துரோகிகளை தலைவர்கள் என்றழைக்கும் இனம் என்னவாகும்?

ஜனவரி 3, 2011 § 4 பின்னூட்டங்கள்

துரோகிகளை  தலைவர்கள் என்றழைக்கும் இனம் என்னவாகும்?


சரித்திரத்தில் எத்தனையோ வீழ்ந்து கிடந்த இனங்களை தலை நிமிர்த்திவிட்ட பலரின் கதைகளை படித்து இருப்பீர்கள் வீழ்ந்த  எத்தனையோ தேசிய இனங்கள் தன்முனைப்புடன் எழுந்து இருக்கின்றன. நிறத்தை காரணம் காட்டி கருப்பர்கள்  என்று வெறுத்து ஒதுக்கிய அமெரிக்க தேசத்தில்  ‘மார்டின் லூதர் கிங்’ எனும் போராளி பிறந்தான் அடிமை பட்டுக்கிடந்த தனது இனத்தை தட்டி எழுப்பி நிறவெறிக்கு எதிராக கறுப்பின மக்களை ஒருங்கிணைத்து காட்டினான்.  அதுவரை அடிமைகளாகவும் அவமானத்தின் சாட்சிகளாகவும் வாழ்ந்துவந்த கருப்பின மைந்தர்களை சுயமரியாதையோடு நிமிர்ந்து நிற்க மார்டின் லூதர் கிங் துவக்கப்புள்ளியாக விளங்கினார்.

மார்டின் லூதர் கிங்கிற்கு பிந்தைய தலைமுறை அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் சாதித்தது. மைக்கேல் ஜாக்சன்  என்ற இசைக்கலைஞனே அதற்கு சான்று. அமேரிக்கா மாத்திரமன்றி உலகின் பெரும்பாலான இசை ரசிகர்களின் உள்ளத்தை வென்ற கலைஞன் அவனே! தனது கலை வடிவை நிறவெறிக்கு எதிராக ஆயுதமாக ஏந்தினான்.  They Don’t care about us என்று உலகின் ஏதோவொரு மூலையில் மைக்கேல் ஜாக்சனின் குரல் இன்னும் ஒலித்து கொண்டுத்தான் இருக்கிறது.

அவர்களின் எழுச்சி அமெரிக்காவின் வெள்ளைமாளிகைவரை தொடர்ந்திருக்கிறது. வெள்ளைமாளிகையில் ஒபமா என்ற கருப்பின மனிதனை ஜனாதிபதியாக ஏற்று கொண்டதன் மூலம் அமெரிக்க மக்கள் தாங்கள் இனவெறிக்கு ஆதரவானவர்கள் அல்ல என்று உலகத்திற்கு சொல்லி இருக்கிறார்கள்(சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்) . மார்டின் லூதர் கிங்கின் போராட்டத்தின் நீட்சியாகத்தான் இதனை நாம் பார்க்க வேண்டும். இன்று திடீரென்று உலகம் மாறிவிடவில்லை மார்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களின் போராட்டம் மாந்த சமூகத்தின் பார்வையை மாற்றிக்காட்டி இருக்கிறது.

அமெரிக்காவை காட்டிலும் பலமடங்கு இனவெறிபிடித்த இந்துமத பார்பன மற்றும் ஆதிக்கசாதி  வெறிபிடித்த கும்பல்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இனங்கள் தலை நிமிர்ந்த வரலாறு நம்மிடமும் உண்டு. அம்பேத்கார், பெரியார் போன்ற தலைவர்களின் கடும் உழைப்பால் ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டுக்கிடந்த சமூகம் தலை நிமிர்ந்த வரலாறு நமக்கு மிக அருகாமையிலேயே நிகழ்ந்து இருக்கிறது.பஞ்சமன், சூத்திரன், சண்டாளன் என்று நம்மை ஒதுக்கி வைத்த பார்ப்பனியத்தை வீழ்த்த பெரியாரும் அம்பேத்காரும் தம் வாழ்நாளையே அர்பனித்தனர். மருத்துவம், நீதி,  பொருளாதாரம் , அரசியல் என்று அனைத்து துறைகளிலும் கோலேச்சிய பார்ப்பனியத்தை சிறிது சிறிதாக வீழ்த்தி காட்டியது அம்பேத்கார், பெரியாரின் போராட்டங்கள்.  ஆண்டாண்டிற்கு கல்வி வாசனையோஅறியாத சமூகத்தில் இருந்து பல்வேறு பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் ஆட்சிதலைவர்கள் என்று உருவானதற்கு இது போன்ற தலைவர்களின் போராட்டங்களே காரணம்.தமிழகத்தில்( சென்னை மாகாணம்) நீதிக்கட்சி வந்துதான் மருத்துவத்திற்கு சமட்கிருத மொழியில் நுழைவுத்தேர்வு என்ற நிலையை மாற்றி காட்டியது.

ஆரிய இனத்திடம் வீழ்ந்து கிடந்த திராவிட இனத்தை (தமிழினத்தை) திராவிடர் கழகம் என்ற இயக்கத்தின் மூலம் ஒன்று திரட்டி சமூக நீதிக்காக குரல்கொடுத்த தலைவர் பெரியார். தமிழரின் வரலாற்றை திருப்பி போட்ட மனிதர் தந்தை பெரியார்.சுயமரியாதை பகுத்தறிவுள்ள மாந்த சமூகமாக தமிழர்களை மாற்றிட தன்வாழ்நாளின் இறுதிவரை சமரசமின்றி போராடிய தலைவர் பெரியார். தனது முயற்சியில் கணிசமான வெற்றிகளையும் பெரியார் பெற்றார். தமிழகம் தவிர்த்து பிறமாநிலத்தவர்கள் சாதிப்பெயருடன் வலம்வரும்பொழுது தமிழகம்  மாத்திரம் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிய அழுக்கை துடைத்து எறிந்து இருப்பதே அதற்க்குச்சான்று. ராமராட்சியம் அமைப்பேன் என்று கூறிய காந்தியின்  மனுதர்ம கோவணத்தை உருவியதாகட்டும், இந்துமதம் பார்பனியமதமே என்று அம்பலப்படுத்தியதாகட்டும் அம்பேத்கார்க்கு நிகர்  அம்பேத்கார்தான்.அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதைவிட சமூக சீர்த்திருத்தங்களே தங்கள் போராட்டங்களின் முக்கிய நோக்கமாகக்கொண்டு வாழ்ந்த தலைவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்காரும்.

பெரியாரின் பெயரை சொல்லி அரசியல் அதிகாரத்தை  கைப்பற்றின திராவிடத்தை பெயரில் தாங்கிய அரசியல் இயக்கங்கள். பெரியாரின் திராவிடகழகத்திற்கு பெரியாரின் கொள்கை வாரிசாக தன்னைத்தானே அழைத்துக்கொண்ட வீரமணி தலைவராக வந்தார். பெரியாரின் போராட்டத்தை அதே வீரியத்தோடு முன்னெடுக்க வேண்டிய வீரமணி ஆட்சி கட்டில் இருப்பவர்களுக்கு காவடி  தூக்குவதே தனது முதன்மை பணி என்று மாற்றி கொண்டார். பெரியார் தனது போராட்டங்களால் பெயருக்கு பின்னால் இருந்த சாதிப்பெயரை தூக்கி எறியும்படி செய்தாரோ அதே பெரியார் பற்றிய திரைப்படத்தை தெலுங்கில் மொழி பெயர்த்து வெளியிடும்பொழுது பெரியார் ராமசாமி ‘நாயக்கர்’ என்று சாதிப்பெயர் ஒட்டி வெளியிடுகிறார். சரியாக சொல்வதென்றால் பெரியார்வாதிகளின் முதல் எதிரியாக இன்று இருப்பதே அய்யாதான். இதில் இவர் தனக்குத்தானே தமிழர் தலைவர் இனமானத்தலைவர் என்று விளம்பரப்படுத்தி கொண்டு அலைகிறார். சமூகநீதிக்காக போராடி அலுத்துவிட்டதால் ஊர் ஊராக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விளக்க கூட்டங்களில் விளக்கு பிடித்து கொண்டிருக்கிறார் என்று கேள்வி.

