பொங்கலை புறக்கணி செம்மொழி விழா கொண்டாடு!
ஜனவரி 13, 2010 § 1 பின்னூட்டம்
பொங்கலை புறக்கணி செம்மொழி விழா கொண்டாடு!
தமிழர்களின் புத்தாண்டாக தை முதல்நாளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக தமிழர்கள் பொங்கலன்று தமிழ்புத்தாண்டு கொண்டாடலாம். ஆங்கிலபுத்தாண்டை சமீபத்தில் கோலாகலமாக தமிழகத்தில் கொண்டாடி இருக்கிறார்கள். ஆங்கிலபுத்தாண்டு கொண்டாடுதலை குறைகூறி நண்பர்கள் மீண்டும் என்னை தமிழ்தீவிரவாதி என்று உறுதி செய்யும் வாய்பை அவர்களுக்கு வழங்கவேண்டாம் என்று இருக்கிறேன். ஆங்கிலபுத்தாண்டை அடிப்படையாக கொண்டுதான் நாம் அனைவருக்கும் எல்லாம் நடக்கிறது என்று நண்பர்கள் விவாதிக்கிறார்கள். நாம சம்பளம் வாங்கும் நாள் முதற்கொண்டு நாம் பிறந்த தினம்வரை எல்லாம் ஆங்கில ஆண்டுகணக்கை அடிப்படையாக கொண்டுள்ளது. ஆங்கிலமாதம் பிறப்பதை வைத்தே ஊதியம் தருகிறார்கள் தமிழ்மாத அடிப்படையிலா சம்பளம் தருகிறார்கள்? என்று நம்மிடம் கேள்விகளை அடுக்குகிறார்கள். அதுசரி நாம்தான் சமூகம் சார்ந்த வாழ்வினை விட்டுவிலகி பொருளாதாரம் சார்ந்து வாழத்துவங்கிவிட்டோமே இன்னும் எதற்கு தமிழ்ஆண்டு கணக்கு எல்லாம் என்று தீர்மானித்துவிட்டார்கள் போல.
ஆங்கிலபுத்தாண்டை கொண்டாடுங்கள் அதற்காக எப்பொழுது சரியாக பனிரெண்டு மணியாகும் என்று ஒவ்வொரு வினாடியும் காத்திருந்து சரியாக கடிகாரம் பனிரெண்டை காட்டியதும் உற்சாகம் பீறிட கூச்சல் இடுவதும் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து ‘ஹாப்பி நியூநியர்’ சொல்வதும் என்று கொண்டாடுகிறீர்கள் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்புத்தாண்டு கொண்டாடு தமிழில் வாழ்த்து சொல் என்று கோரிக்கைவைக்கும் நம்மை பழமைவாதிகள் என்று சொல்லும் இவர்கள் காட்டுவாசிகள் போலே கூச்சலிடுவதை என்ன சொல்வது?
சரி இவர்கள் ஆங்கிலேயர் பாணியில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். அதேவேளையில் ஆங்கிலபுத்தாண்டிலும் நம்மாளுக நம்மூரு மூடநம்பிக்கைகளை சேர்த்துவிடுகிறார்கள்.ஆண்டின் முதல்நாளில் யாராவது திட்டினால் வருடம் முழுவதும் திட்டுவாங்குவோம் என்று கிளப்பிவிடுகிறார்கள். ஆண்டின் முதல்நாளில் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஆண்டுமுழுவதும் இருப்போம் என்று நம்புகிறார்கள். வருடத்தின் முதல்நாளில் யாரவது இறந்து போனால் இப்படி ஆண்டின் முதல்நாளிலேயே இழவுவீட்டிற்கு போவதா? என்று வருந்தி கொள்கிறார்கள். சரி பிறப்பு, இறப்பு, வருவாய் என்று அனைத்திற்கும் ஆங்கில ஆண்டுதானே கணக்கில் கொள்கிறீர்கள் பிறகு தமிழ் ஆண்டின் நாட்காட்டி தேவை இல்லை என்று நினைத்தால் இவர்களுக்கு தமிழ்ஆண்டு கணக்கின் ஆடி மாதம் தேவைபடுகிறது. ஆங்கிலபுத்தாண்டை கொண்டாடும் புதுமைவாதிகள் ஆடிமாதத்தில் வீட்டில் நல்லகாரியம் எதுவும் நடத்துவதில்லை. ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும் இவர்கள் எங்கே போனாலும் தங்கள் மூடநம்பிக்கைகளை மட்டும் தங்கள் கைகளிலேயே எடுத்து செல்வார்கள் என்று.
