கதைகேளு கதைகேளு தமிழ்நாடு கதைகேளு!

மே 4, 2010 § 4 பின்னூட்டங்கள்

கதைகேளு கதைகேளு தமிழ்நாடு கதைகேளு!

சோழர் பரமபரையில் ஒரு முதலமைச்சர் ! மனுநீதி சோழனின் மறுபதிப்பு! என்று மேடைதோறும் கவிப்பேரரசு வைரமுத்தால் புகழப்படும் கருணாநிதி சக்கரநாற்காலி துணையுடன் டெல்லி பயணப்பட்டு இருக்கிறார்.  எதற்காக திடீர் திக்விஜயம் என்று யோசித்தால் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டாரா? அல்லது இழுத்து வரப்பட்டாரா? என்று யோசனை மேலெழுகிறது.  வடக்கிந்திய ஊடகங்கள் கருணா ராசாவை மத்தியமைச்சர் பதவியில் இருந்து காப்பதற்கே இந்த தள்ளாத வயதியிலும் தள்ளுவண்டியில் பயணமானார் என்கிறது. தமிழ்நாட்டு ஊடக பெருந்தகைகளோ செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பு பெரியார் மய்யம் திறப்பு என்று வண்ணவண்ணமாக செய்திகளை அள்ளித்தெளிக்கிறது. எதுதான்யா உண்மை?. ராசா தொலைத்தொடர்பு துறையில் இருந்து விளக்கி கொள்ளப்படுவாரா? என்று  நேரிடையாக கேள்வியினை ஒரு பத்திரிக்கையாளர் எழுப்பிய பொழுது கருணாநிதி பதில் சொல்கிறார் “உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி எதுவும் நான் கொண்டுவரவில்லை!” என்று. ஆங்கில செய்தி ஊடகத்தில் மாத்திரமே வெளியிடப்பட்ட இந்த காணொளி கண்டு கொஞ்சம் மண்டை கலங்கித்தான்யா போச்சு கேட்ட கேள்விக்கும் பதிலுக்கும் என்ன சம்பந்தம்?. வடக்கிந்திய ஊடகங்கள் எல்லாம் ராசா பதவியை காப்பதற்கே இந்த பயணம் என்று செய்தி வாசித்து கொண்டிருந்த வேளையில் ராஜ் தொலைக்காட்சி பெரியார் கொள்கைகளை படித்த ஒருவன் கோவிலுக்கு போகக்கூடாது என்று (முதல்ல தலைவரு குடும்பத்துல இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்) இதுவரை எவரும் சொல்லாத ஒப்பற்ற தத்துவத்தையும் தண்ணீர் பங்கீட்டால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் வந்துவிடாமல் நடுவண் அரசு பார்த்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையும் வழங்கினார் கருணாநிதி என்கிறது. யாரைத்தான் நம்புவது? தமிழ்நாட்டு ஊடகமும் சரி, வடக்கிந்திய ஊடகங்களும் சரி, தனக்கு தேவையான செய்திகளை மாத்திரமே வெளியிடுகிறார்கள் என்பது மாத்திரம் புரிகிறது.
நளினி விடுதலை செய்வது மாநில அரசின் விருப்பம் அதில் மத்தியரசு தலையிடாது என்று மத்தியரசு கூறிய பிறகும் நளினி விடுதலையில் நடுவண் அரசிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பது என்று கொள்கை முடிவை கருணாநிதி அரசு எடுக்கிறது. நினைவு தப்பிய நிலையில் பக்கவாதத்தால் முடங்கிப்போன மூதாட்டிற்கு மருத்துவ உதவி கொடுக்காமல் விமானநிலையத்தில் கூட இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்புகிறார்கள் இது மனுநீதி சோழருக்கே தெரியாதாம் அந்த நேரத்தில் தலைவரு தூங்கிகினு இருந்தார் தெரியுமா என்று சுபவீ தமிழ் ஆர்வலர்கள் மீது ரெம்பவே கோபம் காட்டுகிறார் .  இது தலைவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று திருமாவும் ராமாதாசும் அறிக்கை வாசிக்கிறார்கள்.
இதற்கு பெயர் கூட்டணி தர்மம் என்கிறார்கள் அது என்னங்க இப்படி ஒரு அபூர்வமான கூட்டணி தர்மம்? அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் முடிப்பதுதான் இவர்களின் கூட்டணி தர்மமா?  ஈழம் என்றாலே மத்தியஅரசை கேட்டுவிட்டுத்தான் முனகல் கூட விடுவோம் என்பது தமிழின தலைவரின் கூட்டணி தர்மமாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையை உச்சரித்தாலே கருணாவிற்கு உடல் வேர்த்து விடுகிறது. அந்த வார்த்தையின் மாயம் நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. தினகரன் அலுவலக எரிப்பிற்கு பின்னால் புளித்து போயிருந்த மாறன் குடும்ப உறவு ஸ்பெக்டரம் என்ற வார்த்தையை உச்சரித்த அடுத்த சில நாட்களிலேயே இதயம் இனித்தது கண்கள் பணித்தது என்றானதன் மர்மம் இன்னும் விலகவில்லை.

