குண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா (18-04-2012)

ஏப்ரல் 18, 2012 § 4 பின்னூட்டங்கள்

குண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா 

எனது பக்கங்கள் என்ற ஒன்றை தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று வலைப்பூ துவங்கிய நாட்களிலேயே திட்டமிட்டது. ஆனால் என்ன மாயமோ தெரியல அப்படி ஒரேயொரு பதிவு கூட என்னால் எழுத முடியல. இனிமேல் எனது எண்ணங்களை தொகுத்து எழுதலாம் என்று இதை துவக்கி இருக்கிறேன்.

 

வழக்கமா இப்படியான  பதிவுகளுக்கு  உணவுப்பொருட்களின் பெயர்களை தருவது பதிவுலக வாடிக்கை. எனது பள்ளிக்காலங்களில் தமிழ்மணி சோடா கம்பனியில் பணிபுரிந்த மலரும் நினைவுகளில் இந்த பெயர். தனியார் மயமாக்களில் காணமல் போன பல சிறுதொழில்களில் மிக முக்கியமானது இந்த குண்டு சோடா தொழில்தான்.

*****************************************

தண்ணீர் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மன்மோகன் சிங்கும் மான்டேக் சிங் அலுவாலியாவும் சேர்ந்து தண்ணீரை தனியார் உரிமையாக்குவதற்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள் . உற்பத்தி செலவை விட குறைந்த விலையில் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படுவதால் மக்கள் நீரை வீணடிக்கிறார்களாம் அதனால் தனியாரிடம் விடுவதே சாலச்சிறந்தது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். நாம் குடிக்கும் நீருக்கு உற்பத்தி செலவு எங்கிருந்து வருகிறது?  யானைக்கு அல்வா வாங்கிய கணக்கு காட்டுகிறார் பொருளாதார மேதை. பதவி காலத்தில் ஓசியில் விமானத்தில் பறந்து விமான சேவையில் கோடிக்கணக்கில் நட்டம் ஏற்படுத்திய அரசியல்வாதிகள் மக்களைப்பார்த்து குடிநீரை வீணடிக்கிறீர்கள் எனும் கொடுமை இந்தியாவில்தான் பார்க்க முடியும்.

*****************************************

ஈழத்தமிழர்களுக்கு இந்திய நடுவண் அரசு இதுவரை செய்த துரோகங்கள் போதாதென்று இப்போது எதிர்கட்சி எம்பிக்களை இலங்கை அனுப்பி ராசபக்சேவிற்கு நாங்கள் எப்போதும் அன்பான அடிமைகள் என்பதை மெய்பித்திருக்கிறது.   இந்த பயணத்தால் எந்தவொரு நன்மையையும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க போவதில்லை. முதலில் இவர்கள் இலங்கை இனவெறியர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் வீடுகளுக்கு செல்லட்டும் மீனவர்கள் அனுபவித்த வெளியில் சொல்லப்படாத பல்வேறு கதைகள்  நம்மிடம் உண்டு. ஐநூத்தி சொச்சம் மீனவர்களை இந்த இனவெறியர்களிடம் பலி கொடுத்திருக்கிறோம். இருந்தும் இவங்களுக்கு இலங்கை அரசின் இனவெறிமுகம் தெரியவில்லை என்றால் யார் பொறுப்பு.

நிருபமா ராவ் இலங்கை சென்றபொழுது நான் எழுதிய ஒரு டுவிட்தான் நியாபத்திற்கு வருகிறது.அதையே சுஷ்மாவிற்கும் சொல்லிவைப்போம்.

பார்த்து செல்லுங்கள் நிருபமா நீங்கள் செல்வது பிணத்தையும் புணர்ந்தவர்களின் தேசம். #tnfisherman

*****************************************

பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வாடகைவீடுகளில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது கழிவறைகளின் அளவு. உலகின் மிகச்சிறிய கழிவறைகள் பெங்களூரில் வாடகை வீடுகளில் காணலாம். மிகச்சரியாக ஒரு மனிதனை நிற்கவைத்து மூன்று பக்கம் சுவர் எழுப்பி ஒரு பக்கம் வாசல் வைத்தது போன்று கழிவறைகள் கட்டி வைத்திருப்பார்கள். புதிதாக வீடு தேடுபவர்கள் முதலில் சரி பார்க்க வேண்டியது  கழிவறையகாத்தான் இருக்கும். பல புதிய வீடுகளின் கழிவறைகள் நாம் வசிக்கும் வீட்டின் கழிவறையை விட மிகச்சிறியதாக இருந்து தொலைக்கும்.ஆனாலும் அந்த சின்னஞ்சிறிய வீட்டிற்கு வீட்டுக்காரர் கேட்கும் வாடகை கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் நாராயணசாமியின் அணு உலை குறித்த அறிக்கைகள் போல இருக்கும். இது போன்ற வீடுகளில்  மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்ற அறிக்கையை அலுவலியாக்கள் வெளியிடும்வரை காத்திருப்போம்.

Advertisements

இங்கு குருவிகள் கூடி கத்துகிறோம் கொலைகார கழுகளின் தூக்கம் கெடுக்க டிவிட்டரில் #tnfisherman

பிப்ரவரி 2, 2011 § 1 பின்னூட்டம்

 

டிவிட்டரில் தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து கூக்குரலிட்ட குருவியின் கதறல்கள் சில :

டிவிட்டரில் தொடர: http://twitter.com/#!/tamizhanban08

 

நானில்லைஎன்றாலும் ஒருநாள் என்மகன் திருப்பி அடிப்பான் என்ற நம்பிக்கையில் உங்கள் துரோகங்களை சொல்லி சொல்லி வளர்கிறேன் #tnfisherman

“விதவை கோட்டாவில் உங்க அன்னைக்கு இந்தியா. எங்காத்தாவுக்கு சத்துணவு கூடமா?” – மீனவனின் மகன் #tnfisherman

இன்னும் சில தமிழ்மீனவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் நிருபமா சுட்டி காட்டினார் ராசபக்சே அதிர்ச்சி கருணா மகிழ்ச்சி #tnfisherman
மீன்பிடித்தலின் மூலம் வரி உங்களுக்கு வாக்கரிசி எங்களுக்கா? #tnfisherman

இப்போதெல்லாம் கருணாவின் கடிதங்களை பார்த்தால் தபால்காரரே சிரிக்கிறாராம். #tnfisherman

 

