ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானது!

ஜனவரி 27, 2010 § 6 பின்னூட்டங்கள்

ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானதே!


ஜெயமோகன் குறித்து நான் சொல்வதற்கு முன்பே பலருக்கு அவரது எழுத்தின் தரம் என்னவென்று தெரிந்திருக்கும். சமீபத்தில் ஓர்குட் விவாதத்தில் வைக்கம் குறித்த ஜெயமோகனின் உளறல்களுக்கு பதில் அளிக்கவேண்டியதன் பொருட்டு ஜெயமோகனின் வலைப்பூவை வாசிக்க நேர்ந்தது.  வைக்கம் போராட்டம் குறித்து நாம் இதுவரை கேள்விப்பட்டிராத கோணத்தில் தனது கற்பனை தட்டிவிட்டதோடு பெரியார் மீதான தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வைக்கம் போராட்டம் குறித்து எழுதிய காந்தி பெரியார் என்ற மனிதரே இல்லாமல் பார்த்துக்கொண்டார் இப்பொழுது தன்னை காந்தியின் பக்தர் என்று காட்டிக்கொள்ள முயலும் ஜெயமோகனோ பெரியாருக்கு வைக்கம் போராட்டத்தில் பெரிதாய் பங்கில்லை என்ற கருத்தாக்கத்தை உருவாக்க முயல்கிறார்.  பொதுவாக தாழ்ந்தசாதி என்று அழைக்க கூடாது தாழ்த்தப்பட்டசாதி என்று அழைக்கவேண்டும் என்று காலம்காலமாக கூறப்பட்டு வந்தாலும் ஈழவர்களை தாழ்ந்தசாதி என்று கட்டுரையின் பல இடங்களில் எழுதி தனது வன்மத்தையும் தான் யார் என்பதையும் நமக்கு விளக்கி இருக்கிறார்.

அதாவது ஜெயமோகன் எப்போது பதிவு போட்டாலும் நேரடியாக அந்தப்பிரச்சனைக்குள் போகாமல் சுத்தி வளைத்து அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா பெரியார் எப்படி தெரியுமா? என்றெல்லாம் அவரை பின்பற்றும் ஆட்டுமந்தைகளை சுற்றவிட்டு பின்னால் மெதுவாக பூனையை வெளியே எடுப்பார்.

அன்று நிறையப்பேர் போராடினார்கள் பலபேர் சிறைசென்றார்கள் அப்படி சிறை சென்றவர்களில் பெரியார் தனது மனைவியோடு கைதானார்அவ்வளவுதான் பெரியாரின் வைக்கம் போராட்டத்தில் பங்கு அப்பொழுது அவருக்கு வயது வெறும் 45 தான் அப்போது அவர் அவ்வளவு பிரபலம் இல்லை பின்னாளில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து செல்வாக்கு பெற்றார் அப்படின்னு தனது வழமையான அரைவேக்காட்டுத்தனத்தை முன்வைத்தால் உடனே அவரது வாசகர்களான செம்மறியாடுகள் தே’மே’ என்று பின்னால் செல்லும்.

பெரியார் தனது மனைவியோடு போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானாராம். இதைவிட இந்த ஜெயமோகனை நாம் எப்படி அம்பலப்படுத்துவது?. பெரியார் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து எழுச்சிகுறையாமல் நடத்தினார்கள்  என்பது வரலாற்று உண்மை.

வைக்கம் வீரர் என்று பெரியார் தன்னைத்தானே அழைத்து கொண்டது போலே ஜெயமோகன் ரெம்பவும் கவலை கொண்டிருக்கிறார். வைக்கம்வீரர் என்று திருவிக அவர்கள் பெரியாருக்கு பட்டம் வழங்கியதும் ஆனால் பெரியார் எப்பொழுதும் தன்னை வைக்கம்வீரர் என்று அழைத்து கொண்டதில்லை என்பதையும் நாம் இங்கே காணவேண்டும்.வெறும் கடிதத்தின் மூலம் மட்டுமே ஆதரவு வழங்கிய காந்தியை முன்னிறுத்தி. நேரடியாக களத்தில் இறங்கி போராடி சிறைசென்று தனது குடும்ப பெண்களை போராட்டத்தில் ஈடுபடும்படி செய்த பெரியாரைவிட சூத்திரர் போலே பஞ்சமரும் கோவிலுக்குள் செல்லலாம் என்று அறிக்கைவிட்ட காந்தியை முன்னிறுத்துவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று சிந்தியுங்கள்.

வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்ள பெரியார் கேரளா சென்றபொழுது மன்னர் பெரியாரை வரவேற்று அரசு விருந்தினாராக அழைத்த பொழுது தான் போராட வந்திருப்பதால் தன்னால் விருந்தினராக இருக்க முடியாது என்று பெரியார் தெரிவித்ததோடு தீண்டாமைக்கு எதிராக போராடி சிறை சென்றார் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

ஜெயமோகனின் லூசுத்தனத்தில் உச்சகட்டம் என்னவென்றால் வைக்கம் வீரர் பெரியார் என்றால் கேரளாவில் சிரிக்கிறார்களாம். உங்களை எழுத்தாளர் என்றால் கேரளாவில்  என்ன செய்கிறார்கள் நீங்கள்தான் சொல்லவேண்டும். 1965 பெரியார் கேரளாவிற்கு அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டார் என்பது ஜெயமோகனுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே.

காந்தி பற்றி நம்மிடம் பல விமர்சனங்கள் உள்ளன ஆனால் காந்தியை பெரியாரோடு ஒப்பிட்டு பெரியார் எல்லாம் ஒண்ணுமில்லை தெரியுமா காந்திதான் பெரியாளு தெரியுமா என்கிறார். காந்தி வரலாற்று நாயகன் அந்த வரலாற்று நாயகன் வாழ்ந்த காலத்தில் பலகுரல்கள் எழுந்தன அப்படி எழுந்த குரல்களில் ஒன்று பெரியார் அவ்வளவே அவர் ஒன்றும் மாபெரும் மக்கள் தலைவர் அல்ல என்பதே ஜெயமோகனின் கருத்தாக்கம். பெரியார் ஒற்றை குரலாக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இருந்தார்.புரட்சி என்பது எல்லாவற்றையும் புரட்டி போடுவது. மனிதனுக்கு சுயமரியாதையும் பகுத்தறிவையும் போதிப்பது. பெரியார் தான்வாழும் காலம் முழுவதும் புரட்சியாளனாக இருந்தார். சாதியின் பெயரால் கட்டமைக்கப்படும் தீண்டாமையை எதிர்த்தார். சாதி ஒழியவேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்து போராடிய தலைவர் பெரியார். காந்தியார் வர்ணாசிரம கொள்கைகளை ஆதரித்தார். ஒருவன் தனது குலத்தொழில் செய்வதன் பொருட்டு மேன்மை அடையலாம் என்றார் காந்தி அது தவறு என்று பெரியார் தொடர்ந்து முழங்கினார்.

மேலும் காந்தியை எதிர்த்த பெரியார் காந்தி கொல்லப்பட்ட பொழுது இந்த தேசத்தை காந்திதேசம் என்று அறிவியுங்கள் என்றார் இதன் மூலம் பெரியார் கொள்கைகளில் உறுதியில்லாத மனிதர் என்கிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் மேதாவித்தனம் இப்படி இருக்கிறது காந்தி தன்வாழ் முழுவதும் பார்பனர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் ஒருவேளை காந்தி அதைமீறினால் கொல்லப்படுவார் என்று பெரியார் சுட்டிக்காட்டி வந்தார். பார்பனர்களாலேயே  காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபொழுது கொலை செய்த பார்பனர்களை தண்டிக்கும் விதமாகவே இந்த தேசத்தின் பெயரை காந்தியதேசம் என்று வையுங்கள் அப்பொழுதாவது பார்பனர்கள் விதைத்த சாதியை ஒழியுங்கள் என்கிறார் பெரியார். பின்னாளில் ராஜாஜி  , “சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்’ என்று மதுரையில் பேசியதை கண்டு சாதியை ஒழிக்காவிட்டால் காந்தி படத்தை எரிப்போம் என்கிறார்.  காந்தின் பெயரை சொல்லி அரசியல் நடத்துகிறாய் அந்த காந்தியின் படத்தை எரிப்பது கண்டாவது சொரணை வந்து சாதியை ஒழிக்க வழியைப்பார் என்கிறார்.

