மாறவில்லை. அப்பொழுது இந்தியதேசியத்தின் மீது சிறிதளவு நம்பிக்கை இருந்த காலம்.  மாகராட்டிரத்தில் அமுக்கி வாசிக்கும் இந்திய இறையாண்மை தமிழகம் வந்தால் தவ்வி குதிக்கும். நாங்கள் கேட்பது தமிழன் என்ற உணர்வு வரவேண்டும் என்பதே அன்றி இதுபோல்  இனவெறிவேண்டும் என்று அல்ல.நான் இப்பொழுது கூட  உணர்வுக்கு ஆதவாளன் வெறிக்கு எதிரானவன்.  காலத்தின் அவசியம் கருதி மீள்பதிவு இடுகிறேன்.

ராஜ் தாக்கரேக்கள் உணர்த்தும் உண்மை! 

ராஜ் தாக்கரே தானது அரசியல் வளர்ச்சிக்காக தனது கையில் எடுத்து இருப்பது மாநிலவெறி. சுருக்கமாக சொன்னால் மண்ணின் மைந்தன் கோசம். பால்தாக்கரே எனும் அரசியல் சகுனியிடம் நேரடி பயிற்சி பெற்று இன்று களத்தில் தனது குருவை மிஞ்சும் விதமாக வேற்று மாநிலத்தவர் மீது கசப்பு உணர்வை விதைத்து அதன் மூலம் அரசியல் லாபங்களை அறுவடை பண்ண முயலும் ராஜ் தாக்கரே இந்தியாவின் அபாயகரமான சக்தியாக பார்க்கபடுவது உண்மை. பால்தாக்கரே போன்றவர்கள் செய்த அடாவடி அரசியலை ஒடுக்கிடாமல் எங்கே ஓட்டு வங்கி போயிடுமே என்று மத்திய அரசுகள் காட்டிய அலட்சியம்தான் இன்று ஒரு மாநிலத்தவன் பிறமாநில வெறியர்களால் தாக்கபடுவதற்கு முக்கிய காரணம். பால்தாக்கரே அடைந்த ஆதயங்கள் இன்று ராஜ் தாக்கரேக்களை அதே பாதைக்கு இட்டு செல்கிறது. இப்படியாவது இந்தியமீடியாக்களின் கவனத்தையும் மகராஷ்டிர மக்களின் ஓட்டுக்களையும் குறிவைத்து இவர்கள் நடத்தும் அத்துமீறல்களில் அதிகம் பாதிக்கப்படுவது சாமானியமக்கள் என்பதே வருத்தத்திற்குரிய உண்மை. பொது இடத்தில் குண்டு வைப்பவனை விட ராஜ்தாக்கரேக்கள் மிகவும் ஆபாயகரமானவர்கள். பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் செய்யும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் கைது ஜாமீன், விடுதலை என்று மென்மையான போக்கையே இந்த மத்திய அரசு எடுக்கும் காரணம் ஓட்டு அரசியல்.

ராஜ் தாக்கரேக்கள் போக்கு காட்டும் உண்மை இதுதான் மாநிலவெறியை மூட்டிவிட்டு இனி அரசியல் செய்யவேண்டிய கட்டாயத்தில் இந்திய அரசியல் இருக்கிறது. பால்தாக்கரே முதன்முதலில் அரசியல் வளர்ச்சிக்காக தாக்க துவங்கியது மும்பை வாழ் தமிழனைத்தான். அப்போது இந்தியாவில் வாழும் எந்த ஒரு மாநிலத்தவரும் சிறு எதிர்ப்பு குரல் எழுப்பாததும் மகாராஷ்டிர ஓட்டுவங்கி சிவசேனையை நோக்கி திரும்பிய பின்னர் மெல்லமாக தங்களது எதிர்ப்பை சிறுபான்மை மக்களுக்கு எதிராக மாற்றி கொண்டது பால்தாக்கரே கும்பல். அரசியலிலும் பெரும் வளர்ச்சியை அடைந்தது.

