குண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா (18-04-2012)

ஏப்ரல் 18, 2012 § 4 பின்னூட்டங்கள்

குண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா 

எனது பக்கங்கள் என்ற ஒன்றை தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று வலைப்பூ துவங்கிய நாட்களிலேயே திட்டமிட்டது. ஆனால் என்ன மாயமோ தெரியல அப்படி ஒரேயொரு பதிவு கூட என்னால் எழுத முடியல. இனிமேல் எனது எண்ணங்களை தொகுத்து எழுதலாம் என்று இதை துவக்கி இருக்கிறேன்.

 

வழக்கமா இப்படியான  பதிவுகளுக்கு  உணவுப்பொருட்களின் பெயர்களை தருவது பதிவுலக வாடிக்கை. எனது பள்ளிக்காலங்களில் தமிழ்மணி சோடா கம்பனியில் பணிபுரிந்த மலரும் நினைவுகளில் இந்த பெயர். தனியார் மயமாக்களில் காணமல் போன பல சிறுதொழில்களில் மிக முக்கியமானது இந்த குண்டு சோடா தொழில்தான்.

*****************************************

தண்ணீர் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மன்மோகன் சிங்கும் மான்டேக் சிங் அலுவாலியாவும் சேர்ந்து தண்ணீரை தனியார் உரிமையாக்குவதற்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள் . உற்பத்தி செலவை விட குறைந்த விலையில் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படுவதால் மக்கள் நீரை வீணடிக்கிறார்களாம் அதனால் தனியாரிடம் விடுவதே சாலச்சிறந்தது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். நாம் குடிக்கும் நீருக்கு உற்பத்தி செலவு எங்கிருந்து வருகிறது?  யானைக்கு அல்வா வாங்கிய கணக்கு காட்டுகிறார் பொருளாதார மேதை. பதவி காலத்தில் ஓசியில் விமானத்தில் பறந்து விமான சேவையில் கோடிக்கணக்கில் நட்டம் ஏற்படுத்திய அரசியல்வாதிகள் மக்களைப்பார்த்து குடிநீரை வீணடிக்கிறீர்கள் எனும் கொடுமை இந்தியாவில்தான் பார்க்க முடியும்.

*****************************************

ஈழத்தமிழர்களுக்கு இந்திய நடுவண் அரசு இதுவரை செய்த துரோகங்கள் போதாதென்று இப்போது எதிர்கட்சி எம்பிக்களை இலங்கை அனுப்பி ராசபக்சேவிற்கு நாங்கள் எப்போதும் அன்பான அடிமைகள் என்பதை மெய்பித்திருக்கிறது.   இந்த பயணத்தால் எந்தவொரு நன்மையையும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க போவதில்லை. முதலில் இவர்கள் இலங்கை இனவெறியர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் வீடுகளுக்கு செல்லட்டும் மீனவர்கள் அனுபவித்த வெளியில் சொல்லப்படாத பல்வேறு கதைகள்  நம்மிடம் உண்டு. ஐநூத்தி சொச்சம் மீனவர்களை இந்த இனவெறியர்களிடம் பலி கொடுத்திருக்கிறோம். இருந்தும் இவங்களுக்கு இலங்கை அரசின் இனவெறிமுகம் தெரியவில்லை என்றால் யார் பொறுப்பு.

நிருபமா ராவ் இலங்கை சென்றபொழுது நான் எழுதிய ஒரு டுவிட்தான் நியாபத்திற்கு வருகிறது.அதையே சுஷ்மாவிற்கும் சொல்லிவைப்போம்.

பார்த்து செல்லுங்கள் நிருபமா நீங்கள் செல்வது பிணத்தையும் புணர்ந்தவர்களின் தேசம். #tnfisherman

*****************************************

பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வாடகைவீடுகளில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது கழிவறைகளின் அளவு. உலகின் மிகச்சிறிய கழிவறைகள் பெங்களூரில் வாடகை வீடுகளில் காணலாம். மிகச்சரியாக ஒரு மனிதனை நிற்கவைத்து மூன்று பக்கம் சுவர் எழுப்பி ஒரு பக்கம் வாசல் வைத்தது போன்று கழிவறைகள் கட்டி வைத்திருப்பார்கள். புதிதாக வீடு தேடுபவர்கள் முதலில் சரி பார்க்க வேண்டியது  கழிவறையகாத்தான் இருக்கும். பல புதிய வீடுகளின் கழிவறைகள் நாம் வசிக்கும் வீட்டின் கழிவறையை விட மிகச்சிறியதாக இருந்து தொலைக்கும்.ஆனாலும் அந்த சின்னஞ்சிறிய வீட்டிற்கு வீட்டுக்காரர் கேட்கும் வாடகை கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் நாராயணசாமியின் அணு உலை குறித்த அறிக்கைகள் போல இருக்கும். இது போன்ற வீடுகளில்  மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்ற அறிக்கையை அலுவலியாக்கள் வெளியிடும்வரை காத்திருப்போம்.

Advertisements

காங்கிரசின் அடுத்த காமெடி இப்போ யுவராசு !

ஜூலை 25, 2011 § 5 பின்னூட்டங்கள்

காங்கிரசின் அடுத்த காமெடி இப்போ யுவராசு !

இன்று காலையில் எல்லா செய்திகளிலும் கையில் ஏதோ பேப்பர் சகிதமாக நாலு பேரு புகார் கொடுக்க வந்திருந்ததை காட்டினார்கள். தமிழக இளைஞர் காங்கிரசில் 35 லட்சம் இளைஞர்களை சேர்த்ததாக புருடா விட்ட யுவராசால் நாலு பேருக்கு மேல ஆளு சேர்க்க முடியவில்லை.. பாவம். சரிய்யா யாரு மேல புகாரு எதுக்கு புகாரு? அப்படின்னு செய்தியை பார்த்தா அதே பழைய பல்லவி சீமான் மீது நடவடிக்கை எடுக்கணும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசிட்டார் அப்படின்னு. அடப்பாவிகளா நாட்டுல என்ன நடந்திட்டு இருக்கு சமச்சீர் கல்வி வருமா வரதா?ன்னு ஒவ்வொரு பெற்றோர்களும் ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள். விலையேற்றம் மின் தட்டுப்பாடு, சாயக்கழிவுநீர்  எத்தனை எத்தனை மக்கள் பிரச்சனை இதுல இப்போ சீமான் மேல நடவடிக்கை எடுப்பதுதான் இவர்களுக்கு முக்கியமாப்போச்சாம். சீமான் ஆரம்பத்துல இருந்து இதைத்தானய்யா பேசிட்டு இருக்காரு. பலமுறை இதையே சொல்லி சிறைக்கு அனுப்பியும் நீதிமன்றம் தானய்யா அவர வெளிய அனுப்பி
இருக்கு. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லை என்று நீதிமன்றம் வைகோவின் ‘பொடா’ கைதின் பொழுதே சொல்லிடுச்சே யுவராசு. இது தெரியாம ஏதோ கோமாவில இருந்து எந்திருச்ச மாதிரி கெளம்பி புகார் கொடுக்கிறேன் பேர்வழி என்று பப்ளிசிட்டி வேறு.