தனக்குத்தானே தமிழினத்தலைவர் என்று விளம்பரப்படுத்தி கொள்பவர் குறித்து நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்பதல்ல. ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டபொழுது  தலைவர் பதவி சுகத்திற்க்காக தனது குடும்பத்தின் நலத்திற்க்காக தமிழினத்தின் எதிரிகளின் துணை நின்றார். ஈழத்தமிழன் எங்களுக்கா ஓட்டு போட்டான் என்று கேட்கிறது உடன்பிறப்பு ஒன்று.  இன அழிப்பின் வலிசுமந்த தமிழர்களின் காதுகளில் செம்மொழி மாநாடு என்று பலகோடிகளை கொட்டி சுயசொறிதல் என்னும் ஒப்பாரி பாடலை பாடிமுடித்திருக்கிறார்.  உலகத்தமிழர்களின் ஒரே தலைவன் நானென்று சொல்லிக்கொண்டு இவர் செய்த துரோகங்களை சொல்லி முடிக்க எனது வலைப்பூ போதாது. இவர் போல ஒரு தலைவன் நமது எதிகளுக்கு கூட அமைந்திடக்கூடது என்பதே எனது விருப்பம்.

அம்பேத்காரின் பெயரை சொல்லி அரசியல் செய்யும் எழுச்சி தமிழர் அம்பேத்கார் சுடர் விருதை தமிழனத்தலைவருக்கு வழங்கி கெளரவப்படுத்தி இருக்கிறார். இதுல உனக்கு என்னடா காண்டு என்று நீங்கள் கேட்கலாம் என்ன செய்ய தோழர்களே தாமிரபரணியில் உயிர்விட்ட தோழர்கள் எனக்கு நியாபகம் வந்து தொலைக்கிறார்கள். மார்டின் லூதர் கிங்கின் போராட்டங்கள் போன்று பெரியாரின் அம்பேத்காரின் முன்னெடுப்புகள் தொடர்ந்து வெற்றி ஈட்டததற்க்கு தவறானவர்களை தலைவர்கள் என்றழைத்த எம்மினமும்தானே காரணம் என்ற வருத்தம் வருகிறது வேறு என்ன செய்ய?

Advertisements

தமிழச்சி நாம்தமிழர் என்னதான் பிரச்சனை?

ஜனவரி 1, 2011 § 4 பின்னூட்டங்கள்

தமிழச்சி நாம்தமிழர் என்னதான் பிரச்சனை?


சீமான் சிறையிலிருந்து விடுதலை என்ற செய்தி வெளியான அடுத்த நாளே சீமானை விடுதலை செய்வதன் மூலம் காங்கிரசை திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிட வேலைகள் நடக்கிறது என்பது போன்ற முகநூல் செய்தியை வெளியிட்டார் தமிழச்சி. அதனை தொடர்ந்து அவரது வலைப்பூவில் நாளொரு கட்டுரை வீதம் நாம் தமிழர் மற்றும் சீமான் குறித்து எழுதி வருகிறார்.

நான் வலைப்பூக்கள் வாசிக்க துவங்கிய நாட்களிலேயே அறிமுகமானது தமிழச்சியின் எழுத்துக்கள். பெரியாரியத்தை பன்மடங்கு வீரியத்தோடு இணையம் பயன்படுத்தும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழச்சியின் பங்கு மகத்தானது என்பதை அறிவேன்.  சீமான் மீதும் நாம் தமிழர் இயக்கத்தினரிடமும் அவர் முன்வைத்த கேள்விகள் கண்டிப்பாக பதில் அளிக்கப்பட வேண்டியவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. விமர்சனம் என்பதையும் மீறி காழ்புணர்ச்சி என்ற நிலையை நோக்கி தமிழச்சியின் எழுத்துக்கள் சென்று கொண்டிருக்கிறதோ? என்ற சந்தேகத்தில்தான் (குறித்து கொள்ளுங்கள் சந்தேகத்தில் தான்) இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

கடந்தாண்டு கனடாவில் சீமான் காவல்துறையால் கைது செய்யப்பட்டபொழுது கைகளை பின்புறம் கட்டி விலங்கிட்டது கனடா காவல்துறை என்று சீமான் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இது சாதாரண பகிர்தல்தான் இதற்குக்காரணம் இந்திய தூதரக அதிகாரிகள் என்றளவில் இருந்தது சீமானின் குற்றச்சாட்டு. உடனே தமிழச்சி தனது வலைப்பூவில் அதிரடியாக மீனகத்தில் இருந்து செவ்வி ஒன்றை ஆதாரமாக வழங்கி சீமான் ஒரு பொய்யர் செவ்வியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படவில்லை விசாரணைக்கே அழைத்து செல்லபடுகிறார் என்று இருக்கிறது சீமான் விலங்கிடப்பட்டதாக பொய் சொல்கிறார் பாருங்கள் என்று கட்டுரை வெளியிட்டார்.

மீனகத்திற்கு அந்த செய்தியை வழங்கியவர் நமக்கு நன்கு அறிமுகமான சே.பாக்கியராசன் என்பவரே. சே. பாக்கியராசன் உடனடியாக விளக்கமும் அளித்தார் கனடா காவல்துறை சீமானை சந்திக்கும் முன்னர் அங்கிருந்த அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டது மாவீரர் நாளின் பொழுது புலம்பெயர் தமிழர்களிடம் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காகவும் இது வெறும் விசாரணையே கைது நடவடிக்கை அல்ல என்ற செவ்வியை வழங்கியதாக கூறினார். செவ்வியை வழங்கியவரே விளக்கம் அளித்த பின்னரும் தமிழச்சி தனது கட்டுரை குறித்த வருத்தமோ அல்லது விளக்கமோ அளித்ததாக தெரியவில்லை.

சீமானை ஓட்டுப்பொறுக்கி என்றும் கடந்த தேர்தலில்  அதிமுகவோடு கூட்டுவைத்து ஓட்டுபொறுக்கினார் சீமான் என்றும் வலைப்பூவில் எழுதி உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் என்ற இயக்கமே தோன்றி இருக்கவில்லை பிறகு எப்படி சீமான் கூட்டணி வைத்திருக்க முடியும் தனியாளாக கூட்டணியில் சேர்ந்து கொண்டாரா?  இயக்குனர் சங்கத்திலிருந்த எடுத்த முடிவே தவிர அது சீமானின் முடிவு அல்ல. தேர்தலுக்கு பின்னர் பொருளாதார நெருக்குதலுக்கு ஆளான பாரதிராசா ஈழ ஆதரவு போராட்டத்திலிருந்து கழட்டி கொண்டு  கருணாநிதியிடம் சரணடைந்தார்.
பெரியார்வாதிகளின் எஞ்சி நிற்கும் நம்பிக்கையான  பெரியார் திராவிடர் கழகம் கடந்த தேர்தலில் காங்கிரசை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வாக்குகள் சேகரித்தது பெரியார் திகவை ஓட்டுப்பொறுக்கி என்று தமிழச்சி இதுவரை எங்கும் கண்டித்து எழுதவில்லை அப்பொழுது தோன்றிராத நாம்தமிழர் இயக்கத்தை சாடுகிறார். பெரியார் திராவிடர் கழகத்திற்கு ஒரு நியாயம் சீமானுக்கு ஒரு நியாயமா என்ற எனது எளிமையான கேள்விக்கு தமிழச்சியிடமிருந்து பதில் கிடைக்குமா? என்று காத்திருக்கிறேன்.

பிகு : பதிவில் உள்ள புகைப்படம் ஓடும்நதி என்ற பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டது.

பார்ப்பன ஞாநியின் சிங்கள பாசம் !

ஜூன் 7, 2010 § 6 பின்னூட்டங்கள்

பார்ப்பன ஞாநியின் சிங்கள பாசம் !