செத்தவனுக்கு அரசுவிழா மணிமண்டபம் எல்லாம் எவன்டா கேட்டா? இங்கு இருக்கும் மீனவனின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பொழுது #tnfisherman

 

வீரமணிக்கு சுபவீக்கும் மீனவர் பிரச்சனை பத்தி ஏதும் தெரியுமா? இன்னும் சுபவீ ஸ்பெக்ட்ரம் சில உண்மைகள் எழுதிட்டு இருக்கு #tnfisherman

இந்துராம் அடுத்த சிங்களரத்னாவிற்கு அடிப்போடுறார் போலிருக்குராசபக்சே இது போன்ற அடிமைகள் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கவேண்டும்.#tnfisherman

இந்து ராம் வீட்டு சந்துல எவனோ ஒன்னுக்கு அடிச்சிட்டானாம் தலை ரெம்ப கடுப்புல இருக்கு என்னமாதிரி சமூகம் இதுன்னு #tnfisherman

இந்திய பிரதமர் சிங்காச்சே மீனவர் பிரச்சனையில் சிங்கம் போல கர்ச்சிப்பார் என்று பார்த்தால் மியாவ் என்கிறாரே?#tnfisherman

சொரணை இந்திய இறையாண்மைக்குஎதிரானது ! #tnfisherman

இன்னும் எத்தனை மீனவர்கள் செத்தால் நீங்கள் எங்கள் வேதனையை புரிந்து கொள்வீர்கள்?#tnfisherman

நாம் சொன்னபடி மாணவனை அடிக்கவில்லை என்பதால் நமது மீனவனை அடிக்கிறானோ? #tnfisherman

நீதான் அவனை நண்பன் என்கிறாய் அவன் பதிலுக்கு தோட்டாக்களால் புன்னகைக்கிறான் இதுதான் நட்புநாடா? #tnfisherman

இத்தனை இனமானத்தலைவர்கள் இருந்தும் அடிபட்டு அமைதியாக சாகிறதே தமிழினம். #tnfisherman

புத்த பிக்குகளுக்கு ஒரு அடிக்கே இத்தனை அலறல் என்றால் ஏன்டா  ஐநூத்தி சொச்சம் மீனவர்களின் அழுகுரல் உங்களுக்கு கேட்கவில்லை?#tnfisherman

இது என்னடா இது தமிழன் பொறுமையில் எருமையை மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே #tnfisherman

பார்த்து செல்லுங்கள் நிருபமா நீங்கள் செல்வது பிணத்தையும் புணர்ந்தவர்களின் தேசம். #tnfisherman

யாருய்யா அந்த புண்ணியவான் கருணாவிற்கு தமிழினத்தலைவன் என்று பட்டம் கொடுத்தது எவனோ கொடுத்த காசுக்கு மேல கூவி இருக்கான்யா!#tnfisherman

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் அன்று தவறானவர்களின் கையில் ஆதிகாரத்தை கொடுத்தமையால் சங்கு அறுந்து இறந்து கொண்டிருக்கிறோம் #tnfisherman

புத்த மாடாலய தாக்குதலில் வரும் பதட்டம் எங்கள் மீனவன் செத்த பொழுது ஏன் வரவில்லை? எங்கள் உயிர் அவ்வளவு மலிவா #tnfisherman

இந்தியதலைவர்களே எங்களுக்கு ஆயுதம் கொடுங்கள் இல்லை அவனை ஆயுதமில்லாமல் வரச்சொல்லுங்கள் நாங்கள்பார்த்துகொள்கிறோம்#tnfisherman

மதுரைக்கு போயிருந்தேன்!

பிப்ரவரி 2, 2010 § பின்னூட்டமொன்றை இடுக

மதுரைக்கு போயிருந்தேன்!சென்றாண்டு இதேநேரத்தில் வெளிவந்த மதுரைவீரனின் கண்ணீர்குரல் இந்த நேரத்திலும் மிகச்சரியாக பொருந்தும் என்றே நம்புகிறேன்

ரெம்ப நாளைக்கு அப்புறம் நான் பொறந்த மதுரை பக்கம் போயிருந்தேன் அய்யாக்களா! பஞ்சம் பொழைக்க சென்னை வந்த நாமெல்லாம் இப்படி எப்பவாது ஊருக்கு போறதுதானே வழக்கம். ஊரு நல்லாவே மாறிப்போச்சுடா அய்யா. ஆனா இந்த வெயிலுதான் மாறவே இல்ல. உச்சி வெயிலு மண்டைய பொளக்குது. ஊர சுத்தி இருந்த வயலு வரப்பு, ஏரி கம்மா எல்லாம் கிரிக்கெட்டு ஆடும் இடமாகிப்போச்சு. விவசாயம் பார்த்த ஆளுங்க எல்லாம் கையில தூக்குசட்டிய தூக்கிகிட்டு கட்டிட வேலைக்கு அலையுதுக. பழைய மரங்களெல்லாம் மறையுதுங்க புதுசுபுதுசா கட்டிடங்கள் மொளைக்குதுங்க.என்ன பண்ண இதை சொன்னா பெருசு அதெல்லாம் உங்க காலம்னு கிண்டல் பண்ணுவானுங்க இளந்தாரிக. சரி விடுங்கப்பா ஊரு மக்களும் ஏதோ உள்ளூருலேயே பொழைக்க கத்துகிட்டானுங்கன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

சின்ன புள்ளைக எல்லாம் இங்கிலீசுல படிக்குது. கொளுத்தும் வெயிலிலே பூட்சு காலுமா, கழுத்துல கச்சையுமா அலையுதுக . இதுக படிச்சு பெரியதுரை ஆகுமுன்னு நினைப்பில பெத்ததுகளும் இருக்குதுக . ஏதோதோ சொல்லித்தருகிற இந்த பள்ளிக்கூடங்கள் சொந்த பந்தங்கள் கிட்ட எப்படி பழகுறது பேசுறதுன்னு சொல்லித்தர கூடாதா? விருதாளிகளை கண்டதும் வேற பக்கம் ஓடுதுக. டிவியை பார்த்துகிட்டு தாத்தான்னு கூப்பிடவே யோசிக்குதுங்க.