சரி, நாமளும் ஏதோ சின்னப்பய ஏதோ தெரியாம கிளம்பி வந்துட்டான் வீட்டுல இருந்து ஏதாவது பெரியவங்கள கூட்டிட்டு வாப்பான்னு சொல்லலாம்னு பார்த்தா. இவிங்க கோஸ்டில பெருசுங்க இவனைவிட  காமெடி பீசுங்க. கடந்த வார ஆனந்த விகடன்ல  தங்கபாலு கொடுத்த பேட்டியை பார்த்துட்டு அழுவதா சிரிப்பதான்னு நானே குழம்பிபோயிகிடக்கேன். இந்த வயசுலும் மனுசனுக்கு என்னவொரு
நகைச்சுவை உணர்வு. ஈழத்துக்காக தமிழ்நாட்டில் அதிகம் போராடியது ரெண்டு பேரு ஒருத்தர்  நெடுமாறன் இன்னொருத்தர் தங்கபாலுன்னு வேற சொல்லுறார் இதை படிச்சுட்டு எத்தனை பேருக்கு கிறுக்கு புடிச்சுச்சோ? எத்தனை பேருக்கு பேதியாச்சோ?. எப்படியா இப்படியெல்லாம் பேசிட்டு திரியுறீங்க எங்கள பார்த்தா அம்புட்டு மக்கு மாதிரியா தெரியுது.

தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை என்னவென்றே தெரியவில்லை. சரி நம் தொப்புள்கொடி உறவுகள் மீது சிங்கள ராணுவம் புரிந்த இனப்படுகொலை குறித்தும் அக்கறையில்லை. மக்கள் என்றாலே அது நேருவின் மக்கள் என்று அன்றிலிருந்து புரிந்து  வைத்திருக்கிறீர்கள்.  தமிழர்களை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் என்று பிரிக்கும் புத்திசாலிகள் இத்தாலியில் பிறந்தவரை அன்னை   என்கிறீர்களே? என்றால்  நம்மை தேசத்துரோகிகள் என்று சொல்லுவார்கள்.  நாளை ஸ்பெயினில் இருந்து அண்ணியை இறக்குமதி செய்ய காத்திருக்கிறார்கள். இவர்களின் ஈழத்தமிழர்கள் துயரம் பத்தி பேசினால் என்ன புரியப்போகிறது?.தமிழர் பிரச்சனையில் இவர்களிடம் நாம் பேசியதெல்லாம்  எருமைமாட்டில் பெய்த மழையாக போய்விட்டது. இனியும் இவர்களோடு சீரியஸாக பேசி நமது ஆற்றலை வீணடிப்பதை விட்டுட்டு மக்களோடு மக்களாக இந்த காமெடி பீசுகளின் காமெடிக்கு சிரித்து வைத்துவிட்டு போவோம்.

பின்குறிப்பு: மணிசெந்தில் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து

தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஆதரித்து பேசும் சீமானை கைது செய்ய வேண்டும் -இளைஞர் காங்கிரஸ் யுவராஜ் #

உண்மையில் தடை செய்யப்பட வேண்டிய இயக்கத்தில் இருக்கும் யுவராஜினை கைது செய்ய வேண்டும் – நாம் தமிழர்.

சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு!

ஜூன் 30, 2011 § 1 பின்னூட்டம்

சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு!

பெங்களூரில் ஜூலை 2 இல் சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலை குறித்த செய்திகளை விளக்கும் பொருட்டு மனித உரிமை அமைப்புகள் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பினால் நிகழ்வு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. சேனல்-4 வெளியிட்ட இனப்படுகொலை குறித்த ஆவணங்களை திரையிடல் மூலம் மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கி திருப்புவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

Save-tamils தோழர்களின் பல்வேறு முயற்சிகளின் பலனாக இலங்கை அரசின் இனபடுகொலைகளுக்கு எதிரான அமைப்பொன்றை இந்தியாவில் வசிக்கும் பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்போடு உருவாக்கி இருக்கிறார்கள். தமிழர்களிடையே மாத்திரம் விவாதிக்கப்பட்டு வந்த இலங்கை அரசின் இனவெறி இந்தியாவில் வசிக்கும் பிற  தேசிய இனங்களின் செவிகளில் ஒலிக்க இந்நிகழ்வு ஒரு துவக்க புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன். பெங்களூர் வாழ் தோழர்கள் இந்த செய்தியை பரவலாக்குவதோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக்கிட வேண்டிக்கொள்கிறேன், அது நமது கடமையும் கூட! .

பார்ப்பன ஞாநியின் சிங்கள பாசம் !

ஜூன் 7, 2010 § 6 பின்னூட்டங்கள்

பார்ப்பன ஞாநியின் சிங்கள பாசம் !

நாம எவ்வளவுதான் அம்பலப்படுத்தினாலும்  முற்போக்கு முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் பார்ப்பன ஞாநி தன்னோட திரிப்பு வேலையை நிறுத்துற மாதிரி தெரியல. வழமை போல தனது “ஓ”ட்டை பக்கத்தில் பார்பன வன்மத்தை அள்ளித்தெளித்திருக்கிறார் பார்பன ஞாநி.  இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில நடைபெறுவதை கண்டித்து பல்வேறு உணர்வாளர்களும் போராடி, விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வது தமிழர்களின் உள்ளங்களை புண்படுத்தும் என்ற எண்ணத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றனர். முன்னர் கலந்து கொள்வதாக கூறிய முன்னணி திரைக்கலைஞர்கள் தமிழர்களின் உணர்வுகளை மதித்து நிகழ்வை புறக்கணித்து இருக்கின்றனர் என்ற செய்தி நம்மை வந்தடைவதற்கு முன்னர்  பார்ப்பன ஞாநியின் வன்மம் நிறைந்த கட்டுரையை நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது. ஞாநி எழுத்துக்களில் நேர்மையை எதிபார்ப்பது கூட ஒருவகையில் மூட நம்பிக்கைதான் போலும் .