நாம எவ்வளவுதான் அம்பலப்படுத்தினாலும்  முற்போக்கு முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் பார்ப்பன ஞாநி தன்னோட திரிப்பு வேலையை நிறுத்துற மாதிரி தெரியல. வழமை போல தனது “ஓ”ட்டை பக்கத்தில் பார்பன வன்மத்தை அள்ளித்தெளித்திருக்கிறார் பார்பன ஞாநி.  இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில நடைபெறுவதை கண்டித்து பல்வேறு உணர்வாளர்களும் போராடி, விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வது தமிழர்களின் உள்ளங்களை புண்படுத்தும் என்ற எண்ணத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றனர். முன்னர் கலந்து கொள்வதாக கூறிய முன்னணி திரைக்கலைஞர்கள் தமிழர்களின் உணர்வுகளை மதித்து நிகழ்வை புறக்கணித்து இருக்கின்றனர் என்ற செய்தி நம்மை வந்தடைவதற்கு முன்னர்  பார்ப்பன ஞாநியின் வன்மம் நிறைந்த கட்டுரையை நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது. ஞாநி எழுத்துக்களில் நேர்மையை எதிபார்ப்பது கூட ஒருவகையில் மூட நம்பிக்கைதான் போலும் .

இந்த வார குமுதம் இதழில் சங்கரனின் பார்ப்பன மனசாட்சி வெளிப்படையாக சிங்கள பேரினவாதத்திற்க்கு வருவாய் இழப்பு ஏற்படலாமா? என்று வருந்தியிருக்கின்றது. இந்திய திரைக்கலைஞர்கள் சில அமைப்புகளின் போராட்டங்களைக் கண்டு நிகழ்வை புறக்கணித்தது சரியல்ல என்று மனம் குமுறியிருக்கின்றார். ஈழம் என்றாலே அரைவேக்காடுத் தனமான கருத்துகளை வெளியிடுவது ஞாநியின் வழக்கம்.

முன்னர் “ஓ”ட்டைப் பக்கங்களில் ஈழப்பிரச்சனை குறித்து எழுதும் போது மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது ஈழத் தமிழர்கள் கண்டுகொள்ள வில்லை என முட்டாள் தனமாக உளறியவர் தான் ஞாநி.மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிங்கள பேரினவாதம் பறித்த போது க‌ண்டிக்காத‌ த‌மிழ்த் தேசிய‌ காங்கிர‌சை விட்டு வெளியேறி த‌மிழ‌ர‌சு க‌ட்சியை த‌ந்தை செல்வா உருவாக்கினார் என்ப‌து கூட‌ தெரியாம‌ல் உள‌றிய‌த‌ன் மூல‌ம் ஈழ‌ வ‌ர‌லாற்றின் அரிச்சுவ‌டி கூட‌த் தெரியாத‌வ‌ன் தான் என்ப‌தை த‌ன் எழுத்துக‌ள் மூல‌ம் அம்ப‌ல‌ப‌டுத்திக் கொண்ட‌வ‌ர் தான் ஞாநி.
ஏதோ இந்திய‌ திரைப்ப‌ட‌க்க‌லைஞ‌ர்க‌ள் இல‌ங்கைக்கு சென்று அங்குள்ள‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் த‌மிழ‌ர்க‌ளையும் ஒருங்கிணைத்து அப்ப‌டியே இந்தியாவிற்க்கும் இல‌ங்கைக்கும் ந‌ல்லுற‌வை பேண‌ப் போவ‌து போல‌வும், இது பொறுக்காம‌ல் த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை செய்துவிட்டார்க‌ள் என்ப‌து போல‌ க‌தை க‌ட்டுகிறார் ஞாநி. IIFAவின் நோக்க‌ம் என்ன‌வென்று எல்லோருக்கும் தெரியும். உலக மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் போர் குற்றத்தை உலகுக்கு அம்பல படுத்துகின்ற இந்த நேரத்தில், இந்த‌ நிக‌ழ்வு மூல‌ம் இல‌ங்கையில்  மக்கள் மகிழ்வுடன் இருப்பது போலும், இலங்கை ம‌னித‌ உரிமை பேணும் நாடு போன்று ஒரு மாயையை உல‌க‌ நாடுக‌ளுக்கு பிரக‌ட‌ன‌ ப‌டுத்துவ‌தே இத‌ன் உள்நோக்க‌ம்.திரைக்க‌லைஞ‌ர்க‌ள் ஆபாச‌ ந‌ட‌ன‌ங்க‌ள் மூல‌மும், 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் மூல‌மும் க‌லை வ‌ள‌ர்ப்ப‌தை த‌டுக்க‌லாமா? என்று ரொம்ப‌வே கோப‌ப்ப‌டுகின்றார் ஞாநி.

த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் முகாம்களில் அடைக்கப்பட்டு வாழ‌ வ‌ழி இல்லாத‌ ஒரு ம‌ண்ணில், இர‌த்த‌ம் சிந்திக்கொண்டிருக்கும் ஒரு ம‌ண்ணில் கேளிக்கை விழாவா? என்று மே 17 இய‌க்க‌ம்,நாம் தமிழர் இயக்கம், சேவ் த‌மிழ் இய‌க்க‌ம், பெரியார் திராவிட கழகமும் மற்றும் ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ளும், க‌விஞ‌ர். தாம‌ரை , சீமான், இய‌க்குந‌ர். இராம் போன்ற‌ த‌மிழ் க‌லைஞ‌ர்க‌ளும் முன்னெடுத்த‌ போராட்ட‌ங்க‌ளை போகிற‌ போக்கில் ச‌க‌தி வாரி இரைத்திருக்கின்றார் பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ர‌ன்.

த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் ப‌டைப்பாளிக‌ளாக‌ சாதித்த‌து என்ன‌ என்ற‌ கேள்வி மூல‌ம் ப‌டைப்புல‌கில் உள்ள‌ க‌விஞ‌ர். தாம‌ரை நோக்கி கேள்வியை வைக்கின்றார். சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் த‌மிழ‌ர்க‌ளை கொன்ற‌ழித்த‌து க‌ண்டு ம‌ன‌ம் வெதும்பிய‌தால் தன்னால் முன்பு போல‌ க‌விதைக‌ளை ப‌டைக்க‌முடிய‌வில்லை என்று க‌விஞ‌ர். தாம‌ரை ப‌ல‌ இட‌ங்க‌ளில் ப‌திவு செய்துள்ளார். மேலும் த‌மிழ‌ர்க‌ளின் இத‌ய‌ங்க‌ளில் நீங்காத‌ இட‌ம் பிடித்து விட்ட‌ “க‌ண்ண‌கி ம‌ண்ணிலிருந்து ஒரு க‌ருஞ்சாப‌ம்” என்ற‌ க‌விதையினை எழுதிய‌வ‌ர் க‌விஞ‌ர்.தாம‌ரை என்ப‌து பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ர‌னுக்கு தெரியாம‌ல் போன‌து விய‌ப்ப‌ல்ல‌.

த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ளை நோக்கி கேள்வி எழுப்பும் பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ரா. சிங்க‌ள‌ ப‌த்திரிகையாள‌ரான‌ இல‌ச‌ந்த‌ விக்க‌ர‌ம‌துங்கா சிங்க‌ள‌ பேரின‌வாத‌த்தின் கோர‌ முத‌த்தை அம்ப‌ல‌ ப‌டுத்தி ம‌ர‌ண‌த்தை ப‌ரிசாக‌ பெற்ற‌ போது நீ என்ன‌ எழுதினாய் என்று நினைவிருக்கின்றதா. திசைநாய‌க‌த்திற்க்கு இருப‌து ஆண்டு க‌டுங்காவ‌ல் த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்ட‌ போது க‌ந்த‌சாமி ப‌ட‌க்குழுவின‌ரோடு க‌தா கால‌ச்சேப‌ம் ந‌ட‌த்திக் கொண்டிருந்த‌வ‌ன் நீ என்ப‌தை ம‌ற‌ந்து விட்டாயா?. சிங்க‌ள‌ இய‌க்குந‌ர் ச‌ட்டை கிழிந்தால் “நீதி செத்துருச்சு” என்று சொம்பு தூக்கும் நீ, சிங்க‌ள‌ காடைய‌ன் செத்து விழுந்த போராளி பெண்ணின் ஆடைகிழித்து மிருக‌ம் கூட‌ செய்ய‌த்துணியாத‌ காரிய‌த்தை நிக‌ழ்த்திய‌ பொழுது சொம்போடு காணாம‌ல் போன‌ ம‌ர்ம‌மென்ன‌?