இதுல கருணாநிதியின் கொள்கை விளக்க அல்லது கருணாநிதி சொல்வதற்கெல்லாம் ஒத்து ஊதுவதற்கு ஒரு குறும்படை எப்போதும் தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் தலைகாட்டிபடி இருக்கிறது. குடுத்த காசுக்கு மேல இவன் கூவுராண்டா! என்று நினைக்கும் அளவிற்கு சுபவீயின் பேட்டிகள் அறிக்கைகைகள் சமீப காலமாக இருக்கிறது.  ஒருகாலத்தில் ஈழ ஆதரவளார் என்று அறியப்பட்ட வார்த்தை வியாபாரி சுபவீயின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்க துவங்கி இருக்கிறது என்பது அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் இருந்து தெரிகிறது.
செம்மொழி மாநாடு சிங்களர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்கிறார். இனப்படுகொலை செய்த இலங்கையை தமிழக அரசானது கண்டித்தால் நடுவண் அரசானது கருணாநிதி அரசை கலைத்துவிடுமே என்று கவலை கொள்கிறார் . செம்மொழி மாநாடு என்ற பெயரில் செம்மறியாட்டு தமிழர்கள் கூடி நின்றால் போதும் சிங்களவன் பயந்து போயி உரிமைகளை கொடுத்து விடுவானாம். இனப்படுகொலைக்கான மாநாடு ஒன்றை கூட்ட துப்பில்லாத அல்லது சட்டமன்றத்தில் சிங்கள இனவாத அரசை இனவெறிபிடித்த அரசு என்று தீர்மானம் நிறைவேற்ற துணிவில்லாத இவர்கள் ஒன்று கூடி கருணாநிதி புகழ் பாடுவதால் தமிழனுக்கு உரிமை கிடைத்துவிடும் என்கிறார் வார்த்தை சித்தர் சுபவீ.

பார்வதியம்மாள் சென்னை விமான நிலையத்தில் காவல் துறையால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டபொழுது இவருக்கு அழைப்புவிட்ட உணர்வாளரை கடிந்து கொண்டாராம் இப்போதுதான் எங்கள் நியாபகம் வருகிறதா? என்று. இன்னுமா உலகம் உங்கள நம்புது சுபவீ?

ஈழத்தமிழர் பிரச்சனை என்றாலோ! தமிழக மீனவர் பிரச்சனை என்றாலோ! கடிதம் எழுதிவிட்டேன் என்று கலட்டிக்கொள்ளும் கருணாநிதி. ஸ்பெக்டரம் என்றால் அடித்து பிடித்து டெல்லிக்கு பயணமாகி அன்னையின் காலடியில் சொர்க்கம் என்று  சரணாகதி அரசியலை துவங்கி விடுகிறார். அப்படி   ஸ்பெக்டரமில் என்னதான்ப்பா இருக்கு? ஆதிக்கசாதியினர் ராசா மீதுள்ள காழ்புணர்வின் காரணமாக பிரச்சனை செய்கிறார்கள் என்கிறார் கருணாநிதி. தமிழகத்தில் ஸ்பெக்ட்ரம் பிரச்னையை பெரிதாக்கியவர்கள் மாறன் சகோதரர்கள்தான் அப்படி என்றால் கருணாநிதி சொல்லும் ஆதிக்கசாதியினர் பட்டியலில் மாறன் சகோதரர்களும் அடக்கமா?

