குண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா (18-04-2012)

ஏப்ரல் 18, 2012 § 4 பின்னூட்டங்கள்

குண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா 

எனது பக்கங்கள் என்ற ஒன்றை தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று வலைப்பூ துவங்கிய நாட்களிலேயே திட்டமிட்டது. ஆனால் என்ன மாயமோ தெரியல அப்படி ஒரேயொரு பதிவு கூட என்னால் எழுத முடியல. இனிமேல் எனது எண்ணங்களை தொகுத்து எழுதலாம் என்று இதை துவக்கி இருக்கிறேன்.

 

வழக்கமா இப்படியான  பதிவுகளுக்கு  உணவுப்பொருட்களின் பெயர்களை தருவது பதிவுலக வாடிக்கை. எனது பள்ளிக்காலங்களில் தமிழ்மணி சோடா கம்பனியில் பணிபுரிந்த மலரும் நினைவுகளில் இந்த பெயர். தனியார் மயமாக்களில் காணமல் போன பல சிறுதொழில்களில் மிக முக்கியமானது இந்த குண்டு சோடா தொழில்தான்.

*****************************************

தண்ணீர் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மன்மோகன் சிங்கும் மான்டேக் சிங் அலுவாலியாவும் சேர்ந்து தண்ணீரை தனியார் உரிமையாக்குவதற்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள் . உற்பத்தி செலவை விட குறைந்த விலையில் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படுவதால் மக்கள் நீரை வீணடிக்கிறார்களாம் அதனால் தனியாரிடம் விடுவதே சாலச்சிறந்தது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். நாம் குடிக்கும் நீருக்கு உற்பத்தி செலவு எங்கிருந்து வருகிறது?  யானைக்கு அல்வா வாங்கிய கணக்கு காட்டுகிறார் பொருளாதார மேதை. பதவி காலத்தில் ஓசியில் விமானத்தில் பறந்து விமான சேவையில் கோடிக்கணக்கில் நட்டம் ஏற்படுத்திய அரசியல்வாதிகள் மக்களைப்பார்த்து குடிநீரை வீணடிக்கிறீர்கள் எனும் கொடுமை இந்தியாவில்தான் பார்க்க முடியும்.

*****************************************

ஈழத்தமிழர்களுக்கு இந்திய நடுவண் அரசு இதுவரை செய்த துரோகங்கள் போதாதென்று இப்போது எதிர்கட்சி எம்பிக்களை இலங்கை அனுப்பி ராசபக்சேவிற்கு நாங்கள் எப்போதும் அன்பான அடிமைகள் என்பதை மெய்பித்திருக்கிறது.   இந்த பயணத்தால் எந்தவொரு நன்மையையும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க போவதில்லை. முதலில் இவர்கள் இலங்கை இனவெறியர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் வீடுகளுக்கு செல்லட்டும் மீனவர்கள் அனுபவித்த வெளியில் சொல்லப்படாத பல்வேறு கதைகள்  நம்மிடம் உண்டு. ஐநூத்தி சொச்சம் மீனவர்களை இந்த இனவெறியர்களிடம் பலி கொடுத்திருக்கிறோம். இருந்தும் இவங்களுக்கு இலங்கை அரசின் இனவெறிமுகம் தெரியவில்லை என்றால் யார் பொறுப்பு.

நிருபமா ராவ் இலங்கை சென்றபொழுது நான் எழுதிய ஒரு டுவிட்தான் நியாபத்திற்கு வருகிறது.அதையே சுஷ்மாவிற்கும் சொல்லிவைப்போம்.

பார்த்து செல்லுங்கள் நிருபமா நீங்கள் செல்வது பிணத்தையும் புணர்ந்தவர்களின் தேசம். #tnfisherman

*****************************************

பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வாடகைவீடுகளில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது கழிவறைகளின் அளவு. உலகின் மிகச்சிறிய கழிவறைகள் பெங்களூரில் வாடகை வீடுகளில் காணலாம். மிகச்சரியாக ஒரு மனிதனை நிற்கவைத்து மூன்று பக்கம் சுவர் எழுப்பி ஒரு பக்கம் வாசல் வைத்தது போன்று கழிவறைகள் கட்டி வைத்திருப்பார்கள். புதிதாக வீடு தேடுபவர்கள் முதலில் சரி பார்க்க வேண்டியது  கழிவறையகாத்தான் இருக்கும். பல புதிய வீடுகளின் கழிவறைகள் நாம் வசிக்கும் வீட்டின் கழிவறையை விட மிகச்சிறியதாக இருந்து தொலைக்கும்.ஆனாலும் அந்த சின்னஞ்சிறிய வீட்டிற்கு வீட்டுக்காரர் கேட்கும் வாடகை கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் நாராயணசாமியின் அணு உலை குறித்த அறிக்கைகள் போல இருக்கும். இது போன்ற வீடுகளில்  மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்ற அறிக்கையை அலுவலியாக்கள் வெளியிடும்வரை காத்திருப்போம்.

Advertisements

Where Am I?

You are currently viewing the archives for ஏப்ரல், 2012 at தமிழன்பன் பக்கம்.