த‌மிழ் ப‌டைப்பாளிக‌ளை சிங்க‌ள‌ ப‌டைப்பாளிக‌ளுட‌ன் ஒப்பிடுவ‌த‌ற்கு முன் இல‌ச‌ந்தா, திசைநாய‌க‌த்துட‌ன் உன்னை ஒப்பிட்டு உன‌து ம‌ன‌சாட்சியை வெளிப்ப‌டையாக‌ பேச‌ச் சொல். இல‌ச‌ந்தா, திசைநாய‌க‌ம் போன்ற‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் அள‌விற்க்கு நீ என்ன‌ கிழித்திருக்கின்றாய்? என்றும் உன் ம‌ன‌சாட்சியை நீயே கேள். இறுதி க‌ட்ட‌ போரின் போது த‌மிழ‌க‌ அர‌சும், த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரும் புரிந்த‌ துரோக‌த்தை பேசுவ‌த‌ற்கு முன் அத‌ற்கான‌ த‌குதி உன‌க்கு இருகின்றதா பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ரா? க‌ருணாநிதி ஆட்சியில் இருந்து துரோக‌ம் செய்த‌ பொழுது ப‌டைப்புல‌கில் ஈழ‌ப் போராட்ட‌த்திற்க்கு எதிராக‌ எழுத்துக‌ள் மூல‌ம் துரோக‌ம் செய்த‌வ‌ன் நீ என்ப‌தை த‌மிழ‌ன் இன்னும் ம‌ற‌க்க‌வில்லை.

எம்ஆர் ராதாவை இதைவிட எவரும் அவமானப்படுத்த முடியாது !

மே 11, 2010 § 10 பின்னூட்டங்கள்

எம்ஆர் ராதாவை இதைவிட எவரும் அவமானப்படுத்த முடியாது !தமிழகத்தின் ஒப்பற்ற கலைஞன் பெரியாரின் போர்வாள் என்றெல்லாம் போற்றப்படுபவர் நடிகவேள் எம்ஆர் ராதா. இரத்தகண்ணீர் திரைப்படத்திற்கு இணையான திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் வரவில்லை. தொழிலாளிகள் மத்தியில் ராதா அவர்கள் உரையாடுவதில் துவங்கி வீடு தீப்பிடித்தால் கும்பிட வேண்டியதுதானே? என்று திருவண்ணாமலை ஜோதியை வணக்கும் பக்தனை கலாய்ப்பது வரை காலத்தால் அழியாத  திரைகாவியத்தை தனது நடிப்புத்திறனால் நிரப்பிய கலைஞன் ராதா.  நடிகவேளின் நாடகங்கள் நாம் கண்டிராத பொழுதும் தமிழக சூழலில் நடிகவேள் ஏற்படுத்திய அதிர்வுகளை நாம் அவரின் திரைப்படங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ராமர்வேடத்தில் ராதா நடித்த நாடகங்களை திரையிட காங்கிரசு அரசு தடைவிதித்தது. துவக்ககாட்சியிலேயே சோமபானம் அருந்திய ராமராக அறிமுகமாகி  ராமர்வேடத்திலேயே  காவல்துறையிடம் கைதாகி ஒரு கலகத்தையே உண்டு பண்ணியவர் ராதா. இரத்தகண்ணீர் திரைப்படத்தில் ஆடம்பரமாக வாழும் சீமானாக நடித்து இருந்தாலும் இறுதி காட்சியில் தனது மனைவியின் மறுமணத்தை வலியுறுத்தும் நபராக வருவார்.அரசியல் கட்சிகள் எல்லாம் வியாபாரத்தில் இறங்கிவிட்டன என்ற வசனத்தை இரத்தகண்ணீரிலேயே  பேசி நடித்து இருப்பார்.  தனது வாழ்நாள் முழுமைக்கும் தான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவனாக பெரியாரை போற்றியவர் ராதா. பெரியாரின் கருத்துக்களை பரலாக்கியதில் ராதாவின் பங்கு முக்கியமானது தனது நாடகங்கள் மூலம் சமூக மாற்றத்திற்கு பாடுபட்ட கலைஞர்களில் எம்ஆர் ராதாவும் என்எஸ் கிருஷ்ணனும் முக்கியமானவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

சமீபத்தில் 5600 நாடகங்களை எஸ்வி சேகர் அரங்கேற்றி முதல்வர் தலைமையில் விழா எடுத்து இருக்கிறார். இவரது நாடகங்கள் பார்பனதனமானவை என்ற குற்றச்சாட்டு நீண்டநெடுங்காலமாக இருந்து வருகிறது. சங்கராச்சாரியாரை எப்போதும் ஆதரிக்கும் காஞ்சி சங்கர மடத்தின் தீவிரபக்தர் எஸ்வி சேகர். சமீபத்தில் குமுதம் இணையதளம் ஏற்பாடு செய்த ஞானி பேசுகிறேன் என்ற நிகழ்ச்சியில் எஸ்வி சேகர் நேர்காணல் ஒளிபரப்பானது. ஞானி என்னும் முற்போக்கு பார்பனரும் சேகர் என்னும் பிற்போக்கு பார்பனரும் இணைந்து வழங்கிய அந்த நிகழ்வினை பார்ப்பதவர்களுக்கு வயிற்று போக்கு வந்திருந்தாலும் ஆச்சிரியப்படுதற்க்கு இல்லை. அந்நிகழ்வில் எஸ்வி சேகர் உதிர்த்த சில முத்துக்கள்.

பார்பனராக பிறக்க முற்பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

நான்( எஸ்வி சேகர்) புண்ணிய ஆத்மா எனக்கு மறுபிறப்பு இல்லை.
தெரு கூட்டும் சாதியில் பிறந்த இளைஞன் தெருதான் கூட்டவேண்டும் என்று சொல்லவில்லை ஊரையே சுத்தமாக வைத்து இருப்பவன் தனது வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்து கொள்வான் என்கிறேன். எல்லாம் பிறப்பில் இருக்கிறது.

திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இசுலாமிய பாத்திரங்கள் தொப்பி வைத்து நடிக்கலாம், கிறித்துவ பாத்திரங்கள் சிலுவை அணிந்து நடிக்கலாம் ஆனால் எங்கள் பூணுலை வெளியே தெரியவிடாமல் நடிக்க வேண்டும். பூணூல் என்பது இந்துமத அடையாளம்.

பார்பனர்களுக்கு தமிழகத்தில்தான் மரியாதை இல்லை பிறமாநிலத்தில் பிராமணர் என்றால் நிறையவே மதிக்கிறார்கள்

இது போன்ற பேச்சுக்களுக்கு ஞானி மலுப்பலாக எதிர்கேள்வி கேட்டுவிட்டு எஸ்வி சேகர் நிறைய இரத்ததான முகாம்கள் நடத்துகிறார் என்று பாராட்டிவிட்டு அனுப்பி வைத்தார்.  எஸ்வி சேகர் நாடகத்தில் பெரும்பாலும் பார்பன காதப்பாத்திரங்களே இடம்பெறும் அக்கிரகாரத்து மொழிநடையே நாடகம் முழுவதும் பயன்படுத்தப்படும். முதல்வர் பங்குகொண்ட நாடகம் கூட சங்கராச்சாரியார் புகைப்படத்துடந்தான் நடந்து இருக்கிறது.  பிராமணர்களுக்கு  7 விழுக்காடு ஒதுக்கீடு வேண்டும் என்று சேகர் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எஸ்வி சேகர் முன்னாள் அதிமுக உறுப்பினராக இருந்து தற்போது திமுகவை  நோக்கி நகர்ந்திருக்கிறார் . அவரை மகிழ்ச்சிப்படுத்த அவரது 5600 நாடக அரங்கேற்றத்தில் தமிழினதலைவர் பங்கேற்று இருக்கிறார்.

சேகரின் நாடகவிழாவில் பங்கேற்பது முதல்வரின் சொந்த விருப்பம். ஆனால் விழாவில் சேகரை புகழும் பொழுது சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை நகைச்சுவை கலந்து சொல்வதில் எஸ்வி சேகர் நடிகவேள் எம்ஆர் ராதாவிற்கு நிகரானவர் என்று சொல்லி இருக்கிறார்.