தமிழ்புத்தாண்டு தமிழகத்தின் நிலம் மற்றும் பருவநிலையை கணக்கில்கொண்டு அமைந்தவொன்று தமிழகத்தில் கார்காலம் கோடைகாலம் எல்லாம் ஆங்கிலேயர்களின் நாட்காட்டியில் உங்களால் காணமுடியாது. கார்காலம் கோடைகாலம் எல்லாம் விவசாயிகள் பார்த்துக்கொள்ளட்டும் நமக்கு எதற்கு என்று இருப்பவர்களுக்கு நாம் சொல்லவதற்கு ஒன்றும் இல்லை. தமிழர்களின் கால அளவினை கணக்கிட தமிழ் ஆண்டுகணக்கும் நமக்கான நாட்காட்டியும் தேவை என்பதோடு தமிழ்புத்தாண்டு தமிழர்களுக்கான அடையாளம் அடையாளத்தைதொலைத்துவிட்டு அரிதாரம் பூசிக்கொள்ளாதீர்கள் என்பதே எங்கள் வேண்டுகோள். நமது முதலாளிகளின் புத்தாண்டை கொண்டாடியதுபோல நமக்கான புத்தாண்டையும் கொண்டாட வாருங்கள்.
கடந்தாண்டு வேறு எந்தவொரு இனத்திற்கும் ஏற்படாத மனிதப்பேரவலமாக ஈழத்தமிழர்கள் நமது கண்ணெதிரே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் அவர்கள் துயர் தீரவில்லை. வருங்காலம் எதுவென்று அறியாமல் முட்கம்பிவேலிகளுக்கு பின்னால் கண்ணீரோடு யாராவது அவர்களுக்காக பேசுவார்களா? என்று காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் தமிழ்புத்தாண்டை நாம் கொண்டாடலாமா? என்ற எண்ணம் உணர்வுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இருக்கும். எழுச்சிதமிழர் என்று அடைமொழியோடு ஈழத்தமிழர் இரத்தம் இன்னும் காயவில்லை பொங்கல் திருநாளை புறக்கணியுங்கள் என்று அறிக்கை விட்டுறிக்கிறார் திருமா.
பொங்கலை புறக்கணிக்க நாங்கள் தயார் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க திருமா தயாரா? இல்லை அதற்கும் முத்தமிழ் அறிஞரிடம் அனுமதிபெறவேண்டுமா? ஒருவேளை செம்மொழி மாநாட்டிற்கு இன்னும் நாட்கள் கிடக்கிறது அதற்குள் இரத்தம் காய்ந்து விடும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார் போலும். பொங்கல் திருநாள் காலம்காலமாக தமிழர்களின் வாழ்வோடு இணைந்த தமிழனுக்கென்று இருக்கும் ஒரே ஒரு திருநாள். செம்மொழி மாநாடு அப்படி அல்ல.தனது கரத்தில் படிந்த ஈழத்தமிழனின் இரத்தகறையை மறைக்க தமிழனத்தலைவர் ஏற்பாடு செய்திருக்கும் நாடகவிழா.
பொங்கலை நாம் கொண்டாடினாலும் புறக்கணித்தாலும் அந்த செய்தி நமக்குள்ளே தங்கிவிடும். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அப்படி அல்ல அந்த மாநாட்டு செய்தி உலகெங்கும் சென்று சேரும். ஈழத்தமிழன் செங்குருதியில் நினைந்ததால்தான் தமிழுக்கு செம்மொழி மாநாடு கொண்டாடுகிறோம் என்று உலகோர் நினைத்து கொள்ளமாட்டார்களா?. இங்கே நாம் மாநாடு கொண்டாடினால் அது ஈழத்தமிழர்களின் துயரத்தை ஒருவழியில் தீர்க்குமே! என்று சுபவீ மாதியான தமிழினதலைவரின் எடுபிடிகள் கதைகட்டி கொண்டிருக்கிறார்கள். உலகத்தமிழர்கள் கோவையில் கூடினால் உடனே ஒருவேளை தமிழர்கள் நம்மீது படையெடுத்துவிடுவார்களோ? என்று ராசபக்சே பயந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு உரிமை கொடுத்துவிடுவான் என்று ஒருபக்கம் புனைவுகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.