Advertisements

ஈழம் மவுனவலியும் கருணாநிதியின் முதுகுவலியும்!

நவம்பர் 19, 2009 § 4 பின்னூட்டங்கள்

ஈழம் மவுனவலியும் கருணாநிதியின் முதுகுவலியும்!

‘நாம்’ மற்றும்  ‘போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு’ என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும் கஸ்பார் என்னும் பாதிரியாரும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. இதுகிட்டத்தட்ட கருணாநிதி ஆதரவாளர்களால் கருணாநிதிக்காக நடந்த்தப்பட்ட நிகழ்வாகவே தெரிகிறது.  ‘நக்கீரன்’கோபால் புத்தகவெளியீட்டில் கருணாநிதிக்கு வாழ்த்துப்பா இயற்றியதாக தெரிகிறது.

முன்னர் “சகோதரயுத்தம்” என்று சுருங்கசொல்லி விளங்கவைத்ததை இப்பொழுது விளாவரியாக எழுதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழினதலைவர் கருணாநிதி.  விடுதலைபுலிகளின் தவறான முடிவுகளே ஈழத்தமிழர்களின் துயரிற்கு காரணம்! என்றும் ஈழத்தமிழர் நிலை குறித்து தான் மவுனமாக அழுவதாகவும் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் அரைப்பக்கத்தை அந்த அறிக்கைக்கு ஒதுக்கி இருக்கின்றன.  ஈழத்திற்கு தனது கட்சியும் தானும் செய்த உதவிகளை வழமைபோலவே பட்டியலிட்டிருக்கிறார்.எல்லாம் குறைந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பானவை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அப்படியே சகோதரயுத்தம் பற்றி நீட்டி முழங்குகிறார். போராளி இயக்கத்தில் “முதல் துரோகி” என்று அடையாளம் கானப்பட்டவரும் பிரபாகரனை சுட்டார் என்று ‘இந்து’ பத்திரிக்கையால் புகழாரம் சூட்டப்பட்ட மாத்தையாவை மாவீரன் “மாத்தையா” என்று பட்டம் கொடுத்திருக்கிறார். கருணாவோடு புலிகள் சண்டைபோட்டதை வருத்தத்துடன் கூறும் கருணாநிதி. அப்படியே ரணில் போல வருமா? என்கிறார் கருணாவோடான சகோதரயுத்தத்தின் சூத்திரதாரி ரணில் என்று தலைவருக்கு தெரியாது போல!.

இப்படியே பக்கத்துக்கு பக்கம் நாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கலாம். அதனால் பலன் ஒன்றும் இல்லை. இவருக்கு எப்பெல்லாம் மவுனவலி வரும் எப்பெல்லாம் முதுகுவலி வரும் என்று தமிழனுக்கு தெரியாதா என்ன? இவ்வளவு நீண்ட கடிதத்தில் சிங்களவனின் இனப்படுகொலை பத்தி ஒருவரிகூட தேடினாலும் கிடைக்காது.  ராஜீவ் ஈழத்தமிழர்கள்  பிரச்சனை என்ன என்று எனக்கு விசாரித்து சொல்லுங்கள் நான் “தீர்த்து வைக்கிறேன்” என்று சொன்னாராம் அதுவும் ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்திற்கு பிறகு.  ராஜீவ் அதற்கு முன்னரே “பிரபாகரனை போட்டுதள்ளு!” என்று உத்தரவிட்டது தலைவருக்கு தெரியாது போலும்.

மவுனமாக அழுவதாக சொல்லுகிறார் ஈழத்தை நினைத்தா? அல்லது எப்படியும் காங்கிரசு நம்மளை கலட்டி விட்டுருவானுங்க போல தெரியுதேன்னா? யாமறியோம். சத்தமாக அழுதால் முதாலளியம்மா கோவிச்சுவாங்க போல. இந்தியரசிற்கும் ஈழத்தமிழர் துயரிற்கும் எவ்விததொடர்பும் இல்லை எல்லாம் புலிகள் எடுத்த முடிவுகளே காரணம் என்றும் கதைவிட்டுட்டு இருக்கார். அப்படியே இனவெறியன் ராசபக்சேவிற்கும் அவனது தளபதிக்கும் பிரச்சனை என்றால் பிராணாப் உடனே ஓடோடி சென்று பஞ்சாயத்து பண்ணுகிறாரே அது ஏனென்று நம்ம தமிழினதலைவர் விளக்கினால் நல்லது. “கலைஞர் சொன்னதில் என்ன பிழை இங்கே இருக்கிற உணர்வாளர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்….” என்று சுபவீக்கள் நமக்கு பாடம் எடுப்பார்கள்.