இதுலதான் நமது பிரச்சனையே…. எதை வைச்சு எஸ்வி சேகர் எம் ஆர் ராதாவிற்கு நிகர் என்று கருணாநிதி சொல்லுகிறார் என்று நமக்கு கொஞ்சமும் விளங்கவில்லை. அப்படி என்ன சமூகத்திற்கு தேவையான கருத்தை எஸ்வி சேகர் நாடகம் மூலம் சொன்னார்?

கலைஞர் என்ற பட்டத்தை கருணாநிதிக்கு கொடுத்தவர் ராதா என்பதால் இது கருணாநிதியின் கைமாறு போலும்.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே “யாரு அது ராகு கேது என்ன பொண்ணோட உறவினரா? நான் சொன்னேன்னு சொல்லி  நாளைக்கு மெயில் புடுச்சு போகச்சொல்லு! என்று கிரகங்கள் இடம்பெயர்வதை வைத்து நல்ல நேரம் குறிப்பவர்களை கிண்டல் செய்த ராதா எங்கே  இன்னும் அம்புஜம் மாமி காமெடி எழுதி கொண்டிருக்கும் எஸ் வி சேகர் எங்கே?.  “நாங்க மன்னவரில்லே ஒரு மந்திரில்லே நாங்க சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்!” என்று முடி திருத்தும் தொழிலாளியாக நடித்த ராதா எங்கே? பூணுல் வெளியே தெரியும்படிதான் நடிப்பேன் என்று மணல் கயிறு திரிக்கும் எஸ்வி சேகர் எங்கே.என்னங்க இது அநியாயமா இருக்கு எம்ஆர் ராதாவோடு ஒப்பிட ஒரு தகுதி வேண்டாமா? திராவிடம் நீர்த்து போயி இப்படி தெருவுக்கு வந்திருக்கிறது.

போகிற போக்கை பார்த்தால் எஸ்வி சேகரின் கோரிக்கையான பார்பனர்களுக்கான  இட ஒதுக்கீட்டை கருணாநிதி நிறைவேற்றி காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரி தலைமையில் விழா நடக்கும் போல் இருக்கிறது. அப்பொழுதும் விழாவில் பேசும் கருணாநிதி சமூக நீதிக்காக போராடுவதில் ஜெயந்திரரர் பெரியாராக காட்சி அளிக்கிறார் விஜயேந்திரன் சிரிப்பில் அண்ணாவை பார்க்கிறேன் என்று பேசினாலும் பேசுவார். யார் கண்டது?

கதைகேளு கதைகேளு தமிழ்நாடு கதைகேளு!

மே 4, 2010 § 4 பின்னூட்டங்கள்

கதைகேளு கதைகேளு தமிழ்நாடு கதைகேளு!

சோழர் பரமபரையில் ஒரு முதலமைச்சர் ! மனுநீதி சோழனின் மறுபதிப்பு! என்று மேடைதோறும் கவிப்பேரரசு வைரமுத்தால் புகழப்படும் கருணாநிதி சக்கரநாற்காலி துணையுடன் டெல்லி பயணப்பட்டு இருக்கிறார்.  எதற்காக திடீர் திக்விஜயம் என்று யோசித்தால் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டாரா? அல்லது இழுத்து வரப்பட்டாரா? என்று யோசனை மேலெழுகிறது.  வடக்கிந்திய ஊடகங்கள் கருணா ராசாவை மத்தியமைச்சர் பதவியில் இருந்து காப்பதற்கே இந்த தள்ளாத வயதியிலும் தள்ளுவண்டியில் பயணமானார் என்கிறது. தமிழ்நாட்டு ஊடக பெருந்தகைகளோ செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பு பெரியார் மய்யம் திறப்பு என்று வண்ணவண்ணமாக செய்திகளை அள்ளித்தெளிக்கிறது. எதுதான்யா உண்மை?. ராசா தொலைத்தொடர்பு துறையில் இருந்து விளக்கி கொள்ளப்படுவாரா? என்று  நேரிடையாக கேள்வியினை ஒரு பத்திரிக்கையாளர் எழுப்பிய பொழுது கருணாநிதி பதில் சொல்கிறார் “உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி எதுவும் நான் கொண்டுவரவில்லை!” என்று. ஆங்கில செய்தி ஊடகத்தில் மாத்திரமே வெளியிடப்பட்ட இந்த காணொளி கண்டு கொஞ்சம் மண்டை கலங்கித்தான்யா போச்சு கேட்ட கேள்விக்கும் பதிலுக்கும் என்ன சம்பந்தம்?. வடக்கிந்திய ஊடகங்கள் எல்லாம் ராசா பதவியை காப்பதற்கே இந்த பயணம் என்று செய்தி வாசித்து கொண்டிருந்த வேளையில் ராஜ் தொலைக்காட்சி பெரியார் கொள்கைகளை படித்த ஒருவன் கோவிலுக்கு போகக்கூடாது என்று (முதல்ல தலைவரு குடும்பத்துல இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்) இதுவரை எவரும் சொல்லாத ஒப்பற்ற தத்துவத்தையும் தண்ணீர் பங்கீட்டால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் வந்துவிடாமல் நடுவண் அரசு பார்த்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையும் வழங்கினார் கருணாநிதி என்கிறது. யாரைத்தான் நம்புவது? தமிழ்நாட்டு ஊடகமும் சரி, வடக்கிந்திய ஊடகங்களும் சரி, தனக்கு தேவையான செய்திகளை மாத்திரமே வெளியிடுகிறார்கள் என்பது மாத்திரம் புரிகிறது.
நளினி விடுதலை செய்வது மாநில அரசின் விருப்பம் அதில் மத்தியரசு தலையிடாது என்று மத்தியரசு கூறிய பிறகும் நளினி விடுதலையில் நடுவண் அரசிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பது என்று கொள்கை முடிவை கருணாநிதி அரசு எடுக்கிறது. நினைவு தப்பிய நிலையில் பக்கவாதத்தால் முடங்கிப்போன மூதாட்டிற்கு மருத்துவ உதவி கொடுக்காமல் விமானநிலையத்தில் கூட இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்புகிறார்கள் இது மனுநீதி சோழருக்கே தெரியாதாம் அந்த நேரத்தில் தலைவரு தூங்கிகினு இருந்தார் தெரியுமா என்று சுபவீ தமிழ் ஆர்வலர்கள் மீது ரெம்பவே கோபம் காட்டுகிறார் .  இது தலைவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று திருமாவும் ராமாதாசும் அறிக்கை வாசிக்கிறார்கள்.
இதற்கு பெயர் கூட்டணி தர்மம் என்கிறார்கள் அது என்னங்க இப்படி ஒரு அபூர்வமான கூட்டணி தர்மம்? அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் முடிப்பதுதான் இவர்களின் கூட்டணி தர்மமா?  ஈழம் என்றாலே மத்தியஅரசை கேட்டுவிட்டுத்தான் முனகல் கூட விடுவோம் என்பது தமிழின தலைவரின் கூட்டணி தர்மமாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையை உச்சரித்தாலே கருணாவிற்கு உடல் வேர்த்து விடுகிறது. அந்த வார்த்தையின் மாயம் நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. தினகரன் அலுவலக எரிப்பிற்கு பின்னால் புளித்து போயிருந்த மாறன் குடும்ப உறவு ஸ்பெக்டரம் என்ற வார்த்தையை உச்சரித்த அடுத்த சில நாட்களிலேயே இதயம் இனித்தது கண்கள் பணித்தது என்றானதன் மர்மம் இன்னும் விலகவில்லை.