அப்படியே அழகர் கோவிலுக்கும் மீனாட்சி கோவிலுக்கும் போயிட்டு வரலாமேன்னு மெதுவா கிழம்பினேன் அய்யா. எங்கே பாத்தாலும் பெரிய பெரிய தட்டிகள் முன்னெல்லாம் வாத்தியார் நடித்த சினிமா தட்டிகளா இருக்கும். ஆனா இப்ப இருக்கிற தட்டிகல உத்துப்பார்த்தா பொறந்த நாலு வாழ்த்து சொல்லுற தட்டிகளா இருக்கு.காளவாசல் பக்கத்துல ஒரு ஆளு மீசையோடு விவேகானந்தர் உடுப்புபோட்டு இருக்கிற மாதிரி தட்டி, ஆரப்பாளையத்துல பார்த்தா அந்த ஆளே திருவள்ளுவரு மாதிரி இருக்கிற மாதிரி தட்டி. அப்படியே சிம்மகல்லு பக்கம் பார்த்தா அதே ஆளு காந்தி மாதிரி உக்காந்து இருக்காப்ல. தல்லாகுளம் பக்கம் பார்த்தா அவரு நம்ம வாத்தியாரு எம்ஜிஆரு மாதிரி இருக்காப்ல. இன்னொரு பக்கம் நேதாஜி அய்யா மாதிரி போஸ் கொடுக்குராப்ள.

எனக்கு தலையே சுத்தி போச்சுடா மக்கா! யாருடா இந்த பய ஏதும் சினிமா நடிகனா? முஞ்சப்பார்த்தாலும் அம்புட்டு அழகா இல்லியே? யாருடா அய்யா இந்தப்பய அப்படின்னு கொஞ்சம் குழம்பி போனேண்டா மக்கா. பக்கத்துல ‘ஜிகர்தண்டா’ போடுற ஒரு ஆளுகிட்ட போயி கேட்டேன் ‘ஏலே அய்யா யாருடா இந்த பயன்னு’ .கொஞ்சம் மேலையும் கீழயும் பார்த்த அந்தப்பய ‘எ பெருசு நீ என்ன ஊருக்கு புதுசா? இவருதான்யா அழகிரி அண்ணன் ‘ அப்படின்னான். ஏலே அய்யா நாங்க தலைமுறை தலைமுறையா மதுரைல பிறந்துவளர்ந்தவனுங்கதாண்டா அய்யா அது யாருடா அழகிரின்னு கேட்டேன்.அப்புறம் முழு விசயத்தையும் அந்த பய சொன்னான்.ஏண்டா அய்யாக்கா ஈழத்துல நம்ம சொந்த பந்தங்க சோத்துக்கு வழியில்லாமல் அன்றாடம் செத்துகிட்டு இருக்கு அதை காப்பாத்த சொல்லி அம்புட்டு ஜனமும் போராடிகிட்டு கெடக்குது. நான் பெறந்த மதுரை மண்ணுல இப்படி தன்இனத்துக்காக குரல்கொடுக்காமல் எவனோ ஒரு பயலை சந்தோசப்படுத்த அவனே இவனேன்னு தட்டி போட்டுகிட்டு அலையுரானுவளே இன்ன அநியாயம் மக்கா இது?ஏலே மதுரைக்கார பயலுவளா நம்ம மண்ணோட பெருமையை இப்படி அடகு வைச்சுபுட்டு இப்படி அலையுரங்கலேடா. அந்த அழகிரி பய யார வேணுன்னாலும் இருந்துட்டு போறான். இந்த நேரத்துல இந்த பொறந்தநாளு தேவையாட மக்கா? அதுவும் ரெண்டு மாசமாகியும் தட்டி கழட்டாம அப்படியே கிடக்கடா மக்கா. அங்கே அம்புட்டு பேரு செத்துக்கிட்டு   இருக்கான் இங்கே வைகையில தண்ணி இல்லாம வெள்ளாமை இல்லாம எம்புட்டு பேரு செத்துக்கிட்டு   இருக்கான் இப்படி காசு கொடுக்கிறான்னு காலை நக்கிகிட்டு கெடக்கைங்கலேடா மக்கா?

செயிலுக்குள்ளே இருக்க வேண்டிய பயலுவ எல்லாம் தட்டியில கழுத்து நிறைய செயினை போட்டுகிட்டு மினிக்கிட்டு இருக்கானுங்க. அந்த அழகிரி பயலும் ஏதோ பாரி பரம்பரை மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கான். ஏலே மக்கா காசுக்காக இப்படி நக்கி பிழைக்கும் இனமா ஆகிப்போனது ஏண்டா?. கொஞ்சமாவது வீரம் ரோசம் சூடு சொரணை நம்ம பயலுவளுக்கு இருக்கும்னு நினைச்சா இப்படி வந்தவனுக்கு எல்லாம் கால் அமுக்கிவிடும் இனமா ஆகிட்டானுகளேன்னு வருந்திகிட்டே ஊரு வந்து சேர்ந்த்திட்டேன்யா. இனியொரு தடவை மதுரை செல்லும் தைரியம் எனக்கு இல்ல அய்யாக்களா!

50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை.

ஒக்ரோபர் 25, 2009 § 1 பின்னூட்டம்

50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை.

பெங்களூர் அக்-25

rafugee

தெற்காசியாவில் மனிதவுரிமைகள் மீறல்கள் என்ற கருத்தரங்கு (25/10/2009) நடைபெற்றது. நிகழ்வில் தெற்காசியாவின் மனிதவுரிமை மீறல்களை எடுத்து வைத்து பேசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் 50000 ஈழத்தமிழர்கள் மீள்குடியேற்றம் என்பது சுத்த பொய் என்றும் வன்னிமுகாமிலிருந்து ஜப்னா முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே உண்மை என்று குற்றம் சுமத்தினர். ஈழத்தில் நடைபெற்ற மனிதபேரவலங்கள் தெற்காசியாவின் மனித உரிமை மீறல்களை மேலும் ஊக்குவிக்கும் என்றும் ஈழத்தில் வெற்றிகரமாக  செயல்படுத்தப்பட்ட சோதனைகள் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் காஷ்மீரிலும்  நடைபெறுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ளன என்று கவலை தெரிவித்தனர்.