பெரியாரின் நோக்கம் யார் மகாத்மா அல்லது யாரை மக்கள் அதிகம் பின்பற்றுகிறார்கள் என்று வெங்காயம் உரிப்பதில்லை. பெரியாரின் நோக்கம் சாதி ஒழியவேண்டும். ஏற்றத்தாழ்வுகள் நீங்கவேண்டும் என்பதே என்பதை ஜெயமோகன் போன்ற இலக்கிய புண்ணாக்குகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான்.  இப்படியாக ஜெயமோகன் ஏதோவொரு இலக்கு நோக்கி எழுதிகொண்டிருக்கிறார். இவரை பின்பற்றும் செம்மறியாட்டு கூட்டத்திற்கு இவர்காட்டும் வழி கசாப்புகடையில் சென்று முடிவடையும் என்று தெரிவதில்லை.

பழைய தமிழ் திரைப்படங்களில் லூசுமோகன் என்ற நகைச்சுவை நடிகரை பார்த்திருப்பீர்கள். கண்களை சிமிட்டி கொண்டு குடிகாரர் போன்று சென்னை மொழியோடும் வித்தியாசமான உடல்மொழியோடும் நடித்து சிரிப்பு மூட்டுவார்(அவரை ஏன் லூசுமோகன் என்று அழைக்கிறார்கள் என்று தெளிவாக தெரியவில்லை). குப்பத்து மொழியை அருமையாக உச்சரிப்பார் பாதி வசனம் போசிமுடிப்பதற்குள் மயங்கி சரிந்து விடுபவராக வருவார். பிறரை பேமானி கஸ்மாலம் என்று திட்டுவார் தற்போதைய நகைச்சுவைநடிகர்கள் போன்று “சண்டாளா!” என்ற சாதி வன்மம் நிறைந்த சொற்களை லூசுமோகன் பேசியதாக நியாபகமில்லை.  தனக்கென தனியான நகைச்சுவையோட்டமோ, கதையில் லூசுமோகனுக்கென்று தனிமுக்கியத்துவமோ கொடுக்கப்படாவிட்டாலும். அவரது நகைச்சுவைக்காட்சிகள் பார்பவர்கள் சில நிமிடங்கள் சிரிக்க வைப்போதொடு முடிந்து விடுகிறது.  இவரது நகைச்சுவை காட்சிகள் யாரையும் புண்படுத்துபவையாகவோ அல்லது தவறாக சிந்திக்கவைப்பதாகவோ இருந்ததில்லை.

ஜெயமோகன் போன்ற மோசமான பின்விளைவுகளைத்தரும் பின்நவீனத்துவ எழுத்தாளர்களில் எழுத்துக்களை விட  பல படங்களில் விளிம்பு நிலைமனிதராகவும் குப்பத்து மனிதனாகவே நடித்துவிட்டு போன லூசுமோகனின் நகைச்சுவைகாட்சிகள் முற்போக்கானதாகவே தெரிகிறது.

(பின்குறிப்பு: இக்கட்டுரையில் போடுவதற்காக லூசுமோகனின் புகைப்படத்தை தேடித்தேடி அலுத்துவிட்டேன். யாரிடமாவது லூசுமோகன் படம் இருந்தால் அனுப்பி வைக்கவும்)

லூசுமோகன் புகைப்படத்தை மின்னஞ்சலில் அனுப்பிய தோழர் அசொ விற்கு எனது நன்றிகள்

அ சொ
http://maduraseigai.blogspot.com/

Advertisements

பொங்கலை புறக்கணி செம்மொழி விழா கொண்டாடு!

ஜனவரி 13, 2010 § 1 பின்னூட்டம்

பொங்கலை புறக்கணி செம்மொழி விழா கொண்டாடு!