இதுல கருணாநிதியின் கொள்கை விளக்க அல்லது கருணாநிதி சொல்வதற்கெல்லாம் ஒத்து ஊதுவதற்கு ஒரு குறும்படை எப்போதும் தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் தலைகாட்டிபடி இருக்கிறது. குடுத்த காசுக்கு மேல இவன் கூவுராண்டா! என்று நினைக்கும் அளவிற்கு சுபவீயின் பேட்டிகள் அறிக்கைகைகள் சமீப காலமாக இருக்கிறது.  ஒருகாலத்தில் ஈழ ஆதரவளார் என்று அறியப்பட்ட வார்த்தை வியாபாரி சுபவீயின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்க துவங்கி இருக்கிறது என்பது அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் இருந்து தெரிகிறது.
செம்மொழி மாநாடு சிங்களர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்கிறார். இனப்படுகொலை செய்த இலங்கையை தமிழக அரசானது கண்டித்தால் நடுவண் அரசானது கருணாநிதி அரசை கலைத்துவிடுமே என்று கவலை கொள்கிறார் . செம்மொழி மாநாடு என்ற பெயரில் செம்மறியாட்டு தமிழர்கள் கூடி நின்றால் போதும் சிங்களவன் பயந்து போயி உரிமைகளை கொடுத்து விடுவானாம். இனப்படுகொலைக்கான மாநாடு ஒன்றை கூட்ட துப்பில்லாத அல்லது சட்டமன்றத்தில் சிங்கள இனவாத அரசை இனவெறிபிடித்த அரசு என்று தீர்மானம் நிறைவேற்ற துணிவில்லாத இவர்கள் ஒன்று கூடி கருணாநிதி புகழ் பாடுவதால் தமிழனுக்கு உரிமை கிடைத்துவிடும் என்கிறார் வார்த்தை சித்தர் சுபவீ.

பார்வதியம்மாள் சென்னை விமான நிலையத்தில் காவல் துறையால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டபொழுது இவருக்கு அழைப்புவிட்ட உணர்வாளரை கடிந்து கொண்டாராம் இப்போதுதான் எங்கள் நியாபகம் வருகிறதா? என்று. இன்னுமா உலகம் உங்கள நம்புது சுபவீ?

ஈழத்தமிழர் பிரச்சனை என்றாலோ! தமிழக மீனவர் பிரச்சனை என்றாலோ! கடிதம் எழுதிவிட்டேன் என்று கலட்டிக்கொள்ளும் கருணாநிதி. ஸ்பெக்டரம் என்றால் அடித்து பிடித்து டெல்லிக்கு பயணமாகி அன்னையின் காலடியில் சொர்க்கம் என்று  சரணாகதி அரசியலை துவங்கி விடுகிறார். அப்படி   ஸ்பெக்டரமில் என்னதான்ப்பா இருக்கு? ஆதிக்கசாதியினர் ராசா மீதுள்ள காழ்புணர்வின் காரணமாக பிரச்சனை செய்கிறார்கள் என்கிறார் கருணாநிதி. தமிழகத்தில் ஸ்பெக்ட்ரம் பிரச்னையை பெரிதாக்கியவர்கள் மாறன் சகோதரர்கள்தான் அப்படி என்றால் கருணாநிதி சொல்லும் ஆதிக்கசாதியினர் பட்டியலில் மாறன் சகோதரர்களும் அடக்கமா?

தமிழனும் மலையாளிகளும்! இதுவும் கடிதம்தான்

மார்ச் 11, 2010 § 7 பின்னூட்டங்கள்

தமிழனும் மலையாளிகளும்! இதுவும் கடிதம்தான் !


அன்புள்ள த!

வணக்கம் தமிழன்பன். நீங்கள் முன்னர் வினவு குறித்த கட்டுரையில் மலையாளிகளை சேட்டன்கள் சேச்சிகள் என்று விளித்து எழுதி இருந்தீர்கள் அது என் மனதை காயப்படுத்திவிட்டது. நாட்கள் பலவாகியும் நீங்கள் அதனை இன்னும் உங்கள் தளத்திலேயே வைத்து இருக்கிறீர்கள் அதனால் மனது பொறுக்காமல் இதனை எழுதுகிறேன்.தமிழர்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி  என் பெயரை பெயரை வெளியிடவேண்டாம் ( தனக்குத்தானே கடிதம் எழுதும் பொழுது  பின்நவீனத்துவ ‘லூசு’  செய்வது போலே இப்படி ஒரு வரி இருக்க வேண்டும் அல்லவா?)

மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் என்று வினவு எழுதியதை  படித்த பின்நவினத்துவ பெருமாள்கள் அதே தோசையை திருப்பிபோட்டு தமிழர்கள் தங்களை இழிவுபடுத்துகிறார்கள் என்று  எழுத்துலக கோமாளிக்கு கடிதாசி போட்டு இருக்காங்க . வினவு தளத்துள சங்கரன் வந்து வாழ்த்திய பொழுதே எதையோ ‘நோட்’ பண்ணுறாய்ங்கண்ணு சிறிது சந்தேகம் வந்துச்சு அதை இந்த கடுதாசி தீர்த்து வைச்சிருச்சு.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபிறகு கருணாநிதி முதல்வராக வந்தபொழுது  மலையாளிகள் தமிழகத்தில் டீக்கடை நடத்த முடியாத சூழல் உருவாகிப்போனதாக இவனுக கதைவிடுரானுங்க. ஆனா மொழிவாரி மாநிலப்பிரிப்பிற்கு பின்னர் முல்லை பெரியாரில் தமிழனுக்கு உரிமை மறுக்கப்பட்டதோடு தண்ணீரும் மறுக்கப்பட்டு  ராமநாதபுரத்தமிழன்  விவசாயத்திற்கு மாத்திரமல்ல குடிக்ககூட தண்ணியில்லாம அல்லாடுகிறான் இதுல இவனுக தமிழ்நாட்டில் தேநீர்கடை நடத்தமுடியவில்லையாம் என்ன கொடுமை சார் இது.

எப்பவுமே கேரளத்தானுங்க எங்க பூமி  செங்கொடி பறக்கும் பூமி என்று ஓவரா பில்டப் கொடுப்பார்கள். உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று ‘பெர்பாமன்ஸ்’ கொடுப்பார்கள் ஆனால் பக்கத்து மாநிலத்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டர்கள்.  ‘பென்னிகுக்’ என்ற புண்ணியவான் கட்டிக்கொடுத்த முல்லைப்பெறியாரை தகர்ப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று அச்சுதானந்தம்  என்னும் செங்கொடி தோழர் இன்னும் கேரளமண்ணில் வாழ்ந்து வருகிறார்.  முல்லைபெரியார் அணையில் குமுளி சாக்கடை நீரை தாரளமாக கலந்து விடுவது கூட தோழர்களின் புரட்சிகரமான செயல்பாடுகளின் தொடர்ச்சிதான்.

எனது கல்லூரி காலங்களில் எனது நண்பன் வீட்டு திருமணத்திற்கு மதுரைக்கு போயிருந்தோம் வாகனம் ஓட்டிவந்தவர் மலையாளி.  நண்பனின் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவருபவர். எங்களோடு பயணம் நெடுக எதுவுமே பேசவில்லை. தாகம் என்ற பொழுது நாங்கள் கொடுத்த நீரை குடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.  எனக்கு ‘கோக்’ வேணும் என்றான் நாங்களும் வாங்கி கொடுத்தோம் திருமணவிருந்தில் சாப்பிடும்பொழுதும் ‘கோக்’தான் வேண்டும் என்றான்.  ‘கோக்’ இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என்றான் ஏன் அப்படி என்று கேட்டால் தமிழ்நாட்டில் ‘இவர்கள்’ ‘கழித்துவிட்ட கழிவுகள் கலந்த நீரை குடிக்கிறோமாம் அதனால் அவரு  தமிழ்நாட்டில்  தண்ணீர் குடிக்க மாட்டாராம். “அட லூசுப்பயலே தமிழ்நாட்டில் இருந்து தண்ணி எடுத்த்துத்தான் ‘கோக்’ செய்யுராண்டா அப்புறம் எதுக்குடா அதை குடிக்கிற?” என்று கேட்டால் ” அது வேற ரிவராக்கும்னு” நமக்கே பாடம் எடுக்குறான் மக்களே இவய்ங்கள நாம புண்படுத்துறோமாம் “என்ட அம்மே!”