இந்த வார குமுதம் இதழில் சங்கரனின் பார்ப்பன மனசாட்சி வெளிப்படையாக சிங்கள பேரினவாதத்திற்க்கு வருவாய் இழப்பு ஏற்படலாமா? என்று வருந்தியிருக்கின்றது. இந்திய திரைக்கலைஞர்கள் சில அமைப்புகளின் போராட்டங்களைக் கண்டு நிகழ்வை புறக்கணித்தது சரியல்ல என்று மனம் குமுறியிருக்கின்றார். ஈழம் என்றாலே அரைவேக்காடுத் தனமான கருத்துகளை வெளியிடுவது ஞாநியின் வழக்கம்.

முன்னர் “ஓ”ட்டைப் பக்கங்களில் ஈழப்பிரச்சனை குறித்து எழுதும் போது மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது ஈழத் தமிழர்கள் கண்டுகொள்ள வில்லை என முட்டாள் தனமாக உளறியவர் தான் ஞாநி.மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிங்கள பேரினவாதம் பறித்த போது க‌ண்டிக்காத‌ த‌மிழ்த் தேசிய‌ காங்கிர‌சை விட்டு வெளியேறி த‌மிழ‌ர‌சு க‌ட்சியை த‌ந்தை செல்வா உருவாக்கினார் என்ப‌து கூட‌ தெரியாம‌ல் உள‌றிய‌த‌ன் மூல‌ம் ஈழ‌ வ‌ர‌லாற்றின் அரிச்சுவ‌டி கூட‌த் தெரியாத‌வ‌ன் தான் என்ப‌தை த‌ன் எழுத்துக‌ள் மூல‌ம் அம்ப‌ல‌ப‌டுத்திக் கொண்ட‌வ‌ர் தான் ஞாநி.
ஏதோ இந்திய‌ திரைப்ப‌ட‌க்க‌லைஞ‌ர்க‌ள் இல‌ங்கைக்கு சென்று அங்குள்ள‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் த‌மிழ‌ர்க‌ளையும் ஒருங்கிணைத்து அப்ப‌டியே இந்தியாவிற்க்கும் இல‌ங்கைக்கும் ந‌ல்லுற‌வை பேண‌ப் போவ‌து போல‌வும், இது பொறுக்காம‌ல் த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை செய்துவிட்டார்க‌ள் என்ப‌து போல‌ க‌தை க‌ட்டுகிறார் ஞாநி. IIFAவின் நோக்க‌ம் என்ன‌வென்று எல்லோருக்கும் தெரியும். உலக மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் போர் குற்றத்தை உலகுக்கு அம்பல படுத்துகின்ற இந்த நேரத்தில், இந்த‌ நிக‌ழ்வு மூல‌ம் இல‌ங்கையில்  மக்கள் மகிழ்வுடன் இருப்பது போலும், இலங்கை ம‌னித‌ உரிமை பேணும் நாடு போன்று ஒரு மாயையை உல‌க‌ நாடுக‌ளுக்கு பிரக‌ட‌ன‌ ப‌டுத்துவ‌தே இத‌ன் உள்நோக்க‌ம்.திரைக்க‌லைஞ‌ர்க‌ள் ஆபாச‌ ந‌ட‌ன‌ங்க‌ள் மூல‌மும், 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் மூல‌மும் க‌லை வ‌ள‌ர்ப்ப‌தை த‌டுக்க‌லாமா? என்று ரொம்ப‌வே கோப‌ப்ப‌டுகின்றார் ஞாநி.

த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் முகாம்களில் அடைக்கப்பட்டு வாழ‌ வ‌ழி இல்லாத‌ ஒரு ம‌ண்ணில், இர‌த்த‌ம் சிந்திக்கொண்டிருக்கும் ஒரு ம‌ண்ணில் கேளிக்கை விழாவா? என்று மே 17 இய‌க்க‌ம்,நாம் தமிழர் இயக்கம், சேவ் த‌மிழ் இய‌க்க‌ம், பெரியார் திராவிட கழகமும் மற்றும் ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ளும், க‌விஞ‌ர். தாம‌ரை , சீமான், இய‌க்குந‌ர். இராம் போன்ற‌ த‌மிழ் க‌லைஞ‌ர்க‌ளும் முன்னெடுத்த‌ போராட்ட‌ங்க‌ளை போகிற‌ போக்கில் ச‌க‌தி வாரி இரைத்திருக்கின்றார் பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ர‌ன்.

த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் ப‌டைப்பாளிக‌ளாக‌ சாதித்த‌து என்ன‌ என்ற‌ கேள்வி மூல‌ம் ப‌டைப்புல‌கில் உள்ள‌ க‌விஞ‌ர். தாம‌ரை நோக்கி கேள்வியை வைக்கின்றார். சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் த‌மிழ‌ர்க‌ளை கொன்ற‌ழித்த‌து க‌ண்டு ம‌ன‌ம் வெதும்பிய‌தால் தன்னால் முன்பு போல‌ க‌விதைக‌ளை ப‌டைக்க‌முடிய‌வில்லை என்று க‌விஞ‌ர். தாம‌ரை ப‌ல‌ இட‌ங்க‌ளில் ப‌திவு செய்துள்ளார். மேலும் த‌மிழ‌ர்க‌ளின் இத‌ய‌ங்க‌ளில் நீங்காத‌ இட‌ம் பிடித்து விட்ட‌ “க‌ண்ண‌கி ம‌ண்ணிலிருந்து ஒரு க‌ருஞ்சாப‌ம்” என்ற‌ க‌விதையினை எழுதிய‌வ‌ர் க‌விஞ‌ர்.தாம‌ரை என்ப‌து பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ர‌னுக்கு தெரியாம‌ல் போன‌து விய‌ப்ப‌ல்ல‌.