தெற்காசியாவில் மனிதவுரிமை மீறல்கள்   என்ற தலைப்பில் தெற்காசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் பெங்களூர் பல்கலைகழகம் இணைந்து யுடிசி கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் சிவ சுந்தர் ( ‘o eezham’ என்ற கன்னட புத்தகத்தை எழுதியவர்), பால் நியுமென் ( விரிவுரையாளர் பெங்களூர் பல்கலைகழகம்) முருகானந்தம்( செயலாளர் தமிழக மீனவர்சங்கம் ) எலிசபெத் ( விரிவுரையாளர் National Law School ) தீனா ( பத்திரிக்கையாளர் other media ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Human-rights-violations-25-10-09

நிகழ்வில் முதலாக பேசிய சிவ சுந்தர் இலங்கையின் ராணுவமயமாக்கல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் பற்றி  உரை நிகழ்த்தினார்.போரின் பிடியில் இல்லாத  ஜப்னாவில் ஐந்து லட்சம் மக்களுக்கு ஐம்பதாயிரம் ராணுவவீரர்களை இலங்கை அரசு நியமித்துள்ளது பத்து பேருக்கு ஒரு இராணுவ வீரர்  என்ற விகிதத்தில் இருப்பதால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள குறித்து கவலை தெரிவித்தார் மேலும் ராணுவவீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இலங்கை அரசிடம் இருப்பதையும் சுட்டிகாட்டிய சிவசுந்தர் பத்திரிக்கை சுதந்திரம் இலங்கையில் படும்பாடு குறித்தும் விளக்கமாக பேசினார்.

அடுத்தாக ‘சிறப்பு முகாம்களின் அவலங்கள்’ என்ற தலைப்பில் பேசிய பால் நியுமென் சிறப்பு முகாம்களில் இருந்து 50000 மக்கள் மீள்குடியேற்றம் செய்யபட்டுள்ளனர் என்று பொய்யான பரப்புரைகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். வன்னி சிறப்புமுகாமிலிருந்து ஜப்னா முகாமிற்கு இடம்மாற்றம் செய்யபட்டதை தவறாக மீள்குடியேற்றம் என்று பரப்புரை செய்வதையும்.இலங்கையில்  தேர்தல் முடியும்வரை ராசபக்சே அரசு மீள்குடியேற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதும் முகாம்மக்களின் வாக்குகள் தமக்கு எதிராக அமையும் என்ற அச்சத்திலேயே ராசபக்சேவின் அரசு மவுனம் சாதிக்கிறது என்றும் மழைகாலம் துவங்கினால் மிகப்பெரியளவில் மனிதபேரவலம் நடைபெறவாய்புகள் உள்ளன என்றும் சுட்டிகாட்டினார்.

தமிழக மீனவர்கள் மீதான மனிதவுரிமை மீறல்கள் என்ற தலைப்பில் பேசிய முருகானந்தம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல்படை  நிகழ்த்திய தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மிகவிளக்கமாக கூறினார் மத்தியரசும் மாநில அரசும் தமிழக மீனவர்களை கைவிட்டு விட்டமையையும் ஈழத்தமிழர்கள் பக்கம் நின்றிருக்க வேண்டிய இந்தியரசு சிங்களர்கள் பக்கம் நின்றதால் இந்தியாவிற்கே அது ஆபத்தாக போய்விட்டன என்று எடுத்துரைத்தார்.தமிழக மீனவர்கள் இலங்கை கடல்படையால் சுடப்பட்டு இறக்கும்பொழுது தமிழக காவல்துறையினால் விபத்தில் மீனவர்கள் இறந்ததாகவே இதுவரை  வழக்குகள் பதியப்பட்டு வருவதாகவும். தமிழக மீனவர்கள் தம்மை தற்காத்து கொள்ள ஆயுதம் எந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய எலிசபெத் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் மற்றும் ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகள் பற்றி பேசினார் ஈழத்தில் செயல்முறைப்படுத்தப்பட்ட சோதனை முயற்சிகளை இந்தியா வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தும் ஆபத்து உள்ளதாக கூறினார்.

காஷ்மீரின் மனிதவுரிமைகள் பத்தி பேசிய தீனா ‘ஜம்மு காஷ்மீரில் பிறந்தவன் என்றாலே தீவிரவாதி’ என்று பார்க்கும் சூழல் உள்ளது என்றும் ராணுவமயமாக்கல் ஏற்படுத்தும் வாழ்வியல் சிக்கலையும் பட்டியலிட்ட தீனா. இலங்கையில் நடந்த மனித பேரவலம் நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்களை நசுக்குவதற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று கூறினார்.

தமிழ்நாட்டு ஊடகங்கள் யாருக்காக இயங்குகின்றன?

செப்ரெம்பர் 9, 2009 § 10 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டு ஊடகங்கள் யாருக்காக இயங்குகின்றன?

aljazeera
அல்ஜசீரா தொலைக்காட்சியானது இலங்கையின் தடுப்புமுகாம்களின் கோரத்தை உலகிற்கு சொல்லி இருக்கிறது. சிலநாட்களுக்கு முன்னர் “சேனல்-4” என்ற தொலைக்காட்சி இலங்கையில் அப்பாவி பொதுமக்களை கண்ணை கட்டி சுட்டு வீழ்த்தும் கொலைகாட்சியை வெளியிட்டது. இந்த இரண்டு செய்தியும் இலங்கையில் நடக்கும் மனிதபேரவலத்தை உலகிற்கு காட்ட அந்தந்த ஊடகங்கள் ஆற்றிய ஊடகவியல் கடமையை நமக்கு காட்டுகிறது. வடஇந்திய ஊடகங்கள் வழமைபோலவே இந்த செய்திகளை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டன.தமிழகத்தில் செய்திதாள்கள்,தொலைக்காட்சி என்று எத்தனையோ ஊடகங்கள் உண்டு. உலக நடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிக்கைகளில் முற்போக்கு எழுத்தாளர்கள் அறிவுஜீவிகள் என்று பலபேர் பக்கங்களை நிரப்பி கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சி ஊடகங்களில் “சமூக அவலங்களை தோலுரிக்க” கருத்து மோதல் நிகழ்ச்சிகளும் புலனாய்வு என்ற பெயரில் தங்கள் சாகசத்தால் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்லி வருகின்றன. இப்படி பொறுப்புள்ளதாக காட்டி கொள்ளும் தமிழ்நாட்டு ஊடகங்கள்  “மக்கள் தொலைக்காட்சி” தவிர மேற்கூறிய இருநிகழ்சிகள் பற்றி பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை சில இருட்டடிப்பு செய்து பிற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

பொதுவாகவே ‘தினமலர்’ பத்திரிகை சிங்களவனின் ஊதுகுழலாகவே எப்போது இருந்து வந்திருக்கிறது என்பது நாமறிந்த உண்மை. யுத்த காலத்தில் கூட தமிழர்களை கொல்வது புலிகளே என்று தொடர்ந்து எழுதி வந்தது.கே.பி கைதை கொண்டாடிய தினமலர் ஆதாரத்தோடு வெளியிடப்பட்ட இந்த செய்திகளை தினமலரின் “ஊடக தர்மத்தின்படி” கண்டும்காணாமல் விட்டிருக்கிறது.