மேலும் தமிழர்களுக்காக தம்வாழ்நாளை அர்பணித்த கம்யுனிஸ்டு தலைவர்களை மலையாளத்தான் என்ற காரணத்தால் நாம் மதிப்பதில்லையாம். தமிழர்கள் தம் வரலாற்றில்  ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுத்தார்கள் என்றால் அது மருத்தூர்கோபாலராமச்சந்திரமேனன் (எம்ஜிஆர்)  தவிர  வேறு யாரு?   மூன்றுமுறை தொடர்ச்சியாக தமிழகத்தின் ஆட்சிக்கட்டில் உட்கார்த்தி அழகு பார்த்தவர்கள் தமிழர்கள் எம்ஜிஆரை மலையாளி என்று செய்யப்பட்ட பிரச்சாரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாட்டு தமிழன் மாத்திரமல்ல ஈழத்தமிழனும் எம்ஜிஆரை  ஒப்பற்ற தலைவனாக பார்த்தார்கள். ஆனால் ஒரு மலையாள பப்ளிசிட்டி பைத்தியம் தனது வலைப்பூவில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த பொழுது ‘உங்களுக்கு படிப்பு இருக்கிறது பண்பு இல்லை!” என்பதற்கு பதிலாக “உங்களிடம் பைப்பு இருக்கிறது பம்பு இல்லை”  என்றார் என்று  கீழ்த்தரமாக விமர்சித்தது சோடாவிற்காக மைக் பிடிக்கும் உருப்படாத உடன்பிறப்புகளை மிஞ்சும் விதத்தில் மக்கள் திலகத்தை அவதூறு செய்தது அனைவருக்கும் நினைவு இருக்கும் இப்பொழுது மலையாளப்பெருமாலு அந்த பப்ளிசிட்டி பைத்தியத்திற்க்கே கடிதம் எழுதுகிறது தமிழர்களுக்காக உழைத்த மலையாளிகளை தமிழர்கள் மலையாளிகள் என்ற ஒரே காரணத்திற்க்காக ஒதுக்கி வைத்தார்கள் என்று. இதை எங்கே போய் சொல்லி அழுவது தமிழன்பா!

தமிழனின் தொப்புள்கொடி உறவுகளை கூட்டு சேர்ந்து கொன்று அழித்த மலையாளிகள் சிவச்சங்கரமேனங்களும்  நாராயணன்களும் நம்பியார்களையும்விட தமிழன் ரெம்ப மோசமானவன் என்று  எதோ ஒரு பைத்தியம் தனக்கு தானே கடிதம் எழுதி கொள்ளுமாம் பின்னால பின்னூட்ட பெருமாளு ஆமாப்பா தமிழன் ரெம்ப மோசம்னு எழுதுவாராம். இதுல இவனுக வீட்டுல தனியா உக்காந்து அழுதானுங்கலாம் ஏன் தமிழன் இம்புட்டு மோசமா இருக்காய்ங்கன்னு.
இப்படித்தான் வினவுல ஒருத்தரு எழுதுறாப்ல கேராளாவுல கம்யுனிசம் வளந்திடுச்சு தமிழ்நாட்டு சரியா வளரலன்னு அட போங்கடா இவனுகளா அண்டை மாநிலத்திற்கு தண்ணி விடாதே! உலகத்தொழிலாளிகளே ஒன்று சேருங்கள் தமிழகத்தொழிலாளிகளே நாசமாப்போங்கள் என்பதுதான் கேரளா காம்ரேட்டுகளின் புதுவகையான கண்டுபிடிப்பு போலும்.  மலையாளத்தான் கொடுத்த தேநீருக்கு நன்றி சொல் என்று புத்திமதி வேறு கூறுகிறார்கள். ஏதோ தமிழ்நாட்டுல எவனுக்குமே தேநீர் போடவே தெரியாத மாதிரி.

கடிதம் எழுதும் போது ரெம்ப தெளிவா இருக்காய்ங்கப்பா அதாவது மொழிவாரி மாநிலத்திற்கு பிறகு தமிழர்கள் மலையாளிகளை விரட்டி அடிச்சது மாதிரியும் தமிழர்கள் கேரளாவிற்குள் காலடி வைத்ததே தமிழ்நாட்டில் பஞ்சம் வந்தபிறகுதான் என்பது போலவும் நல்லாவே கதை காட்டுரீங்கப்பா. தமிழக முதல்வராகவே ஒரு மலையாளி வரமுடிகிறது கேரளாவுல அது முடியுமா?. ஆனால் இவனுக தமிழர்களுக்கு கேரளா ரேசன்காடு எல்லாம் கொடுத்து இருக்கு தெரியுமான்னு நமக்கே காது குத்துரானுங்க. மலையாளிகள் மிகுதியான  நாகர்கோயில் தமிழ்நாட்டோடு இணைந்தது போல தமிழர்கள் நிறைந்த கோட்டயம் கேரளாவோடு இணைந்தது வரலாறு. இதுல எர்ணாகுளத்துப்பக்கம்  தமிழர்கள் பல பஞ்சாயத்துப்பக்கம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்திருக்கிறார்கள்.

இன்னைக்கு இருக்குற முதல்வரு ஓனம் வந்தா உடனே வாழ்த்து சொல்லுறாரு. அதுமாத்திரமில்லாம அரசு விடுமுறைவேறு அறிவித்து இருக்கிறாரு. பொங்கலுக்கு அச்சுக்குட்டி வாழ்த்து சொன்னதுண்டா? தமிழ்நாட்டு திரைத்துறையில் ராதமேனன் கவுதம்மேனன்னு எத்தனை எத்தனையோ மேனன்கள் வந்து கல்லா கட்டுறானுங்க. மலையாளியை ‘தல’ என்று கொண்டாடுறான் தமிழ்நாட்டு சினிமா ரசிகன். அந்த தறுதலையும் தமிழ்நாட்டு பிரச்சனை நாங்க ஏன் போராடணும்னு பேசிக்கிட்டு திரியுது. ஜோய் ஆலுக்காஸ் முதல் மலபார் கோல்டு வரைக்கும் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருக்கு.  இன்னும் இவர்களுக்கு என்னதான் வேணும்? ஒருவேளை தமிழ்நாட்டை காலிபண்ணிகொடுத்தாத்தான் தமிழனை நல்லவன்னு சொல்லுவானுங்க போல.

அய்யா தமிழன்பரே இப்படியே வரலாற்று உறவு அவர்கள் நமது சேட்டன்கள் சேச்சிகள் என்று கூறி அவர்கள் எவ்வளவு எச்சி துப்பினாலும் நாம சகிச்சுக்கனும்னு சுண்ணாம்பு தடவிப்புடாதீங்கய்யா. ஏதோ சொல்லனும்னு தோணிச்சு சொல்லிப்புட்டேன். தமிழகத்தில் மும்தாஜை கேரளப்பெண்ணாக காட்டி சேச்சிகளை அவமானப்படுத்தி புட்டானுங்கலாம் இதை கண்டுபிடித்த அறிவாளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி நீங்கள் சொல்லுற அந்தத்திரைப்படத்துல கொழுப்பெடுத்து பேசிய விவேக்கின் நாக்கில் மும்தாஜு சேச்சி வல்லிய சூடு வைக்காம்போலே சீனு உண்டு பச்சே நிங்கலண்ட படத்தில தமிழனை  பாண்டின்னு சம்சாரிக்கும் பட்டிக்கு எங்கணும் சூடுவைக்கும்?”

இப்படிக்கு….

(பறையாம்பாடில்லே!)

மாணவர்கள் படுகொலையும் தமிழ்நாட்டு ஊடகதர்மமும்.

மார்ச் 5, 2010 § 5 பின்னூட்டங்கள்

மாணவர்கள் படுகொலையும்தமிழ்நாட்டு ஊடக தர்மமும்.