இந்தியாவெங்கும் புதிதாக முளைத்து இருக்கும் அரசியல் கலாச்சாரமே இதுதான். சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை விதைத்து பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று அரசியல் செய்வது. சிறுபான்மை என்பதை சூழல் பொறுத்து தேர்வு செய்கிறார்கள். அது மதமாகவோ மொழியாவாகவோ சாதியாகவோ இருக்கலாம். பெரும்பான்மையினரை உசுப்பேத்தி விட்டு சிறுபான்மையினரை அச்சத்தில் வைப்பது. இந்த தந்திரத்தின் சூத்திரதாரி வேறு யாரும் அல்ல மறைந்த ‘உன்னத’ தலைவர் ஹிட்லர் தான். எப்படி யூதர்கள் மீதான வெறுப்பின் மூலம் ஜெர்மானிய அதிகாரத்தின் உச்சத்தை அடைந்தாரோ அதுபோலே இந்தியாவில் நடத்தி காட்டிட மாநிலங்கள் தோறும் ராஜ்தாக்கரேக்களும் வட்டாள் நாகராஜ்களும் உறுதி பூண்டிருப்பதை உணர முடிகிறது. இனிவரும் பாரதம் இவர்கள் கையில் என்பதே இவர்களுக்கான ஆதரவின் வெளிப்பாடு. நடுவண் அரசு இவர்களை நசுக்குவதற்கு பதிலாக ஒரு அற்புதமான நாடகத்தை நடத்திகாட்டும். சிறுபான்மையினத்தின் காவலர்களாகவும் அதே சமயத்தில் பெரும்பான்மை இனத்தின் ஓட்டு வங்கியை குளிர்விக்கும் விதமாகவும் இரட்டை வேடம் போட்டு. அவர்களால் முடிந்த அரசியலை அவர்கள் நடத்தி காட்டுவார்கள். ராஜதாக்கரேக்களுக்கு ஜெயில் செல்வதுகூட அவர்கள் வருங்காலத்தில் அடையப்போகும் வெற்றியை உறுதி படுத்துவதாக அமையுமே தவிர சிறிதேனும் மாநிலவெறியை தணிக்காது.

வேற்றுமையில் ஒற்றுமை என்னும் இந்திய தேசியத்தின் மூல மந்திரம் முடக்கி விட்டதாகவே தெரிகிறது. இந்தியன் என்ற உணர்வு அற்று கிடப்பதுதான் இந்த தேசத்தின் பலவீனம்.இந்த தேசம் நூறு கோடி மக்களுக்கான தேசம் இதில் உயர்வு தாழ்வு இல்லாமல் அனைவரும் சமமாக பார்க்க கூடிய மக்கள் அரசு தேவை. பெரும்பான்மை சிறுபான்மை கோசங்கள் இல்லாமல் எல்லோரும் சமம் என்பதை நாம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். இங்கு ஒரு மாநிலத்தவன் பிற மாநிலத்தவனை தாக்கினால் குரல் கொடுக்க ஒருவனும் இல்லை. தாக்குவதும் இந்தியன் தாக்கப்படுவதும் இந்தியன் என்பதால் அமைதியாக இருந்து விடுகிறோம் போல! ஆனால் பாதிக்கப்படுவது இந்திய உணர்வு என்பதை நான் உணராமல் போய் விடுகிறோம்(தமிழக மீனவனை சிங்களவன் தாக்கினால் கண்டுகொள்ள கூடாது என்பது இந்தியாவின் கொள்கைகளில் ஒன்று). வேலை இன்மையாலும் தவறான வழிகாட்டுதலாலும் தீவிரவாதியாகும் மனிதர்களுக்கு பொடா போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்கும் இந்திய அரசு ராஜதாக்கிரே போன்ற மனநோய் கும்பல் இந்த தேசத்தின் எதிர்காலத்தை இருண்டகாலம் ஆக்க முயலும் போது தூங்கி கொண்டிராமல் கடுமையான சட்டங்கள் மூலம் ஒடுக்க வேண்டும்.

ஈழ தமிழனுக்கு நாம் தார்மீக ஆதரவு கொடுக்கும் போது குறுக்கேவரும் இந்திய இறையாண்மை இது போன்ற தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருப்பதுதான் விந்தை. இது போன்ற சூழல்களில் ஒருவனும் இந்திய இறையாண்மை என்று வாய் திறப்பதில்லை. வெளிநாட்டு சதிகள் என்று கதைகள் விட்டு இங்கே தேசபக்தியை வளர்ப்பதை ஓரம் கட்டிவிட்டு உள்நாட்டு சதிகளை முறியடிக்க இந்த தேசம் முன்வரவேண்டும்.

Where Am I?

You are currently viewing the archives for திசெம்பர், 2009 at தமிழன்பன் பக்கம்.