தமிழர்களின் புத்தாண்டாக தை முதல்நாளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக தமிழர்கள் பொங்கலன்று தமிழ்புத்தாண்டு கொண்டாடலாம். ஆங்கிலபுத்தாண்டை  சமீபத்தில் கோலாகலமாக தமிழகத்தில் கொண்டாடி இருக்கிறார்கள். ஆங்கிலபுத்தாண்டு கொண்டாடுதலை குறைகூறி  நண்பர்கள் மீண்டும் என்னை  தமிழ்தீவிரவாதி என்று  உறுதி செய்யும் வாய்பை அவர்களுக்கு வழங்கவேண்டாம் என்று இருக்கிறேன். ஆங்கிலபுத்தாண்டை அடிப்படையாக கொண்டுதான் நாம் அனைவருக்கும் எல்லாம் நடக்கிறது என்று நண்பர்கள் விவாதிக்கிறார்கள். நாம சம்பளம் வாங்கும் நாள்  முதற்கொண்டு நாம் பிறந்த தினம்வரை எல்லாம் ஆங்கில ஆண்டுகணக்கை அடிப்படையாக கொண்டுள்ளது. ஆங்கிலமாதம் பிறப்பதை வைத்தே ஊதியம் தருகிறார்கள் தமிழ்மாத அடிப்படையிலா சம்பளம் தருகிறார்கள்? என்று நம்மிடம் கேள்விகளை அடுக்குகிறார்கள். அதுசரி நாம்தான் சமூகம் சார்ந்த வாழ்வினை  விட்டுவிலகி பொருளாதாரம் சார்ந்து வாழத்துவங்கிவிட்டோமே  இன்னும் எதற்கு தமிழ்ஆண்டு கணக்கு எல்லாம் என்று தீர்மானித்துவிட்டார்கள் போல.

ஆங்கிலபுத்தாண்டை கொண்டாடுங்கள் அதற்காக எப்பொழுது சரியாக பனிரெண்டு மணியாகும் என்று ஒவ்வொரு வினாடியும் காத்திருந்து சரியாக கடிகாரம் பனிரெண்டை காட்டியதும் உற்சாகம் பீறிட கூச்சல் இடுவதும் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து ‘ஹாப்பி நியூநியர்’ சொல்வதும் என்று கொண்டாடுகிறீர்கள் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்புத்தாண்டு கொண்டாடு தமிழில் வாழ்த்து சொல் என்று கோரிக்கைவைக்கும் நம்மை பழமைவாதிகள் என்று சொல்லும் இவர்கள் காட்டுவாசிகள் போலே கூச்சலிடுவதை என்ன சொல்வது?

சரி இவர்கள் ஆங்கிலேயர் பாணியில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். அதேவேளையில் ஆங்கிலபுத்தாண்டிலும் நம்மாளுக நம்மூரு மூடநம்பிக்கைகளை சேர்த்துவிடுகிறார்கள்.ஆண்டின் முதல்நாளில் யாராவது திட்டினால் வருடம் முழுவதும் திட்டுவாங்குவோம் என்று கிளப்பிவிடுகிறார்கள்.  ஆண்டின் முதல்நாளில் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஆண்டுமுழுவதும் இருப்போம் என்று நம்புகிறார்கள். வருடத்தின் முதல்நாளில் யாரவது இறந்து போனால் இப்படி ஆண்டின் முதல்நாளிலேயே இழவுவீட்டிற்கு போவதா? என்று வருந்தி கொள்கிறார்கள். சரி பிறப்பு, இறப்பு, வருவாய் என்று அனைத்திற்கும் ஆங்கில ஆண்டுதானே கணக்கில் கொள்கிறீர்கள்  பிறகு தமிழ் ஆண்டின் நாட்காட்டி தேவை இல்லை என்று நினைத்தால் இவர்களுக்கு தமிழ்ஆண்டு கணக்கின் ஆடி மாதம் தேவைபடுகிறது.  ஆங்கிலபுத்தாண்டை கொண்டாடும் புதுமைவாதிகள் ஆடிமாதத்தில் வீட்டில் நல்லகாரியம் எதுவும் நடத்துவதில்லை. ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும் இவர்கள் எங்கே போனாலும் தங்கள் மூடநம்பிக்கைகளை மட்டும் தங்கள் கைகளிலேயே எடுத்து செல்வார்கள் என்று.