gnani-sankaran
தமிழகத்தின் “இதயத்துடிப்பு” என்று மார்தட்டும் பத்திரிகையில், தன்னைவிட்டால் தமிழ்நாட்டில் எழுதிதள்ள யாருமில்லை என்று “சமூக” அக்கறையோடு “ஒ” போடும் முற்போக்கு ஞானியோ அப்பாவி தமிழர்களை நிர்வாணமாக்கி கண்ணைகட்டி சுட்டுதள்ளிய கொடுஞ்செயல் நடந்தவேளையிலே “நொந்தசாமியான கந்தசாமி “ திரைப்பட குழுவிற்கு ஆலோசனை வழங்கி கொண்டிருக்கிறார். திருமதி Vrs சிறுபான்மைஅரசு “குடுமிபிடி” சண்டை பத்தி விலாவரியாக அலசி ஆராய்ந்த விகடனாரோ சேனல் 4 செய்திகளை ‘துண்டு செய்தி’களாக பிரசரித்துள்ளது. பிராபாகரன் எப்படி பிடிபட்டார், எப்படி கொல்லப்பட்டார் என்று புலனாய்வு கதைகளை அவிழ்த்துவிட்ட விகடன் குழுமமோ துண்டு செய்தியோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைத்து கொண்டது போலும்.
suntv-mar-14-2008

உடனே நம்மாளுக “அவைகள் எல்லாம் பார்ப்பன ஊடகங்கள் தோழர்! தமிழனுக்கென்று ஒரு ஊடகம் இல்லையே?” என்று வருந்திகொள்வார்கள். அப்படியே “தமிழர்கள்” நடத்தும் ஊடகங்களை பார்த்தோமானால் அதுக்கு பார்ப்பானே பரவாயில்லை என்று தோணும். இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறவேயில்லை என்று சூடம் அடித்து சத்தியம் பண்ணியானாலும் பண்ணுவார்கள கருணாநிதி குடும்ப ஊடகங்களை சேர்ந்தவர்கள். சூரிய மற்றும் கலைஞர் தொலைக்காட்சி ஊடகங்களை பொறுத்தவரை கருணாநிதி “சும்மாச்சுக்கும்” உண்ணாவிரதம் இருந்தநாளோடு ஈழத்தின் போர் நின்று சூமுகநிலை வந்துவிட்டது. ஜெயாதொலைக்காட்சி செய்திநேரங்களில் வளர்மதி போன்ற அம்மாவிசுவாசிகள் கருணாநிதியின் குடும்பத்தாரை சந்திக்கு இழுக்கும் சொல்லாடல்களை மட்டுமே ஒளிபரப்புகிறது. இதுல காங்கிரசும் தன் பங்கிற்கு இரண்டு தொலைகாட்சி ஊடகங்களை வைச்சி இருட்டடிப்பு செய்து கொண்டிருக்கிறது

marks
தாங்கள் எழுதுவதெல்லாம் “இலக்கியம்” இதில் பின்நவினத்துவம் முன்நவினத்துவம் முக்கால் நவினத்துவம் என்று எழுதித்தள்ளும் ஒரு அறிவுஜீவி கும்பலும் இவர்களுள் அடக்கம். இதில் முக்கியமானது மார்க்சு குழுவினர். சோபாசக்தி, சுகன் போன்ற இலக்கியபோலிகளின் உதவிகளோடு தொடர்ந்து சிங்களநாதம் இசைத்து கொண்டிருக்கின்றார் மார்க்சு . சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தாவை கொலை செய்தது ஏன் புலிகளாக இருக்க கூடாது? என்று கேட்கும் அளவிற்கு சுகன் சிங்களஅடிவருடியாக இருக்கிறார். சிங்கள இனவாதபோரே வெள்ளாளர்க்கும் சிங்களவருக்கும் இடையிலானது என்று கும்மி அடிப்பதே இவர்களின் முழுநேர வேலையாக இருக்கிறது. புலிகளை விமர்சிக்கிறோம் என்ற பேரில் இவர்கள் ராசபக்சேவின் ஏவலர்களாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்களே தவிர கம்பி வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் அப்பாவி மக்களை பற்றி அக்கறை கொண்டவர்களாக இல்லவேஇல்லை. “பேசாப்பொருளை பேசும்” மார்க்சுக்கும் சிங்கள இனவாதம் என்று வரும் பொழுது ஒரு பக்கமாக  கைகால்கள் இழுத்து கொள்கிறது போலும்.இணையத்தில் தங்கள் எண்ணங்களை பதியும் இணைய பதிவர்களில் கூட பெரும்பாலோனோர் “மொக்கையாக” ஒரு திரைப்படம் வந்தால் அதை விமர்சிக்க காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேனும் ஈழத்தில் நடக்கும் மனிதபேரவலம் குறித்து எழுதுவதில் காட்டமறுக்கின்றனர். இணையத்தில் எழுதுபவர்கள் கூட “அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி” என்று சிங்களன் பத்தி அபத்தமாக கவலை கொள்பவர்களாகவே இருக்கிறார்கள்.

090706aljazeera_3jpg

தமிழகத்தில் பல ஊடகங்கள் உண்டு அதில் தமிழர்கள் நடத்தும் ஊடகங்களும் உண்டு. இவையாவும் ஈழத்தில் துன்பமுறும் தமிழனின் நிலையை ‘தாண்டி’ செல்லவே விரும்புகின்றன அன்றி அது பத்தி ஆராய்ந்து எழுதிட ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். கள்ளதொடர்புகளையும் போலிசாமியார்களையும் காமம் சொட்ட சொட்ட அலசி ஆராய்ந்து எழுதும் இவர்களது நெஞ்சம் ஈழத்தை ‘அலச’ மறுக்கிறது. ஈழத்தமிழன் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணநிலையில் சுடப்பட்ட பொழுதும் அகதியான மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி விலங்கினும் கீழாக நடத்தப்பட்டபொழுதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஊடகங்கள் அதனை அம்பலப்படுத்தியபொழுதில் இவர்கள் அமைதிகாத்தார்கள். அவர்கள் அம்பலபடுத்திய செய்தியையாவது தமிழகமக்களுக்கு சொல்லவேண்டிய தார்மீக கடமையை ஆற்றாத தமிழ்நாட்டு ஊடகங்கள் யார் பக்கம் நிற்கின்றன? என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.

