இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எதுவரை செல்லும்?

ஜூலை 27, 2011 § 1 பின்னூட்டம்

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எதுவரை செல்லும்?

 

கடந்த வாரம் அலுவலக வாகனத்தில் வந்து கொண்டிருந்தபொழுது அருகே அமர்ந்திருந்த வடக்கத்தி ஆள் ஆரம்பித்தான் ” நீங்க தமிழ்நாடா?” என்று  “ஆமா” என்றேன். எடுத்த எடுப்பிலேயே ஸ்பெக்ட்ரம் குறித்து ஆரம்பித்தான். உங்க ஆட்கள் திருடர்கள்  என்ற ரீதியில். விவாதிக்கும் மனநிலையில் நான்  இல்லையென்றால் “Your people” என்று வார்த்தை கொஞ்சம் கோபத்தை கிளறியது. கலைஞர் மாதிரி நீங்க ஆரியர்கள் அப்படித்தாண்டா பேசுவீங்கன்னு சொல்ல முடியாதே. அதனால் எல்லா மாநிலமும் அப்படித்தானே என்ற அளவில் பதில் சொன்னேன். வாகனத்தில் இருந்த அடுத்தவன் ஆரம்பித்து வைத்தான் தமிழ்நாடு அரசியல்வாதிகள் அதிகமான ஊழல்வாதிகள் என்று. ங்கொய்யால இன்னைக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கானுங்க  என்னத்தான்யா சொல்லவரிங்க என்று கொஞ்சம் கவனிச்சா பேசிட்டே போறானுங்க. ஏதோ தமிழ்நாட்டுல இருக்குற அம்புட்டு பேரும் ஸ்பெக்ட்ரம் பணத்தை ஆட்டையை போட்டுட்டு இவனுங்களுக்கு சுண்னாம்ப தடவின மாதிரியும் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்துலயும் இதுவரை எவனும் எந்த ஊழலும் செய்யாதது மாதிரியும்.அதுல திரும்ப திரும்ப Your People வேறு. கொஞ்சம் கடுப்போட சொன்னேன் “ஏதோ தமிழ்நாட்டில நாங்க எல்லாம் அப்படித்தான் ராசா ஊழல் செய்வார் அதை யாரும் கண்டுக்க கூடாதுன்னு சொன்ன மாதிரில்லையா பேசிட்டு இருக்கீங்க?” என்றேன் “இருந்தாலும் Your People தான ஓட்டு போட்டது” ங்கிறான். இதெல்லாம் வட இந்திய ஊடகங்கள் தொடந்து பார்ப்பதால் அவர்களுக்கு இருக்கும் ‘தெளிவு’ . காங்கிரசிற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருக்கும் தொடர்பு குறித்து  கேட்டால். மவுன சிங் அப்பழுக்கற்றவர் என்கிறார்கள். “அப்பழுக்கற்றவர் என்றால் ஊழல் நடக்கும் பொழுது என்னய்யா பண்ணிட்டு இருந்தாரு?” என்று கேட்டால். அவர் சொன்னதை Your People கேட்கலையே? என்கிறார்கள். அமாண்டா நாங்கதாண்ட திருடினோம் என்று சொல்வதற்குள் அலுவலகம் வந்துவிட்டதால் விவாதம் அத்தோடு முடிந்தது. ராசாவை உத்தமன் என்று நாம் ஒருவார்த்தை கூட இதுவரை சொன்னதில்லை. இவ்வளவிற்கும் ராசா கனிமொழி கைதை மகிழ்ச்சியோடு பார்த்திருக்கிறோம். தயாநிதி கைது எப்பொழுது என்று ஆவலோடு காத்திருக்கும் ஆட்கள் நாம். ஆனால் நான் சொல்லும் இவர்கள் மாத்திரம் அல்ல வடக்கிந்திய ஊடகங்கள் முதற்கொண்டு ஏதோ நாமதான் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்தோம் என்பது போல. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தமிழர்கள் மீது இருக்கும் வெறுப்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