த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ளை நோக்கி கேள்வி எழுப்பும் பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ரா. சிங்க‌ள‌ ப‌த்திரிகையாள‌ரான‌ இல‌ச‌ந்த‌ விக்க‌ர‌ம‌துங்கா சிங்க‌ள‌ பேரின‌வாத‌த்தின் கோர‌ முத‌த்தை அம்ப‌ல‌ ப‌டுத்தி ம‌ர‌ண‌த்தை ப‌ரிசாக‌ பெற்ற‌ போது நீ என்ன‌ எழுதினாய் என்று நினைவிருக்கின்றதா. திசைநாய‌க‌த்திற்க்கு இருப‌து ஆண்டு க‌டுங்காவ‌ல் த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்ட‌ போது க‌ந்த‌சாமி ப‌ட‌க்குழுவின‌ரோடு க‌தா கால‌ச்சேப‌ம் ந‌ட‌த்திக் கொண்டிருந்த‌வ‌ன் நீ என்ப‌தை ம‌ற‌ந்து விட்டாயா?. சிங்க‌ள‌ இய‌க்குந‌ர் ச‌ட்டை கிழிந்தால் “நீதி செத்துருச்சு” என்று சொம்பு தூக்கும் நீ, சிங்க‌ள‌ காடைய‌ன் செத்து விழுந்த போராளி பெண்ணின் ஆடைகிழித்து மிருக‌ம் கூட‌ செய்ய‌த்துணியாத‌ காரிய‌த்தை நிக‌ழ்த்திய‌ பொழுது சொம்போடு காணாம‌ல் போன‌ ம‌ர்ம‌மென்ன‌?

த‌மிழ் ப‌டைப்பாளிக‌ளை சிங்க‌ள‌ ப‌டைப்பாளிக‌ளுட‌ன் ஒப்பிடுவ‌த‌ற்கு முன் இல‌ச‌ந்தா, திசைநாய‌க‌த்துட‌ன் உன்னை ஒப்பிட்டு உன‌து ம‌ன‌சாட்சியை வெளிப்ப‌டையாக‌ பேச‌ச் சொல். இல‌ச‌ந்தா, திசைநாய‌க‌ம் போன்ற‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் அள‌விற்க்கு நீ என்ன‌ கிழித்திருக்கின்றாய்? என்றும் உன் ம‌ன‌சாட்சியை நீயே கேள். இறுதி க‌ட்ட‌ போரின் போது த‌மிழ‌க‌ அர‌சும், த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரும் புரிந்த‌ துரோக‌த்தை பேசுவ‌த‌ற்கு முன் அத‌ற்கான‌ த‌குதி உன‌க்கு இருகின்றதா பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ரா? க‌ருணாநிதி ஆட்சியில் இருந்து துரோக‌ம் செய்த‌ பொழுது ப‌டைப்புல‌கில் ஈழ‌ப் போராட்ட‌த்திற்க்கு எதிராக‌ எழுத்துக‌ள் மூல‌ம் துரோக‌ம் செய்த‌வ‌ன் நீ என்ப‌தை த‌மிழ‌ன் இன்னும் ம‌ற‌க்க‌வில்லை.

சிங்களபேரினவாதிகளுக்கும் திராவிடதேசியவாதிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

பிப்ரவரி 5, 2010 § 2 பின்னூட்டங்கள்

சிங்களபேரினவாதிகளுக்கும்  திராவிடதேசியவாதிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.


முல்லிவாய்காளில் சிந்திய இரத்தத்துளிகளின் தொடர்ச்சி செங்கல்பட்டுவரை நீட்சி பெற்றிருக்கிறது. முல்லிவாய்காளில் சிங்களவன் தாகம்தீர்த்த தமிழினத்தின் குருதி மீண்டும் செங்கல்பட்டில் திராவிட ‘தேசியவாதிகளால்’ ருசிபார்க்கப்பட்டிருக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ்  இளைஞன்  சிங்கள காடையர்களால் அடித்தே கொல்லப்பட்டான், தமிழில் பேசியதற்காக மாணவன் தாக்கப்பட்டான், தமிழ் இளைஞனின் உடல் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது  என்று தொடர்ச்சியாக தமிழர்களின் செங்குருதியில் நினைந்து வழிகிறது ஈழத்தில் செய்திதாள்கள். ஒருவேளை சிங்களவர்களும் செம்மொழி மாநாட்டிற்கு தாயாராகிவிட்டார்களோ என்னவோ?

அடிமை நாய்களுக்கு சுதந்திரம் வேண்டுமா? என்று ஒரு  தமிழனை பார்த்து ஒரு தமிழனே பார்த்து கேட்கும் அளவிற்கு  இன உணர்வு தமிழகத்தில் வளர்ந்து நிற்பதை அறியமுடிகிறது. இந்தியாவில் அகதியாக இருக்கும் திபெத்தியர்கள் நிலையையும் ஈழத்தமிழர்களின் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால் தாயகதமிழர்கள் எவ்வளவு பெருந்தன்மையானவர்கள் என்று புரிந்துவிடும். கடந்த நாற்பதாண்டுகளாக திராவிடத்தை பெயரில் தாங்கி இந்திய இறையாண்மை காத்திடவே ஆட்சி நடத்திய  திராவிடகட்சியில் ஊட்டிய இன உணர்ச்சியின் வெளிப்பாடுகளை நாம் இன்று பார்த்து கொண்டிருக்கிறோம்.

பெரியார் பேசிய திராவிடம் என்பது இந்தியதேசியத்திற்கு எதிரானது.  பொதுவாகவே பெரியார் தேசியவாதங்களுக்கு எதிரானவர். தான் வாழும் காலம் முழுவதும் இந்திய தேசியம் என்பது ஆரியதேசியமே என்று முழங்கிவந்தார். தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று முழக்கங்கள் இட்டவர் பெரியார். ஆரியத்திடம் திராவிடம் அடிமையாகிவிடக்கூடாது என்று தொடர்ந்து போராடிய தலைவனின் பெயரை சொல்லி அரசியல் நடத்திய திராவிடவாதிகள். திராவிடம் என்பதை ஆரியத்தின் துணைதேசியமாக மாற்றி இருக்கிறார்கள். இந்தியாவின் வேறு எந்தமாநிலத்திலும் இல்லாதளவில் இறையாண்மையின் பூசாரிகளாக திராவிட கட்சிகள் இருந்துவருகிறார்கள்.

திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் திராவிட இயக்கம் கட்டியகாலங்களில் பெரியார் ‘பச்சை தமிழர்’ என்று யாரை அழைத்தாரோ அதே காமராசரை ‘கையாலாகதவர்’ என்றும் டெல்லி தலைமையை எதிர்த்து எதுவும் செய்ய இயலாதவராகவும் இருக்கிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தனர் திராவிடமுன்னேற்ற கழகத்தினர்.  இன்று வரலாறு மீண்டும் திரும்புகிறது படிக்காத மேதை  ஏழைமக்களின் கல்விக்கண் திறந்த காமராசரை என்னவெல்லாம் சொல்லி இவர்கள் விமர்சனம் செய்தார்களோ அதனினும் கீழான நிலையில் இருக்கிறது இவர்களின் ஆட்சி. பதவி சுகத்திற்க்காக எதையும் செய்யும் நிலையில் இருக்கிறார்கள் திராவிடதேசியவாதிகள்.