ஒருவீட்டில் இழவு விழுந்தால் அடுத்த வீட்டில் கல்யாணம் நடப்பதில்லையா? என்று புறநானூற்று பாடலை துணைக்கு அழைத்து ஈழத்தமிழர்களின் மரணத்தை பொருட்படுத்தாமல் விழாக்களுக்கும் விருதுகளுக்கும் தொடர்சியாக அலைந்துகொண்டிருக்கிறார் தமிழினத்தலைவர். தன்னை உண்மையான ஈழ உணர்வாளன் என்று சொல்லிக்கொள்ளும் திருமா இன்னும் கருணாநிதியின் அரவணைப்பில் இருந்துகொண்டு பொங்கலை புறக்கணி செம்மொழி விழா கொண்டாடு என்பது போல் அறிக்கைவிடுவது தமிழர்களை மேலும்மேலும் முட்டாளாக்குவதே தவிரே அதில் தமிழர் நலன் சிறிதுமில்லை என்பதே எனது கருத்து.
தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாடும் முன்னர் நமது தொப்புள்கொடி உறவுகளை மனதில் கொண்டு அவர்களின் துயர் நீங்க நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம். தமிழ்நாட்டில் வாழும் விவசாயிகளின் அறுவடை திருநாளான பொங்கலின் போது நமக்கு காலம்காலமாக சோறு போடும் விவசாயிகளின் நீராதரப்பிரச்சனைக்கு நாம் என்ன செய்தோம் என்றும் சிந்திப்போம். சமூகம் சார்ந்து வாழ விரும்பும் தோழர்கள் தமிழர்களின் திருநாளான பொங்கலின் போது வெட்டி அரட்டைகளை வெளியே நிறுத்தி தமிழினத்திற்க்காக நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா என்று சிந்திக்கலாம்.
தமிழர்கள் பொங்கலை புறக்கணிப்பதைவிட உலத்தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதே அவசியமானது. அதனை கூறுவதற்கு திருமா முன்வரமாட்டார் என்பது நமக்கு நன்றாகத்தெரியும் உலத்தமிழ் செம்மொழி மாநாடு கருணாநிதியின் நலன்சார்ந்த ஒன்று அவர் கோவித்து கொள்வார் மாநாட்டை நிறுத்தசொன்னால் கூட்டணிக்கு வெளியே நிற்க வேண்டிய நிர்பந்தம் வரலாம். பொங்கலை புறக்கணி என்றால் எவனும் கோவித்து கொள்ளமாட்டான் கூட்டணியிலும் பிரச்சனை இல்லை புலம்பெயர் ஈழத்தமிழர்களும் ஆறுதல் அடைவார்கள் என்ற அரசியல் கணக்கு. இப்படியே அவனவன் அரசியல் லாபத்திற்கு தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து கொண்டிருக்கிறார்கள்.
*********************************************************
பொங்கலுக்கு எப்படியும் விடுமுறை எடுப்பீர்கள் குடும்பத்தாரோடு பொழுதுகள் கழிப்பீர்கள் என்று நம்புகிறேன். நாள்முழுவதையும் தொலைகாட்சி பெட்டிக்கு அடகு வைத்து உலக தொலைக்காட்சி வரலாறில் முதல்முறையாக உங்கள் தொலைக்காட்சிக்கு வரும் அந்த திரைப்படத்தில் கவனம் செலுத்தும் உறவுகளே. பொங்கல் நாளில் உங்கள் குடும்பங்களோடு உரையாடி பாருங்கள். முன்னரே தயாரித்த நகைசுவைகள் மூலம் உங்களை சிரிக்க வைக்க முயலும் பட்டிமன்றங்களில் மயங்கி கிடக்காமல் முடிந்தால் உங்கள் குடும்பத்தாரோடு விவாதியுங்கள் தமிழினம் வீழ்ந்தது யாரேலே என்று உலக வரலாற்றில் முதல்முறையாக தமிழின வரலாற்றை பகிர்ந்து கொள்ள முயலுங்கள்.தமிழ் புத்தாண்டின் முதல் நாளிலாவது தமிழனாக இருக்க முயல்வோம்.
மிகவும் சரியான கேள்விதான் அய்யா
திரு இதற்கு தயாரா ????