தமிழ்புத்தாண்டு தமிழகத்தின் நிலம் மற்றும் பருவநிலையை கணக்கில்கொண்டு அமைந்தவொன்று தமிழகத்தில் கார்காலம் கோடைகாலம் எல்லாம் ஆங்கிலேயர்களின் நாட்காட்டியில் உங்களால் காணமுடியாது.  கார்காலம் கோடைகாலம் எல்லாம் விவசாயிகள் பார்த்துக்கொள்ளட்டும் நமக்கு எதற்கு என்று இருப்பவர்களுக்கு நாம் சொல்லவதற்கு ஒன்றும் இல்லை.  தமிழர்களின் கால அளவினை கணக்கிட தமிழ் ஆண்டுகணக்கும் நமக்கான நாட்காட்டியும் தேவை என்பதோடு தமிழ்புத்தாண்டு தமிழர்களுக்கான  அடையாளம்  அடையாளத்தைதொலைத்துவிட்டு அரிதாரம் பூசிக்கொள்ளாதீர்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்.  நமது முதலாளிகளின் புத்தாண்டை கொண்டாடியதுபோல நமக்கான புத்தாண்டையும் கொண்டாட வாருங்கள்.


கடந்தாண்டு வேறு எந்தவொரு இனத்திற்கும் ஏற்படாத மனிதப்பேரவலமாக ஈழத்தமிழர்கள் நமது கண்ணெதிரே ஆயிரக்கணக்கில்  கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் அவர்கள் துயர் தீரவில்லை. வருங்காலம் எதுவென்று அறியாமல் முட்கம்பிவேலிகளுக்கு பின்னால் கண்ணீரோடு யாராவது அவர்களுக்காக பேசுவார்களா? என்று காத்திருக்கிறார்கள்.  இந்த நேரத்தில் தமிழ்புத்தாண்டை நாம் கொண்டாடலாமா? என்ற எண்ணம் உணர்வுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இருக்கும். எழுச்சிதமிழர் என்று அடைமொழியோடு  ஈழத்தமிழர் இரத்தம் இன்னும் காயவில்லை பொங்கல் திருநாளை புறக்கணியுங்கள் என்று அறிக்கை விட்டுறிக்கிறார் திருமா.


பொங்கலை புறக்கணிக்க நாங்கள் தயார் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க திருமா தயாரா?  இல்லை அதற்கும் முத்தமிழ் அறிஞரிடம் அனுமதிபெறவேண்டுமா?  ஒருவேளை செம்மொழி மாநாட்டிற்கு இன்னும் நாட்கள் கிடக்கிறது அதற்குள் இரத்தம் காய்ந்து விடும்  என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார் போலும். பொங்கல் திருநாள் காலம்காலமாக தமிழர்களின் வாழ்வோடு இணைந்த தமிழனுக்கென்று இருக்கும் ஒரே ஒரு திருநாள். செம்மொழி மாநாடு அப்படி அல்ல.தனது கரத்தில் படிந்த ஈழத்தமிழனின் இரத்தகறையை மறைக்க தமிழனத்தலைவர் ஏற்பாடு செய்திருக்கும் நாடகவிழா.

பொங்கலை நாம் கொண்டாடினாலும் புறக்கணித்தாலும் அந்த செய்தி நமக்குள்ளே தங்கிவிடும். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அப்படி அல்ல அந்த மாநாட்டு செய்தி உலகெங்கும் சென்று சேரும். ஈழத்தமிழன் செங்குருதியில் நினைந்ததால்தான் தமிழுக்கு செம்மொழி மாநாடு கொண்டாடுகிறோம் என்று உலகோர் நினைத்து கொள்ளமாட்டார்களா?.  இங்கே நாம் மாநாடு கொண்டாடினால் அது ஈழத்தமிழர்களின் துயரத்தை ஒருவழியில் தீர்க்குமே! என்று சுபவீ மாதியான  தமிழினதலைவரின் எடுபிடிகள் கதைகட்டி கொண்டிருக்கிறார்கள். உலகத்தமிழர்கள் கோவையில் கூடினால் உடனே ஒருவேளை தமிழர்கள் நம்மீது படையெடுத்துவிடுவார்களோ? என்று ராசபக்சே பயந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு உரிமை கொடுத்துவிடுவான் என்று ஒருபக்கம்  புனைவுகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.