திராவிட அரசியல் கட்சிகள்தான் இப்படி என்றால் பெரியாரின் கொள்கை வாரிசாக நாம் கருதிய வீரமணி இவர்களைவிட மோசமான சந்தர்ப்பவாதியாக இருக்கிறார். பிழைப்புவாதத்தின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார். பெரியாரின் அசையும்சொத்து அசையாதசொத்துக்களோடு அறிவுசார் சொத்துக்களும் தனக்கே சொந்தம் என்று வாழ்ந்து வருகிறார். ஈழத்தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்த பொழுது வீரமணி அறிவாலயத்தில் பதுங்கி கொண்டதோடு தனக்கு தானே பெரியார் விருது வாங்குவதற்கான தேதி குறித்து கொண்டிருந்தார். ஈழத்தில் அத்தனை மக்கள் செத்துவிழுந்த பொழுதும் வாய்திறவாத வீரமணி கருணாநிதியின் இரண்டுமணிநேர உண்ணாவிரத நாடகத்தின் பொழுது “தலைவனுக்கு ஏதாவது ஆனால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!” என்று ‘பஞ்ச்’ விட்டுக்கொண்டிருக்கிறார்.  உண்மையான பெரியார் தொண்டர்களுக்கு ஆறுதல்தரும் ஒரேஒரு தலைவராக கொளத்தூர் மணி அண்ணன் மாத்திரமே இருக்கிறார்.

தாயக தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் எதுவும் பெரியளவில் நடந்தவிடாமல் தடுத்து நிறுத்தியது தேசியவாதம் பேசத்துவங்கிய திராவிடமுன்னேற்ற கழகம்.  பிரபாகரனை சர்வாதிகாரி என்று கூறிய கருணாநிதி ஈழத்திற்காக போராடிய வழக்கறிங்கர்களை எந்தமுறையில் ஒடுக்கினார் என்று அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். நீதிமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினால் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியசாமி மீது வீசிய முட்டைகளுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டுமா? என்று தனக்குத்தானே பதில் சொல்லி கொள்கிறார். சுப்பிரமணிசாமியை பார்த்தால் பம்மும் தமிழககாவல்துறை  ஈழப்போராளிகளை கண்டால் எகிறி அடிக்கிறது.  ஈழத்தமிழ் மக்களை அடித்தால் எவன் கேட்பான் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது என்று எடுத்து கொள்ளவேண்டியிருக்கிறது.

திராவிட தேசியவாதிகளை நாம் திட்டினால் உடனே பெரியார் முன்வைத்த திராவிடத்தை எதிர்பதாக கூறி அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியை ரட்சிக்க திராவிடத்தின் பெயரால் பல பூசாரிகள் இன்று இருக்கிறார்கள்.

தமிழன் என்ற  இனமோ, அவனுக்கென்று அடையாளமோ எதுவுமே இருக்கக்கூடாது என்று பிஞ்சுகள் என்று கூட பாராமல் குண்டு போட்டு கொன்று முடித்த சிங்கள பேரினவாதிகளுக்கும். பெயரளவில் தமிழ்நாடு என்று வைத்துவிட்டு தமிழையும் தமிழினத்தையும் அழிக்கும் அனைத்து செயல்களுக்கும் துணை போயி ஈழத்தமிழ் மக்களை வதைப்பதன் மூலம் காங்கிரசு கூட்டணியில் இடம்பெறலாம் என்று காய்நகர்த்தும் திராவிடதேசியவாதிகளுக்கும் பெரிதாய் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தனக்கு தானே தமிழதலைவன் என்று பட்டம் கொடுத்து கொள்ளும் கருணாநிதிக்கு இன்னும் புகழுக்காக அலையும் மனம் மாறவில்லை.  செம்மொழி மாநாடு என்ற பெயரில் தனது புகழ் பாடும் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். வீரமணி சுபவீ என்று கருணாநிதிக்கு வால்பிடித்து பிழைப்புவாதத்தின் தொடர்ச்சியாக சில கருஞ்சட்டை பூசாரிகள் மாநாட்டிற்கு ஆள்பிடிக்க அலைகிறார்கள்.


இந்த இனத்திற்கு தலைவன் ஒருவன் தேவையில்லை. நம்மை நாமே காத்தால் மட்டுமே நமது மொழியையும் நம் இனத்தையும் இனிவரும் காலங்களில் காத்திடமுடியும் என்பதை மனதில் வைத்து உலகத்தமிழர்கள் ஒருங்கிணையவேண்டும். இந்திய தேசியத்திற்கும் இத்தாலி தேசியத்திற்கும் விலைபோய்விட்ட திராவிட தேசியத்தை நம்பி தமிழினத்தை நட்டாற்றில் விட்டது போதும். நமக்கு இப்போதைய தேவை தேசியமல்ல தமிழர் என்ற உணர்வு.  திராவிட தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களை கருவறுக்கும் போலி திராவிடவாதிகளை அம்பலப்படுத்துவோம். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைவோம்.

பொங்கலை புறக்கணி செம்மொழி விழா கொண்டாடு!

ஜனவரி 13, 2010 § 1 பின்னூட்டம்

பொங்கலை புறக்கணி செம்மொழி விழா கொண்டாடு!


தமிழர்களின் புத்தாண்டாக தை முதல்நாளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக தமிழர்கள் பொங்கலன்று தமிழ்புத்தாண்டு கொண்டாடலாம். ஆங்கிலபுத்தாண்டை  சமீபத்தில் கோலாகலமாக தமிழகத்தில் கொண்டாடி இருக்கிறார்கள். ஆங்கிலபுத்தாண்டு கொண்டாடுதலை குறைகூறி  நண்பர்கள் மீண்டும் என்னை  தமிழ்தீவிரவாதி என்று  உறுதி செய்யும் வாய்பை அவர்களுக்கு வழங்கவேண்டாம் என்று இருக்கிறேன். ஆங்கிலபுத்தாண்டை அடிப்படையாக கொண்டுதான் நாம் அனைவருக்கும் எல்லாம் நடக்கிறது என்று நண்பர்கள் விவாதிக்கிறார்கள். நாம சம்பளம் வாங்கும் நாள்  முதற்கொண்டு நாம் பிறந்த தினம்வரை எல்லாம் ஆங்கில ஆண்டுகணக்கை அடிப்படையாக கொண்டுள்ளது. ஆங்கிலமாதம் பிறப்பதை வைத்தே ஊதியம் தருகிறார்கள் தமிழ்மாத அடிப்படையிலா சம்பளம் தருகிறார்கள்? என்று நம்மிடம் கேள்விகளை அடுக்குகிறார்கள். அதுசரி நாம்தான் சமூகம் சார்ந்த வாழ்வினை  விட்டுவிலகி பொருளாதாரம் சார்ந்து வாழத்துவங்கிவிட்டோமே  இன்னும் எதற்கு தமிழ்ஆண்டு கணக்கு எல்லாம் என்று தீர்மானித்துவிட்டார்கள் போல.