சிலநாட்களுக்கு முன்னர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக செய்தி படித்து இருப்பீர்கள். காவல்துறை தாக்குதலை தடுக்க முயன்றபொழுது தப்பித்து ஓடிய மாணவர்களில் ஒருவர் பல்கலைகழகத்தின் அருகில் இருந்த ஓடையில் விழுந்து இறந்துவிட்டதாக செய்தி படித்ததும் ‘உச்’ கொட்டி இருப்பீர்கள் மறுநாள் மேலும் இரண்டு மாணவர்கள் சடலம் கிடைத்தது என்று செய்தி கேட்டதும் அதிகமாக ஒரு ‘உச்’ கொட்டி இருப்பீர்கள். வெறும் ‘உச்’ கொட்டியதொடு நமது பணி முடிந்து போனது காரணம் ஒன்றும் மிகப்பெரியதில்லை இறந்துபோன மாணவர்கள் வடக்கிந்திய மாணவர்கள்.  வடக்கிந்திய மாணவர்கள் எப்படி தமிழகத்தில் கலவரத்தில் ஈடுபடலாம் என்று ஆத்திரப்பட்டவர்களுக்கு நான்கு மாணவர்களின் மாரணம் சிறிது ஆறுதல் அளித்து இருக்கலாம்.  ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் அந்த மாணவர்கள் போராடியது தமிழர்களுக்கு எதிராக அல்ல அண்ணாமலை பல்கலைகழகத்தின் முறைகேடுகளை கண்டித்து.

உண்மையில் நடந்தது என்ன?

சிதம்பரம் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஜார்கண்ட் மாநிலமாணவன் கௌதம் குமார் சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு அண்ணாமலை மருத்துவகல்லூரியில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவகல்லூரியில் தலை காயத்தை பார்க்கும் மருத்துவர் இல்லை, முன்னர் அங்கு பணியாற்றிய மருத்துவர் வேறு மருத்துவமணைக்கு இடமாற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக அங்கே மருத்துவக்காலியிடம் நிரப்பப்படவில்லை. சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாத காரணத்தால் மாணவரை பாண்டிச்சேரி ஜிம்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். செல்லும்வழியில் மாணவர் உயிரிழந்து இருக்கிறார். பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைப்பதற்கு முன்னர்  முதலுதவிகூட செய்யவில்லை (முதலுதவி செய்வதற்கு  கூட அங்கே மருத்துவர்கள் இல்லை) என்பதும் மாணவனின் மரணத்திற்கான காரணம். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைகழக மருத்துவமனையின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.  தகவலறிந்து விரைந்து வந்து தடியடி நடத்திய காவல்துறை மேலும் மூன்று மாணவர்கள் சாவுக்கு காரணமாக இருந்திருக்கிறது. முதல்நாள் ஒரு மாணவனின் உடலை கண்டுபிடித்தோம் மறுநாள் மேலும் இரண்டு பிணத்தை ஓடையிலிருந்து கண்டுபிடித்தோம் என்று கணக்கு காட்டியது தமிழககாவல்துறை.

“வட இந்தியமாணவன் சாலைவிபத்தில் பலி,  ஆத்திரமடைந்த வடஇந்திய மாணவர்கள்  மருத்துவமனையை சூறையாடினார்கள் காவல்துறை தடுக்க முயன்றபொழுது தப்பியோடிய மாணவர்கள் ஓடையில் விழுந்து மரணமடைந்தார்கள்” என்று தவறுகளை மூடிமறைக்கும் விதமாக செய்திகள் வருகின்றன. விடுதியில் இருந்த மாணவர்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது.ஜனநாயக வாலிபர் சங்கம் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.

இங்கே முக்கிய குற்றவாளியாக தமிழக அரசும்  அண்ணாமலை பல்கலை  கழகமும் இருக்கிறது.  வடமாநில மாணவர்கள் தமிழகத்தின் பெறியியல் கல்லூரி தேடி அலைவது சிதம்பர ரகசியமில்லை. வடமாநில மாணவர்களை கொள்ளையடிக்கும் அண்ணாமலை பல்கலை கழகம் மாணவர்களுக்கு எவ்விதமான வசதிகள் செய்து வைத்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்? பல்கலைகழகத்தில் செயல்படும் மருத்துவககல்லூரியில் போதியவசதியில்லை. மாணவர்கள் அதை நொறுக்கியதால்தான் அதன் மக்கள் சேவை நின்றுவிட்டது என்று நினைத்து கொள்ளவேண்டாம்.  தீவிரசிகிச்சை வேண்டி எவனாவது அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தால் முடிந்தது அவன் கதை என்று பொருள். முதலுதவி கொடுக்ககூட அங்கே மருத்துவர் இல்லை பெரும்பாலான அரசு மருத்துவமனைகளின் நிலை அதுதான். பாண்டிச்சேரியில் இருக்கும் ஜிம்பர் மருத்துவமணைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி அதிலும் காலதாமதம். சிதம்பரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும்வரை  தலையில் கடுமையாக அடிபட்ட மாணவனால் உயிர்பிழைத்திருக்க முடியுமா? செல்லும்வழியிலேயே மாணவன் உயிரிழந்துவிட்டான். மருத்துவ துறையில் ஆம்புலன்சு சேவை மூலம் பெரிதாக சாதித்துவிட்டதாக தனக்குதானே விழா எடுத்துக்கொள்ளும் தமிழக அரசு காயம்பட்ட மாணவனை பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறது முதலுதவி கூட செய்யாமல். நேரிடையாக இதனை கண்ட மாணவர்கள்( வடக்கிந்திய மாணவர்களாம்!) மருத்துவமனையை தாக்கி இருக்கிறார்கள். ஒரு காக்கை இறந்துபோனால் ஆயிரம் காக்கைகள் காக்கை இறந்த இடத்தில் கூடி கரைவது போலே அழுத மாணவர்கள் ஆவேசத்தோடு உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவமனையை தாக்கி இருக்கிறார்கள்.

தகவலறிந்ததும் சம்பந்தப்பட்ட மாணவர்களோடு உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுகட்டவேண்டிய சாதூரியம் பல்கலைகழக ஊழியர்களுக்கோ காவல்துறைக்கோ இல்லாமல் போனது ஆச்சரியம்.  முன்னர் சென்னை உயர்நிதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தை கலைக்க பயன்படுத்திய அதே தடியடியை ஆவேசமாக நடத்தி காட்டி இருக்கிறது தமிழக காவல்துறை.

சக்திவேல் என்ற காவல்துறை துணை ஆய்வாளர்  அமைச்சர்கள் வரும்பாதையில் வெட்டப்பட்டு கிடந்தபோழுது ஆமைவேகம் காட்டிய காவல்துறை, தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டபொழுது மீளாத்தூக்கத்தில் இருந்த காவல்துறை. அண்ணாமலை பல்கலைகழகத்தில் துரிதநடவடிக்கையில் இறங்கி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.  தனது சககாவல்துறை ஊழியன் தன் கண்முன்னே ரத்தம் சொட்ட உயிருக்கு மண்டாடிய பொழுது எட்டி நின்று ஒரு பேத்தல் தண்ணீரை கொடுத்த காவல்துறை நண்பர்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தில் வீறு கொண்டு விளாசிய மர்மம் விலக மறுக்கிறது. அண்ணாமலை பல்கலைகழகத்தின்  ‘பவர்’ நமக்கு புரிகிறது.

தமிழக அரசு மருத்துவமனையை ஒழுங்காக பராமரிக்காமல் ஒருமாணவனின் மரணத்திற்கு காரணம் ஆனதோடு அதற்காக போராடிய மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையை ஏவிவிட்டு மேலும் மூன்று மாணவர்கள் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. (எனக்கு என்னோவோ அழகிரிதான் காவல்துறை அமைச்சாராக இருக்கிறாரோ என்று அவ்வப்பொழுது சந்தேகம் வருகிறது ). இதனை அம்பலப்படுத்தவேண்டிய தமிழ்நாட்டு ஊடகங்கள் ஏதோ எதிர்பாராத துயரமான சம்பவம் நடந்துவிட்டது என்பதுபோல நடந்த அவலத்தை மூடிமறைத்து தமிழக அரசின் அயோக்கியத்தனத்திற்கு துணை போகிறது.  நமது மாநிலத்தில் பொறியல் கற்கவந்த வடமாநில மாணவர்களின்  மரணத்திற்கு நாமும் மவுன சாட்சியாக இருக்கிறோம். தமிழக அரசின் சுகாதரத்துறையும் காவல்துறையும் இணைந்து நான்கு உயிர்களை குடித்திருக்கிறது.