முழுக்கமுழுக்க திராவிடகொள்கைகள் நீர்த்துபோன, தமிழ் இனமே அழிந்தாலும் தன் குடும்பமே  தனக்கு முக்கியம் என்று சுருங்கிப்போன கருணாநிதியுடன் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். ஈழத்தில் சுமூகநிலை, அகதிமுகாம்கள் அருமை என்றெல்லாம் முன்னர் சத்தமாகச்சிரித்தவர் “எல்லா பிரச்சனைக்கும் புலிகளே காரணம்!” என்று இன்று மவுனமாக அழுதிருக்கிறார். இவர் என்ன சொன்னாலும் வக்காலத்து வாங்க சில போலிதமிழ் உணர்வாளர்கள் உள்ளனர் அவர்களிடம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வேறுமாதிரியான வரலாற்றை நமக்கு சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.  நான் யாரையும் குற்றம் சொல்லும் நோக்கில் சொல்லவில்லை என்று முழுக்கமுழுக்க புலிகளையும் புலித்தலமையையும் விமர்சித்து இருக்கிறார். சிங்களர்வெற்றியை நோட்டு அடித்து கொண்டாடும்வேளையில் வேதனைமேல்வேதனையாக தமிழினதலைவர் பிரபாகரனை நோக்கி ஆட்காட்டிவிரல் நீட்டி “பிரபாகரனே இந்த இனவழிப்பிற்கு முழு பொறுப்பு!” என்று குற்றம் சுமத்துகிறார். ஈழம் மவுனவலி என்ற புத்தகத்தில் தமிழினதலைவரின்  இலக்கியவரிசு கனிமொழி மகாபாரதக்கதை பேசி ரெளத்திரம் பழகாதது தனது பிழை என்று நீலிகண்ணீர் வடிக்கிறார். துரோகிகளை அடையாளம் கண்டுகொள்வதொடு துரோகிகளின் கூட்டாளிகளையும் அடையாளம் காணவேண்டியது தமிழர்களின் கடமை.

சுபவீயின் பிழைப்புவாதம் தொடர்கிறது……..!

ஒக்ரோபர் 5, 2009 § 9 பின்னூட்டங்கள்

சுபவீயின் பிழைப்புவாதம் தொடர்கிறது……..

laugh_now_cry_later_by_grace72.png

யாராவது தமிழை தெளிவான உச்சரிப்புடன் அழகியலோடு கையாண்டாலே அவரை தமிழின உணர்வாளர் என்று நம்மனது ஏற்றுகொள்ளும். அப்படி வெகுநாட்களாக தமிழ்கூறும் நல்லுலகில் தமிழின உணர்வாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பேராசிரியர் சுபவீ. தமிழின உணர்வாளர் என்பதாலே புலம்பெயர் தமிழர்கள் இவரை தோளில்வைத்து கொண்டாடியது முந்தைய வரலாறு. உலகெங்கும் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகள் பத்திவகுப்பெடுத்து வந்த சுபவீ இப்பொழுது அறிவாலயம் பக்கமாக ‘பக்காவாக’ வகுப்பெடுத்து கொண்டிருக்கிறார்.

நாளுக்குநாள் ஈழத்தில் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க சுபவீயின் கால்கள் ஈழ ஆதரவு போராட்டத்திற்கு எதிர்திசையில் நடைபோட ஆரம்பித்தது. செத்துவிழுந்த தொப்புள்கொடி உறவுகள்பத்தி கவலைப்படவேண்டிய சுபவீ எங்கே கருணாநிதியின் நாற்காலி கவிழ்ந்து விடுமோ? என்று கவலைகொள்ள ஆரம்பித்துவிட்டார். திசைமறந்த பறவைபோலே  ஈழம் என்ற வார்த்தையை உச்சரிப்பதை நிறுத்தி விட்ட சுபவீ மீண்டும் மக்கள் மன்றங்களில் பேசத்துவங்கி இருக்கிறார்.