மதிமாறனின் தமிழ்தேசியஎதிர்ப்பு சரிதானா?

ஓகஸ்ட் 28, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

மதிமாறனின் தமிழ்தேசியஎதிர்ப்பு சரிதானா?

mathimaran_360
பெரியாரிய கருத்துக்களை தொடர்ந்து விதைத்து வருபவரும் தமிழகத்தின் ‘ஆதிக்க சாதிவெறி’க்கு எதிராக கடுமையாக எழுதிவரும் ‘அம்பேத்காரின் மாணவர்’ மதிமாறன் சமீபத்திய நாட்களில் ‘தமிழ்தேசியம்’ மீது தனது காட்டத்தை தொடர்ந்து காட்டி வருகிறார். தமிழ்தேசியம் என்றவார்த்தையை கேட்டாலே கடைசிபெஞ்சு மாணவன் காணக்குவாத்தியாரை கண்டவுடன் ஏற்படும் ‘கடுப்பு’ மதிமாறன் அவர்களுக்கு ஏற்படுவதை அவரது சமீபத்திய படைப்புகள் காட்டுகின்றன. மதிமாறன் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவன் என்றாலும் அவரது தமிழ்தேசிய எதிர்ப்பு சிலகேள்விகளை மனதில் எழுப்பி செல்வதை தவிர்க்க முடியாத காரணத்தினாலே இந்தபதிவினை இடுகிறேன்.

தமிழ்தேசியவாதிகள் என்று மதிமாறன் யாரை குறிப்பிடுகிறார்? ‘நெடுமாறன்’, ‘மணியரசன்’ போன்று தமிழகத்தின் அரசியல் முகவரி இல்லாத முகவர்களையா? தற்போதைய தமிழ்தேசியம் பேசும் இவர்கள் சொந்தமாக மேடைகள் போட்டு கருத்துமுழக்கம் செய்யும் வலிமை கூட இல்லாதவர்கள். அடுத்தவர்கள் போடும் மேடைகளில் ‘சிறப்பு விருந்தினராக’ சென்று வரக்கூடியவர்களாகவே தமிழ்தேசியவாதிகள் இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் சிறிதும் செல்வாக்கு இல்லாதவர்களே நீங்கள் ‘கட்டம்’ கட்டும் தமிழ் தேசியவாதிகள். இவர்களை பத்தி நீங்கள்போட்ட பதிப்புக்கள் எத்தனை எத்தனை?

DMK chief

தமிழ் தேசியத்தின் மீது காட்டமாக விமர்சனங்களை வைக்கும் மதிமாறன் அவர்கள் ‘திராவிட தேசியக்கட்சிகளை’ கண்டும்காணாமலும் விடும் காரணம் என்ன? பெரியாரின் நேரடிவாரிசுகள் என்று சொல்லிக்கொள்ளும் திராவிடகட்சிகள் தமிழகத்தின் கடந்த நாற்பதாண்டுகளில் ஆதிக்கசாதிகளை தடவிகொடுத்து அழகுபார்த்தது கொஞ்சமா என்ன?பெரியாரால் பெரிதும் நேசிக்கப்பட்ட காமராசர் இன்று சாதியதலைவராக்கப்பட்டு இருந்தாலும் உண்மையில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரே!. முத்துராமலிங்கம் பலமுறை காமராசரை சாதியதாக்குதல் புரிந்து இருக்கிறார். காமராசர் எனது கண்களுக்கு சாதிய ஆடையாளமாக தெரியவில்லை.

அண்ணா ‘நல்லதம்பி’ என்றழைத்த கருணாநிதி சட்டசபையில் முத்துராமலிங்கம் கூறிய பிற்போக்குத்தனமான “மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்! கங்கை சூதகமானால்?” என்ற அரைவேக்காட்டுகருத்தை மேற்கோளாக குறிப்பிட்டு இருக்கிறார். முத்துராமலிங்கத்தின் நுற்றாண்டுவிழா அதுதாங்க ‘குருபூஜைக்கு’ சிறப்பு விருந்தினராக சென்று வந்திருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டியில் சிறுத்தைகள் இந்த மண்ணில் நடமாடலாம் சிங்கங்கள் நடமாடக்கூடதா? என்றார் சிறுத்தை யார்? சிங்கம் யார்? என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். முத்துராமலிங்கத்தின் மரணத்தின் போது திமுக இரங்கல் வாசித்தா இல்லையா? முத்துராமலிங்கத்தின் குருபூஜைக்கு சென்றுவரும் கருணாநிதி இமானுவேல்சேகரன் குருபூஜைக்கு என்றாவது சென்றதுண்டா?
ambedkar
அதிமுக பத்தி சொல்லவேண்டியதே இல்லை அந்த கட்சியின் மறுபெயர் ‘தேவர்கட்சி’. வைகோ முத்துராமலிங்கத்தின் குருபூஜையை ஒருவருடம் கூட தவறவிடுவதில்லை. விஜயகாந்தும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை. விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிற்கும் ‘அம்பேத்கார்’ என்று ஒரு தலைவர் இருந்தார் என்பதாவது தெரியுமா? என்றே தெரியவில்லை. இன்னும் காமராசருக்கு மணிமண்டபம் கட்டுவது யார்? என்றே முடிவெடுக்கவில்லை. மண்டபபொறுப்பு சரத்குமார் கையில் இருக்கிறதாம்.

‘தென்னகத்துகாந்தி’ என்று கொண்டாடும் திராவிடகட்சிகள் ‘தென்னகத்து அம்பேத்கார்’ என்ற வார்த்தையை எப்பொழுதாவது சொன்னதுண்டா? திமுக மற்றும் அதிமுகவின் தென்மாவட்ட முகவரிகளாக இருப்பவர்களை கொஞ்சம் உற்றுநோக்குங்கள் யாரென்று புரியும்.

தமிழ்தேசியவாதிகள் என்றால் யாரென்றே தெளிவாகாதநிலையில் மீண்டும் மீண்டும் அவர்களையே கட்டம்கட்டும் மதிமாறன் திராவிடவாதிகளை அம்பலப்படுத்த தயங்குவது ஏன்? மொன்னையாக அங்கொன்றும் இங்கொன்றும் விமர்சனம் செய்துவிட்டு தமிழ்தேசியவாதிகளை ‘விட்டேனா பார்‘ என்று எழுதி கொண்டிருக்கிறீர்கள். பெரியாரின் திராவிட கழகத்தின் இன்றைய நிலை பத்தி சொல்வதென்றால் இந்த இழை பத்தாது.