ஆங்கிலபுத்தாண்டை கொண்டாடுங்கள் அதற்காக எப்பொழுது சரியாக பனிரெண்டு மணியாகும் என்று ஒவ்வொரு வினாடியும் காத்திருந்து சரியாக கடிகாரம் பனிரெண்டை காட்டியதும் உற்சாகம் பீறிட கூச்சல் இடுவதும் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து ‘ஹாப்பி நியூநியர்’ சொல்வதும் என்று கொண்டாடுகிறீர்கள் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்புத்தாண்டு கொண்டாடு தமிழில் வாழ்த்து சொல் என்று கோரிக்கைவைக்கும் நம்மை பழமைவாதிகள் என்று சொல்லும் இவர்கள் காட்டுவாசிகள் போலே கூச்சலிடுவதை என்ன சொல்வது?

சரி இவர்கள் ஆங்கிலேயர் பாணியில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். அதேவேளையில் ஆங்கிலபுத்தாண்டிலும் நம்மாளுக நம்மூரு மூடநம்பிக்கைகளை சேர்த்துவிடுகிறார்கள்.ஆண்டின் முதல்நாளில் யாராவது திட்டினால் வருடம் முழுவதும் திட்டுவாங்குவோம் என்று கிளப்பிவிடுகிறார்கள்.  ஆண்டின் முதல்நாளில் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஆண்டுமுழுவதும் இருப்போம் என்று நம்புகிறார்கள். வருடத்தின் முதல்நாளில் யாரவது இறந்து போனால் இப்படி ஆண்டின் முதல்நாளிலேயே இழவுவீட்டிற்கு போவதா? என்று வருந்தி கொள்கிறார்கள். சரி பிறப்பு, இறப்பு, வருவாய் என்று அனைத்திற்கும் ஆங்கில ஆண்டுதானே கணக்கில் கொள்கிறீர்கள்  பிறகு தமிழ் ஆண்டின் நாட்காட்டி தேவை இல்லை என்று நினைத்தால் இவர்களுக்கு தமிழ்ஆண்டு கணக்கின் ஆடி மாதம் தேவைபடுகிறது.  ஆங்கிலபுத்தாண்டை கொண்டாடும் புதுமைவாதிகள் ஆடிமாதத்தில் வீட்டில் நல்லகாரியம் எதுவும் நடத்துவதில்லை. ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும் இவர்கள் எங்கே போனாலும் தங்கள் மூடநம்பிக்கைகளை மட்டும் தங்கள் கைகளிலேயே எடுத்து செல்வார்கள் என்று.

தமிழ்புத்தாண்டு தமிழகத்தின் நிலம் மற்றும் பருவநிலையை கணக்கில்கொண்டு அமைந்தவொன்று தமிழகத்தில் கார்காலம் கோடைகாலம் எல்லாம் ஆங்கிலேயர்களின் நாட்காட்டியில் உங்களால் காணமுடியாது.  கார்காலம் கோடைகாலம் எல்லாம் விவசாயிகள் பார்த்துக்கொள்ளட்டும் நமக்கு எதற்கு என்று இருப்பவர்களுக்கு நாம் சொல்லவதற்கு ஒன்றும் இல்லை.  தமிழர்களின் கால அளவினை கணக்கிட தமிழ் ஆண்டுகணக்கும் நமக்கான நாட்காட்டியும் தேவை என்பதோடு தமிழ்புத்தாண்டு தமிழர்களுக்கான  அடையாளம்  அடையாளத்தைதொலைத்துவிட்டு அரிதாரம் பூசிக்கொள்ளாதீர்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்.  நமது முதலாளிகளின் புத்தாண்டை கொண்டாடியதுபோல நமக்கான புத்தாண்டையும் கொண்டாட வாருங்கள்.


கடந்தாண்டு வேறு எந்தவொரு இனத்திற்கும் ஏற்படாத மனிதப்பேரவலமாக ஈழத்தமிழர்கள் நமது கண்ணெதிரே ஆயிரக்கணக்கில்  கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் அவர்கள் துயர் தீரவில்லை. வருங்காலம் எதுவென்று அறியாமல் முட்கம்பிவேலிகளுக்கு பின்னால் கண்ணீரோடு யாராவது அவர்களுக்காக பேசுவார்களா? என்று காத்திருக்கிறார்கள்.  இந்த நேரத்தில் தமிழ்புத்தாண்டை நாம் கொண்டாடலாமா? என்ற எண்ணம் உணர்வுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இருக்கும். எழுச்சிதமிழர் என்று அடைமொழியோடு  ஈழத்தமிழர் இரத்தம் இன்னும் காயவில்லை பொங்கல் திருநாளை புறக்கணியுங்கள் என்று அறிக்கை விட்டுறிக்கிறார் திருமா.


பொங்கலை புறக்கணிக்க நாங்கள் தயார் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க திருமா தயாரா?  இல்லை அதற்கும் முத்தமிழ் அறிஞரிடம் அனுமதிபெறவேண்டுமா?  ஒருவேளை செம்மொழி மாநாட்டிற்கு இன்னும் நாட்கள் கிடக்கிறது அதற்குள் இரத்தம் காய்ந்து விடும்  என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார் போலும். பொங்கல் திருநாள் காலம்காலமாக தமிழர்களின் வாழ்வோடு இணைந்த தமிழனுக்கென்று இருக்கும் ஒரே ஒரு திருநாள். செம்மொழி மாநாடு அப்படி அல்ல.தனது கரத்தில் படிந்த ஈழத்தமிழனின் இரத்தகறையை மறைக்க தமிழனத்தலைவர் ஏற்பாடு செய்திருக்கும் நாடகவிழா.