வருடந்தோறும் கருணாநிதியை வாழ்த்தி ‘வஞ்சப்புகழ்ச்சி தூக்கலாக’ நடைபெறும் கவியரங்கில் மேடையேறிய சுபவீ முழுக்கமுழுக்க கருணாநிதிதாசனாக மாறிப்போனார். வழமையாக எதையாவது அள்ளிவிடும் செகத்ரட்சகனே வெட்கப்படும்படியாக நம்மாளு வெளுத்து வாங்கி இருக்கிறார். அதெல்லாம் அவர்கள் உட்கட்சி விவகாரம் அதைபத்தி நாம் கவலைபடவேண்டியதில்லை.  நமக்கு கவலை எல்லாம் சுபவீயின் “பிரபாகரனின் இருப்பு பற்றிய கசப்பான உண்மை” என்ற தலைப்பில் குமுதம் இணையதளத்தில் கொடுத்தநேர்காணல் பற்றியதுதான்.

suba

இந்த நேர்காணலில் கருணாநிதி விசுவாசத்தை மிகத்தெளிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.பிரபாகரன் இல்லை என்ற தகவலை இந்த நேர்காணலின் மூலமாக உலகத்தமிழ் மக்களுக்குகூற விரும்புவதாக கூறி இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து எந்தவொரு தகவலையும் உலகத்தமிழ்மக்கள் எதிர்பார்க்கவில்லை என்ற நிதர்சன உண்மையை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள். உலகத்தமிழர்களின் இதயங்களில் இருந்து நீங்கள் தூக்கி எறியப்பட்டு வெகுநாட்கள் ஆகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஈழத்தமிழன் கொன்றழிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் உலகத்தமிழ்மாநாடு தேவையா? என்று நியாயமான கேள்விக்கு உங்களது பதில் ஏற்றுகொள்ளும்படி இல்லையே! ஈழத்தமிழர்கள் செத்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமா? தமிழை வளர்க வேண்டாமா? என்று அறிவுப்பூர்வமாக கேள்விகேட்கும்  நீங்கள் அதற்கும் ஒருபடி மேலேசென்று இந்த மாநாடுகூட ஒருவழியில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு  தீர்வுகாணும் என்று அளந்து விடுகிறீர்கள். கேப்பையில் நெய்வழிகிறது என்று இன்னும் எத்தனை காலத்திற்கு கதையளக்கபோகிறீர்கள்?.

ஈழத்திற்காக போராடியர்கள் அப்படியே முடக்கி போனார்களா? அவர்கள் இயங்கவில்லையா என்று கேள்வி கேட்கும் நீங்கள், கலைஞரை குற்றம் சுமத்துபவர்கள்  என்ன தீக்குளிப்பு போராட்டமா நடத்தினார்கள்? என்று கேட்டு இருக்கிறீர்கள். முத்துகுமார் நியாபகம் இருக்கிறதா சுபவீ அவர்களே? முத்துகுமாரின் தியாகத்தை மறைத்து அதே வேளையில் அழகிரியின் பிறந்தநாளை கோலாகாலமாக கொண்டாடிய கருணாநிதியின் துரோகத்தை மறைக்கமுடியுமா?அல்லது கருணாநிதியின் ஊடகங்கள் செய்த இருட்டடிப்பை மறக்கமுடியுமா?  முத்துகுமார் கருணாநிதிபத்தி எழுதியதை மறுவாசிப்பு செய்துபார்க்க சம்மதமா?