பெரியார் அம்பேத்காரை கொண்டாடியதுபோலே பெரியாரியின் கொள்கைவழிவாரிசுகள் கொண்டாடது ஏன்? இன்று ஆட்சியில் இருக்கும் கருணாநிதி செய்யும் தவறுகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இவர்களை சொல்லாமல் தமிழக அரசியலில் சிறியதாக்கம் இல்லாத தமிழ்தேசியவாதிகளை பேசிப்பேசி என்ன செய்ய?
thevar
திராவிடத்தை தங்கள் கட்சியின் பெயரில் வைத்து இருக்கும் இவர்கள் தென்மாவட்டங்களுக்கு போனால் முதலில் செய்யும்காரியம் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போடுவதுதான். தென்மாவட்டங்களில் அம்பேத்காரின் சிலைவைப்பது புறக்கணிக்கப்படுகிறது அல்லது சிலைகளுக்கு மாலையிடுவது தவிர்க்கப்படுகிறது.

திராவிட கட்சிகளின் யோக்யதை பத்தி சொன்னால் நம்வீடு தேடி ஆட்டோ வரலாம். கருநாடகத்தில் வள்ளுவர் சிலையை வைத்த கருணாநிதியால் பாப்பாபட்டி கீரிபட்டியில் அம்பேத்கார் சிலை வைக்க முடியாதா என்ன?ஊருக்கு ரெண்டு பேர் கூட இல்லாத தமிழ்தேசியவாதிகளை மலையளவு விமர்சித்து உண்மையான குற்றவாளிகளான “திராவிட தேசியவாதிகளை” தப்ப விடலாமா? வெறும் கொள்கையளவில் இருக்கும் தமிழ்தேசியம்தானா தமிழகத்தின் தலைவிரித்தாடும் சாதியவெறிக்கு காரணம்?  மதிமாறன் திராவிட கட்சிகளின் மீதான தனது காதலை விடுத்து நேர்மையாக திராவிட கட்சிகளை விமர்சிக்க முன்வரவேண்டும்.

தமிழர்களின் சாதிய அபிமானம்! அல்லது என்று தணியும் இந்த சாதிய மோகம்?

ஓகஸ்ட் 24, 2009 § 12 பின்னூட்டங்கள்

என்று தணியும் இந்த சாதிய மோகம்!

vijay

நேற்று இரவு விஜய் தொலைக்காட்சியில்(23/8/2009) நீயா? நானா? நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது உறங்குவதற்கு முன் கொஞ்சம் பொழுது போக்கலாமேன்னு விஜய் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கினால் காரசாரமான விவாதம் ஓடிக்கொண்டு இருந்தது. தலைப்பு தென்மாவட்டங்களில் காதல் திருமணங்கள் தடைசெய்யப்படுவது சரியா?. நாமளும் தென்மாவட்ட ஆள்தான் என்பதால் அப்படி என்னதான் பேசுறானுங்க என்று பார்த்தால்…….

தென்மாவட்டத்தை சேர்ந்த ஒவ்வொருவனும் பேச ஆரம்பிச்சாய்ங்க! ஒருந்தன் சொன்னான் எங்க சாதிக்குத்தான் முதல் மரியாதை, அடுத்தவன் சொன்னான் நாங்கெல்லாம் ‘ராசராசன்’ பரம்பரைன்னு. அடுத்தவன் நாட்டாமையாம் அதுக்கு அடுத்தவன் சொன்னாத்தான் சாமியே கோவிலவிட்டு கிளம்புமாம். இப்படியே அவனவன் அவனோட சாதியபத்தி பெருமை அடிச்சாய்ங்க இவங்க சொன்னதில இருந்து பார்த்தா எல்லா பயலுவளும் ‘என்னசாதி’ன்னு தெளிவா தெரிஞ்சுச்சு. தென்மாவட்டம்னாலே ‘அருவா’தான் போல. தங்கச்சங்கலியும் முறுக்கு மீசையும் ‘அவுக’ பெருமைன்னு சொல்லிக்கிட்டாக. தாழ்த்தப்பட்ட ஒருவர் கூட அங்க இல்லைன்னு தெளிவா தெரிஞ்சுச்சு.

ஏன் காதலை தடை விதிக்கிறோம்? என்று ஊரு நாட்டாமையும் அதோட அல்லகையும் பேச ஆரம்பிச்சிச்சு.முதல்ல அல்லக்கை ஆரம்பிச்சுச்சு “வெளியூர் பயலுகள ஊருக்குள்ள விடமாட்டோம் எங்க ஊரு பிள்ளைகள வெளியில படிக்கவோ வேறு எதுக்குமோ அனுப்ப மாட்டோம். வெளியூருல இருந்து வந்தாலும் எங்க சாதி பயலுகள மட்டும்தான் அனுமதிப்போம். அப்படியே காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா அடிச்சு ஊரைவிட்டு விரட்டுவோம். காதலர்களோட அப்பா அம்மாவை ஊரைவிட்டு தள்ளி வைப்போம் எல்லாரு காலுளையும் விழவைப்போம் அப்படின்னு சிரிச்சுக்கிட்டே ஏதோ இவரு எவரெஸ்டுல எப்படி ஏறுவதுன்னு விளக்குவது போல விளக்கிகிட்டு இருந்தாப்ள.

vijay1

அப்படியே அல்லக்கை சொல்லுச்சு மேலும் விவரங்களுக்கு நாட்டாமையை அணுகுங்கள் அப்படின்னு பக்கத்திலேயே தாடியும் மீசையுமா ‘நம்மநாட்டாமை’ காதலிச்சா சாமி கோவிச்சுக்கும் நாங்க தெய்வத்தை நம்புற ஆளுங்க, ஆதனால்தான் எங்க ஊரு ஆளுகள படிக்க கூட வெளில அனுப்புறது இல்ல. காதலிச்சா சமூதாயம் அழிஞ்சுபோகும். வேறசாதி பையனை காதலிக்கிறது மாகாபாவம். காதலிச்சா சொல்லிபார்ப்போம் இல்லைன்னா ஆளையே காலி பண்ணிடுவோம். எங்களுக்கு சாதிதான் முக்கியம் “ அப்படின்னு பேசின பிறகுதான் தோணிச்சு இதுக்கு இவன் அல்லக்கையே தேவல போலிருக்கேன்னு. இவனெல்லாம் ஒரு நாட்டாமை இவனை நம்பியும் ஒரு ஊரு . திண்டுக்கல் பக்கத்துலதான் இவரது கிராமமாம் போயி பார்க்கலாம்னு தோணினாலும் நம்மள மாதிரி வேற “சமூக ஆளுங்கள” உள்ள விடமாட்டானுங்கன்னு திட்டத்தை கைவிட்டுட்டேன்.