நேற்றுதான் ராசா தனது வாயைத்திறந்து சிதம்பரம் முதல் பிரதமர் வரை இழுத்து இருக்கிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்னும் பல தலைகளை இழுத்துவரக்கூடும் என்று பரவலாக செய்திகள் வருகின்றன. தயாநிதி சிதம்பரம் என்று அடுத்தும் தமிழர்களே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவ்வழக்கு துவங்கிய நாள்முதலே ராசா இதைத்தான் சொல்லிட்டு இருக்கிறார். நடந்தது எல்லாம் மன்மோகனுக்கு தெரியும் என்று. இப்பொழுது வெளிப்படையாக நீதிமன்றத்திலேயே கூறியிருக்கிறார். இதுவரை குறிப்பிட்டு சொல்லும்படியாக மன்மோகன் இந்த விடயத்தில் எதுவும் பேசியதில்லை. வழக்கின் துவக்கம் முதலே காங்கிரசிற்கு இதில் இருக்கும் பங்கு அமுக்கமாக பேசப்பட்டு வந்தாலும் வெளிப்படையாக இதுபோல எதுவும் வெளிவந்ததில்லை. வடக்கிந்திய ஊடகங்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க துவங்கி இருக்கின்றன அ.ராசா கூறியதில் சிதம்பரம் தயாநிதி குறித்து மாத்திரம் பூதக்கண்ணாடி கொண்டு பெரிதுபடித்தி கொண்டிருக்கிறார்கள். மன்மோகன் சம்மதத்தோட எல்லாவற்றையும் செய்தேன் என்று அராசா கூறியதற்கு. சேனல் -4 இனப்படுகொலை ஆவணத்திற்கு அமைதி காத்தது போல காக்க முடியாது என்பதை மன்மோகன் நன்கு அறிவார்.

உண்மையிலேயே நீதிமன்றத்திற்கு இந்த ஊழலை விசாரிக்க வேண்டும் என்று அக்கறை இருந்தால் மன்மோகனையும் அவரது ரிமோட் கண்ட்ரோலையும் விசாரணை வாளையத்திற்குள் கொண்டு வரட்டும். எத்தனை நாளைக்குத்தான் I don’t know என்று  “Your People”  சொல்லிக்கொண்டு இருப்பீர்கள் என்று பார்ப்போம். மன்மோகன் கூறியதை கேட்கவில்லை என்றால் ஸ்பெக்ட்ரம் விறபனையை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டியதுதானே அப்படி தடுத்து நிறுத்தாமல் சிங்கை தடுத்து நிறுத்தியது யார்? அவர்களையும் நீதிமன்றம் வரவழைக்க வேண்டும்.ஒரு தமிழனாக ராசா கனிமொழி குற்றமற்றவர்கள் என்று சொல்லுவதல்ல நமது பணி இதில் தொடர்புடைய காங்கிரசு  பெருந்தலைகளையும்  இழுத்து வருவதே.

முள்ளிவாய்காளில் ஈழத்தில் தமிழர்கள் கொத்துகுண்டுகளில் செத்து கொண்டிருந்தபொழுது கூட்டணி பேரம் நிகழ்த்தி திமுக வாங்கிவந்த மூன்று காபினட் அமைச்சர்களில் இரண்டை காலி செய்துவிட்டார்கள். ராசா உள்ளேயும் தயாநிதி உள்ளேயா அல்லது வெளியேயா என்று தெரியாமலும் இருக்கிறார்கள். அடுத்ததாக ஜெயலலிதா அழகிரிக்காக ஆப்பு தயாரித்து கொண்டிருக்கிறார்.  கேவலம் இந்த பதவிகளுக்காகத்தான் கருணாநிதி ஈழத்தமிழர்களை கைகழுவினார். இன்று காங்கிரசு திமுகவை கை கழுவ முயல்கிறது. அனைத்து ஊழல் அவதூறுகளையும் திமுக பக்கமாக திருப்பிவிட்டு தான் தப்பித்துகொள்ள முயல்கிறது. ஈழத்தமிழ் மக்களை கைவிட்டது போல தனது மக்களை கருணாநிதி கைவிட மாட்டார் என்று நம்புவோமாக. இப்பொழுதாவது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்கள் கூட்டாளியை காட்டிகொடுத்து அப்பழுக்கற்றவர்களாக நடித்து கொண்டிருப்பவர்களை அம்பலப்படுத்துவர்களா? அல்லது தானும் அவமானப்பட்டு நமக்கு அந்த அவமானத்தை தேடித்தருவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். எவனெவனோ ஊழல் செய்ததற்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன வாழ்கைடா இது?

 

Advertisements

காங்கிரசின் அடுத்த காமெடி இப்போ யுவராசு !

ஜூலை 25, 2011 § 5 பின்னூட்டங்கள்

காங்கிரசின் அடுத்த காமெடி இப்போ யுவராசு !