அப்படியே உங்கள் முன்னாள் தோழர் சீமானையும் காட்டி கொடுக்கிறீர்கள் “சீமான்  இத்தருணத்தில் உலகத்தமிழ் மாநாடு கூடாது என்கிறார்! அதே நேரத்தில் ‘உத்தரவு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்” என்கிறீர்கள். கலைஞர் அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழனுக்காக உழைக்கிறார் என்கிறீர்கள். அவரின் அந்த உழைப்பினால் இதுவரை ஈழத்தமிழன் துயரம் எந்தளவிற்கு துடைக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா? அகதி முகாம்கள் அருமையாக இருக்கின்றன என்ற பார்ப்பன இந்து ராமிற்கும் இலங்கையில் சுமூகநிலை நிலவுகிறது என்று சொன்ன கருணாநிதிக்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்க முடியும் சுபவீ அவர்களே? போர் வந்தால் மக்கள் சாவது இயல்புதான் என்ற செயலலிதாவும்  மழைவிட்டும் துவானம் தூவுவது இயல்புதான் என்று கருணாநிதியும் ஒரே குரலில் ஒலித்தது  உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

karunanidhi-sonia1-300x293

ஆகமொத்தம் இங்கே ஈழத்திற்காக நடந்தபோராட்டங்கள் எல்லாமே கருணாநிதியின் ஆட்சியை கவிழ்க  நடந்த சதிமுயற்சி என்கிறார் சுபவீ.  ஈழத்திற்காக உண்மையாக போராடியர் கருணாநிதி மட்டுமே என்று பெரியார்மீது அடித்து சத்தியம் செய்கிறார்.  இவர் கனிமொழியோடு சேர்ந்து ஈழத்தமிழர் விடுதலைக்கு  ‘லாபி வொர்க்’ பார்த்துகொண்டு இருக்கிறாராம்.  கருணாநிதி காங்கிரசோடு கைகோர்த்து கூடசரி என்கிறார் ஈழத்தில் தமிழர்களை கொன்ற ராசபக்சே போன்று இந்தியாவில் முகமதியர்களை கொலை செய்த பா.ச.க ஆட்சிக்கு வந்திடும் அபாயத்தில் இருந்து காப்பதற்கே காங்கிரசு கூட்டணியாம். இதற்கு முன்பு கருணாநிதி பா.ச.கவோடு கைகோர்த்து பற்றிகேட்டால் அது போனமாசம் இது இந்தமாசம் என்று சொன்னாலும் சொல்லுவார். சுபவீயை கொண்டாடியதற்காக புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக வருந்துவார்கள் அப்படி வருந்துபவர்களில் நானும் ஒருவன்.

‘பெரியார்விருது’ வீரமணிக்கும், ‘அண்ணாவிருது’ கருணாநிதிக்கும் ‘கலைஞர்விருது’ ஸ்டாலினுக்கும் கொடுக்கப்பட்டு விட்டது ‘கனிமொழிவிருது’ நமது சுபவீக்கு அடுத்த ஆண்டு அளிக்கப்படும் என்று நம்புவோமாக!

சுபவீ அய்யா இப்படி பிழைப்பதும் ஒரு பிழைப்புதானா?

மே 1, 2009 § 5 பின்னூட்டங்கள்

subavee

சுபவீ அய்யா இப்படி பிழைப்பதும் ஒரு பிழைப்புதானா?

நேற்றுவரை தமிழ் இனஉணர்வாளர்களின் பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்து இன்று ‘அய்யா நீங்களுமா?’ என்று கேட்க்கும் அளவிற்கு நிறம்மாறி நிற்கும் சுபவீ அய்யாவிற்கு வணக்கம்.

ஈழம் பத்தி எதுவும் தெரியாத எங்களுக்கு எம் இனத்தின் சுதந்திர போராட்ட வரலாறு கூறிய பேராசிரியர் நீங்கள். ஈழத்திற்கு குரல் கொடுத்ததிற்காக நீங்கள் அனுபவித்த ‘அது பொடா காலம்’ மறக்க கூடியது அல்ல. இணையத்தில் நீங்கள் ஈழத்திற்காக ஆற்றிய உரைகள் இன்றும் எங்கோ ஒரு மூலையில் ஒலித்து கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவையெல்லாம் நேற்றைய வரலாறு ஆனதே சுபவீ அய்யா. ஈழம் இறுதி யுத்தத்தில் இரத்தம் சிந்தும் வேளையில் உங்களை நாங்கள் உத்து பார்ப்பதில் வியப்பில்லை அல்லவா? இந்த வேளையில் நீங்கள் ஒளிந்து கொண்டு இருக்கும் இடம் கோபாலபுறமாக இருக்கிறதே. நேற்றுவரை தம்பி என்று பிரபாகரனின் புகழ் பாடிய நீங்கள் இன்று தமிழகத்து கருணாவை தமிழ் இனத்தின் இணையற்ற தலைவன் என்று நிலைநாட்ட முயன்று கொண்டிருக்கிறீர்கள். ஈழத்தில் எம் உறவுகள் செத்துவிழ யார் காரணமோ அவர்களுக்கு சேவகம் செய்யும் அடிமைக்கு அடிமையாக இருப்பது அவமானம் இல்லையா சுபவீ அய்யா?