ராசராசன் பரம்பரை அதுக்கு மேல! நாங்கெல்லாம் பயங்கரமான ஆளுங்க, உங்களுக்கு எல்லாம் வளர்ப்பு சரியில்ல அப்படின்னு சொல்லிட்டு எதிர்தரப்புல இருந்த பெண்மணி ஒருத்தரை பார்த்து சொன்னாரு “ஆச்சாரமான குடும்பத்துல இருந்து வந்த நீங்க இப்படி பேசலாமான்னு” ராசராசனைவிட ‘அவா’தான் உயர்த்தசாதின்னு அவரே ஒத்துக்கிறார்(இவரு உண்மைலேயே ராசராசன் பரம்பரைதான் போலிருக்கு!). நல்லவேளையாக அந்த பெண்மணியின் சொற்களில் பார்ப்பனியம் இருந்தாலும் எண்ணத்தில்  பார்ப்பனியம் இல்லை.(நிகழ்ச்சியில் ஒரே ஆறுதல் இவர்தான்!) சாதிவெறி தவறு என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

இந்த நீயா? நானா? சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்று உங்களைப்போலே எனக்கும் தெரியும்தான். இப்படி வெகுஜன ஊடகம் என்ற எண்ணம்(வெட்கமும்) கொஞ்சமும் இல்லாமல் எப்படி இந்த சாதிய வெறியர்களால் கொக்கரிக்க முடிகிறது என்பதே எண் கேள்வி. இதுல படித்த ஆண்கள், பெண்கள் வேறு. “எங்கசாதிதான் உயர்த்து” “காதலிச்சா சும்மா விடமாட்டோம் “என்றும் சலம்பல்கள் . ஏதோ இவர்களது கிராமம்தான் உலகம் என்பதைப்போலே காதலிப்பவர்களை இன்னும் ஊரைவிட்டு தள்ளி வைத்து கொண்டிருக்கிறார்கள். காதலித்தவர்களின் பெற்றோர்களை ஊரைவிட்டு நான்குமாதம் தள்ளிவைத்து ஊர்மக்கள் காலில் விழவைத்து தோப்புக்கரணம் போட வைத்து காதலித்த பிள்ளைகளோட எந்த தொடர்பும் வைத்து கொள்ளகூடாது என்று நிர்பந்திப்போம் என்று கூறிய ‘தற்குறி’ நிகழ்வு முடியும்வரை தனது சாதனைகளை எண்ணி எண்ணி சிரித்து கொண்டே இருந்தது.

kaathalar

வெகுஜன ஊடகங்களிலேயே இப்படி கொக்கரிக்கிற இந்த ஆதிக்க வெறியர்கள் தங்கள் சாதி பெருமையை நிலைநாட்ட கிராமங்களில் என்னவெல்லாம் செய்வார்கள்? என்று எண்ணிப்பாருங்கள். இன்னும் எத்தனை எத்தனை பெற்றோர்கள் ஊரின் மத்தியில் தோப்புக்கரணம் போட்டு அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்களோ? மாற்றம் என்ற ஒன்றினை ஏற்க மறுத்து கிராமங்களில் சாதிய திமிரோடு இன்னும் இவர்கள் நடைப்போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ‘படித்த’ இவர்களது வாரிசுகள் இவர்களைவிட சாதி வெறியர்களாக இருப்பது மிகப்பெரிய வேதனை.

நகரங்களில் உங்களுக்கு நெருக்கமான நண்பனுக்கு கிராமத்தில் அவனுக்கு வேறுமுகம் இருக்கிறது என்பது மறக்க முடியாத உண்மை.கிராமங்கள் சாதியத்தின் பிறப்பிடமாகவும் அதனை ஊக்குவிக்கும் இடமாகவும் இருக்கிறது. கிராமங்கள் அழியவேண்டும் என்று பெரியார் சொன்னதன் அர்த்தம் இப்பொழுதுதான் விளங்குகிறது.

இந்த நூற்றாண்டிலும் சாதிய வெறியர்கள் தங்கள் ஆதிக்கவெறி தவறென்று உணராமல் இருப்பதை நாம் உணரவேண்டும். இவ்வளவு கட்டுக்காவலையும் காதல் காலங்கலாமாக உடைத்து கொண்டிருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை. இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா? என்று பிற்போக்குத்தனமாக சாதிய பூசணிக்காயை மறைக்கும் போக்கினை விடுத்து சாதிவெறி அகற்ற அணிசேர்வோம் தோழர்களே! முதலில் நம் நண்பர்களிடம் விவாதிப்போம் சாதிய எண்ணங்கள் எவ்வளவு கொடியது என்று புரியும்படி செய்வோம். சுயசாதி அபிமானம் உடையவர்களை அதிலிருந்து மீட்டெடுப்போம். சமூகம் என்பதை சாதியின் அடிப்படையில் பார்ப்பவர்கள் இருப்பதால்தான் தமிழ்சமூகத்திற்கு என்ன நேர்ந்தாலும் தமிழன் கைக்கோர்க்க மறுக்கிறான். சாதியம் அழிந்தால்தான் தமிழ்சமூகம் பிறக்கும். சாதியம் நிறைந்த தமிழ்சமூகத்தால் யாருக்கு என்ன பயன்?

நம் வீட்டில் யாரேனும் சாதிவிட்டுசாதி காதலித்தால் முதலில் நம் ஆதரவை கொடுப்போம். அந்த காதல் வெற்றி பெறச்செய்வோம். சாதியத்தின் கரங்களில் இருந்து காதலர்களை காப்போம். காதல்திருமணம் சாதியை மட்டுமல்ல வரதட்சனை, மூடநம்பிக்கைகளை கொண்ட சடங்குகளையும்தான் அழிக்கிறது.காதலுக்கு தோள் கொடுப்போம். சாதியவெறியை வேரறுப்போம்.

Where Am I?

You are currently browsing the அனுபவம் category at தமிழன்பன் பக்கம்.