இன்று காலையில் எல்லா செய்திகளிலும் கையில் ஏதோ பேப்பர் சகிதமாக நாலு பேரு புகார் கொடுக்க வந்திருந்ததை காட்டினார்கள். தமிழக இளைஞர் காங்கிரசில் 35 லட்சம் இளைஞர்களை சேர்த்ததாக புருடா விட்ட யுவராசால் நாலு பேருக்கு மேல ஆளு சேர்க்க முடியவில்லை.. பாவம். சரிய்யா யாரு மேல புகாரு எதுக்கு புகாரு? அப்படின்னு செய்தியை பார்த்தா அதே பழைய பல்லவி சீமான் மீது நடவடிக்கை எடுக்கணும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசிட்டார் அப்படின்னு. அடப்பாவிகளா நாட்டுல என்ன நடந்திட்டு இருக்கு சமச்சீர் கல்வி வருமா வரதா?ன்னு ஒவ்வொரு பெற்றோர்களும் ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள். விலையேற்றம் மின் தட்டுப்பாடு, சாயக்கழிவுநீர்  எத்தனை எத்தனை மக்கள் பிரச்சனை இதுல இப்போ சீமான் மேல நடவடிக்கை எடுப்பதுதான் இவர்களுக்கு முக்கியமாப்போச்சாம். சீமான் ஆரம்பத்துல இருந்து இதைத்தானய்யா பேசிட்டு இருக்காரு. பலமுறை இதையே சொல்லி சிறைக்கு அனுப்பியும் நீதிமன்றம் தானய்யா அவர வெளிய அனுப்பி
இருக்கு. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லை என்று நீதிமன்றம் வைகோவின் ‘பொடா’ கைதின் பொழுதே சொல்லிடுச்சே யுவராசு. இது தெரியாம ஏதோ கோமாவில இருந்து எந்திருச்ச மாதிரி கெளம்பி புகார் கொடுக்கிறேன் பேர்வழி என்று பப்ளிசிட்டி வேறு.

சரி, நாமளும் ஏதோ சின்னப்பய ஏதோ தெரியாம கிளம்பி வந்துட்டான் வீட்டுல இருந்து ஏதாவது பெரியவங்கள கூட்டிட்டு வாப்பான்னு சொல்லலாம்னு பார்த்தா. இவிங்க கோஸ்டில பெருசுங்க இவனைவிட  காமெடி பீசுங்க. கடந்த வார ஆனந்த விகடன்ல  தங்கபாலு கொடுத்த பேட்டியை பார்த்துட்டு அழுவதா சிரிப்பதான்னு நானே குழம்பிபோயிகிடக்கேன். இந்த வயசுலும் மனுசனுக்கு என்னவொரு
நகைச்சுவை உணர்வு. ஈழத்துக்காக தமிழ்நாட்டில் அதிகம் போராடியது ரெண்டு பேரு ஒருத்தர்  நெடுமாறன் இன்னொருத்தர் தங்கபாலுன்னு வேற சொல்லுறார் இதை படிச்சுட்டு எத்தனை பேருக்கு கிறுக்கு புடிச்சுச்சோ? எத்தனை பேருக்கு பேதியாச்சோ?. எப்படியா இப்படியெல்லாம் பேசிட்டு திரியுறீங்க எங்கள பார்த்தா அம்புட்டு மக்கு மாதிரியா தெரியுது.

தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை என்னவென்றே தெரியவில்லை. சரி நம் தொப்புள்கொடி உறவுகள் மீது சிங்கள ராணுவம் புரிந்த இனப்படுகொலை குறித்தும் அக்கறையில்லை. மக்கள் என்றாலே அது நேருவின் மக்கள் என்று அன்றிலிருந்து புரிந்து  வைத்திருக்கிறீர்கள்.  தமிழர்களை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் என்று பிரிக்கும் புத்திசாலிகள் இத்தாலியில் பிறந்தவரை அன்னை   என்கிறீர்களே? என்றால்  நம்மை தேசத்துரோகிகள் என்று சொல்லுவார்கள்.  நாளை ஸ்பெயினில் இருந்து அண்ணியை இறக்குமதி செய்ய காத்திருக்கிறார்கள். இவர்களின் ஈழத்தமிழர்கள் துயரம் பத்தி பேசினால் என்ன புரியப்போகிறது?.தமிழர் பிரச்சனையில் இவர்களிடம் நாம் பேசியதெல்லாம்  எருமைமாட்டில் பெய்த மழையாக போய்விட்டது. இனியும் இவர்களோடு சீரியஸாக பேசி நமது ஆற்றலை வீணடிப்பதை விட்டுட்டு மக்களோடு மக்களாக இந்த காமெடி பீசுகளின் காமெடிக்கு சிரித்து வைத்துவிட்டு போவோம்.

பின்குறிப்பு: மணிசெந்தில் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து

தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஆதரித்து பேசும் சீமானை கைது செய்ய வேண்டும் -இளைஞர் காங்கிரஸ் யுவராஜ் #

உண்மையில் தடை செய்யப்பட வேண்டிய இயக்கத்தில் இருக்கும் யுவராஜினை கைது செய்ய வேண்டும் – நாம் தமிழர்.

Where Am I?

You are currently viewing the archives for ஜூலை, 2011 at தமிழன்பன் பக்கம்.