kalaingar
ஈழத்திற்காக உலகின் பலமூலைகளிலும் சென்று முழங்கிவரும் தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தமிழர்களிடம் பணம் பெறுகிறார்கள் ஈழத்தமிழர்களின் பணத்தில் செகுசாக ஊர் சுற்றுகிறார்கள் என்ற குற்றசாட்டு வந்த பொழுது குற்றம் சாட்டியவர்கள் மீது கடும் கோபம் உண்டானது. தாய்ப்பாலுக்கு தாய் கூலி கேக்கிறாள் என்று சொல்வது போலே இருக்கிறது என்றி எண்ணியவர்கள் நாங்கள். ஆனால் இப்போது தோன்றுகிறது நீங்கள் ஈழத்திற்காக குரல் கொடுத்ததும் கூலிக்காகவே என்று.

ஈழத்தில் இனி போராளிகள் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டீர்கள். இனியும் போராளிகளின் புகழ்பாடி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கூலி பெறமுடியாது என்று உங்களுக்கு தோன்றியதால் உங்கள் களத்தை மாற்றிவிட்டீர்கள். உங்கள் விசுவாசத்திற்கு பிரதிபலனாக கலைஞர் தொலைக்காட்சியில் நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள் உங்கள் தமிழ் அறிவையும் படிப்பு அறிவையும் பணமாக்க நல்ல வாய்பு கிடைத்து விட்டது.

ஈழ போராட்டத்தின் முழு வரலாறு தெரிந்த நீங்கள், அங்கே செத்துவிழும் நம் சொந்தங்களின் நேற்றைய நம்பிக்கையாக இருந்த நீங்கள் ஈழத்துரோகிகளை தோலுரித்து ஈழமக்களுக்கான கடமையை ஆற்றாமல் துரோகியோடு கைகோர்த்து மவுனமாகிவிட்ட மர்மம் என்ன சுபவீ அய்யா?

காங்கிரஸ்-திமுக கூட்டணி எந்தவிதத்திலும் தமிழன் நலனை மீட்டு எடுக்காது என்ற நிலையில் உணர்வாளர்கள் எல்லாம் கொதித்து எழுந்து போராடும் இந்த நிலையில் நீங்கள் மட்டும் கலைஞர் பக்கத்திலே தேங்கி போயி விட்டீர்களே அய்யா? அப்படியென்றால் வெறும் பிழைப்பிற்காகத்தான் ஈழத்தை கையில் எடுத்தீர்களா?

நீங்கள் எவ்வளவு முயன்றாலும் கருணாநிதியின் துரோகத்தை தமிழன் மன்னிக்கவோ,மறக்கவோ மாட்டான். அவருக்கு துணைபோகும் உங்களையும்தான். பணத்திற்காக உடலை விற்கும் விபசாரிக்கும் உங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை சுபவீ அய்யா. இப்படி பிழைப்பதும் ஒரு பிழைப்புத்தானா என்று நீங்கள் சிந்தித்தால் நல்லது.

கருணாநிதியோடு கூட்டு சேர்ந்து எப்படி நீங்கள் ‘ஈழம்’ குறித்து பேச மறுக்கிறீர்களோ அதுபோல் இனிமேல் தமிழ்இனம் குறித்தும் பெரியார் குறித்தும் பேசமால் இருப்பது நலம். சட்டகல்லூரி பிரச்சனையிலேயே உங்கள் மீது சிறிதாக சந்தேகம் எழுந்தது ஈழப்பிரச்சனையில் அது உண்மை என்றாகிவிட்டது. உங்களுக்கும் வீரமணிக்கும் பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை சந்தர்பங்களை பிழைப்புவாதத்திற்க்காக பயன்படுத்தி கொள்வதில்.

Where Am I?

You are currently browsing the சுபவீ category at தமிழன்பன் பக்கம்.