பொங்கலை நாம் கொண்டாடினாலும் புறக்கணித்தாலும் அந்த செய்தி நமக்குள்ளே தங்கிவிடும். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அப்படி அல்ல அந்த மாநாட்டு செய்தி உலகெங்கும் சென்று சேரும். ஈழத்தமிழன் செங்குருதியில் நினைந்ததால்தான் தமிழுக்கு செம்மொழி மாநாடு கொண்டாடுகிறோம் என்று உலகோர் நினைத்து கொள்ளமாட்டார்களா?.  இங்கே நாம் மாநாடு கொண்டாடினால் அது ஈழத்தமிழர்களின் துயரத்தை ஒருவழியில் தீர்க்குமே! என்று சுபவீ மாதியான  தமிழினதலைவரின் எடுபிடிகள் கதைகட்டி கொண்டிருக்கிறார்கள். உலகத்தமிழர்கள் கோவையில் கூடினால் உடனே ஒருவேளை தமிழர்கள் நம்மீது படையெடுத்துவிடுவார்களோ? என்று ராசபக்சே பயந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு உரிமை கொடுத்துவிடுவான் என்று ஒருபக்கம்  புனைவுகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.

ஒருவீட்டில் இழவு விழுந்தால்  அடுத்த வீட்டில் கல்யாணம் நடப்பதில்லையா? என்று புறநானூற்று பாடலை துணைக்கு அழைத்து ஈழத்தமிழர்களின் மரணத்தை பொருட்படுத்தாமல் விழாக்களுக்கும் விருதுகளுக்கும் தொடர்சியாக  அலைந்துகொண்டிருக்கிறார் தமிழினத்தலைவர்.  தன்னை உண்மையான ஈழ உணர்வாளன் என்று சொல்லிக்கொள்ளும் திருமா இன்னும் கருணாநிதியின் அரவணைப்பில்  இருந்துகொண்டு பொங்கலை புறக்கணி செம்மொழி விழா கொண்டாடு என்பது போல் அறிக்கைவிடுவது தமிழர்களை மேலும்மேலும் முட்டாளாக்குவதே தவிரே அதில் தமிழர் நலன் சிறிதுமில்லை என்பதே எனது கருத்து.

தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாடும் முன்னர்  நமது தொப்புள்கொடி உறவுகளை மனதில் கொண்டு அவர்களின் துயர் நீங்க நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.  தமிழ்நாட்டில் வாழும் விவசாயிகளின் அறுவடை திருநாளான பொங்கலின் போது நமக்கு காலம்காலமாக சோறு போடும் விவசாயிகளின் நீராதரப்பிரச்சனைக்கு நாம் என்ன செய்தோம் என்றும் சிந்திப்போம். சமூகம் சார்ந்து வாழ விரும்பும் தோழர்கள் தமிழர்களின் திருநாளான பொங்கலின் போது வெட்டி அரட்டைகளை வெளியே நிறுத்தி தமிழினத்திற்க்காக நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா என்று சிந்திக்கலாம்.


தமிழர்கள் பொங்கலை புறக்கணிப்பதைவிட உலத்தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதே அவசியமானது. அதனை கூறுவதற்கு திருமா முன்வரமாட்டார் என்பது நமக்கு நன்றாகத்தெரியும் உலத்தமிழ் செம்மொழி மாநாடு கருணாநிதியின் நலன்சார்ந்த ஒன்று அவர் கோவித்து கொள்வார் மாநாட்டை நிறுத்தசொன்னால் கூட்டணிக்கு வெளியே நிற்க வேண்டிய நிர்பந்தம் வரலாம். பொங்கலை புறக்கணி என்றால் எவனும் கோவித்து கொள்ளமாட்டான்  கூட்டணியிலும் பிரச்சனை இல்லை புலம்பெயர் ஈழத்தமிழர்களும் ஆறுதல் அடைவார்கள்  என்ற அரசியல் கணக்கு.   இப்படியே அவனவன் அரசியல் லாபத்திற்கு தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து கொண்டிருக்கிறார்கள்.

*********************************************************

பொங்கலுக்கு எப்படியும் விடுமுறை எடுப்பீர்கள் குடும்பத்தாரோடு பொழுதுகள் கழிப்பீர்கள் என்று நம்புகிறேன். நாள்முழுவதையும் தொலைகாட்சி பெட்டிக்கு அடகு வைத்து உலக தொலைக்காட்சி வரலாறில் முதல்முறையாக உங்கள் தொலைக்காட்சிக்கு வரும் அந்த திரைப்படத்தில் கவனம் செலுத்தும் உறவுகளே. பொங்கல் நாளில் உங்கள் குடும்பங்களோடு உரையாடி பாருங்கள். முன்னரே தயாரித்த நகைசுவைகள் மூலம் உங்களை சிரிக்க வைக்க முயலும் பட்டிமன்றங்களில் மயங்கி கிடக்காமல் முடிந்தால் உங்கள் குடும்பத்தாரோடு விவாதியுங்கள் தமிழினம் வீழ்ந்தது யாரேலே என்று உலக வரலாற்றில் முதல்முறையாக  தமிழின வரலாற்றை பகிர்ந்து கொள்ள முயலுங்கள்.தமிழ்  புத்தாண்டின்  முதல் நாளிலாவது தமிழனாக இருக்க முயல்வோம்.

மாறன்சகோதரர்களுக்கு சிங்களவர்கள்தான் சோறுபோடுகிறார்களா?

திசெம்பர் 12, 2009 § 2 பின்னூட்டங்கள்

மாறன் சகோதரர்களுக்கு சிங்களவர்கள்தான் சோறுபோடுகிறார்களா?  அல்லது சன் குழுமத்தின் சிங்கள பாசத்தின் காரணம் என்ன?


எல்லாம் என்னுடைய தவறுதான் அதில் துளியும் சந்தேகமில்லை. தமிழ்தொலைக்காட்சிகளின் செய்திகளின் நம்பகத்தன்மை பொய்த்து போய் பலநாட்கள் ஆகிவிட்டது. மக்கள்தொலைக்காட்சியை நாம் நம்பிக்கொண்டு இருந்தாலும் அவர்கள் கூட்டணிதாவும்  மனநிலையில் இருப்பதால் திடீரென்று செம்மொழிமாநாட்டில் கலந்துகொள்வது என்று ராமதாசு அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து யாரைத்தான் நம்புவதோ? என்று தமிழ்தொலைக்காட்சிகளின் செய்திகளை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஆங்கிலதொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருவது வழக்கம்( அங்கென்ன வாழ்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது). தமிழகம் குறித்த செய்திகளை தமிழர்கள் திரித்து சொல்வதைகாட்டிலும் வேறு யாராவது திரித்து சொல்வது அவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுப்பதில்லை என்பதும் காரணம். சன், ஜெயா செய்திகளையெல்லாம் பார்த்து பழகிய நமக்கு வடக்கர்களின் திரிப்பு எல்லாம் பெரியவிடயமா என்ன?