ஒருவீட்டில் இழவு விழுந்தால்  அடுத்த வீட்டில் கல்யாணம் நடப்பதில்லையா? என்று புறநானூற்று பாடலை துணைக்கு அழைத்து ஈழத்தமிழர்களின் மரணத்தை பொருட்படுத்தாமல் விழாக்களுக்கும் விருதுகளுக்கும் தொடர்சியாக  அலைந்துகொண்டிருக்கிறார் தமிழினத்தலைவர்.  தன்னை உண்மையான ஈழ உணர்வாளன் என்று சொல்லிக்கொள்ளும் திருமா இன்னும் கருணாநிதியின் அரவணைப்பில்  இருந்துகொண்டு பொங்கலை புறக்கணி செம்மொழி விழா கொண்டாடு என்பது போல் அறிக்கைவிடுவது தமிழர்களை மேலும்மேலும் முட்டாளாக்குவதே தவிரே அதில் தமிழர் நலன் சிறிதுமில்லை என்பதே எனது கருத்து.

தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாடும் முன்னர்  நமது தொப்புள்கொடி உறவுகளை மனதில் கொண்டு அவர்களின் துயர் நீங்க நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.  தமிழ்நாட்டில் வாழும் விவசாயிகளின் அறுவடை திருநாளான பொங்கலின் போது நமக்கு காலம்காலமாக சோறு போடும் விவசாயிகளின் நீராதரப்பிரச்சனைக்கு நாம் என்ன செய்தோம் என்றும் சிந்திப்போம். சமூகம் சார்ந்து வாழ விரும்பும் தோழர்கள் தமிழர்களின் திருநாளான பொங்கலின் போது வெட்டி அரட்டைகளை வெளியே நிறுத்தி தமிழினத்திற்க்காக நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா என்று சிந்திக்கலாம்.


தமிழர்கள் பொங்கலை புறக்கணிப்பதைவிட உலத்தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதே அவசியமானது. அதனை கூறுவதற்கு திருமா முன்வரமாட்டார் என்பது நமக்கு நன்றாகத்தெரியும் உலத்தமிழ் செம்மொழி மாநாடு கருணாநிதியின் நலன்சார்ந்த ஒன்று அவர் கோவித்து கொள்வார் மாநாட்டை நிறுத்தசொன்னால் கூட்டணிக்கு வெளியே நிற்க வேண்டிய நிர்பந்தம் வரலாம். பொங்கலை புறக்கணி என்றால் எவனும் கோவித்து கொள்ளமாட்டான்  கூட்டணியிலும் பிரச்சனை இல்லை புலம்பெயர் ஈழத்தமிழர்களும் ஆறுதல் அடைவார்கள்  என்ற அரசியல் கணக்கு.   இப்படியே அவனவன் அரசியல் லாபத்திற்கு தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து கொண்டிருக்கிறார்கள்.

*********************************************************

பொங்கலுக்கு எப்படியும் விடுமுறை எடுப்பீர்கள் குடும்பத்தாரோடு பொழுதுகள் கழிப்பீர்கள் என்று நம்புகிறேன். நாள்முழுவதையும் தொலைகாட்சி பெட்டிக்கு அடகு வைத்து உலக தொலைக்காட்சி வரலாறில் முதல்முறையாக உங்கள் தொலைக்காட்சிக்கு வரும் அந்த திரைப்படத்தில் கவனம் செலுத்தும் உறவுகளே. பொங்கல் நாளில் உங்கள் குடும்பங்களோடு உரையாடி பாருங்கள். முன்னரே தயாரித்த நகைசுவைகள் மூலம் உங்களை சிரிக்க வைக்க முயலும் பட்டிமன்றங்களில் மயங்கி கிடக்காமல் முடிந்தால் உங்கள் குடும்பத்தாரோடு விவாதியுங்கள் தமிழினம் வீழ்ந்தது யாரேலே என்று உலக வரலாற்றில் முதல்முறையாக  தமிழின வரலாற்றை பகிர்ந்து கொள்ள முயலுங்கள்.தமிழ்  புத்தாண்டின்  முதல் நாளிலாவது தமிழனாக இருக்க முயல்வோம்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளை மரணம் தூக்கம் கலையாத தமிழர்கள் !

ஜனவரி 7, 2010 § பின்னூட்டமொன்றை இடுக

திருவேங்கடம் வேலுப்பிள்ளை மரணம் தூக்கம் கலையாத தமிழர்கள் !


திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மரணம் அடைத்துவிட்டதாக செய்தி வந்து உணர்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எண்பத்து ஆறு வயது முதிர்ந்த பெரியவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்து போய்விட்டார். போரின் போது அகதி முகாமில் தஞ்சம் புகுந்த பிரபாகரன் பெற்றோர்களை கைது செய்து தடுத்து வைத்தார்கள் கொடுமையான முறையில் விசாரணை நடைபெறுகிறது என்று செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.

கைதானபொழுதும் சரி மரணித்துவிட்ட பொழுதும் சரி அவர்களை ஊடகவியலாளர்கள் சந்தித்தோ அல்லது அரசின் மூலமோ பிரபாகரனின் பெற்றோர்களின் புகைப்படங்கள் கூட வெளியிடப்பவில்லை. இயற்கையாக இறந்துவிட்டார் என்று சம்பிரதாய அறிக்கையை வெளியிட்டுள்ளது சிங்களம்.

அந்த முதியவர்களை சிங்களவன் என்ன கொடுமை செய்தான் என்று நமக்கு தெரியாது. சிறைக்கூடத்தில் அந்த முதியவர்களின் உள்ளம் என்ன நிலையில் இருந்திருக்கும் என்றுமட்டும் புரிந்து கொள்ளமுடிகிறது.

80  வயதை தாண்டிய அந்த முதியவர்கள் அனுபவித்த வேதனையை உலகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்த வயதில்  சிறையில் அடைக்கப்பட்டு  தனது கணவன் இறந்த பின்பு பிரபாகரனின் தாயாரின் மனநிலை என்னவாக இருக்கும் என்று எண்ணி பார்க்ககூட யாரும் தயாரில்லை காரணம் அந்த முதியவர்கள் பிரபாகரனின் பெற்றோர்கள்.  அது தவிர அவர்கள் பெரிதாய் பிழை எதுவும் செய்யாதவர்கள்.

பிரபாகரன் தமிழர் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி  போராடிய போராளி உலகில் பரவிவாழும் தமிழர்கள் பலர் தலைவனாக ஏற்றுகொண்ட மனிதன். அந்த போராளியை பெற்றெடுத்த ஒரே காரணத்திற்காக  எறும்பை கூட கொல்லாதவர் என்று பெயரெடுத்த வேலுப்பிள்ளை இன்று அனாதையாக சிறைக்கூடத்தில் செத்து போயிருக்கிறார்.

தமிழ்நாட்டு தமிழர்களை இது பெரிதாக பதித்ததாக தெரியவில்லை. ஈழத்தில் தொடர்ச்சியாக தமிழர்கள் செத்துகொண்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. இது மேலும் ஒரு மரணம் அவ்வளவே என்ற நிலையில் இருக்கிறார்கள் போல. இலங்கை தனிநாடாக இருந்தாலும் எண்ணிக்கையில் சிங்களவர்களில் நாளில் ஒரு மடங்குதான் இருப்பார்கள். இருந்தாலும் தமிழக தலைவர்களும் தமிழர்களுக்கும் சிங்களவன் என்றாலே ஏனோ பயம் இன்னும் விலகவில்லை. இலங்கையில் இன்பச்சுற்றுலா முடித்து திரும்பிய திருமா பிரபாகாரனின் பெற்றோர்களை விடுவிக்க இந்திய வெளியுறவு அமைச்சருக்கு  கடிதம் எழுதியதாக ஒரு செய்தி. தமிழர்களின் அடுத்த  கடிததலைவர் ஒருவர் உருவாக்கி இருக்கிறார்.

தமிழகமீனவர்களை தாக்கிய சிங்கள ராணுவத்தோடு நட்பு நீடிக்கிறதாம் அதே வேளையில் இந்தியமாணவர்களை தாக்கிய ஆஸ்திரேலியாவை எச்சரிப்பார்களாம்.  இது என்னங்க புதுசா இருக்கு சிங்களர்கள் தாக்கினால் வட்டியில்லாகடன்  ஆஸ்திரேலியாகாரன் தாக்கினால் கண்டனம். இதுதான் இந்திய இறையாண்மை என்பதோ?

திருவேங்கடம் வேலுப்பிள்ளை

Where Am I?

You are currently viewing the archives for ஜனவரி, 2010 at தமிழன்பன் பக்கம்.