வீட்டுல எப்பபார்த்தாலும் சன் தொலைக்காட்சி இடைவிடாமல் ஓடி கொண்டிருப்பதால் எதிர்பாராத விபத்தாக சன் செய்திகள் பார்க்க நேர்ந்ததை என்ன சொல்லுவது?. சரி நான் பார்த்த ‘அந்த’ செய்தி பத்தி கொஞ்சம் பார்ப்போம்.

இலங்கை வேண்டுகோள்! என்ற தலைப்பில் ஐரோப்பிய யூனியனின் இலங்கைக்கான  வரி சலுகையை விலக்குவதை தவிர்க்குமாறு  சிங்கள அமைச்சர் வேண்டுகோள் விடுத்ததை ஒளிபரப்பியது. இலங்கையில் மனித உரிமைகள் மேம்படுத்தப்படும்(?) என்று இலங்கை உறுதி அளித்துள்ளது என்று திரும்ப திரும்ப செய்தி வாசித்தனர். செய்தியின் போது ஓடும் எழுத்துக்களிலும் இது வந்து கொண்டே இருந்தது. இதை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக எதற்க்காக ஒளிபரப்புகிறார்கள் என்ற சந்தேகத்தை ஒத்தி வைத்துவிட்டு இவனுக என்னதான் சொல்லவரானுங்க என்று தொடர்ந்து செய்திகளை பார்த்து தொலைத்தேன்.

அடுத்ததாக வந்த செய்திகள் இசுரேலில் இருந்து ஆறு  அதிநவீன படகுகள் இலங்கை வாங்கியுள்ளதாகவும் வரும் ஜனவரியில் அவர்களின் எல்லையோர பாதுகாப்புபடையில் சேர்க்க இருப்பதாகவும், இதன் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கபோவதாகவும் அத்தோடு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இதன் மூலம் சிங்களவர்கள் தடுத்து நிறுத்த போவதாகவும் தொடர்ந்து வாசித்து கொண்டு போனார்கள்.

எனக்கு உண்மையிலேயே சந்தேகமாகிப்போனது நான் தமிழ் தொலைக்காட்சிதான் பார்த்து கொண்டு இருக்கிறேனா? சன் தொலைக்காட்சி தமிழகத்தில்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறதா? மாறன் சகோதரர்கள் சிங்களத்தில் ஏதும் தொலைக்காட்சிகள் நடத்துகிறார்களா அப்படி அங்கே போகவேண்டிய செய்தி அறிக்கை தவறாக தமிழ்செய்திகளுக்கு வந்துவிட்டதா? என்றெல்லாம் யோசிச்சுயோசிச்சு தூக்கம் போனதுதான் மிச்சம்.

சிங்களதொலைக்காட்சிகள் கூட இந்தளவிற்கு விசுவாசத்தோடு இருப்பார்களா? என்ற ஐயத்தை நம்மால் தவிர்க்க முடியவில்லை. சன் குழும தொலைக்காட்சிகள் அது செயல்படும் மாநிலத்தை பொறுத்து செய்திகளை திரித்து வெளியிடும் என்ற குற்றச்சாட்டு பலநாட்களாக இருந்து வருகிறது. சிங்களனுக்கு ஆதரவாக தமிழகத்தில் செய்திவாசிக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழகமீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க சிங்களன் அதிநவீன படகு வாங்குகிறான் என்று தமிழகத்தின் தலைநகரில் உற்காந்து கொண்டு செய்தி வாசிக்கும் தைரியம் மாறன் சகோதரகளுக்கு வந்திருக்கிறது.  சிங்களவன் சுட்டு வீழ்த்திய 600  மீனவர்களுக்கு நாம் நியாயம் கேட்கும் வேளையில்  தமிழகத்திலிருந்தே தமிழர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று செய்திகள் வாசிக்கிறார்கள்.

தமிழக எல்லைகளில் திருட்டுத்தனமாக கேரளாவினர் கழிவுகளை கொட்டுவதை தடுக்க தமிழகம் நடவடிக்கை எடுத்தால்( நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும், நமக்கு ஏது அம்புட்டு தைரியம்)  அப்படியே கேராவில் இருக்கும் சன்குழும செய்திகளில் சொல்லிப்பார்க்கட்டும். அதுக்கு அப்புறம் எப்படி சேரநாட்டில் மாறன் பிரதர்ஸ் தொழில் பண்ணுரானுகன்னு பார்ப்போம்.


முரசொலிமாறன்  என்னும் திராவிடபோராளி பெற்றெடுத்த பிள்ளைகள் ராமாயண, மகாபாரத தொடர்களை ஒளிபரப்பி திராவிட சேவைசெய்தது போதாதென்று இன்று சிங்களனுக்காக செய்தி வாசித்து தமிழ்-சேவையை ஆரம்பித்து விட்டார்கள் போலும்.  சன்-குழுமம் இன்று பலதிசைகளில் வேர் பரப்பி இருந்தாலும் முதலில் தமிழ் நாட்டில் “சன் டிவியின் தமிழ் மாலை” என்று மாலை நேரங்களில் மட்டும் ஒளிபரப்பை ஆரம்பித்து தமிழர்களின் ஆதரவால் முழுநேரம் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சிகளை நடத்தி கொண்டிருக்கின்றனர். முழுநேரமாக ஒளிப்பரப்பினாலும் பழைய நியாபகத்தில் “சன் டிவியின் தமிழ் மாலை” என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தங்களை வளர்த்து விட்டதற்கு விசுவாசம் காட்ட தமிழர்களின் மார்பில் பாய்ந்து இருக்கிறார்கள் போலும்.இவர்களின் குடும்பத்திற்கு இடையிலான அதிகாரபோட்டியில்  தினகரன் ஊழியர்கள் மூன்றுபேர் இறந்ததையே தங்கள் ஆதாயத்திற்காக பயபடுத்திகொண்டவர்கள் இவர்களிடம் தமிழகமீனவர்களை பற்றி  நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதும் நாம் அறிந்ததே. இப்படியே போனால் தமிழ்நாட்டில் மேலும் ஒரு சிங்கள ரத்னா கிடைத்து விடுவார் என்பதில் ஐயமில்லை. செம்மொழி மாநாட்டிலேயே அந்த விருதினை தமிழினதலைவர் கையினால் மாறன்களுக்கு கையளிக்கப்பட்டாலும் நாம் ஆச்சரியப்பட போவதில்லை.

Where Am I?

You are currently browsing the ஈழம் category at தமிழன்பன் பக்கம்.